Thursday, 21 May 2020

மரு. J.T. கெண்ட் அவர்களின் 12- கூர் நோக்கு அல்லது கூர்ந்த கவனிப்பு


நோயாளிக்கு ஹோமியோபதி மருந்து கொடுத்த பிறகு அவரிடத்தில் தோன்றும் நோயைப் பற்றிய முன்னறிவிப்பு – மரு.  J.T. கெண்ட் அவர்களின் 12- கூர் நோக்கு அல்லது கூர்ந்த கவனிப்பு

DR.J.T.KENT 
BORN: 31/03/1849
DIED: 05/06/1916



ஒரு நோயாளிக்கு உரிய ஹோமியோபதி மருந்து கொடுக்கப்பட்ட  பிறகு, அவ்வாறு கொடுக்கப்பட்ட மருந்துகளின் விளைவாக நோயாளியின் உடலில் என்ன மாற்றங்கள் நடக்கிறது என்பதை  மருத்துவர் கவனிக்க வேண்டும். மருந்து கொடுத்த பிறகு என்ன நடக்கக்கூடும் என்று கற்றுணராமல்  இருப்பது தவறான மருந்துகள் கொடுக்க  வழிவகுக்கும். ஹோமியோபதி மருத்துவர் ஒரு துல்லியமான உற்று நோக்குபவராக  இல்லாவிட்டால், அவரது கூர்ந்த கவனிப்பு நிச்சயமற்றதாக  இருக்கும்; அவ்வாறு அவரது கூர்நோக்குதல் நிச்சயமற்றதாக இருந்துவிட்டால் , அவர் பரிந்துரைக்கும் மருந்தும் நிச்சயமற்றதாக அதாவது  தவறான மருந்தாக இருக்கும்.  ஒரு மருந்து கொடுக்கப்பட்ட  பிறகு, அது செயல்புரியும்  என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மருந்து செயல்படுகிறதென்றால், அது நோயாளியிடம்  உடலில்  உடனடியாகத் மாற்றத்தைக் கொடுக்கும் , மேலும் இந்த மாற்றங்கள் அடையாளங்கள்  மற்றும் அறிகுறிகள் (SIGNS AND SYMPTOMS)  மூலம் வெளிப்படுகின்றன. நோயாளிக்கு கொடுக்கப்பட்ட  மருந்து சரியான மருந்தாக  இல்லாவிட்டால், காத்திருப்பது நேரத்தை இழப்பதாகும் என்பதை மருத்துவர் தமது கவனத்தில்  எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். ஒரு மருந்து வேலை செய்கிறது என்பதை  நோயாளியின் அறிகுறிகளில் ஏற்படும் மாற்றத்தின்  மூலம் அறிந்து கொள்ளலாம்.  மருந்து கொடுத்த பிறகு நோயாளியின் அறிகுறிகள் மறைந்து  போகுதல், அறிகுறிகள் அதிகரித்தல் , நோய்க்குறிகள்  குறைதல், அறிகுறிகளின் வரிசை மற்றும் காலம் ஆகியவற்றில்  வரும் மாற்றங்கள் போன்றவைகள் ஏற்படும்,  இந்த மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். பொதுவாக மருந்து கொடுத்த பிறகு  நோயாளியிடம் இருந்த நோய்க்குறிகள் அதிகரிக்கவோ (AGGRAVATE)   அல்லது குறையவோ ( ameliorate) செய்யும் . நோய்க்குறிகள் அதிகரிப்பது இரண்டு வகைப்பட்டதாகும்; நோய்த்தன்மை ( disease) அதிகமாகும், அதனால் நோயாளிக்கு தொல்லைகள் அதிகரிக்கும் ; அல்லது நோய்க்குறிகள் (symptoms) அதிகரிக்கும் , ஆனால் நோயாளி நலமடையத் துவங்குவார். இதன் மூலம் சரியான மருந்து கொடுத்திருப்பதை ஹோமியோபதி மருத்துவர் அறிந்து கொள்வார். ஆகவே , ஒரு நோயாளி நலமடைகிறாரா? அல்லது மோசமடைகிறாரா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள நோயாளியை கூர்ந்து  கவனித்து பார்ப்பதே ஒரு மருத்துவரின் இலக்கு ஆகும். அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்;

1-வது கூர்ந்த கவனிப்பு: மிக நீண்ட  நாட்களுக்கு நோய்க்குறிகள்  அதிகரித்தல் மற்றும் முடிவில் நோயாளி நலிவடைதல் (Prolonged aggravation and final decline of the patient).

Ø  இந்த நிலை  குணப்படுத்த முடியாத ஒரு நோயாளரிடம்  காணப்படுகிறது, அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள சோரா ( சொறி-சிரங்கு நோய்மூலத்திற்கு ) எதிர்ப்பு மருந்து மிகவும் ஆழமாக வேலை செய்கிறது , மேலும் அது அழிவை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இந்த நிலை குணப்படுத்தும் வரிசையின் தலைகீழாக  உள்ளது.

Ø  நோயாளி படிப்படியாக நலிவடைகிறார் . நோய்க்குறிகள்   உள் உறுப்புகளை தாக்கியுள்ளன  - நோயாளியின் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன . இந்த நிலையில், நலப்படுத்தமுடியாத  மற்றும் சந்தேகத்திற்குரிய நோயாளிக்கு  மருந்தை 30 அல்லது 200 வது வீரியத்துக்கு  அதிகமாக கொடுக்கக்கூடாது ,முக்கிய எதிர்வினை சாத்தியமற்றது.

Ø  நலப்படுத்தமுடியாத  மற்றும் சந்தேகத்திற்குரிய நோயாளிக்கு  மருந்தை 30 அல்லது 200 வது வீரியத்துக்கு  அதிகமாக கொடுக்கக்கூடாது , மேலும் நோயாளியிடம் நோய் அதிகரித்தல்  மிக ஆழமாகவோ அல்லது நீண்ட காலமாகவோ இருக்குமா என்பதைக் கவனியுங்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மிதமான குறைந்த வீரியமுள்ள மருந்துகளுடன் சிகிச்சையைத்  தொடங்குங்கள், மேலும் 30 வது வீரியம் யாருக்கும் அல்லது எந்த நோய் நிலைக்கும்  போதுமானதாக இருக்கும். இல்லையெனில்,  ஆழ்ந்து வேலை செய்யும் மருந்தை உயர்ந்த வீரியத்தில் கொடுக்கும் போது அது நோயாளியை இறப்பை நோக்கித் தள்ளும் வகையில் நோய்க்குறிகள் அதிகரித்து  ஒரு கொலையாளியின் மோசத்தை ஏற்படுத்துகிறது.

விளக்கம் :

ஒரு வளைந்த -தோள்பட்டையுடன் ,  ஒரு  நோயாளி,  நீண்டகாலமாக தொல்லை தரும் வறண்ட  இருமலுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள என்னிடம் வந்தார்.  அவரது முகம்  நோயினால் பீடிக்கப்பட்டு நலிவுற்று இருந்தது, அவர் மெலிந்தவராகவும்,  பதட்டத்துடனும்   இருந்தார் , மேலும் அவர் கவலையுடையவராகவும்  மற்றும் ஏழையாகவும் தெரிந்தார் . அவரது நோயநிலைக்குத் தகுந்த  ஒரு சோரா எதிர்ப்பு மருந்து  சுட்டிக் காட்டியது . அவருக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டு நோயாளி சீராக நலிவடைந்து கொண்டு வந்தார் . அவருக்கு சோரா எதிர்ப்பு மருந்து  கொடுத்த பிறகு  - சில நாட்களில் அவர் அறிகுறிகளின் கூர்மையான தீவிரத்துடன் திரும்பி வந்தார்  - இருமல் அதிகரித்திருந்தது , இரவில் அதிகம்  வியர்வை ஏற்பட்டது மற்றும் அதிக பலவீனமாக இருந்தார் . அந்த  நோயாளி ஒரு வாரத்தில் திரும்பி வந்தார் , அவரது தொல்லைகள் மேலும் மோசமடைந்து இன்னும் அதிகரித்து வந்தது  - இருமல் மோசமானது, சளி வெளியேறுவது  மிகவும் தொந்தரவாக இருந்தது , இரவில்  வியர்வை தோன்றுவது மேலும் அதிகரித்துக்  கொண்டிருக்கிறது; அவர் இரண்டாவது வாரத்தின் இறுதியில் திரும்பி வந்தார் , அவர் இன்னும் மோசமாக இருக்கிறார், அவர் அந்த மருந்தை உட்கொண்டதிலிருந்து எல்லா அறிகுறிகளும் மோசமாக உள்ளன. அவர் அந்த மருந்தை எடுத்துக்கொள்வதற்கு முன்பு ஒப்பீட்டளவில் நன்றாகத் தான்  இருந்தார், ஆனால் நான்காவது வாரத்தின் முடிவில் அவர் நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டிருந்தார். இந்த நோய்க்குறிகள் அதிகரிப்பைத்  தொடர்ந்து எந்தவிதமான முன்னேற்றமும் அதாவது நோய்த்தணிவு ஏற்படவில்லை, மேலும் அவர் நலம் குன்றி வருவது தெரிந்தது - நீடித்த ஒருங்கிணைப்பு மற்றும் இறுதி முடிவு. இதுதான், “ மிக நீண்ட  நாட்களுக்கு நோய்க்குறிகள்  அதிகரித்தல் மற்றும் முடிவில் நோயாளி நலிவடைதல்” என்பதற்கு உதாரணம் ஆகும்.


மருத்துவரின் கடமை (DUTY OF THE PHYSICIAN) :

உடனடியாக கொடுக்கப்பட்ட மருந்தை முறிக்க வேண்டும். மறுபடியும் நோயாளியை பரிசோதனை செய்து ஒத்த மருந்தை குறைந்த வீரியத்தில் கொடுக்க வேண்டும்.

நாட்பட்ட மற்றும்  சந்தேகமுள்ள நோய்களில் உயர்ந்த வீரியத்தை பயன்படுத்தக் கூடாது.

திசுக்களில் மாற்றம் ஏற்பட்டுள்ள நோயாளிகளுக்கு 6/c வீரியம் அல்லது 30-வது வீரியத்தில் மருந்து கொடுக்க வேண்டும் என்று மரு, M.L. டெய்லர் குறிப்பிடுகிறார். இந்த நிலையில் சோரா எதிர்ப்பு மருந்துகளை ( சொறி-சிரங்கு நோய்மூலத்திற்கு எதிரான) பயன்படுத்தாமல் இருப்பது புத்திசாலித்தனமானது என்கிறார் மரு. H.A. ராபர்ட்ஸ் .

நோய் பற்றிய முன்னறிவிப்பு  (PROGNOSIS):  மிகவும் தீங்கானது .


2- வது   கூர்ந்த கவனிப்பு: நீடித்த  நோய்க்குறிகள்  அதிகரிப்பு  , ஆனால் முடிவில் , நோயாளி சிறிது சிறிதாக முன்னேற்றமடைதல் (Long aggravation, but final and slow improvement).

Ø  நோய்த்தாக்குதல்  ஆழமாக பாதிக்காத  நோயாளிக்கு , அவர்களின் உள் உறுப்புகளில்  மிகவும் ஆழ்ந்த தொந்தரவுகள் ஏற்பட்டு இருக்காது- அத்தகைய நோயாளிக்கு உயர்ந்த வீரியத்தில் மருந்து கொடுக்க வேண்டும்.

Ø  நோய்க்குறிகள் அதிகரித்தல்  நீண்ட நாட்களுக்கு இருக்கும் , அது  கடுமையாகவும்  மற்றும் பல வாரங்களுக்கு நீடிக்கும், ஆனால் முடிவில் நோய்க்குறிகள் குறைந்து  முன்னேற்றம் ஏற்படும்  - நோயாளி மெதுவாக  ஆனால் நிச்சயமாக நலமடைவார்.

Ø  நோய் இதுவரை முன்னேறவில்லை என்பதை இது காட்டுகிறது; அதனால் மாற்றங்களும்  குறிப்பிட்ட அளவில் இருக்காது.

Ø  நோயாளி நலமடைவது சந்தேகம் என்று தோன்றும்   சந்தர்ப்பங்களில் குறைந்த வீரியமுள்ள மருந்துகளை கொடுப்பது தான்  எப்போதுமே நல்லது, இவ்வாறு குறைந்த வீரியத்தில்  மருந்து கொடுத்த பிறகு , நோயின் போக்கு  தவறான பாதையில் சென்றால் ,  எச்சரிக்கையடைந்து அம்மருந்தின்  செயலை செயலைத் தடுக்க முறிவு மருந்து கொடுக்க வேண்டும்.

Ø  மருந்து எடுத்துக்கொண்ட சில வாரங்களின் முடிவில், நோயாளி  கொஞ்சம் நன்றாக இருக்கிறார் மற்றும் அவரது அறிகுறிகள்  மருந்து எடுத்துக் கொள்ளும் போது இருந்ததை விட  சிறிது  குறைந்திருக்கிறது என்றால் , பிறகு  அவரது நோய்க்குறிகள்   வெளிப்புற வெளிப்பாட்டைக் ஏற்படுத்தக் கூடும் , இதனால் அவர் இறுதியில்  நோயிலிருந்து மீண்டு  நல்ல நிலைக்கு வருவார்  என்ற  நம்பிக்கை ஏற்படும் , ஆனால் பல ஆண்டுகளுக்கு  நீடித்த  நோய்குறிகளுடன் அந்த நோயாளிக்கு  நீங்கள் சிகிச்சையளிக்க நேரிடும்.

மருத்துவரின் கடமை (DUTY OF THE PHYSICIAN) :

கொடுக்கப்பட்ட மருந்தின் செயல் புரியும் ஆற்றல் முற்றிலும் தேய்ந்து போகும் வரை அம் மருந்தை தொந்தரவு செய்யக்கூடாது.

நோய் பற்றிய முன்னறிவிப்பு  (PROGNOSIS):  சாதகமானது.

3-வது   கூர்ந்த கவனிப்பு: நோய்க்குறிகள்  அதிகரிப்பு  விரைவாகவும்  , குறைந்த காலத்திற்கும்  , பலமாகவும் இருக்கும், அத்துடன் நோயாளி துரிதமாக நலமடையத் துவங்குவார். (Aggravation is quick, short and strong with rapid improvement of patient).

Ø  இந்த நிலை ,  நோயாளியின்  முக்கிய உறுப்புகளின் கட்டமைப்பில்  மாற்றம் ஏற்படாதவர்கள் அல்லது குறைந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த  உறுப்புகளின் கட்டமைப்பில்   மேலோட்டமான மாற்றங்கள் ஏற்பட்ட  சந்தர்ப்பங்களில் காணப்படுகிறது.

Ø  நோய்க்குறிகள் அதிகரித்தல் , மிக விரைவாக வருகிறது, குறுகிய காலத்திற்கே இருக்கும்  , மேலும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தீவிர நிலைக்கு வரும் , பின்னர் நோயாளியின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு நீண்ட நாட்களுக்கு நலமாக இருப்பார்.

Ø  உடலின் ஒழுங்கமைவில்  எதிர்வினை தீவிரமாக இருக்கும் . உடலின் ஒழுங்கமைவு  வேலையைச் செயல்படுத்தும் முக்கியமான உடல் உறுப்புகளில்  நிகழும் உறுப்புக்குரிய மாற்றங்களுக்கும், வாழ்க்கைக்கு அவசியமில்லாத உடலின் கட்டமைப்புகளில் நிகழும் உறுப்புக்குரிய மாற்றங்களுக்கும் வித்தியாசம் உள்ளது.

Ø  தீவிர நோய்களில் , நோயாளிகள்  மருந்து எடுத்துக் கொண்ட  ஒரு  மணி நேரத்திலும்   அல்லது  நாள்பட்ட நோய்களில் மருந்து எடுத்துக் கொண்ட  ஒரு  சில நாட்களிலும் நோய்க்குறிகள் மெதுவாக அதிகரிக்கும்.

Ø  நோய்க்குறிகள் அதிகரிப்பது என்பது விரைவாகவும் , குறுகிய காலத்திற்கும்  மற்றும் வலுவாகவும் இருந்தால் அது  விரும்பப்பட வேண்டிய ஒன்றாகும், அதைத் தொடர்ந்து விரைவான முன்னேற்றம் ஏற்படுகிறது.

மருத்துவரின் கடமை (DUTY OF THE PHYSICIAN) :

இந்த மாதிரியான நோய்க்குறிகள் அதிகரிப்பது நோயாளி நலம்பெறுவார் என்பதை  உறுதி செய்கிறது. அதனால் மருந்து செயல் புரிவதற்கு இடையூறு செய்யக்கூடாது.

நோய் பற்றிய முன்னறிவிப்பு  (PROGNOSIS):  மிகவும் நல்லது.


4-வது   கூர்ந்த கவனிப்பு:  நோய்க்குறிகள் அதிகரிப்பு இல்லாமல்,  நோயாளி நலமடைவார் (No aggravation, with recovery of patient).

Ø  இவை மிகவும் திருப்திகரமான முறையில் நடந்த  நலமாக்கல் ஆகும்  ,  நோயாளிக்கு மருந்து கொடுத்த பிறகு  , அவரிடத்தில் எந்தவிதமான நோய்க்குறிகள் அதிகரிப்பு இல்லாமல் நலம் ஏற்பட்டுள்ளது.

Ø  உடல் உறுப்புகளில்  நோய் இல்லை  ,  உடல் உறுப்புகளில்  நோய்த்தாக்கும் தன்மையும் இல்லை. அந்த நாட்பட்ட நோய்த்தன்மை  மிகவும் ஆழமானதல்ல, திசுக்களில் ஏற்படும் அச்சுறுத்தலான மாற்றங்களைக் காட்டிலும் நரம்புகளின் செயல்பாட்டின் விளைவால் எழுந்த நிலையாகும்.

Ø  நோய்க்குறிகள் அதிகரிக்கவில்லையென்றால் , கொடுக்கப்பட்ட மருந்தின் வீரியம் மிகப் பொருத்தமானதாக இருக்கிறது , மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்தும் மிகச் சரியானது ஆகும்.  இது நோயாளியின் அறிகுறிகள் முற்றிலும் நீங்கி, நோயாளி ஒரு ஒழுங்கான வழியில் ஆரோக்கியத்திற்குத் திரும்பும் செயலாகும்.

Ø  இது தீவிர நோய்தாக்குதலில் நலமாக்கல் கலையின்  மிக உயர்ந்த நிலையாகும் , இருந்தாலும் ,  மருத்துவர் சில சமயங்களில் அவர் மருந்து செய்த பிறகு  ஆரம்பத்தில் நோய்க்குறிகள்  சிறிதளவு அதிகரிப்பதைக்  கண்டால் அதிகம்  திருப்தி அடைவார்.

Ø  கொடுக்கப்பட்ட மருந்து  தவறான ஒன்றாக  இருக்கலாம் . இந்த நோயாளியை  மீண்டும் ஆய்வு செய்தால் , மருந்து  மிகவும் மோசமான அறிகுறிகளுக்கு மட்டுமே ஒத்திருந்தது என்பதையும், அது நோயாளியின் முழு தொல்லைகளுக்கும் பொருத்தமானதாக இல்லை  என்பதையும், இது நோயாளியின் உடலமைப்பு  நிலையில் செயல்புரியவில்லை  என்பதையும், மற்றும் நோயாளி யை நலப்படுத்த இயலாது என்பதைக் காட்டுகிறது .  மற்றும் மருந்து தேர்வு சாதகமற்ற ஒன்று என்பதையும் காட்டுகிறது.

மருத்துவரின் கடமை (DUTY OF THE PHYSICIAN) :

இது மருத்துவரின் மிக உயர்ந்த நலமாக்கல் ( தீவிர நோய்த்தன்மையில்) ஆகும்.

நோய் பற்றிய முன்னறிவிப்பு  (PROGNOSIS):  மிகவும் நல்லது ( தீவிர நோயில்) .

5- வது   கூர்ந்த கவனிப்பு:  முதலில்  நோய்க்குறிகள் குறையும், சில நாட்கள் கழித்து திரும்பவும் நோய்க்குறிகள் அதிகரிக்கும் (Amelioration comes first and the aggravation comes afterwards).

Ø  நோயாளி நன்றாக இருப்பதாக கூறுவார் , மேலும் அறிகுறிகள் குறைந்து  இருப்பதாகத் தெரிகிறது என்று கூறுவார்வார் ; ஆனால் ஒரு வாரம் அல்லது நான்கு அல்லது ஐந்து நாட்களின் கழித்து  அனைத்து அறிகுறிகளும் நோயாளி முதலில் வந்ததை விட மோசமாக இருக்கும்.

Ø  (அ) ஒன்று கொடுக்கப்பட்ட மருந்து மேலெழுந்தவாரியாக செயல்புரியும் மருந்தாக இருக்கிறது  , மேலும் அது  ஒரு நோய்த்தணிவிப்பு  மருந்தாக மட்டுமே செயல்பட முடியும், அல்லது  (ஆ) நோயாளி நலப்படுத்த முடியாதவராக இருக்கிறார்  மற்றும் மருந்து  ஓரளவிற்கு  பொருத்தமானது.

Ø  இந்த இரண்டு முடிவுகளில் ஒன்று தான் சரி என்று எடுத்துக் கொள்ள வேண்டும் , நோயாளியை மறு பரிசோதனை செய்வதன் மூலமும், நோய்க்குறிகள்  அந்த மருந்துடன்  தொடர்புடையதா என்பதைக் கண்டுபிடிப்பதன் மூலமும் மட்டுமே இதைச் செய்ய முடியும்.

Ø  நோய்க்குறிகள் முன்பு  இருந்தபடியே திரும்பி வந்தால் அது நோயாளிக்கு மிகச் சிறந்த விஷயம், ஆனால் பெரும்பாலும் அவை மாறுபட்ட வகையாக  திரும்பி வருகின்றன, பின்னர் மருத்துவர் கடுமையான துன்பங்களை கொண்ட  நோய்க்குறிகள்  வெளிவரும் வரை காத்திருக்க வேண்டும்.


மருத்துவரின் கடமை (DUTY OF THE PHYSICIAN) :

நோயாளியை மீண்டும் பரிசோதனை செய்து ஒத்த மருந்தை மீண்டும் தர வேண்டும்.

நோய் பற்றிய முன்னறிவிப்பு  (PROGNOSIS):   தீங்கானது.


6-வது   கூர்ந்த கவனிப்பு: மிக குறைந்த காலத்திற்கு மட்டுமே   நோய்க்குறிகள் நீங்கி தொல்லைகள் குறையும் (Too short relief of symptoms).


Ø  நலப்படுத்தக்கூடிய  நோயாளிக்கு உயர்ந்த வீரியத்தில் கொடுக்கப்பட்ட சரியான மருந்து  செயல்படும்போது - மருந்து உடனே  செயல்பட்டு உடலின் ஒழுங்கு  நிலையை நிலைநாட்டுகிறது , அதன் பிறகு மருந்து கொடுப்பதற்கு  அவசியமில்லை. இந்த நிலை  கணிசமான காலத்திற்கு  தொடரலாம், சில நேரங்களில் பல மாதங்கள் வரை நீடிக்கும் . நோயாளி எந்த மருந்தும் சாப்பிடாமலே நன்றாக இருப்பார் . ஆனால், நோயாளி முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரத்தின் முடிவில் திரும்பி வந்து, அவர் சிறப்பாகச் செயல்பட்டதாகக் கூறுவார் , மற்றும் அவரது  நோய் நிலையில்  எல்லா நேரத்திலும் முன்னேற்றம் அடைந்திருப்பார் , ஆனால் நான்காவது வாரத்தின் முடிவில் அவரது நோய்க்குறிகள் மீண்டும் அதிகரித்து  திரும்பி வரக்கூடும்.

Ø  இது சில தடையின் காரணமாக இருக்கலாம் - ஏதேனும் ஒன்று  மருந்தின்  செயலைக் கெடுத்திருக்கக் கூடும் . இந்த நிலை நோயாளிக்கு சாதகமற்ற ஒன்றாகும்.

Ø  நோயாளியின் உடலமைப்பிற்கு தகுந்த மருந்து கொடுத்த  பிறகு நோயாளிக்கு  நிவாரணம் நீண்ட காலம் நீடிக்கவில்லை என்றால், சில நிலைமைகள்   மருந்தின்  செயல்பாட்டில் தலையிடுவது காரணமாக  இருக்கிறது  ; இது நோயாளியின் தரப்பில் தன்னுணர்வற்ற நிலையில் ஏற்படலாம்  அல்லது அது வேண்டுமென்றே கூட இருக்கலாம் (உதாரணமாக , ஒவ்வாத உணவு , மது போன்றவைகளை எடுத்திருக்கலாம் ). ஒரு விரைவான மீளுருவாக்கம் என்பது சரியான மருந்துத் தேர்வில் இருக்கிறது , அது நன்கு தேர்ந்தெடுக்க வேண்டும் , அதனால் உடலின் ஆரோக்கியம்  ஒரு நல்ல நிலைக்கு வரும் , மற்றும் எல்லாம் சரியாக நடந்தால், நலமாக்கல் விரைவில்  ஏற்படும் .

Ø  தீவிர அல்லது கடுமையான நோய் நிலையில்  , நோய்க்குறிகள்  தணிவது மிகக் குறைவான காலத்திற்கு இருக்கும் போது , அதற்கான மருந்தை  மீண்டும் கொடுக்கலாம் . தீவிர நோய்த்தன்மையில் நோய்த்தணிவு  மிகவும் குறுகியதாக இருந்தால், உடலின் உறுப்புகளை ஏற்படும்  அழற்சி அல்லது தீவிரத்தன்மை உயர்ந்த நிலையில் இருக்கிறது  (அதாவது இயற்கை நோயின் ஆற்றல் அதிகமாக இருக்கும்), அதன் விரைவான செயல்முறைகளால் உறுப்புகள் அச்சுறுத்தப்படுகின்றன என்பதாகும்.

Ø  நாட்பட்ட அல்லது நீண்ட கால  நோய்களில் , நோய்க்குறிகள்  தணிவது மிகக் குறைவான காலத்திற்கு இருந்தால், உடலின்  கட்டமைப்பில்  மாற்றங்கள் உள்ளன மற்றும் உறுப்புகள் அழிக்கப்படுகின்றன அல்லது அழிக்கப் படப்போகின்றன என்பதாகும்.


மருத்துவரின் கடமை (DUTY OF THE PHYSICIAN) :

தீவிர நோய்களில் மிகவும் ஒத்த மருந்தை கண்டறிந்து கொடுக்க வேண்டும். நாட்பட்ட  நோய்களில் மிகவும் நிச்சயமற்ற தன்மையில் இருக்கிறது. 

நோய் பற்றிய முன்னறிவிப்பு  (PROGNOSIS):  மிகவும் தீங்கானது ( நாட்பட்ட நோயில் )


7-வது   கூர்ந்த கவனிப்பு: மருந்து எடுத்துக்கொண்ட பிறகு நோய்க்குறிகள் முழுமையாக தணிந்து விடும், இருந்தாலும் நோயாளியிடம் குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேற்றம் இல்லாதிருத்தல் (Full time amelioration of the symptoms, yet no special relief of the patient).

Ø  ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு அப்பால் முன்னேற்றத்தைத் தடுக்கும் நிலைமைகள் நோயாளிகளிடத்தில்  உள்ளன.

Ø  ஒரு சிறுநீரகம் மட்டுமே உள்ள  நோயாளி ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே முன்னேற முடியும்; சில இடங்களில் இழைம (திசுக்கள்) கட்டமைப்பு மாற்றத்துடன் உள்ள நோயாளி, மற்றும் நுரையீரலில்  காசநோய் படிமங்கள் மூடி அது வரையறுக்கப்பட்ட  சில வேலையை  மட்டுமே செய்யக்கூடிய நிலை போன்றவை சில  எடுத்துக்காட்டுகள் ஆகும்.

Ø  இந்த நோயாளிகளிடத்தில்   அறிகுறிகள் உள்ளன, மேலும் இந்த அறிகுறிகள் அவ்வப்போது கொடுக்கப்படும் மருந்தினால்  சரிசெய்யப்படுகின்றன, ஆனால் நோயாளியை  ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே நலப்படுத்த  முடியும்; அதற்கு  அப்பால் சென்று அவரை நலப்படுத்த முடியாது.

Ø  பல மருந்துகள் வழங்கப்பட்ட பின்னர் - நோய்க்குறைவது      என்பது   முழு நேரமும் உள்ளது. ஆனால் நோயாளி தனது சொந்த முயற்சியின் மூலம் தனது ஆரோக்கியத்தை இன்னும்  மேலே உயர்த்தவில்லை .

Ø  மருந்துகள் நோயாளிக்கு சாதகமாக  செயல்படுகிறது, ஆனால் நோயாளி நலப்படுத்தப்படவில்லை , ஒருபோதும் நலப்படுத்தவும்  முடியாது. இந்த நிகழ்வில் நோயாளி நோய்த்தணிவிப்பு  செய்யப்படுகிறார், மேலும் , தற்காலிகமாக நோய்த்தணிக்கும் மருந்தை நோயாளிக்கு கொடுக்க வேண்டும்.

மருத்துவரின் கடமை (DUTY OF THE PHYSICIAN) :

நோயாளியை ஓரளவிற்கு தான் நலமாக்க முடியும்.அவரின்  முக்கியமான உள் உறுப்புகள் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தால் , முழுமையான நலம் ஏற்படுவது சாத்தியமில்லை.

நோய் பற்றிய முன்னறிவிப்பு  (PROGNOSIS):   தீங்கானது


8-வது   கூர்ந்த கவனிப்பு: நோயாளி தான் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு மருந்தின் நோய்க்குறிகளை நிரூபணம் செய்வார். (Patients prove every remedy they get).

Ø  நோயாளிகள் இசிவுநோய்த் தன்மை (வெறித்தன்மை), கொண்டவர்களாகவும் , எல்லாவற்றிலும் அதியுணர்ச்சி அல்லது கூருணர்ச்சி மிக்கவர்களாக  இருக்கிறார்கள்.

Ø  நோயாளி எல்லாவற்றிற்கும் ஒரு தனித்துவமான தன்மையைக் கொண்டிருக்கலாம்.  மேலும் இந்த அதியுணர்ச்சி அல்லது கூருணர்ச்சி அதிகம் உள்ள  நோயாளிகள் பெரும்பாலும் குணப்படுத்த முடியாதவர்கள்.

Ø  உயர்ந்த வீரியத்தில் மருந்து கொடுத்த பிறகு , அவர்கள் அந்த மருந்தை நிரூபணம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள் , அந்த மருந்தின் ஆதிக்கத்தின்  கீழ் அவர்கள் வந்து விடுகிறார்கள் , அதைத் தவிர வேறெதுவும் அவர் மீது ஆதிக்கம்  செலுத்த முடியாது . அத்தகைய நோயாளிகள் நல்ல ஹோமியோபதி மருந்து நிரூபணம் செய்ப்பவர்களாக இருப்பார்கள்   , அவர்கள் மிக உயர்ந்த வீரியத்தை  சிறப்பாக  நிரூபிப்பார்கள்.

Ø  அத்தகைய நோயாளிகளுக்கு, 30 மற்றும் 200 வது வீரியத்தில் மருந்துகளைக் கொடுங்கள் . அவர்களில் பலர் இந்த கூருணர்வுத் திறனுடன் பிறந்தவர்கள் தான் , அதனுடன் சேர்ந்தே அவர்கள் இறந்துவிடுவார்கள்.


மருத்துவரின் கடமை (DUTY OF THE PHYSICIAN) :

தீவிர (கடுமையான) மற்றும் நாட்பட்ட நோய்களில் - அவருக்கு சுட்டிக்காட்டப்பட்ட மருந்தை மூலப்பொருள்கள் அடங்கிய  வீரியத்தில் கொடுப்பதற்கு மாறாக ,  மிகக் குறைந்த வீரியத்தில் மருந்து கொடுக்க வேண்டும் . இவர்கள் ஹோமியோபதி மருந்துகளை நிரூபிக்க பயனுள்ளவர். இத்தகைய நோயாளிகளுக்கு நைட்ரிக் அமிலம் போன்ற சில மருந்துகளால் அவர்களது உடலமைப்பு ஒருபோதும் மேம்பாடு அடைவதில்லை என்பதால் அம்மருந்தைக் கொடுக்கக் கூடாது.


நோய் பற்றிய முன்னறிவிப்பு  (PROGNOSIS):  தீங்கானது


9-வது   கூர்ந்த கவனிப்பு: மருந்து நிரூபணம் செய்தவர்கள் மேல் மருந்தின் செயல்பாடுகள் (Action of the medicines upon provers).

Ø  ஆரோக்கியமாக இருக்கும் மருந்து நிரூபணர்கள் மீது மருந்து கொடுத்து நிரூபணம் செய்யும் போது அவர்களுக்கு பலன் கிடைக்கிறது, ஆனால் மருந்து நிரூபணம் சரியாக முறையில் நடத்தப்பட வேண்டும்.

Ø  ஒரு  மருந்து நிரூபணம் செய்ப்பவரின் இயற்கையான உடலமைப்புக் குறிகளை மிகவும்  கவனமாகக் குறித்துக்  கொண்டு  , அவற்றை தெளிவாக எழுதிக்  கொள்ள  வேண்டும் , பின்னர் அவற்றை மருந்து நிரூபணக் குறிகளில்    இருந்து கழித்து விட வேண்டும்.

Ø  மருந்து நிரூபிக்கும் போது இந்த அறிகுறிகள் பொதுவாக தோன்றாது; அவ்வாறு தோன்றினால் , அவற்றில் ஏற்பட்ட  மாற்றத்தைக் கவனிக்க வேண்டும்.


மருத்துவரின் கடமை (DUTY OF THE PHYSICIAN) :

மருந்து நிரூபணத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

நோய் பற்றிய முன்னறிவிப்பு  (PROGNOSIS):   சாதகமானது


10-வது   கூர்ந்த கவனிப்பு:  மருந்து சாப்பிட்டபிறகு புதிய நோய்க்குறிகள் தோன்றுதல் (New symptoms appearing after the remedy).

Ø  மருந்து கொடுத்தபிறகு நோயாளியிடத்தில் அதிக அளவிலான புதிய நோய்க்குறிகள் தோன்றினால் , தேர்வு செய்து கொடுக்கப்பட்ட மருந்து அவருக்கு  எந்த நன்மையையும் செய்யாது; தவறானது எனக் கொள்ளவேண்டும்.

Ø  அவ்வப்போது ஒரு சில புதிய நோய்க்குறிகள் நோயாளியிடம் ஏற்பட்டால்  அக்குறிகள் நோயாளிக்கு முன்னர் ஏற்பட்ட  , அதாவது நோயாளி மறந்து போன பழைய நோய்க்குறிகளா என்று தெரிந்து கொள்ளவேண்டும் , இல்லாவிட்டால் அதை புதிய குறியாக எடுத்துக்  கொள்ள வேண்டும் .

Ø  மருந்து கொடுத்த பிறகு புதிய குறிகள் அதிக எண்ணிக்கையில்  தோன்றினால் , கொடுக்கப்பட்ட மருந்து தவறானது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். சில காலம் கழித்து புதிய குறிகள் மறந்து நோயாளி எந்த நோய்க்குறிகளுக்காக மருந்து எடுத்துக் கொண்டாரோ அந்த நோய்குறிகளில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் நிலைத்திருக்கும்.

Ø  நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்தை முறிவு செய்து, திரும்பவும் நோயாளியை பரிசோதனை செய்து புதிய சரியான மருந்தை கொடுக்க வேண்டும்.

மருத்துவரின் கடமை (DUTY OF THE PHYSICIAN) :

நோய்க்குறிகள்  லேசான இயல்புடையதாக இருந்தால், புதிய நோய்க்குறிகள்  நீங்கும் வரை நாம் காத்திருக்க வேண்டும்; மறுபடியும் பரிசோதனை  செய்த  பிறகு இன்னும் ஒத்த மருந்து கொடுக்கப்பட வேண்டும். நோய்க்குறிகள்  தீவிரமான தன்மை அடைந்து  மற்றும் அச்சுறுத்தலாக இருந்தால், அந்த மருந்தை முறிக்க வேண்டும்.

நோய் பற்றிய முன்னறிவிப்பு  (PROGNOSIS):  தீங்கானது


11- வது   கூர்ந்த கவனிப்பு:  மருந்து சாப்பிட்டபிறகு பழைய நோய்க்குறிகள் நோயாளியிடம் திரும்பவும் தோன்றுவதை கவனித்தல் (Is when old symptoms are observed to reappear).


Ø  நீண்ட காலமாக மறைவில்  இருந்த பழைய நோய்க்குறிகள்  எந்த விகிதத்தில் மீண்டும் தோன்றுகிறதோ , அதே விகிதாசார அடிப்படையில்  நோய் நலப்படுத்தப்படும் .

Ø  புதிய குறிகள் தோன்றிய பிறகு பழைய குறிகள் மறையத் துவங்கும் . மருந்து கொடுக்கப்பட்ட பிறகு நோய்க்குறிகள் அதிகரித்து  பழைய அறிகுறிகள் தோன்றுவது மிகவும் பொதுவான விஷயம், மற்றும் நோய்க்குறிகள் எந்த வரிசையில் தோன்றியதோ அதன்  தலைகீழ் வரிசையில் மறைந்து போவதைக் காண்கிறோம்.

Ø  தற்போதுள்ள ( அதாவது கடைசியாகத் தோன்றிய) அந்த நோய்க்குறிகள்  முதலில்  குறைந்து, பழைய அறிகுறிகள் தொடர்ந்து வெளி வந்து  நலமாகும்.


Ø  பழைய நோய்க்குறிகள்  பெரும்பாலும் திரும்பி வந்து எந்த மருந்தும் இல்லாமல் (மீண்டும் கொடுக்காமல்)  போகும். இது மருந்திற்கு எந்த இடையூறும் செய்யாமல் அப்படியே விட்டுவிட வேண்டும் என்பதைக்  குறிக்கிறது. பழைய நோய்க்குறிகள் மீண்டும்  வெளிப்பட்டு  அது மறையாமல் அப்படியே தங்கி விட்டால் , மருந்தை  மீண்டும் மீண்டும் கொடுப்பது  அவசியம்.


மருத்துவரின் கடமை (DUTY OF THE PHYSICIAN) :

மருந்து செயல் புரிவதைக் கட்டாயமாக இடையூறு செய்யக்கூடாது. மீண்டும் வெளிப்பட்ட  அறிகுறிகள் / வெளியேற்றம் / வெடிப்பு ஆகியவை நீண்ட காலமாக இருந்தால், மருந்தை  மீண்டும் மீண்டும் கொடுக்கலாம் . இங்கே, பழைய அறிகுறிகள் / நோய்கள் அவற்றின் தோற்றம்  தலைகீழ் வரிசையில் வந்து போகக்கூடும்.


நோய் பற்றிய முன்னறிவிப்பு  (PROGNOSIS):  மிகவும் நல்லது


12- வது   கூர்ந்த கவனிப்பு:  நோய்க்குறிகள் தவறான பாதையில் செல்லுதல் (Symptoms take the wrong direction).


Ø  முழங்கால் மூட்டு வாத நோய்க்கு ஒரு மருந்து பரிந்துரைக்கப் படுகிறது  , அங்கே  நலமும்  ஒரே நேரத்தில் நிகழ்கிறது, ஆனால் நோயாளி இப்போது இதயத்தின் உள்ளே  கடுமையான  துயரத்தை அனுபவிக்கிறார், அல்லது முதுகுத் தண்டுவடத்தில் வலி ஏற்படுகிறது  அல்லது முதுகெலும்பில் உள்ள மையங்களில், சுற்றளவிலிருந்து மைய பகுதிக்கு   அந்த நோய் பரவுகிறது என்றால் கொடுக்கப்பட்ட மருந்து தவறானது , அம்மருந்தை உடனடியாக முறிக்க வேண்டும்,   இல்லையெனில் உடலின்   கட்டமைப்பு மாற்றம் அந்த புதிய தளத்தில் நடக்கும்.

Ø  பெரும்பாலான கீல்வாத நோயாளிகள் விரல்கள் மற்றும் கால்விரல்கள் மிக மோசமான நிலையில் இருப்பதாகக் கூறுவார்கள் . அதற்கு   மருந்து கொடுத்தால்  அவ்வலிகள் குறைந்து நன்றாக இருப்பதாகச்  சொல்வார்கள் , ஆனால்  இதய நோய்க்குறிகள் நோய்க்குறிகள் அதிகரித்தால் இது நோயாளிக்கு  சாதகமான நிலைக்கு இல்லை,

Ø  நோயாளியின் வெளிப்புற நோய்க் குறிகளுக்கு மட்டுமே  ஒரு மருந்தைத்  தேர்ந்தெடுப்பதில் ஆபத்து உள்ளது, அதாவது, தோலிற்கு  மட்டுமே பொருந்தக்கூடிய ஒரு மருந்தைத்  தேர்ந்தெடுப்பது மற்றும் நோயாளியின் அனைத்து அறிகுறிகளையும் , பொதுவான நிலையையும் புறக்கணித்தல் ஆகும் ; ஏனெனில் தோலுடன்  தொடர்புடைய அந்த மருந்து , அந்த தோல் நோயில் மட்டுமே வேலை செய்யும்  மற்றும் நோயாளி முழுமையாக நலமடையாத நிலை ஏற்படும்  என்பதும்   உண்மை. அந்த நோயாளிக்கு சரியான மருந்து கொடுத்து , உள்ளே மறைந்திருக்கும் அந்த தோல் நோய் வெடித்துக் கிளம்பி   மீண்டும் வெளியே வரும் வரை அல்லது வேறு இடத்தில் கண்டுபிடிக்கும் வரை அந்த  நோயாளி நோய்வாய்ப்பட்டிருப்பார்.\



மருத்துவரின் கடமை (DUTY OF THE PHYSICIAN) :

கொடுக்கப்பட்ட மருந்தை உடனடியாக முறிக்க வேண்டும். நோயாளியை மீண்டும் பரிசோதனை செய்து ஒத்த மருந்தைக் கொடுக்க வேண்டும்.


நோய் பற்றிய முன்னறிவிப்பு  (PROGNOSIS):  சாதகமற்றது.


சு.கருப்பையா
மதுரை
+919486102431

SOURCE: LECTURES ON HOMEOPATHIC PHILOSPHY- BY J.T.KENT





No comments:

Post a Comment