Sunday 6 June 2021

மருத்துவர் வில்லியம் போயரிக்

 

மருத்துவர் வில்லியம் போயரிக்

(William G. Boericke )


பிறப்பு: 25/10/1849

இறப்பு:01/04/1929

 

 

மாமேதை ஹானிமனை அடியொற்றி ஹோமியோபதியின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிய பல முன்னோடிகளை நாம் கண்டிருந்தாலும்  மருத்துவர் வில்லியம் போயரிக்கின் பங்களிப்பு சற்று கூடுதலாகவே நம் சிந்தனைகளில் உலா வரும். ஆம்!. மாமேதை ஹானிமனின் " ORGANAON OF MEDICINE” என்ற ஹோமியோபதி தத்துவங்களை உள்ளடக்கிய புத்தகத்தின் ஆறாம் பாதிப்பை வெளிக் கொணர்ந்ததில் வில்லியம் போயரிக்கின் பங்கு மகத்தானது.

 

மாமேதை ஹானிமனின் மறைவிற்குப் பிறகு அவரால் ஆறாவது முறையாக திருத்தப்பட்ட " ORGANAON OF MEDICINE " நூலின் கையெழுத்துப் பிரதி அவரது இரண்டாவது மனைவி மேடம் மெலானியால் வெளியிடப்படாமல் முடக்கப்பட்டது. பின்னர், மேடம் மெலானியின் மறைவிற்குப் பிறகு அக்கையெழுத்துப் பிரதி போயின்னிங்ஹாசனின் குடும்பத்தினரைச் சென்றடைந்தது . அவர்களும் ஆர்கனான் ஆறாம்பதிப்பை வெளியிடுவதில் ஆர்வம் காட்டவில்லை.

 

அவர்களிடம் அப்பிரதி இருப்பதை அறிந்துகொண்ட வில்லியம் போயரிக் , அதை வெளியிடுவதற்கு இடைவிடாத முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், பலன் எதுவும் கிட்டவில்லை. பின்னர், முதல் உலகப் போரின் விளைவாக தம் சொத்துக்களையெல்லாம் இழந்து தவித்த போயின்னிங்ஹாசனின் குடும்பத்தினருக்கு ஆர்கனான் பிரதியைக் கொடுத்து பணம் பெறுவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலை ஏற்பட்டது.

 

ஆம்! வில்லியம் போயரிக்கின் இருபது ஆண்டு காலப் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆர்கனான் ஆறாம் பதிப்பின் கையெழுத்துப் பிரதியை அவருக்கு விற்க போயின்னிங்ஹாசன் குடும்பத்தினர் முன் வந்தனர், இதற்கு பேருதவியாக இருந்தவர் போயரிக்கின் நண்பர் மருத்துவர் ரிச்சர்டு ஹெகல் என்பதை இங்கே கட்டாயம் சுட்டிக்காட்ட வேண்டியதுள்ளது. அவரே ஆர்கனானின் ஆறாம் பதிப்பை முதலில் ஜெர்மானிய மொழியில் கி.பி. 1921  இல் வெளியிட்டார். பின்னர் கி.பி. 1922  இல் வில்லியம் போயரிக் அவர்களால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. இந்த ஒரு செயலுக்காகவே மருத்துவர் வில்லியம் போயரிக் அவர்களுக்கு ஹோமியோபதி உலகம் பெரிதும் கடமைப்பட்டுள்ளது.

 

ஆஸ்திரிய நாட்டில் பிறந்த மருத்துவர் வில்லியம் போயரிக் அங்கேயுள்ள " வியன்னா மருத்துவப்பள்ளியில் " தமது மருத்துவப்படிப்பைத் தொடங்கினார். முதலாம் ஆண்டு படிப்பு முடிந்த பிறகு சூழ்நிலையின் காரணமாக போயரிக்கின் குடும்பம் அமெரிக்காவிற்கு குடிபெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அங்கே, பிலடெல்பியாவில் உள்ள ஹானிமன் மருத்துவக் கல்லூரியில் தமது மருத்துவப் பட்டப்படிப்பை தொடர்ந்து படித்து கி.பி. 1880  ஆம் ஆண்டு மருத்துவர் பட்டம் பெற்றார். பின்னர் சான்பிரான்சிஸ்க்கோ நகருக்கு தமது குடியிருப்பை மாற்றிக் கொண்ட போயரிக் அங்கேயே 50  ஆண்டுகள் மருத்துவச் சேவையினைச் செய்தார்.

 

கி.பி 1881  இல் ,  சான்பிரான்சிஸ்க்கோ நகரில் பசிபிக் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியும் , ஹானிமன் மருத்துவமனையும் உருவாக்க பெரிதும் காரணமாக இருந்தார் போயரிக். பின்னர் , இக்கல்லூரி கலிபோர்னியா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டது. இந்தக் கல்லூரியில் தான் வில்லியம் போயரிக்  ஹோமியோபதி மருந்துகாண் ஏடு மற்றும் சிகிச்சைக்குறிப்புகள் பற்றி போதிக்கும் பேராசிரியராக ஏறத்தாழ 30  ஆண்டுகள் பணியாற்றினார். அவர் மிகச் சிறந்த பேராசியராக திகழ்ந்தவர் என்பதற்கு சான்றாக கி.பி. 1901 இல் அவர் வெளியிட்ட  “ POCKET MANUAL OF HOMEOPATHY MATERIA MEDICA “ என்ற புத்தகம்  விளங்குகிறது என்றால் அது மிகையாகாது. அந்த புத்தகம் கி.பி. 1922  க்குள் ஒன்பது பதிப்புக்கள் வெளிவந்தது என்றால் அதன் சிறப்பினை நாம் புரிந்து கொள்ள முடியும். பின்னர் வில்லியம் போயரிக்கின் சகோதரர்  ஆஸ்கார் போயரிக் அவர்களின் முயற்சியால் மருந்துகாண் ஏடு அந்தப்புத்தகத்துடன் கி.பி. 1906 இல் இணைக்கப்பட்டது. மருத்துவர் வில்லியம் போயரிக் எழுதிய நூல்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

1.      THE TWELEVE TISSUE REMEDIES OF DR.SCHUSSLER-  WITH W.A.DEWEY-1888

2.      A COMPEND OF THE PRINCIPLES OF HOMEOPATHY AS TAUGHT BY HAHNEMANN-1896

3.      Pocket Manual of Homeopathic Materia Medica-1901

4.      The Management and Care of Children – Including Homeopathic Treatment-1903

5.      The Care, Feeding and Homeopathic Treatment of Children- with dr.runyan.-1903

6.      HOMEOPATHY A SPECIALITY IN THERAPEUTIC – 1908

7.      ORGANON OF MEDICINE –With tafel- 1922

 

ஹோமியோபதியின் மூலம் இவ்வுலகிற்கு அரும்பணியாற்றிய மருத்துவர் வில்லியம் போயரிக் மாரடைப்பின் காரணமாக கி.பி. 1928  ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். மரணத்தால், அம்மேதையின் பூதவுடலைத் தான் மறைக்க முடிந்ததே தவிர, அவருடைய புகழை அல்ல. அவரின் பட்டறிவினால் உருவான மருந்தியல் களஞ்சியத்தின் மூலம் ஆயிரமாயிரம் நோயாளிகள் நலமடைந்து வருவது வில்லியம் போயரிக்கின் கொடையே!.

 

SOURCE: www.homeoint.org

 

(இக்கட்டுரை ஹோமியோ தோழன் நவம்பர்-2007  இதழில் எழுதியது).

 

Saturday 5 June 2021

மருத்துவர் தீவே வில்லிஸ் அலோன்ஸோ

 

மருத்துவர் தீவே வில்லிஸ் அலோன்ஸோ

(DR.DEWEY WILLIS ALONZO ., MD)

 


பிறப்பு: 25/10/1858

இறப்பு: 01/04/1938

 

 அமெரிக்கராகிய மருத்துவர் தீவே வில்லிஸ் அலோன்ஸோ , வெர்மாண்ட் ( VERMONT) நகரிலுள்ள மிடில்பரி ( MIDDLEBURY) என்னுமிடத்தில் 25 /10 /1858  ந்தேதி பிறந்தார். இவரது தகப்பனார் பெயர் ஜோசியா ஏரல் தீவே ( JOSIAH EARL DEWEY) . தாயார் பெயர் யூனிஸ்  (EUNICE CONVERSE CARPENTER). 

 

மருத்துவர் தீவே தனது பள்ளிப்படிப்பை மிடில்பரியிலுள்ள ஒரு உயர்நிலைப்பள்ளியில் 1872  ஆம் ஆண்டு முடித்தார். நியூயார்க்கிலுள்ள பேக்கார்ட்ஸ் வர்த்தகக்  கல்லூரியில்  ( PACKARD’S BUSINESS COLLEGE) தனது பட்டப்படிப்பை முடித்தார். பின்பு  நியூயார்க் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டப்படிப்பை 1880  இல் முடித்து பட்டம் பெற்றார். இவர் 1881  மற்றும் 1882  ஆம் ஆண்டுகளை தமது பட்ட மேற்படிப்பிற்காக பெர்லின் ( BERLIN)   , ஹெப்ட்டில்பர்க் (HEIDLEBURG) ,  வியன்னா( VIENNA) , பாரிஸ் (PARIS)  மற்றும் இலண்டனில் (LONDON) கழித்தார்.

  

இவர் மருத்துவராகவும் , கட்டுரையாளராகவும் , தி மெடிக்கல் செஞ்சுரி ( THE MEDICAL CENTURY) என்ற பத்திரிக்கையின் ஆசிரியராகவும் மற்றும் உரிமையாளராகவும் விளங்கியதால் இவருடைய சேவை அட்லாண்டிக் கடலிலிருந்து பசிபிக் கடல் வரை விரிவடைந்தது. 1880 ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள “ WARDS ISLAND HOMEOPATHIC HOSPITAL” இல் தங்கி மருத்துவம் செய்யும் மருத்துவராக பணியாற்றினார். அடுத்த இரண்டு ஆண்டுகளை ஒரு வெளிநாடுகளில் கழித்தார் . 1884  முதல் 1888  வரை " ஹானிமன் மெடிக்கல் காலேஜ் ஆப் தி பசிபிக்"  கில் உடலியல் கற்றுத் தரும் பேராசிரியராகவும் , 1888  முதல் 1892  வரை மருந்தியல் களஞ்சியம் நடத்தும் பேராசிரியராகவும் வேலை பார்த்தார்.

 

இதே காலகட்டத்தில் " கலிபோர்னியா ஹோமியோபதி" என்ற பத்திரிக்கையின் ஆசிரியராகவும் விளங்கினார். 1893  மற்றும் 1894  ஆண்டில் நியூயார்க்கிலுள்ள " மெட்ரோபாலிட்டன் போஸ்ட் கிராஜுவேட் ஸ்கூல் ஆப் மெடிசின் ( METROPOLITAN POST GRADUATE SCHOOL OF MEDICINE) “கல்லூரியில் மருந்தியல் களஞ்சியம் கற்றுத் தந்தார். 1896  ஆம் ஆண்டு “ UNIVERSITY OF MICHIGAN” இல் இதே வேலையில் சேர்ந்தார். 1900 இல் மிச்சிகன் இல் உள்ள தனியார் பல்கலைக்கழத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். இவ்வாறாக , தமது வாழ்க்கையில் பெரும் பகுதியை ஹோமியோபதிக்காக அர்பணித்துக் கொண்டார்.

இவர் மருத்துவர் வில்லியம் போயரிக் உடன் இணைந்து " TWELVE TISSUE REMEDIES”  என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இது தவிர,

 

1.      Essentials of homeopathic Materia Medica.

2.      Essential of homeopathic Therapeutics

3.      Practical homeopathic Therapeutics

 

ஆகிய நூல்களையும் ஹோமியோபதி உலகிற்கு அர்பணித்துள்ளார். இதில் குறிப்பாக “ Practical homeopathic Therapeutics” என்ற நூல் நோயாளிக்கு சரியான ஹோமியோபதி மருந்தை  தேர்வு செய்வதற்கு நமக்கு வழிகாட்டுகிறது என்றால் அது மிகையாகாது.

  ( இக்கட்டுரை ஹோமியோ தோழன் அக்டோபர் 2007  இதழில் எழுதியது).

மருத்துவர் கரோல் டன்ஹாம்

                                                    மருத்துவர் கரோல் டன்ஹாம்

( DR. CARROLL DUNHAM.,MD )



 பிறப்பு: 28/10/1828

இறப்பு: 18/02/1877

 

 

மருத்துவர் கரோல் டன்ஹாம் அமெரிக்காவில் ஒரு மேம்பட்ட ஹோமியோபதி மருத்துவராக விளங்கினார். இவர் 29 /10 /1828 இல் நியூயார்க்கில் பிறந்தார். 1847  இல் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்தார். 1850 ஆம்  ஆண்டு “ COLLEGE OF PHYSICIANS AND SURGENS” என்னும் மருத்துவக் கல்லூரியில் M. D பட்டம் பெற்றார்.

 

இவர் டப்ளின் ( DUBLIN) என்னுமிடத்தில் ஒரு பிரேத பரிசோதனை செய்யும் போது இவருக்கு காயம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட சாகும் தருவாயில் இருந்த இவர் லாக்கஸிஸ் ( LACHESIS) என்னும் ஹோமியோபதி மருந்தைக் கொண்டு தன்னைத்தானே நலப்படுத்திக் கொண்டார்.

 

அதன் பிறகு ஐரோப்பா நாடுகளில் உள்ள எத்தனையோ ஹோமியோபதி மருத்துவமனைகளைப் பார்வையிட்டார். முன்ஸ்டர் ( MUNSTER) என்னுமிடத்திற்கு சென்ற போது இவருக்கு மருத்துவர் போயின்னிங்ஹாசனுடன் தொடர்பு ஏற்பட்டது. ஹோமியோபதி மருத்துவத்தில் கைதேர்ந்த அவரிடம் ஹோமியோபதி மருத்துவ முறையை நன்றாகப் படித்துக் கற்றுக்கொண்டார்.

 

 

இவர் தன் வாழ்க்கையின் பின் பகுதியில் பெரிய அளவில் ஹோமியோபதி மருத்துவம் செய்ததின் காரணமாக இவருக்கு இதயவீக்க நோய் ( RHEMATIC CARDITIS) ஏற்பட்டது. அலோபதி மருத்துவர்கள் தங்களால் நலப்படுத்த இயலாது என்று கையை விரித்து விட்டனர். ஆனால், ஹோமியோபதி மருத்துவம் மீண்டும் காப்பாற்றியது. இவருடைய நண்பர் மருத்துவர் ஹெரிங் , இவருக்கு லித்தியம் கார்பானிக்கம் ( LITHIUM CARBONICUM) என்னும் ஹோமியோபதி மருந்தைக் கொடுத்து நலமாக்கினார். அதன் பிறகு இவர் தமது நீண்டகாலக் கனவாகிய " உலக ஹோமியோபதி அவை ( WORLD HOMEOPATHIC CONVENTION)  " என்ற அமைப்பை உருவாக்கினார்.

 

இந்த அமைப்பு மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டது என்றாலும் இவரை மிகவும் கலைத்துப் போகச் செய்தது. 1876  ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் படுத்த படுக்கையான இவர் , 1877  ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ந்தேதி காலமானார்.

 

இவர் கீழ்காணும் நூல்களை ஹோமியோபதி உலகிற்கு வழங்கியுள்ளார்;

 

1.       LECTURES ON MATERIA MEDICA AND HOMEOPATHY.

2.       THE SCIENCE OF THERAPEUTICS.

 

மேற்கண்ட நூல்களைத்தவிர பல பத்திரிகைகளில் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

 

( இக்கட்டுரை ஹோமியோ தோழன் அக்டோபர் 2007  இதழில் எழுதியது