Friday, 4 June 2021

சைரஸ் மேக்ஸ்வெல் போகர்

 

சைரஸ் மேக்ஸ்வெல் போகர்

தோற்றம் : 13/05/1861

மறைவு:02/09/1935

 


 

ஹோமியோபதிக்கு அரும்பணியாற்றிய மிகச் சிறந்த மருத்துவர்களில் ஒருவர் சைரஸ் மேக்ஸ்வெல் போகர் ( C.M. BOGER). இவர் கி.பி. 1861 ஆம் ஆண்டு மே மாதம் 13 ந்தேதி மேற்கு பெனிசில்வானியாவில் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் சைரஸ். தாயார் பெயர் இசபெல்லா மேக்ஸ்வெல் போகர்.

 

தமது இளமைக்கால கல்வியை லெபனான் நாட்டில் உள்ள "பா" என்ற நகரில் பயின்ற சி.எம். போகர் , தமது மருந்தாக்கக் கலை பட்டப்படிப்பை (PHARMACY)  பிலடெல்பியா மருந்தகக் கல்லூரியிலும், ( HAHNEMANN MEDICAL COLLEGE OF PHILADELPHIA) பின்னர் மருத்துவப் பட்டப்படிப்பை ஹானிமன் மருத்துவக்கல்லூரியிலும் பயின்றார்.

 

கி.பி. 1888 ஆம் ஆண்டிலிருந்து தமது மருத்துவப்பணியைத் தொடர்ந்தார். இவர் பாற்கரஸ்புர்க் ( PARKERSBURG)  நகரில் தங்கி மருத்துவச் சேவை புரியும் போது உலகின் பல பாகங்களிலிருந்து இவரைத் தேடி வந்து மக்கள் மருத்துவம் செய்து கொண்டனர் என்பது இவருக்குக் கிடைத்த பெருமைகளில் ஒன்று.ஆனால் மருத்துவம் செய்து பணமும், புகழும் பெறுவதை விட ஹோமியோபதி பற்றி எழுதுவதையும் , கற்றுக் கொடுப்பதையுமே தமது நோக்கமாகவும் , கொள்கையாகவும் கொண்டிருந்தார். ஆனாலும் அவ்வப்போது விஞ்ஞானம் சம்பந்தமான விளக்கங்களை "புல்டி  " மருத்துவக் கல்லூரியில் ( CINCINNAATI CITY) கொடுத்த  சி.எம். போகர் , பின்னர் அமெரிக்கன் பவுண்டேசன்  முதுநிலை பட்டப்படிப்பு கல்லூரியில் (AMERICAN FOUNDATION FOR HOMEOPATHY POST GRADUATE SCHOOL)  தத்துவம் (PHILOSOPHY) , மருந்தியல் களஞ்சியங்களின் தொகுப்பேடு (MATERIA MEDICA)  மருந்துகாண் ஏடு (REPETORY) போன்றவற்றைக் கற்றுத்தரும் ஆசிரியராக கி.பி. 1924 இல் பொறுப்பேற்றார். அவர் அப்பணியை தமது இறுதிக்காலம் வரை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மருத்துவர் சி.எம். போகரின் குடும்ப வாழ்க்கை சற்று சுவாரசியமானது. அவர் மூன்று திருமணங்களை செய்து கொண்டார். முதல் மனைவிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் இளம் வயதிலேயே இறந்து விட்டது. இரண்டாவது மனைவிக்கு நான்கு ஆண் குழந்தைகளும் , ஐந்து பெண் குழந்தைகளும் பிறந்தனர்.அறிவுச் செல்வத்தில் மட்டுமல்ல, குழந்தைச் செல்வங்களைப் பெறுவதிலும் மருத்துவர் சி.எம். போகர் சிறந்து விளங்கினார், இவருடைய மூன்றாவது மனைவி அன்னா , போகருக்கு காரியதரிசியாகவும் , நிரந்தர உதவியாளராகவும் இருந்துள்ளார்.

 

 

மருத்துவர் சி.எம்.போகர் , ஹோமியோ மேதைகளில் ஒருவரான போயினிங்ஹாசன் ( C.M.F. VON BOENNINGHAUSEN) அவர்களைத் தீவிரமாகப் பின்பற்றுபவர். அவருடைய மருந்துகாண் ஏட்டை (BOENNINGHAUSENS CHARACTERISTICS AND REPERTORY ) கி.பி 1905 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் . ஹோமியோபதி மருத்துவம் சம்மந்தமாக மிகச் சிறந்த நூல்களில் இதுவும் ஒன்று என்பது அனைவருக்கும் தெரியும். இது தவிர மருத்துவர் போகர் பல சிறந்த  கட்டுரைகளையும் , நூல்களையும் எழுதியுள்ளார். அந்த நூல்களின் பட்டியல் இதோ; 

 

1.   BOENNINGHAUSENS CHARACTERISTICS AND REPERTORY.

2.   BOENNINGHAUSENS ANTIPSORICS.

3.   BOGERS DIPTHERIA.

4.   A SYNOPTIC KEY OF THE MATERIA MEDICA -1915

5.   GENERAL ANALYSIS AND CARD INDEX- 1931

6.   SAMARSKITE-A PROVING-

7.   THE TIMES WHICH CHARACTERIZE THE APPEARANCE & AGGRAVATION OF THE SYMPTOMS AND THEIR REMEDIES.

 

ஹோமியோபதிக்காக தமது வாழ்நாளை அர்ப்பணித்த மருத்துவர்  சி.எம். போகர் கி.பி. 1935 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி தமது 74 வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மருத்துவம் செய்து நலப்படுத்திய அவருக்கு , வீட்டில் பதப்படுத்தப்பட்டிருந்த தக்காளி உணவு விஷமாக மாறி உயிரைப் பறித்தது பரிதாபமான விஷயம்.

 

ஆதாரம்: www.hpathy.com

 

( ஹோமியோ தோழன் மே- 2007 இதழில் எழுதப்பட்டது )

 

No comments:

Post a Comment