Sunday 22 July 2018

ஹோமியோபதி மருத்துவத்தில் தோல்விகள் ஏற்படுவதற்கான சில காரணங்கள்!!!




ஹோமியோபதி மருத்துவர்கள் ஒவ்வொருவரும் தாம் கற்றறிந்த ஒத்தவைவிதிகளின் அடிப்படையில் துயரர்களை அணுகி நலப்படுத்துகிறார்கள். இதில் ஒரு சிலர் மிகவும் நிபுணத்துவம் வாய்ந்தவராகவும், பல வெற்றிகளைப் பெற்றவர்களாகவும்  , மற்றும் சிலர் வெற்றியைவிட தோல்விகளை அதிகம் சந்திப்பவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் ஹோமியோபதி மருத்துவத்தில் தோல்வியையே சந்திக்கவில்லை என்று எந்த மருத்துவராலும் கூற இயலாது. அதே போல் ஒரு மருந்தினை , ஒரே தடவை உபயோகித்து நாட்பட்ட அல்லது நீண்டகால நோயை குணப்படுத்தியதாகக் கூறவும் இயலாது. ஆனால் ,  திடீர்வகை அல்லது உடனடி நோயானாலும் சரி , நாட்பட்ட நோயானாலும் சரி ஒரு மருந்தை பல்வேறு வீரியத்தில் பல தடவைகள் கொடுத்து  துயரர்களை நலப்படுத்திய வரலாற்றை மருத்துவர்கள் J.T. கெண்ட், J.H. கிளார்க், பெர்னட் போன்ற மேதைகளின் நூல்களின் வழியாக நாம் அறிந்து கொள்ள முடியும். ஆனாலும் அவர்களும் தோல்விகளை சந்திக்கவேயில்லை என்று கூறிவிட முடியாது. அதனால் தோல்வி தான் ஒரு மருத்துவரின் வெற்றிக்கான படிக்கட்டாகவும் , தூண்களாகவும் இருக்கின்றன என்பதை மறந்து விடக்கூடாது.

ஹோமியோபதி மருத்துவர்கள் ஒவ்வொரும்  மாமேதை ஹானிமன் எடுத்தியம்பிய   ஹோமியோபதி தத்துவார்த்த நெறிமுறைகளையும், மருந்துகாண் ஏட்டையும் மற்றும் துயரர்கள் அணுகுமுறையையும் தெளிவாக கற்றறிந்திருக்க வேண்டும். அவர்களின் வெற்றியும் , தோல்வியும் இதன் அடிப்படையில் தான் இருக்கும். ஒருவர்  தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறார் என்றால்  , அவர்கள் ஹோமியோபதி மருத்துவத்தை சரியாக கற்கவில்லை என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.  இதைத்தான் மாமேதை ஹானிமன் தமது ஆர்கனான் ஆறாம் பதிப்பின் முன்னுரையில் ," ஹோமியோபதி மிகச் சரியான , எளிமையான மருத்துவ முறையாக இருந்த போதிலும் அதன் வெற்றியானது ஹோமியோபதியின் அடிப்படை மெய்மையை அனுபவத்தில் சரியாகப் பயன்படுத்துவதிலும் , அதன் அடிப்படைக் கோட்பாட்டை சரியாக கைப்பற்றிச் செயலாற்றுவதிலும் தான் முழுமையடைகிறது " என்று குறிப்பிடுகிறார்,

ஹோமியோபதி மருத்துவம் எளிமையாகத் தெரியலாம் . ஆனால் , இந்த மருத்துவ அறிவியலில் நிபுணத்துவம் பெறுவதும் , மருத்துவக்கலையை சரியாகக் கற்பதும் மிகக் கடினமானது. எந்தவொரு மருத்துவரும் ஹோமியோபதியை முழுமையாகக் கற்றுத்தேர்ந்தவர் என்றோ அல்லது தோல்விகளை சந்திக்கவேயில்லை என்றோ நாம் நம்பி விடமுடியாது.  ஆனால் , பல நல்ல மருத்துவர்கள் தமது தோல்விக்கான  காரணங்களை பதிவு செய்து விட்டுச்சென்று இருக்கிறார்கள். அந்த அனுபவங்கள் நமது தோல்விகளைக் களைய உதவி செய்யும் வழிகாட்டிகளாக இருக்கிறது. அவர்களின் அனுபவத்தின் அடிப்படையில் உற்றுநோக்கும் போது ஹோமியோபதி மருத்துவர்கள் தோல்வியடைவதற்கு அவர்களின் அறியாமை , சோம்பல், இலகுவாக எடுத்துக் கொள்ளுதல் மற்றும் ஹோமியோபதி தத்துவத்தை சரியாக புரிந்து கொள்ளாதது அல்லது புரிந்துகொள்ள மறுப்பது போன்றவைகளே காரணங்களாக இருக்கிறது. அதனால் ஹோமியோபதித் தத்துவங்களையும் , அதன் அடிப்படை மெய்மைகளையும் மருத்துவர்கள் முழுமையாக கற்றறிந்து கொள்ளாத வரை,  நடைமுறையில் தோல்வி ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது.  

ஹோமியோபதி மருத்துவம் தோல்வியடைவதற்கு 80% சதவீதம் மருத்துவர்களே காரணமாகவும், 10% சதவீதம் ஹோமியோபதி மருந்துகளும் , 10% சதவீதம் துயரர்களும் காரணமாக இருக்கிறார்கள் என்று ஆய்வுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. அதனால் ஹோமியோபதி மருத்துவம் தோல்வியடைவதற்கு கீழ்காணும் மூன்று வகையான காரணங்களே உள்ளன. அவையாவன;

I.                        மருத்துவர்கள் காரணம் (PHYSICIAN).
II.                        துயரர்கள் காரணம் (PATIENTS).
III.                        மருந்துகள் காரணம் (MEDICINES OR REMEDIES).

இவைகளைப்  பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம்


                                                          I.                மருத்துவர்கள் காரணம் (PHYSICIAN).

ஒரு ஹோமியோபதி மருத்துவர் சரியான  முறையில் மருந்து தேர்வு செய்து துயரர்களை நலப்படுத்தும் போது அவர் புகழின் உச்சிக்கே செல்வதோடு,  வெற்றிகரமான மருத்துவராகக் கருதப்படுவார். மாறாக, அவர்  மருந்துத் தேர்வில்  தவறு செய்து  துயரர் நலமடையாவிட்டால் , அத்தோல்வி மருத்துவரை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் , ஹோமியோபதியின் சிறப்பிற்க்கே களங்கம் ஏற்படுத்தி விடும். அதனால், தோல்வி என்பது சம்பந்தப்பட்ட ஹோமியோபதி மருத்துவருக்களுக்கேயன்றி  , ஹோமியோபதிக்கல்ல!. இதைநாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இப்போது ஹோமியோபதி மருத்துவம் தோல்வியடைய மருத்துவர்கள் எவ்வாறு காரணமாக இருக்கிறார்கள் என்பதை  பார்க்கலாம்.

  1. துயரரின் குறிகளை கவனக்குறைவாக பதிவு செய்தல் (NEGLECT OF PROPER CASE TAKING) அல்லது முழுநிறைவடையாத துயரர் கலந்துரையாடல்:

  துயரர்கள் தெரிவிக்கும் ஒவ்வொரு குறிகளையும் மிகுந்த கவனத்துடன் ஹோமியோபதி மருத்துவர்கள் தமது குறிப்பேட்டில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவரது மனக்குறிகள், தலைமை குறிகள் ,குறிப்பிட்ட உறுப்புச்சார்ந்த குறிகள் , அவற்றின் மாறுமைகள் ( நோய்க்குறிகள் அதிகரித்தல் அல்லது குறைதல் ) போன்றவற்றை தவறாமல் வெளிக்கொணர்ந்து பதிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு துயரர்களின் முழுமையான நோய்க்குறிகளை  அறிந்து கொள்ளாவிட்டால் உண்மையான மருந்தினை தேர்வு செய்திட இயலாது.
2.                   நோய்த் தோற்றத்திற்கான அடிப்படையான காரணங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளாதது (NON-CONSIDERATION OF FUNDAMENTAL CAUSES).
        மனித உடலில் நோய்கள் உருவாவதற்கு மூலகாரணங்களாக இருக்கக்கூடிய சோரா (சொறி ), சைகோஸிஸ் ( மேககிரந்தி) , மற்றும் சிபிலிஸ் ( மேகப்புண்கள்) போன்ற மூன்று மியாசங்களில் துயரர் எந்த மியாசத்தில் இருக்கிறார் என்பதை சரியாக புரிந்துகொண்டு அதற்குரிய மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும். இதில் தவறு நேர்ந்தால் ,மருந்து தேர்வும் தவறாகி விடும்; தோல்வியும் ஏற்படும்.

3.                   நோய்த் தோற்றத்திற்கான காரணத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ளாதது (NON-CONSIDERATION OF ETIOLOGICAL CAUSES).
       சில துயரர்களுக்கு , அவர்களது நோய்கள் அல்லது தொல்லைகள் உருவானதற்கு அடிப்படையான சில நிகழ்வுகள் அல்லது காரணங்கள் இருக்கும். அதைத் துயரர்கள் மருத்துவர்களிடம் தெரிவிக்கலாம் அல்லது மறந்து விடலாம் .அவற்றைக் கண்டறிந்து அதற்குரிய ஒத்தமருந்தைக் கொடுக்கும் போது துயரர்கள் விரைவாக நலமடைவார்கள், இத்தகைய காரண காரியங்களுக்கு மருத்துவர் J.H.கிளார்க் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார். அவரது நோய்க்குறிகள் சார்ந்த மருந்துகாண்ஏடு என்ற நூல் (CLINICAL REPERTORY) மிகவும் சிறந்தது. . அவ்வாறான சில காரண காரியங்களை இப்போது பார்க்கலாம்.
a.             உடல்ரீதியான பாதிப்பு: வெயில் (வெப்ப நோய்) தாக்குதல் (SUNSTROKE) , ஊடு கதிர் வீச்சு விளைவு (X-RAY) போன்றவைகள் காரணமாக இருப்பது.

b. இரசாயனங்கள்: தொழிற்சாலை ஆவி அல்லது புகை ( INDUSTRIAL FUMES), விஷமாகிவிட்ட உணவுப் பொருள்கள்( FOOD POISONING) போன்றவை.

c.  இயந்திரங்கள் ,கருவிகள் மற்றும் ஆயுதங்களினால் ( வெளியிலிருந்து தாக்கப்படுகிற) ஏற்படுகிற விளைவுகள்.

d. மனநிலை சார்ந்த மற்றும் இயற்கையாற்றல் ( PSYCHIC AND DYNAMIC ) விளைவுகள்.  

e.  இறப்பு அல்லது இழப்பு: அதாவது குடும்ப உறுப்பினர்கள் ,நண்பர்கள் மற்றும் உறவினர்களின் இறப்பு அல்லது பிரிவு.

f.    முறையற்ற (இரகசிய) அல்லது விரும்பத்தகாத காதல் , காதல் தோல்வி அல்லது நிராகரிக்கப்பட்ட அன்பு போன்ற உளவியல் சிக்கல்கள்.

g. மருந்துச்சரக்கு அல்லது போதை தரும் மருந்துகள் ( DRUGS) மற்றும் குணப்படுத்தும் பண்புகள் கொண்டதாக நினைத்து எடுத்துக் கொண்ட மருந்துகளினால் ( EX: ALLOPATHY MEDICINES) ஏற்படும் நோய்கள்.

h.  உணவு மற்றும் சில பழக்கவழக்கங்கள்.

i.    தட்பவெப்பம் : வெயில் மற்றும் மழையில் நனைதல்

4.                   நோய்ப்படுக்கைசார்ந்த மருத்துவஅறிக்கையை புறக்கணித்தல் (PATHOLOGICAL REPORT):
     இக்குறிப்புகள் துயரர்களின் நோய்த்தன்மையை சரியாக தெரிந்து கொண்டு தொடர்ந்து சிகிச்சையளிக்க உதவுகின்றன. உதாரணமாக, மூளைக்கும் தண்டுவடத்திற்கும் ஒருங்கே தொடர்புடையபாகத்தில் ஊரல்நீர், இரத்ததிலிலுள்ள சக்கரையின் அளவு , இருமல், சளி மற்றும் சிறுநீர் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவற்றை மருத்துவ ஆய்வுகூட பரிசோதனைகள் மூலம் அறிந்து கொள்ளலாம். இதை பல ஹோமியோபதி மருத்துவர்கள் சரியாகக் கடைபிடிப்பதில்லை. சிலர் ஆய்வுக்கூட பரிசோதனைகள் தேவையில்லை என்று கருதுகிறார்கள்.
5.                   உள்ளமுக்கப்பட்ட அல்லது வலிந்து கட்டுப்படுத்தப்பட்ட விளைவுகளை கவனிக்கத் தவறுதல் (NEGLECT OF SUPPRESSED CONDITIONS).

6.                   தவறான நோய் ஆய்வுறுதி  செய்தல் (IMPROPER DISGNOSIS):  

       மருத்துவர் தம்மிடம் சிகிச்சைக்கு வரும் துயரரின் நோய்த்தன்மையை சரியாக கணித்து , அவருக்கு அறுவைச்சிகிச்சை தேவைப்படுமா? அல்லது தேவைப்படாதா? என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு மருத்துவச் சிகிச்சையைத் தொடங்க வேண்டும். ஹோமியோபதி மருத்துவர்களுக்கு  "நோய்நாடுதல்அவசியம் தானா ? என்ற கேள்வி இங்கே எழுகிறது. ஆனாலும் இது  அவசியமானது என்று சில மருத்துவர்கள் கருதுகிறார்கள் . குறிப்பாக கீழ்வரும் விபரங்களைக் காட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

a.                  துயரரைத் தாக்கியுள்ள நோய்க்குரிய பொதுவான குறிகளையும் , தனிப்பாங்கான குறிகள் அல்லாதவற்றையும் விலக்கிவிட வேண்டும்.
b.                  துயரர் உண்மையாகவே நோய்தாக்குதலுக்கு இலக்காகி உள்ளாரா? என்பதை கண்டறிய வேண்டும்.
c.                  நோய்க்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும். ( இவைகளைப்பற்றி பாரா மூன்றில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது).
d.                  துயரருக்கு நன்மை தரும் நடவடிக்கைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
e.                  மருத்துவப் பரிசோதனைக் குறிப்புகள் மூலம் துயரர் உண்மையாகவே நோய் நிலையிலிருந்து விடுபட்டு நலமடைந்து வருகிறதா என்பதை அறிந்துகொள்ள முடியும்.
f.                    துயரரின் நோய்நிலையை முன்கணிப்பு செய்து கொள்ள வேண்டும். அத்தோடு அவரை தனிப்படுத்திக் (நலப்படுத்த வேண்டிய வழிமுறைகளை)   கொள்ளவும் வேண்டும்.
g.                  துயரருக்கு எந்த வீரியத்தில் , எப்போது மருந்து கொடுக்க வேண்டும்  என்ற தகவல்களை பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
h.                  உணவுக் கட்டுப்பாடு.
i.                     துயரரின் சிகிச்சையை மேற்கொண்டு வழிநடத்திச் செல்லுதல் மற்றும் மருத்துவ புள்ளிவிபரங்கள் போன்றவற்றை முறையாக பதிவு செய்து கொள்ளவேண்டும்.

7.                   துயரர்களின் ஒட்டுமொத்தக்குறிகளின் அடிப்படையில் மருந்துத்தேர்வு செய்யாமல் , நோய்த்தன்மையின் அடிப்படையில் மருந்துத்தேர்வு செய்வது ( SELECTION OF REMEDY ON PATHOLOGICAL BASIS NEGLECTING THE TOTALITY OF SYMPTOMS).

உதாரணமாக ,  இரைப்பைப்புண் (GASTRIC ULCER), கட்டிகள (TUMORS) மற்றும் நீரழிவு நோய் (DIABETES) போன்றவற்றிற்கு சிகிச்சைக்கு வந்தால் ,  துயரர்களின் குறிகளைக் கேட்காமல் , அந்நோய்க்குறியில் நன்கு செயலாற்றும் மருந்துகளைக் கொடுப்பது. 

அதே போல் சிலநோய்களுக்கு சில மருந்துகள் ஒத்தமருந்துகள் என்று நாமே தீர்மானம் செய்து கொடுத்தல். உதாரணமாக , கீல்வாதம் மற்றும் மூட்டுவலிக்கு ரஸ்டாக்ஸ் மற்றும் பிரையோனியா மருந்துகளை மாற்றி மாற்றிக் கொடுப்பது ; மூல வியாதிக்கு சல்பரை காலையிலும் , நக்ஸ்வாமிக்காவை இரவிலும் கொடுப்பது. தோலில் ஏற்படும்  நோய்களை   சல்பர் மற்றும் கிராபைட்டிஸ் மருந்துகள் நலமாக்கும்; செபியா பெண்களுக்கு உரிய மருந்து என்று மருத்துவர்களே நிர்மாணம் செய்து கொண்டு மருந்து கொடுத்தால் தோல்வி ஏற்படுவது உறுதி.

அத்தோடு  கூட்டு மருந்துகளையும், கலவை மருந்துகளையும் அல்லது தனிக்காப்புரிமை செற்ற மருந்துகளையும் சில மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். சிலர் ஒரே சமயத்தில் பல மருந்துகளையும் பரிந்துரை செய்கிறார்கள். அம்மருத்துவர்கள் , ஹோமியோபதி மருத்துவத்தை  ஆழமாக புரிந்துகொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது.

8.                   குறிப்பிட்ட உறுப்புகளில் தோன்றும் குறிகளின் அடிப்படையிலோ அல்லது அவ்வுறுப்புகளைத் தாக்கும் நோயின் அடிப்படையிலோ மருந்து கொடுப்பது ( SYMPTOMS OF PARTICULAR ORGANS) . உதாரணமாக: இதயம், நுரையீரல், கல்லீரல் , மண்ணீரல்  மற்றும் சிறுநீரகங்கள் போன்ற உறுப்புகளில் தோன்றும் நோய்த்தன்மைக்குத் தகுந்தவாறு மருந்தளித்தல்.

9.                   தேவைப்படும் தருணங்களில்  துயரர்களுக்கு முறிவு மருந்து கொடுக்காமல்  (ANTIDOTE) தேர்ந்தெடுக்கப்பட்ட ஹோமியோபதி மருந்தைக் கொடுப்பது.

       சில துயரர்கள் நம்மிடம் சிகிச்சைக்கு வருவதற்கு முன்பு பல்வேறு மருத்துவத்துறை சார்ந்த மருந்துகள் மற்றும் களிம்பு போன்றவற்றை  எடுத்திருப்பார்கள். அம்மருந்துகளின் பின்விளைவுகள் அவர்களுடைய உடலில் இருக்க  வாய்ப்புள்ளது. அதாவது தற்போதைய மருந்துநிறுவனங்கள் அதிக சக்தி வாய்ந்த மருந்துகளை தயாரித்து விற்பனை செய்து வருவதால் , அம் மருந்துகளை உட்க்கொள்ளும் துயரர்கள் நலமடைவதற்குப் பதிலாக அவர்களின் நோய் உள்ளமுக்கப்படுவதற்கும் , பின்விளைவுகள் ஏற்படுவதற்குமே  வாய்ப்புகளே அதிகம். இத்தகைய சாதாரண மருந்துகளை உட்க்கொள்ளுவதால் ஏற்படும் நோய் உள்ளமுக்கம் மிக ஆபத்தான உருவாக்குகிறது என்று ஹோமியோபதி தத்துவம் குறிப்பிடுகிறது. அதனால் , ஹோமியோபதி மருத்துவர்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு அத்தகைய துயரர்களை இனங்கண்டு அவர்களுக்குரிய முறிவு மருந்தை முதலில் கொடுத்துவிட்டு , பின்பு சிகிச்சையைத் தொடங்கலாம்.

          சிலசமயம் , துயரர்களின் உடனடி நோயிற்கு மருந்தளிக்கும் போது ,  மேலெழுந்த வாரியாக அத்துயரர்கள் நலமடைவது போல் தோன்றினாலும் மனதளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லையென்றால் , அவர்களின் நாட்பட்ட நோயின் வெளிப்பாடே இதுவென்று புரிந்துகொண்டு, அதற்குரிய ஆழமாக வேலை செய்யும் மருந்தைக் கொடுத்து நலமடையச் செய்ய வேண்டும் என்று மருத்துவர் எலிசபெத் ரைட் குறிப்பிடுகிறார்.  இதில் மருத்துவரின் நுட்பமான  கவனம் அவசியம். தவறும் பட்சத்தில் மருத்துவர் தோல்வியுற நேரிடும்.

10.               துயரர்களின் சிறப்பியல்பு குறிகளுக்கு ( CHARACTERISTIC SYMPTOMS) அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    ஒரு முக்காலி நிற்பதற்கு குறைந்தது மூன்று கால்களாவது தேவைப்படும். அதேபோல் துயரர்கள் நலமடைய அத்தகைய சிறப்பு வாய்ந்த குறிகளைத் தேர்ந்தெடுத்து ஒத்தமருந்தைத் தேர்வு செய்ய வேண்டும் என்கிறார் மருத்துவர் ஹெரிங். அதனால் துயரர்களின் சரியான  குறிகளை ஆய்வு செய்வதையும்  ( சிறப்பியல்பு குறிகள்) மற்றும் மதிப்பீடு செய்வதையும் புறக்கணித்து விடக்கூடாது. 

11.               ஓரளவிற்கு பொருத்தமான மருந்தை அல்லது தவறான மருந்தை தேர்வு செய்வது ( WRONG OR PARTIALLY SELECTED REMEDY) .  அதாவது, துயரர்களின் மியாசத்தை ( MIASMS) கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் புறக்கணித்துவிட்டு மருந்துத்தேர்வு செய்வது.

12.               மருந்து கொடுத்த பிறகு துயரர்களின் குறிகளில் ஏற்படும்  மாற்றத்தை கவனிக்கத் தவறுதல் ( NEGLECT OF TREND OF SYMPTOMS) .

         துயரருக்குரிய  ஒத்தமருந்தை  கொடுத்த பிறகு அவரிடமிருந்த சில நோய்க்குறிகள் நீங்கலாம் அல்லது புதிய குறிகள் உருவாகலாம். அதேபோல் நோய்க்குறிகள் அதிகரிக்கவோ அல்லது குறையவோ செய்யலாம். அதாவது, முதல் தடவையாக மருந்து கொடுத்த பிறகு துயரரிடமிருந்த தீங்கற்ற அல்லது வலியில்லாத குறிகள் அதன்பிறகு ஆபத்தான நிலையையோ அல்லது வலியையோ உருவாக்கக்கூடும். உதாரணமாக , முழங்கால் கீல்வாதத்திற்கு மருந்தளித்தபோது , அவ்வலி இதயப்பகுதிக்கு தாவி அங்கே வலியை ஏற்படுத்தலாம். அவ்வாறானால் , அது தவறான மருந்து என்று புரிந்து கொண்டு அம்மருந்தின் விளைவைப்போக்க உடனடியாக முறிவு மருந்து கொடுக்க வேண்டும் (Dr.J.T.KENT).

        இம்மாதிரியான தருணங்களில் மருத்துவர் ஹெரிங்கின் நலமாக்கல் விதிகளை ( LAW OF CURE ) முறையாக கடைபிடிக்க வேண்டும். அதாவது , ஹோமியோபதி மருந்து கொடுத்தபிறகு துயரர்களின் குறிகள் உள்ளிருந்து வெளிப்புறமாகவும் , மேலிருந்து கீழ்புறமாகவும் , கடைசியாக உருவான தொல்லைகள் முதலாதாகவும் முதலில் ஏற்பட்ட தொல்லைகள் கடைசியாகவும் தோன்றி நலமாகும். அதனால் , மருத்துவர் ஹெரிங் அவர்களின் நலமாக்கல் விதிகளை தவறாமல் மனதில் உள்வாங்கிக்கொண்டு எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கே தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

13.               துயரரை அவசரமாக விசாரித்து அல்லது கலந்துரையாடி , துரிதகதியில் மருந்து கொடுப்பது ( HASTE IN CASE TAKING) .

         எந்தச் சந்தர்ப்பத்திலும் அவசரமாக மருத்துத்தேர்வு செய்வதைத்  மருத்துவர்கள் தவிர்க்க வேண்டும்.  துயரர்கள் கூறுவதை மிகப் பொறுமையாகவும்  , கவனமாகவும் கேட்டு குறிகளைத் தொகுத்து கொள்ளவேண்டும். மருத்துவர் பொறுமையாக இல்லாதபட்சத்திலோ அல்லது அவசரப்பட்டாலோ துயரரைப் பாதித்திருக்கும் நோய்த்தன்மையை துல்லியமாக ஆராய்ந்து நோயை நிர்ணயம் செய்ய முடியாது. அதே போல் மருந்து கொடுத்த பிறகும் மிகப்பொறுமையாக காத்திருக்க வேண்டும். அத்தோடு துயரரை அக்கறையோடு கண்காணிக்கவும் வேண்டும். மருந்து கொடுத்த பிறகு துயரரின் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டால் , மருந்தை திரும்பவும் கொடுப்பதை நிறுத்திவிட வேண்டும். இல்லையென்றால் துயரர் மோசமடையக்கூடும். அதனால் ஹோமியோபதி மருத்துவர் அவசரப்படாமல் பொறுமை காக்க வேண்டும்.

14.               ஹோமியோபதி மருத்துவர்களுக்கு ஒரு சில குறிப்பிட்ட மருந்துகளின் மேல் அளவற்ற மதிப்பும் ஈடுபாடும் இருக்கக் கூடாது (FAVOURISM OF PARTICULAR REMEDY).  

        மருத்துவர்களுக்கு எல்லா மருந்துகளும் சமமானதே. அதனால் சில மருந்துகள்  சிறப்பு வாய்ந்தது மற்றும் நன்றாக வேலை செய்யும்  என்ற முன்முடிவோடு இருக்கக் கூடாது. குறிப்பாக பலமுனை நிவாரணிகளான சல்பர், நக்ஸ் வாமிகா , சிலிகா, டியூபர்குலினம் ஆர்சனிக்கம்ஆல்பம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற மருந்துகள் நன்றாக வேலை செய்யும் என்ற தப்பெண்ணம் கூடாது. ஒரு ஹோமியோபதி மருத்துவர் என்பவர் எந்த முன்முடிவும் இல்லாதாவராக இருக்க வேண்டும்( ஆர்கனான் மணிமொழி- 6).

15.               துயரருக்கு சரியான வீரியத்தில் மருந்து கொடுக்கத் தவறுதல் (FAULT IN APPROPRIATE POTENCY).
    
    ஒவ்வொரு மருத்துவரும் , துயரரின் உடல்வாகு ,  நோய் ஏற்புத்தன்மை போன்றவற்றிற்குத் தகுந்தவாறு மருந்தின் வீரியத்தை தேர்ந்தெடுக்கும் ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும். அப்போது தான் துயரருக்கு சரியான வீரியத்தில் மருந்து கொடுக்க இயலும். மேலும் மருந்து சரியாக இருந்தாலும் , அதன் வீரியம் சரியானதாக இல்லையென்றால் துயரர் விரைவில் நலமடைய முடியாது. அதனால் தேர்ந்தெடுத்த மருந்தும் வீரியமும் துயரருக்கு பொருத்தமாக இருக்க வேண்டும். . அதே போல் மருந்து சரியாக இருக்கும் போது , அம்மருந்தை அதேவீரியத்தில் ஓரிருமுறை , குறிப்பிட்ட இடைவெளியில் திரும்பவும் கொடுக்கலாம் ( இரண்டு அல்லது நான்கு மணி நேரத்திற்குப்பிறகு) . நாம்  சரியான மருந்தைக் கொடுத்தபிறகு  துயரர் நலமடையத் துவங்கி , பின்னர் நோய்க்குறிகள் மீண்டும் தோன்றினால் , அத்துயரர்  முழுமையாக நலமடையும் வரை அம்மருந்தின் அனைத்து வீரியங்களையும் உபயோகப்படுத்த வேண்டும் என்று மருத்துவர். J.T. கெண்ட்  பரிந்துரைக்கிறார்.

16.               நன்கு வேரூன்றிய நீண்டகால நோயிற்கு மிக உயர்ந்த வீரியங்களை பயன்படுத்தக்கூடாது (HIGH POTENCIES IN ADVANCED CASES) .

நோய்வகையில் உக்கிரமான கட்டிகள், காசநோய் மற்றும் திசுக்களில் அழிவு  போன்ற  நன்கு வேரூன்றிய  அல்லது முற்றிய நீண்டகால நோயிற்கு சிகிச்சையளிக்கும் போது மிக உயர்ந்த வீரியங்களை பயன்படுத்தக்கூடாது. அது ஒத்தமருந்தாக இருந்தாலும் , துயரர்களின் ஏற்புத்தன்மை அல்லது சக்தி பலவீனமாக  இருந்துவிட்டால் கேடு விளைவிக்கும் என்று மருத்துவர் M.L. டெய்லர் எச்சரிக்கிறார். அவ்வாறு மார்பகத்தில் கட்டியுடன் வந்த ஒரு பெண்ணிற்கு ஒத்த மருந்தான லாக்கசிஸை 200 வது வீரியத்தில் கொடுக்கிறார் மருத்துவர் டெய்லர். மருந்து நன்றாக வேலை செய்யத் துவங்கியதும், தொடர்ந்து CM வீரியத்திலும் கொடுக்கிறார். அதனால் , துயரருக்கு நோய்க்குறிகள் அதிகரித்து , கட்டி உடைந்து அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டு இறக்க நேரிடுகிறது. இது தனக்கு நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்தது என்று வேதனையுடன் நம்மை எச்சரிக்கிறார். அதனால் இம்மாதிரியான துயரர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது உயர்ந்த வீரியங்களை தவிர்ப்பது நல்லது.

    
17.               மருந்தைத் தேவையில்லாமல் அளவிற்கு அதிகமாக கொடுத்து தவறு செய்ய நேரிடலாம்( FAULT IN PRESCRIBING A DOSE).

18.               இரண்டாவது மருந்துத்தேர்விலும் தவறு நேர்ந்து விடக்கூடாது ( SECOND PRESCRIPTION).

      துயரரின் ஒட்டு மொத்தக்குறிகளின் அடிப்படையில் மருந்துத்தேர்வு செய்து கொடுத்த பின்பு , அவரின் உடலில் மாற்றங்கள் ஏற்பட   துவங்கி , நோய்க்குறிகள் நீங்கி நலமடையத் துவங்குவார். மருந்தின் செயலாற்றல் முடிந்ததும் துயரரின் முன்னேற்றத்தில் தடை ஏற்பட நேரிடலாம். அச்சமயத்தில் துயரர் பதட்டமடையக்கூடும். அம்மாதிரியான தருணங்களில் அதே மருந்தைத்  திரும்பவும் கொடுக்க வேண்டியது வரும். அல்லது மருந்தில்லா மருந்தும் ( PLACEBO) கொடுக்கலாம். அதனால் துயரங்களின் நம்பிக்கை அதிகரித்து மீண்டும்  நலமடையத் துவங்குவார்குறிப்பாக மருந்து சாப்பிடுவதால் நலம் பெறுகிறோம் என்ற உணர்வு மேலோங்கி நலமடைவார். மாறாக , முதல் மருந்து நன்றாக செயல்படாவிட்டாலும், துயரர் முன்னேற்றம் தடைபட்டாலும், இரண்டாவது மருந்து தேர்வு செய்ய வேண்டும். இதிலும் மருத்துவர் தவறு செய்து விடக்கூடாது.  இச்சமயத்தில் மருத்துவர் மிகுந்த மதி நுட்பத்துடன்  செயல்பட வேண்டும்.

19.               துயரருக்கு ஒத்தமருந்தைக் கொடுத்திருந்த போதும் , திரும்பவும் தவறுதலாக கொடுத்து விடுதல் ( WRONG REPETITION).
இந்த விசயத்தில் தான் சில  மருத்துவர்கள் அவசரப்பட்டுத் தவறிழைத்து விடுகிறார்கள். அவர்கள் மருந்தின் செயலாற்றும் காலம் முடியும் வரை காத்திருப்பதில்லை. ஹோமியோபதி மருத்துவர்களுக்கு பொறுமையும் , காத்திருத்தலும் மிக அவசியமான ஒன்று. இது பற்றி மருத்துவர் கெண்ட் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார், “ஒரு மருத்துவர் ஹோமியோபதி விதிகளுக்குட்பட்டு மனசாட்சியுடன் ஒத்தமருந்தை தேர்ந்தெடுத்து முதல் தடவையாகக்  கொடுத்த பிறகு, அது உடனடி நோயாக இருந்தாலும் சரி அல்லது நாட்பட்ட நோயாக இருந்தாலும்  சரி , மருந்து செயலாற்றாத நிலையில் மீண்டும் ஒரு தடவை கொடுக்கலாம் , மேலும் மற்றொரு முறையும் கொடுக்கலாம். அப்போதும் துயரர் நோய்நிலையில் மாற்றம் ஏற்பட வில்லையென்றால் தயவு செய்து மருந்தை நிறுத்தி விடுங்கள் என்று வேண்டுகிறேன். இந்த மாதிரியான தருணத்தில் வெற்றுருண்டைகள் கொடுப்பதே நலம். மாறாக , மற்றும்  சிலகுறிகளுக்குத் தகுந்தவாறு வேறொரு மருந்தைக் கொடுத்துவிட்டால் துயரர் நலமடைவதற்குப் பதிலாக மோசமடையக்கூடும். அதனால் , மீண்டும் கலந்துரையாடல் நடத்தி சரியான மருந்தைத் தேர்ந்தெடுக்கும் வரை வேறு மருந்தளிக்கக் கூடாது. அதனால் மருத்துவர்கள்  துயரர்களை உன்னிப்பாக கவனிக்கவும் , காத்திருக்கவும் பயில வேண்டும்"
20.               துயரரின் நோய்க்குறிகள் தணிந்து நலமாகி வரும் போது மருந்தினை திரும்பவும் கொடுப்பது  ( PRESCRIBING DURING AMELORATION).
துயரர்களின் நோய்க்குறிகள் தணிந்து நலமாகி வரும்போது , திரும்பவும் மருந்து கொடுக்காமல் காத்திருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மோசமான விளைவுகளாலோ அல்லது துயரர் இறக்கவோ நேரிடும்  என்று மருத்துவர் M.L. டெய்லர் கீழ்காணும் தமது அனுபவத்தின் மூலம் எச்சரிக்கிறார்,

ஒரு 29 வயது பெண் துயரரின் இதயம் செயலிழந்ததற்கு , அவரின் குறிகளின் அடிப்படையில் ஆர்சனிக்கம் ஆல்பம் மருந்தை CM வீரியத்தில் முதலில்  கொடுக்கிறார் M.L. டெய்லர். இரண்டு நாட்களுக்குப் பிறகு , ஸ்பைசீலியா மருந்தும் ஒரு தடவை கொடுக்கிறார். துயரரின் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுகிறது. ஒரு வாரம் கழித்து , அவர் இன்னும் விரைவாக நலம்பெறவேண்டும் என்ற உந்துதலில் திரும்பவும் ஆர்சனிக்கம் ஆல்பம் CM வீரியத்தில் கொடுக்கிறார். ஆனால் துயரர் நலமடைவதற்கு பதிலாக மோசமடைகிறார். அதிலிருந்து அவரை மீட்டெடுக்க , அடுத்து லைகோபோடியம் மருந்தைக் கொடுக்கிறார். ஆனால் துரதிருஷ்டவசமாக துயரர் இறக்க நேரிடுகிறது. இந்த அனுபவத்தை மருத்துவர் M.L டெய்லர் மனவேதனையுடன் பதிவு செய்திருக்கிறார், அதனால் நாம் மருந்து கொடுத்த பிறகு துயரர் நலமாகி வருகிறார் என்று தெரிந்தால் மருந்தின் செயலுக்கு இடையூறு செய்யாமல் அமைதியாக காத்திருக்க வேண்டும்.

21.               உடனடி மற்றும் நாட்பட்ட நோய்களுக்கு மருந்தளிக்கும் போது , அம்மருந்தின் உறவு மருந்துகளை பயன்படுத்தாமல் ( REMEDY RELATIONSHIP) மருத்துவர்கள் தவறு செய்தல்.

     துயரரின் உடனடி நோயிற்கு மருந்தளிக்கும் போது, அக்குறிகள் அவருடைய நாட்பட்ட அல்லது நீண்ட கால நோய்த்தாக்குதலின்  விளைவாக தோன்றிய குறிகள் என்று உறுதியாக அறிந்து கொள்ளும் பட்சத்தில் , அம்மருந்தின் உறவு மருந்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் நேரலாம். உதாரணமாக , உடனடி நோயில் நன்றாக செயல்புரியும் பெல்லடோன்னா , ரஸ்டாக்ஸ் போன்ற மருந்துகளின் உறவு மருந்தான கல்கேரியா கார்பானிக்கம் மருந்திற்கு நாட்பட்ட நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு. அதே போல் அபிஸ் மற்றும் இக்னேசியா மருந்துகளுக்குப் பிறகு  நேட்ரம் மூரியாடிக்கம் கொடுக்கலாம். பல்சாட்டில்லாவிற்கு பிறகு சிலிகா கொடுக்கலாம். பல்ஸாட்டில்லாவின் செயலை சிலிகா பூர்த்தியடைய செய்யும். அதேபோல் அகோனைட் மருந்திற்குப்  பிறகு சல்பர் சிறப்பாக வேலை செய்யும். 

          அதே சமயத்தில் ஒரு மருந்திற்கு பிறகு கொடுக்கக்கூடாத (அதாவது எதிரிடையாக வேலைசெய்யும்)  மருந்துகளும் உண்டு. எடுத்துக்காட்டாக , பாஸ்பரஸும், காஸ்டிகமும் ஒன்றோடொன்று  இணைந்து செயலாற்றாது; எதிரிடையான மருந்து. ரஸ்டாக்ஸ் மருந்திற்கு பிறகு அபிஸ் கொடுக்கக்கூடாது. அதனால் ஒவ்வொரு மருந்திற்குமான உறவு மற்றும் எதிரிடையான மருந்துகளைத்  தெரிந்து கொள்வது மிகப்பெரிய பயனைக் கொடுக்கும்.

22.               நோயைத் தூண்டும் அல்லது தொடர்ந்து நீட்டிக்க வைத்திருக்கும் காரணங்களை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் ( NON REMOVAL EXCITING AND MAINTAINING CAUSES).

     ஒத்த மருந்தைக் கொடுத்த பிறகும் துயரர் நலமடையாவிட்டால் , அதற்குத் தடையாக இருப்பது எதுவென்று மருத்துவர் கண்டறிய வேண்டும். ஒருவேளை துயரர் பிற மருத்துவமுறை சார்ந்த மருந்துகளை எடுத்துவரலாம் அல்லது அவரது உணவு பழக்கவழக்கங்களால் தடை நேரலாம். இவற்றை மருத்துவர் அறிந்து கொள்ள வேண்டும். மேலும் நமது மருந்துகளின் ஆற்றலுக்கு எதிராக வினைபுரியும் உணவு, பானங்கள், மற்றும் இரசாயன மருந்துகளைப் பற்றிய பட்டறிவு மருத்துவர்களுக்கு இருக்க வேண்டும். உதாரணமாக, நக்ஸ்வாமிக்கா மருந்து கொடுத்திருக்கும் போது காபி தடைசெய்யப்பட்ட வேண்டும். அதே போல் அமிலத்தன்மை வாய்ந்த உணவுகள் அகோனைட் மருந்தின் ஆற்றலை செயலிழக்கச்செய்யும். அதனால் அவற்றைத் தவிர்க்க  வேண்டும். அதே போல் தூஜா மருந்திற்கு வெங்காயம் ஒத்துக்கொள்ளாது. அதனால் , இதுபோன்ற வழிகாட்டுதலை துயரர்களுக்குக் கொடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மருந்துகள் சிறப்பாக வேலை செய்யாது.

23.               மருந்துகாண்ஏட்டை சரியாகவும் , திறமையாகவும் பயன்படுத்தும் ஆற்றல் மருத்துவர்களுக்கு குறைவாக இருத்தல் (LACK OF KNOWLEDGE TO REPERTORISE THE CASE).

      துயர்களிடம் பெறப்பட்ட குறிகளை , குறிமொழியாக மாற்றுவதற்கும் , அந்த குறிமொழியை மருந்துகாண்  எட்டில்  எந்தப்பகுதியில் பார்க்க வேண்டும் என்ற  தெளிவான அறிவும் மருத்துவர்களுக்கு அவசியம். அதுமட்டுமல்லாமல் , எந்த குறிமொழி முக்கியமானது , எது விலக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் ஆழ்ந்த புரிதல் இருக்க வேண்டும். அதனால் , மருத்துவர்கள் மருந்துகாண் எட்டில் நன்கு புலமை பெற்றிருக்க வேண்டும். தற்போது ஏராளமான மருந்துகாண் ஏடுகள் பழக்கத்தில் உள்ளதால் , தமக்கு பிடித்த மருந்துகாண் ஏட்டை தேர்ந்தெடுத்து அதை  முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். திரும்பத் திரும்ப வாசித்து ஞாபகத்தில் இருத்திக் கொள்ள வேண்டும்.  அத்தோடு எல்லாவிதமான மருந்துகாண் ஏடுகளிலும் பரிச்சயம் இருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் ஒத்த மருந்தைத் தேர்வு செய்வதில் சிரமம் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் , மருந்தியியல் களஞ்சியம் மற்றும்  ஹோமியோபதி தத்துவங்கள் போன்றவற்றிலும் தேர்ந்த அறிவும் இருக்க வேண்டும்.   மேலும், நோய்க்குறி ஆய்வியல் , ஆர்கனான் , மருந்துகாண்ஏடு போன்றவை ஹோமியோபதியர்களுக்கு தவிர்க்க இயலாதது; இவை மருத்துவர்களுக்கு கவனத்துடன் மருந்துகளைக் கையாள உதவி செய்கின்றன.  

24.               ஒரே நேரத்தில் பல மருந்துகளை மாற்றி மாற்றித் தருவது ( FREQUENT CHANGES IN PRESCRIPTIONS).

    துயரர்களுக்கு மருந்து கொடுத்த பிறகு , அவர்களின் தென்பட்ட  குறிகள் அதிகரிக்கவோ அல்லது குறையவோ அல்லது புதிய குறிகள் தோன்றவோ செய்யும். இதை மருத்துவர் சரியாக தெரிந்து கொண்டு , இந்த விளைவு எதனால் ஏற்பட்டுள்ளது? என்பதையும் , இது மருந்தின் செயலா ?,  அல்லது நாட்பட்ட நோயின் உள்ளமுக்கப்பட்ட குறிகளா? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். துயரர்களின் நோய்த்தன்மையில் இருந்த சிலகுறிகள் மறைந்து அவரிடம் இல்லாத புதிய குறிகள் தோன்றினால் , கொடுக்கப்பட்டிருக்கும் மருந்து  ஒத்த மருந்தாக  இருக்காது; ஓரளவு சரியான மருந்து என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  அந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் அந்தந்த குறிகளுக்கு உரிய மருந்துகளைக் மாற்றி மாற்றிக் கொடுத்துவிடக்கூடாது. அது குழப்பத்தை ஏற்படுத்தி விடும்.

25.               துணை மருத்துவமுறை அல்லது ஆதரவு தரும்  மருத்துவ வழிமுறைகளை புறக்கணித்தல் ( NEGLECT OF ACCESSARY AND SUPPORTING TREATMENT). அதாவது, நோயாளி நடைமுறைத்  திட்டமைதி, திட்ட முறை உணவு ( உணவுத்திட்டம்) மற்றும் அந்தந்த சூழலுக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக்கொள்ளுதல் போன்றவற்றை தவறாமல்  கடைப்பிடிக்குமாறு துயரரை வலியுறுத்த வேண்டும்.

26.               துயரருக்கு கொடுத்திருக்கும் மருந்து ஒத்தமருந்து தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள தவறுதல் ( NEGLECTING THE CONFIRMATION OF REMEDY).

      துயரர்களுக்கு மருந்து கொடுத்தபிறகு , நாம் கொடுத்தது ஒத்தமருந்து தானா என்பதை கீழ்வரும் செயல்களோடு பொருத்தி உறுதி செய்து கொள்ள வேண்டும்;

a.                  மருந்திலுள்ள நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் துயரரின்   நோய்க்குறிகளோடு பொருந்தி வருகிறதா என்பதை பார்க்க வேண்டும்.

b.      துயரரின் நோய்ப்படுக்கை சிறப்பியல்புக்குறிகள் பொருந்துகிறதா ? என்பதைக் கவனிக்க வேண்டும்.

c.      இறுதியாக , துயரரின் குறிகளை மருந்தியியல் களஞ்சியதோடு பொருத்தி , ஒப்பிட்டு  நாம் தேர்ந்தெடுத்த மருந்து சரியானது  தான் என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

27.               சில மருந்துகளை கையாளுவதில் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை  ஹோமியோபதி மருத்துவர்கள் புறக்கணித்து விடக்கூடாது (PRECAUTION OF SOME REMEDIES).

       ஹோமியோபதி மருந்துகளில் , சில மருந்துகளை தவறுதலாகக் கொடுத்துவிட்டால் , அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடிய ஆபத்து இருப்பதை நாம் மறந்துவிடக்கூடாது. உதாரணமாக;

a.                  மிக முற்றிய நிலையிலுள்ள மூட்டுவீக்கத்திற்கு காலி கார்பானிக்கம் மருந்தைக் கொடுக்கக்கூடாது.

b.      உடல் உள்ளுறுப்புகளில் சீழ்பிடித்துள்ள நிலையிலிருக்கும் துயரர்களுக்கு சிலிகா கொடுக்கக்கூடாது.

c.      நன்கு வேரூன்றிய தோல் நோய்களிலும் , ஆஸ்த்மாவிற்கும் சோரினம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

d.      லாக்கஸிஸ் மருந்தை தவறான தருணத்தில் மறுபடியும் கொடுத்துவிட்டால் அது துயரரிடம் மோசமான (சாதகமில்லாத) மனக்குறிகளை உருவாக்கிவிடும்.  

e.      நன்கு வேரூன்றிய நிமோனியாவின் போது ஆர்சனிக்கம் ஆல்பம் மருந்தை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். இல்லாவிட்டால் துயரர் அமைதியாக இறக்க  நேரிடும். அதேபோல் நாட்பட்ட நோயினால் தாக்குண்டு நீண்ட நாட்கள் படுக்கையிலேயே இருக்கும் துயரருக்கு ஆர்சனிக்கம் ஆல்பம் கொடுக்கும் பொழுது , அவர் நலமடையலாம்; அல்லது தெளிவடைந்து குடும்ப உறுப்பினர்களைப் பார்த்துவிட்டு அமைதியாக இறக்கலாம்.

f.        சல்பர் மற்றும் பெல்லிஸ் பெரினிஸ் மருந்துகளை இரவில் கொடுத்தால் துயரர் தூக்கத்தை இழக்க நேரிடும்.

இப்படி மருந்தியியல் களஞ்சியம் முழுவதும் பல மருந்துகளில் எச்சரிக்கை தரும் பல விசயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.  இதை மருத்துவர்கள் தவறாமல் ஞாபகத்தில் வைத்து கொண்டு மருந்தினை பரிந்துரைக்க வேண்டும்.

       28.      இறுதியாக , ஹோமியோபதி மருத்துவர்களுக்கு உடற்கூறியியல் ( ANATOMY), உடல்நூல் (PHYSIOLOGY), நோய்குணநூல் (PATHOLOGY) , மனிதப் பண்பான்மை ஆக்கம்பற்றிய ஆய்வு நூல் (ETHOLOGY), மனோதத்துவம்( PSYCHOLOGY) மற்றும் பிற உயிரியியல் சார்ந்த அறிவு  ( BIOLOGICAL) போன்றவைகள் மிகவும் அவசியம். இந்த அடிப்படையான மருத்துவ அறிவு ஒருவரை மிகச் சிறந்த மருத்துவராக உயர்த்துகிறது. இவற்றில் ஏற்படும் அறியாமையினால் நமக்கு  தோல்விகள் ஏற்படலாம்.

           
II. துயரர்கள் காரணம் (PATIENTS):

ஹோமியோபதி மருத்துவத்தில் தோல்விகள் ஏற்பட துயரர்களும் ஒரு விதத்தில் காரணமாக இருக்கிறார்கள். அது எவ்வாறு என்பதை இப்போது பார்க்கலாம்:

1.       துயரர்கள் மருத்துவர்களுக்கு நன்றாக ஒத்துழைப்பதில்லை ( IN-COPERATIVE PATIENTS). உதாரணமாக , துயரர் சந்தேகக்குணம் கொண்டவராகவோ அல்லது மனநிலை தவறியவராகவோ இருந்தால் அவர்களிடமிருந்து சரியான குறிகளை பெற்று ஒத்த மருந்தைத் தேர்வு செய்ய இயலாது.

2.                   மருத்துவர்கள் கூறும் அறிவுரைப்படி நடந்து கொள்ளாத துயரர்கள் ( NON-OBSERVATION OF MEDICAL ADVICE).

3.                   மருத்துவச்சிகிச்சை எடுத்துக்கொள்வதில் குறைபாடு இருத்தல். அதாவது, குறித்த நேரத்தில் மருந்து எடுத்துக்கொள்ளாமல் இருப்பது , உரிய நேரத்தில் தொடர் மருத்துவச்சிகிச்சைக்கு வராமல் எப்போதாவது வருவது .

4.                   மருத்துவச் சிகிச்சையின் போது உடலையும் மனதையும் பாதிக்கும்  கடுமையான வேலைப்பளுவை சுமந்து கொள்வது ( OVERSTRAIN OF MIND AND BODY).

5.                   நோய் ஏற்பட்டதற்கான காரணத்தையும் , அதன் வளர்ச்சியையும் ( ORIGIN AND DEVELOPMENT OF DISEASE) மருத்துவரிடம் முறையாகத் தெரிவிக்காமல் இரகசியம் காப்பது. அதாவது, அவர்களின் கடந்த கால வரலாற்றை  சரியாக விளக்காமல் மறைத்து விடுவது  அல்லது நோய்க்குறிகளையும் , கடந்த காலங்களில் அதனால் விளைந்த  தொல்லைகளையும் மருத்துவரிடம் தெரிவிக்காமல் தவறான தகவல்களைக் கொடுப்பது.  இதனால் துயரருக்கு , மருத்துவரால் சரியான மருந்து கொடுக்க இயலாமல் போய்விடும்.

6.                   துயரரின் பரம்பரை வியாதிகள் அல்லது அவரது உடலில் மறைந்திருக்கும் மியாசம் போன்றவற்றை ( LATENT MIASM) அறிய மருத்துவருக்கு உதவாமல்  தவறிழைக்கலாம்.

7.                   மருத்துவச் சிகிச்சையின் போது சரியான உணவுத் திட்டத்தை கடைப்பிடிக்காமல் தவறு செய்தல் ( DIETIC ERRORS) .

8.                   பிற மருத்துவ முறை சார்ந்த மருந்துகளை , ஹோமியோபதி மருத்துவரின் ஆலோசனையின்றி எடுத்துக் கொள்ளுதல்.

9.                   சரியான  உடற்பயிற்சியின்மை  மற்றும் நல்ல சுத்தமான திறந்தவெளிக் காற்றை சுவாசித்தல் போன்ற  ஆரோக்கிய விதிகளை கடைப்பிடிக்காமலிருத்தல். 

10.               ஹோமியோபதி மருந்துகளால் நலப்படுத்தப்பட முடியாத நிலை கடந்த பிறகு துயரர் சிகிச்சைக்கு வருவது ( INCURABLE PATIENTS) . அதாவது , ஹோமியோபதி மருந்துகள் துயரரின் உடலில் செயலாற்ற தேவையான உயிராற்றலும், ஏற்புத்தன்மையும் நலிவடைந்த பின்பு சிகிச்சைக்கு வருதல். இந்த சூழ்நிலையில் ஹோமியோபதி மருந்துகள் துயரரின் நோயை  அல்லது தொல்லைகளைத் தணிக்க உதவி  செய்யுமே தவிர  நலப்படுத்த இயலாது(J.T.KENT).

        மருத்துவ மற்றும் அறிவியல் அறிவு  வேகமாக வளர்ச்சியடைந்துள்ள இன்றைய நவீன காலத்தில் , மருந்து நிறுவனங்கள் அனைத்தும் ( ஆங்கில மருத்துவம்) சக்தி வாய்ந்த மருந்துகளை தயாரித்து , அதை சந்தையில் நடமாடவிட்டுள்ளது. அதனால் , ஆரம்பத்தில் அம்மருந்துகளை எடுத்துக்கொண்டு , பின்பு துயரர்கள் மருந்துகளை நிறுத்திய  பிறகும் அவர்களின் உடலில் அம்மருந்துகளின் பிற எதிர்வினைகளும் , அடையாளமும் இருந்து கொண்டேயிருக்கும். அதனால் துயரர்களின் மனமும், சுபாவமும் சீர்கெட்டு குழப்பமான நோய்கள் ஏற்படலாம். அத்தகைய துயரர்களை ஹோமியோபதியில் நலப்படுத்துவது மிகவும் சிரமம்.

11.                மருத்துவர்களின் கவனத்தை தன் பக்கம் திசைதிருப்ப தமது குறிகளை     துயரர்கள் மிகைப்படுத்திக் கூறுவதால்  (EXAGGERATION OF SYMPTOMS) , மருந்துத் தேர்வில் தவறு நேரிடலாம்.

12.               அடுத்தது மிக முக்கியமான ஒன்று. அதாவது ,  துயரர்கள் தாம் நலமடைவோம் என்ற நம்பிக்கையில்லாமல் இருத்தல் (PATIENTS WHO DON’T WISH TO GET BETTER)  .   சில துயரர்கள் , தம் குடும்பத்தினரின் கவனமும்  , ஆதரவும்  தங்களை  நோக்கியே இருக்கும் விதமாக நடந்து கொள்வார்கள்; இதையே மருத்துவர்களிடமும் எதிர்பார்ப்பார்கள். அத்தகைய துயரர்களை நலமாக்குவது மிகுந்த சிரமத்தைத் தரும்.

III. ஹோமியோபதி மருந்துகள் காரணம் (MEDICINES)

ஹோமியோபதி மருந்துகளினாலும் துயரர்கள் நலமடையாமல் போக வாய்ப்புள்ளது . அது எவ்வாறு என்று பார்க்கலாம்.

1.       ஹோமியோபதி மருந்துகளைத் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்களில் தூய்மைக்கேடு (IMPURITY):

  அதாவது ஹோமியோபதி தாய்த்திரவங்களை தயாரிப்பதில் தூய்மைக்கேடு ஏற்படலாம். மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் , மருந்துகளின் மூலப்பொருள்களை உரிய தரத்தில் சேகரித்து  தயாரிக்கவிட்டால் தாய்த்திரவமும் , அதன் பின்னர் வீரியப்படுத்தும் போதும் தவறு நேரிடும் அபாயமுள்ளது. அதனால் மருந்துகள் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்கள் தரமானதாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக;

a.                  கனிமங்கள் மற்றும் தனிமங்கள் வகையைச் சேர்ந்த மருந்துகள் அந்தந்த மூலப்பொருள்களிலிருந்து தயாரிக்கப்பட வேண்டும்.   

  1. தாவர வகையைச் சேர்ந்த செடிகள் , மூலிகைகள், பூக்கள்  மற்றும் வேர்களை , அத்தாவரங்கள் வளரும் இயற்கையான சூழலில் ( மலைகள் அல்லது காடுகள்) இருந்து பறித்து மருந்துகள் தயாரிக்க வேண்டும். மாறாக அத்தாவரங்களை நகர்ப்புறங்களில் வளர்த்து மருந்து தயாரித்தால் அது தரமானதாக இருக்காது.

  1. தேனீ , பூச்சிகள், வண்டு மற்றும் பாம்பின் விஷம் போன்றவற்றிலிருந்து மருந்து தயாரிக்கும் போது, அவைகள் அனைத்தும் அது வளர்ந்து வந்த காடுகளில் இருந்து தருவிக்க வேண்டும்.  உதாரணமாக இயற்கையான காடுகளில் வாழ்ந்து வந்த பாம்பின் விஷத்திற்கும், கூண்டுகளில் அடைத்து வைத்து வளர்த்து வந்த பாம்பின் விஷத்திற்கும் பண்புகளில் மாற்றம் உள்ளது.

  1. அதே போல் நோசோடு வகை மருந்துகளைத் தயாரிக்கும் போது மிகுந்த கவனம் தேவை. உதாரணமாக , சிரங்கின் துணுக்கிலிருந்து சோரினம் தயாரிப்பதற்குப் பதிலாக கரப்பானின் துணுக்கிலிருந்து தயாரிக்கிறார்கள். வெறிநாயின் எச்சிலிலிருந்து லைசின் மருந்து தயாரிப்பத்தைப் பதிலாக வெறிநாயின் எலும்பு மச்சையிலிருந்து தயாரிக்கிறார்கள். அத்தகைய மருந்துகள் குறைபாடு உடையவைகள் ஆகும்.

          
2.                   மருந்துகளை வீரியப்படுத்துவதில் குறைபாடு ( IMPROPERLY PREPARED POTENCIES):

         இந்தியாவில் செயல்படும் பல ஹோமியோபதி மருந்து தயாரிக்கும்  நிறுவனங்கள்  சரியான முறையில் ஹோமியோபதி மருந்துகளை வீரியப்படுத்துவதில்லை என்ற குறைபாடு அறியப்பட்டுள்ளது. பல நிறுவனங்கள் வீரியப்படுத்துதலை இயந்திரங்கள் மூலம் செயல்படுத்துவதால் , வீரியத்தின் தன்மையில்  மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இக்குறையை களைய வேண்டியது மிகவும் அவசியம். ஏனென்றால் கைகளின் மூலம் வீரியப்படுத்துவதற்கும் , இயந்திரங்கள் மூலம் வீரியப்படுத்துவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது.

3.                   மருந்து தயாரிக்கவும், பாதுகாக்கவும் பயன்படும்  முக்கியமான மூலப்பொருளான எரிசாராயத்தில் குறைபாடு.

4.                   மருந்து நிரூபணத்தின் போது குறிகளைத் தொகுப்பதில் குறைபாடு ( IMPROPER PROVING RECORDS) :

    மருந்து நிரூபணத்தின் போது , நிரூபணர்களிடம் பெறப்படும்  குறிகளைத் தொகுப்பதில் மிகுந்த கவனம் தேவை. அதற்கான வரையறை செய்யப்பட்டுள்ள விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஆனால், சில மருத்துவ ஆராய்ச்சிக்கு கூடங்கள் அல்லது நிறுவனங்களில் திறமை வாய்ந்த ஆராய்ச்சியாளர்களை பணியில் அமர்த்துவதற்குப் பதிலாக சாதாரண பணியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அதனால் நிரூபணர்களிடம் பெறப்படும் குறிகளைத் தொகுப்பதில் தவறு நேரிட வாய்ப்புள்ளது. அதன்மூலம் மருந்தியல் களஞ்சியத்தில் பதிவு செய்யப்படும் குறிகளிலும் குறைபாடு ஏற்படும்.

5.                   மருந்துகளை கண்ணாடி குப்பிகளில் நிரப்பிய பிறகு அதன்  பெயர்களை தவறுதலாக பதிவு செய்துவிடக்கூடிய அபாயமும் உள்ளது.

6.                   மருந்தியியல் களஞ்சியத்தில் முழுமையாக நிரூபணம் செய்யாத மருந்துகளை இணைத்தல் (PARTIAL PROVING):

       தற்போது,  இந்தியாவில் ஹோமியோபதி மருந்தினை முழுமையாக நிரூபணம் செய்யாமல் ஓரளவே நிரூபணம் செய்துவிட்டு அம்மருந்துகளை மருந்தியியல் களஞ்சியத்தில் இணைத்து விடும் செயலும் நடைபெறுகிறது. அதனால் அம்மருந்தின் ஆற்றல்களை  முழுமையாக செயல்படுத்த முடியாமல் போய் விடும் நிலை ஏற்படுகிறது. இத்தகைய மருந்துகளை பிரித்தெடுத்து மீண்டும் முழுமையாக  நிரூபணம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் அம்மருந்து முழுமையடையும்.

7.                   மருந்துகளின் வித்தியாசமான பண்புகளையும் அதன் ஆற்றலையும் மருத்துவர்கள் சரியாக புரிந்து கொள்ளவேண்டும்.

        ஹோமியோபதி மருந்துகள் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்கள் பெரும்பாலும் அதன் நிலப்பரப்பு, தட்பவெப்பம் , வளர்ந்த சூழ்நிலை மற்றும் அதனுடைய உயிர்ப்பண்புகள் போன்றவற்றின் அடிப்படையில் வித்தியாசமாக செயலாற்றுகிறது. இதை மருத்துவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் துயரர்களின் உடலமைப்பு மற்றும் அவர்களின் இனக்குழுக்களுக்கு தகுந்தவாறு செயலாற்றும் மருந்துகள் நிரூபணத்தின் போது பதிவு செய்யப்பட்டுள்ளது. அம்மருந்துகளை பரிந்துரைக்க தவிறிவிடக்கூடாது.

         உதாரணமாக , மாமிசம் உணவு சாப்பிடுபவர்களுக்கு ஆர்சனிக்கம் ஆல்பம் மருந்து நன்றாக வேலை செய்யும். மிக முக்கியமான பதவியிலுள்ள அதிகாரிகள், பிரமுகர்கள் மற்றும் அதிமுக்கியமான மனிதர்களுக்கு லைகோபோடியம் ஒரு நல்ல மருந்து. இந்தியாவிலுள்ள பார்சி இனமக்களுக்கு பல்ஸாட்டில்லாவும், பிரான்ஸ் மக்களுக்கு அனகார்டியமும் , இத்தாலி மக்களுக்கு லாக்கஸிஸ் மருந்தும், இங்கிலாந்து மக்களுக்கு சல்பரும் , மெடோரினம் மற்றும் சிபிலினம் மருந்துகள் ஜெர்மனி , அமெரிக்க மக்களுக்கும் உரிய பொருத்தமான மருந்தாக இருக்கிறது என்று மருத்துவர் இராமன்லால் படேல் குறிப்பிடுகிறார். அதனால் மருந்துகளின் இயல்பான குணநலன்களை அதன் இயற்கைச் சூழலோடு பொருத்தி பார்த்து  கற்றறிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் தோல்விகளை தவிர்க்க முடியும்.

அதனால் , மேற்கூறிய  தோல்விக்கான  காரணங்களை  நன்றாக கற்றுக்கொண்டு அவற்றை களைந்து வெற்றிகரமான மருத்துவர்களாக வளம் வர கீழ்காணும் நடைமுறைகளை ஒவ்வொரு மருத்துவரும்  கடைபிடிக்க வேண்டும்.

a.                  மாமேதை ஹானிமன் தொகுத்துக் கொடுத்த ஹோமியோபதியின் அடிப்படை விதிகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். மருத்துவர்கள் லிப்பே , ஹெரிங் , பி.பி. வெல்ஸ் , கரோல் டன்ஹாம் மற்றும் போயின்னிங்ஹாசன் போன்றவர்களின் வெற்றிக்கான இலக்கணத்தையும் , வழிகாட்டுதல்களையும் முறையாக கற்றுக் கொள்ளவேண்டும்.

  1. மாமேதை ஹானிமனின்   வழிகாட்டுதலின் அடிப்படையில் ( ஆர்கனான் மணிமொழிகள் 72 முதல் 104 வரை) துயரரை அணுகி , கலந்துரையாடல் நடத்தி சரியான மருந்தினை தேர்ந்தெடுக்க வேண்டும்.  

  1. தரமான  மற்றும் நம்பிக்கைக்குரிய மருந்தியியல் களஞ்சியத்தையும் , மருந்துகாண் ஏட்டையும் பயன்படுத்த வேண்டும்.

  1. ஹோமியோபதி மருத்துவர்களுக்கு உடற்கூறியியல் ( ANATOMY), உடல்நூல் (PHYSIOLOGY), நோய்குணநூல் (PATHOLOGY) , மனிதப் பண்பான்மை ஆக்கம்பற்றிய ஆய்வு நூல் (ETHOLOGY), மனோதத்துவம்( PSYCHOLOGY), பிற உயிரியியல் சார்ந்த அறிவு  ( BIOLOGICAL) , மற்றும் பல்வேறு நோய்களை அறிந்து கொள்ளும் ஆற்றல் ( DIFFERENTIAL DIAGONSIS) போன்றவைகள் மிகவும் அவசியம். இவற்றை அவசியம் கற்றறிந்திருக்க வேண்டும்.

இவ்வாறு   ஹோமியோபதியின் உயர்ந்த தத்துவங்களையும் , விதிகளையும் ஒரு ஹோமியோபதி மருத்துவர் தம் மனதில் உள்வாங்கிக்கொண்டு  செவ்வனே கடைபிடித்து வந்தால்  , அவர் பல வெற்றிகளைப் பெற்று, பல துயரர்களின்  ஆரோக்கியத்தை மீட்டெடுத்து  இவ்வுலகில் வாழ்ந்ததற்கான பயனை அடைவார்.


            Bibliography :

  1. Some of the causes of failures in Homeopathic Practice. By Dr.R.P.Patel.
  2. How not to do it- Article by Dr. Margaret Tyler.
  3. The Causes of Failure in Homeopathic Practice- Article by Dr. Ajit Kulkarni.
  4. The causes of failure in Homeopathy- Article by Dr. Andrew Saine.
  5. what we must not do in Homeopathy -  Dr. Fortier Bernoville.

பின்குறிப்பு :  இக்கட்டுரை  சம்பந்தமான விமர்சனங்களும் ஆலோசனைகளையும் வரவேற்கிறேன். அது இக்கட்டுரையை இன்னும் செழுமையாக்கும் என்று கருதுகிறேன்.

சு.கருப்பையா
+919486102431
www.manithanalam@gmail.com




No comments:

Post a Comment