பரம்பரையாக வரக்கூடிய
பண்பு ( HEREDITY)
மரபுப் பண்புகளைத் தீர்மானிக்கும் உயிர்மக்கூறு (CHROMOSOMES) நமது உடலின் பரம்பரைப் பண்புகளை சுமந்து வருகின்றன - அந்தப் பரம்பரைப் பண்புகள் சில சமயங்களில் சுமையாகவும்
இருந்து விடுகின்றன , அதாவது , இரத்தம் உறையாத
நோய் (HEMOPHILIA) , நீர்மத் திசுவழற்சி (CYSTIC FIBROSIS) , தசைநார் தேய்வு
(MUSCULAR DYSTROPHY ) மற்றும் மனநலிவுநோய்
( DOWN'S SYNDROME ) போன்ற நோய்கள் உருவாகுவதற்கு இதுவே காரணமாக இருக்கிறது.
செர்கே திஸ்ஸரோன் ( SERGE TISSERON) மற்றும் அன்னி
அன்சலின் சுசியற்சன்பெர்கர் ( ANNE
ANCELIN SCHIITZENBERGER) போன்ற ஆராய்ச்சியாளர்கள், பல தலைமுறைகளாக பேசப்பட்டு வரும் ஒவ்வொரு மெய்யான இதிகாசங்களிலும், நாம் ஒவ்வொருவரும் உளவியல் சார்ந்த பரம்பரைப் பண்புகளை எப்படிக் கொண்டிருக்கிறோம் என்பதை
மெய்ப்பித்துக் காட்டியுள்ளார்கள் .
எடுத்துக்காட்டாக,
சில குடும்பங்களில், அனைவருக்கும் ஒரே வயதில் கடுமையான விபத்து ஏற்படுகிறது, இது எப்போதும்
தற்செயலான வெளிப்புற நிகழ்வுகளால் ஏற்படுகிறது. ஹீப்ரு மொழியில் கூறுவதென்றால் இது விபத்து அல்ல "வாய்ப்பு" என்று பொருள்படுகிறது மற்றும் "துயர் நீக்குதல்" அல்லது "உதவி" என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
சல்பூரிக்கம்
ஆசிட் ( SUL-AC) மருந்திற்குரிய மனிதர்கள்
அடிக்கடி விபத்துகளை சந்திக்கும் கருப்பொருளை மரபுரிமை வழியாக பெற்றிருப்பார்கள். தங்களது நனவிலியின் மூலம் உந்தப்பட்டு அல்லது தூண்டப்பட்டு
, அவர்கள் அஜாக்கிரதையான முறையில் செயல்படுகிறார்கள் மற்றும் இந்த நிகழ்வு ஒரு வகையான நாடகக்காட்சி போல் தலைமுறை தலைமுறையாக திரும்பவும்
தொடர்ந்து வருகிறது .
சில சமயங்களில், ஒரு தலைமுறையில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் , ஒரு குறிப்பிட்ட
விபத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த ஞாபகம் அடுத்து வரும் தலைமுறைகளுக்கு கடத்தப்படுகிறது.
இறுதியில், அந்த நினைவாற்றல் நனவிலியில் ஆழமாக செலுத்தப்படுகிறது, அதை மரபுரிமையாகப் பெறுபவர்கள்
தங்கள் துன்பத்திற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடியாது.
பெரும் வேதனைகளை சுமந்து கொண்டுள்ள சில குடும்பங்ககளின் இரகசியங்கள் , இறப்போடு
இணைக்கப்பட்டதாக இருக்கிறது. ஒரு முறை , எட்டு வயது பையன் ஒருவனை என்னிடம் அழைத்து வந்தார்கள் , அவனது தந்தை ஒரு நாள் இரவு திடீரென்று இதயச் செயலிழப்பினால்
இறந்து போயிருக்கிறார். அவர் இறந்து போனதை
அவனிடம் தெரிவிக்காமலேயே அவனை கிராமத்தில் இருந்த அவனது பாட்டி வீட்டிற்கு அனுப்பி
வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்தப்பெண்மணி அவனது தந்தை இறந்துவிட்டதை தன்னுடனே
வைத்துக்கொள்ள முடியாமல் அவனிடம் சொல்லி விடுகிறார். அடுத்தநாள் காலை, அவன் தூக்கத்திலிருந்து
எழுந்த போது , உடல் முழுவதும் தடிப்புச் சொறி ( URTICARIA=ஒவ்வாமை) பரவி இருந்துள்ளது. அந்த கிராமத்துப் பெண்மணி அவனுக்கு
பூனைக் காஞ்ச்சொறிச் செடியின் ரசத்தை அவனுக்கு
கொடுத்திருக்கிறார். அந்தச் சாறு அவனை விரைவாக நலப்படுத்தி இருக்கிறது.
இந்தக் கதையை கேட்டதும் , அவனுக்கு
கொடுக்கட்ட பூனைக் காஞ்ச்சொறிச் செடியின் ரசம்
- யுர்டிகா யுரேனஸ் (URT-U) , அவனது தந்தையின்
இறப்பினால் ஏற்பட்ட மனத்துன்பத்தை போக்கும் மருந்தாக கட்டாயமாக இருந்திருக்கிறது என்பதை
அறிந்து கொண்டேன். அந்தச் செடி தனது கிளைகளில் சிறிய முடிகளைக் கொண்டிருக்கும்; அவைகள்
நமது தோலில் உராய்ந்தால் அரிப்பை ஏற்படுத்தும்.
அந்தச் செடியின் முள் போன்ற இலையைப் போலவே அவனது தந்தையின் தாடியும் இருந்துள்ளது , இவன் இரவில் தூங்கும் சமயத்தில் அவர் முத்தமிடும்
போது அந்த முடி குத்தியிருக்கிறது.
ஹோமியோபதியில் , யுர்டிகா யுரேனஸ்
(URT-U) மருந்து
தாய்ப்பால் சுரத்தலை அதிகரிக்கும் ஒரு சிறந்த மருந்து என்பதை நாம் அறிந்துள்ளோம். அது
போலவே , அது தடிப்புச்சொறி , கடல்வாழ் உயிரின உணவுகளை சாப்பிட்டபின் ஏற்படும் அரிப்பு, ஒவ்வாமை போன்ற பாதிப்புகளையும் நலமாக்குவது நமக்கு தெரியும், ஆனால்
, இந்த மருந்தை நிரூபணம் செய்த போது ஒரு மனக்குறி
கூட அடையாளம் காணப்படவில்லை என்பது வியப்பாக இருக்கிறது ( தற்போது மருந்துகாண் ஏட்டில் , தான் நேசித்தவர்களின்
இறப்பு, தந்தை மற்றும் நண்பர்களின் இறப்பிற்கு பின் ஏற்படும் தொல்லைகள் போன்ற சில மனக்குறிகளில் இந்த மருந்து இணைக்கப்பட்டுள்ளது- மொ-ர் ).
ஒரு நாள், புதிதாகப்
பிறந்த ஒரு குழந்தையைக் காண அந்த மகப்பேறு
மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டேன். என்னைப் பார்த்ததும் அந்த குழந்தையின் தாய், தனது
தாய்ப்பால் வற்றிப்போய் விட்டதாகவும் , அதனால் தாய்ப்பால் அதிகரிக்க மருந்து தருமாறும்
வேண்டினார். உடனே யுர்டிகா யுரேனஸ் (URT-U) மருந்தை 7C வீரியத்தில் கொடுத்தேன். அவருக்கு விரைவில்
பால்சுரப்பு அதிகரித்தது. சில நாட்களுக்குப் பிறகு அந்தத் தாயை மீண்டும் சந்தித்த போது, உங்களது தாய்ப்பால்
சுரப்பு வற்றிப் போன நாளில் என்ன நடந்தது ? என்று கேட்டேன். அதற்கு அவர், எனது குழந்தையை
முதன்முதலாக, அந்த காலை வேளையில் பார்த்த போது
நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். ஏனென்றால், செவிலிகள் எனது குழந்தையை என்னிடம் கொண்டு
வந்து காட்டிய போது அவன் உடல் " முழுவதும் மஞ்சளாக" இருந்தது ( அவனுக்கு
மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருந்தது )
. பிறகு நான் அவரது தந்தையைப் பற்றிக் கேட்டேன்.
அதற்கு தனது தந்தை சில வருடங்களுக்கு முன்பு
கல்லீரல் புற்றுநோய் காரணமாக இறந்து போனதாக
பதில் கூறினார். மேலும் , " ஒரு
நாள்" அவருடைய உடல் முழுவதும் மஞ்சளாக மாறிவிட்டது, மூன்று வாரங்களுக்குப் பிறகு,
அவர் இறந்து விட்டார் என்றும் கூறினார். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த அவரது
மகனைப் பார்த்ததும் , அந்த பெண்ணிற்கு அவரது நனவிலியில் ( UNCONSCIOUS) பதிந்திருந்த தந்தையின் மரணம் நினைவிற்கு வந்திருக்கிறது, அதனால் அவரது தாய்ப்பால்
வற்றிப் போயிருக்கிறது .
சில நாட்கள் கழித்து,
நடுச்செவி அழற்சியால் (OTTIS MEDIA) பாதிக்கப்பட்டிருந்த ஒரு பையன் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டான். அவனது காதிலிருந்து
சீழ் வழிந்து கொண்டிருந்தது, அவனது தந்தை ஈளை
நோய் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார்- இந்தப் பையன் அவரின் மூத்த குழந்தை- பொதுவாக , ஒரு குடும்பத்தின் மூத்த குழந்தை தந்தையின்
பிரச்சனைகளோடு தான் பிறக்கும் ( இரண்டாவது குழந்தை தாயின் பிரச்னைகளைச் சுமந்து கொண்டு
பிறக்கும், அதன் பிறகு பிறக்கும் மூன்றாவது குழந்தையிலிருந்து எதுவும் நடக்கலாம்).
அவரது தந்தையிடம்
, “எத்தனை வருடங்களாக இந்த ஈளை நோய்த் தொல்லை உங்களுக்கு இருக்கிறது ?" என்று
கேட்டேன். அதற்கு அவர் , தான் சிறு குழந்தையாக இருந்தபோது கரப்பான் நோய் ( சிரங்கு) வந்ததாகவும் , அதற்கு கார்டிசோன் களிம்பு தடவிய
பிறகு சில நாட்களில் சரியாகி விட்டதாவும் கூறினார்.
அவருக்கு கரப்பான் நோய் தாக்கிய போது அவரது
தாயிற்கு தாய்ப்பால் வற்றிப் போயிருந்தது எனவும், அவரது அம்மாவின் தந்தை திடீரென்று
இறந்துபோன தகவலை கேட்டபிறகு தான் தனக்கு தாய்ப்பால் வற்றிப் போனதாக தனது தாய் கூறியதாகவும்
பதில் கூறினார். ஒரு தனிக் கருப்பொருள் எவ்வாறு தனது நோய் உருவாக்கும் விளைவுகளை அடுத்த
தலைமுறைக்கு கடத்துகிறது என்பதற்கு இது ஒரு உதாரணமாக விளங்கும் கதையாகும்.
தனி மனிதனின் நனவிலியோடு
(தன்னிலை அல்லது நான் –“I” ) குடும்ப வழியிலான
, "நாம்-WE" என்ற மற்றொரு நனவிலியும் தொடர்ந்து வருகின்றன. இந்த குடும்பவழியிலான
நனவிலி அனைத்து வகையான ரகசியங்கள் மற்றும் கதைகளால் நிரம்பியுள்ளது, அவை ஒரே தலைமுறையைச்
சேர்ந்தவர்கள் மற்றும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படுகின்றன. ஒரே குடும்பத்தைச்
சேர்ந்த வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஏன் ஒரே மருந்தின் மூலமாக பயனடைகிறார்கள் என்பதை விளக்க இது உதவுகிறது.
அதே வழியில், கார்ல்
யூங் விவரித்தபடி, சமூகம் முழுவதையும் பாதிக்கும் மூன்றாவது பரிமாணம் அல்லது
"ஓர்மை- ONE" பற்றிய ஒரு பரந்த கூட்டு நனவிலியும் ( COLLECTIVE
UNCONSCIOUS) உள்ளது. சளிக்காய்ச்சல்
( INFLUENZA) போன்ற தொற்றுநோய்களில் கூட்டு நனவிலி என்பது ஒரு குறிப்பிடத்தக்க காரணியாகும், அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களை நலமாக்குவதற்கு அதே ஹோமியோபதி மருந்து தேவைப்படுகிறது.
ஒரு குழந்தையின் மரணத்திற்குப்
பிறகு , அநேகமாக, மிக துன்பமான மன நிலை ஏற்படும் மற்றும் மனதின் ஆழத்தில் மறைந்திருக்கும் அந்தத் துன்பம் அடிக்கடி வெளிப்படவும் செய்யும். இதற்கான மருந்து ஹுரா பிரேசிலியென்சிஸ்
(HURA BRASILIENSIS) - பிரேசிலியர்களால் அசாகு (ASSACU) என்று அழைக்கப்படும் பால் போன்ற தாவர உயிர்சாறு
(SAP) அல்லது இரப்பர் மரப்பால் ( LATEX) ஆகும் .
இந்த மருந்து தேவைப்படும் நபர்கள், முடக்கு வாதம்
(RHEUMATOID ARTHRITIS) , போன்ற பல்வேறு மூட்டு மற்றும் கைகாலுறுப்புகள் பிரச்சனைகள் மூலம் தங்கள் துன்பங்களை வெளிப்படுத்துகிறார்கள்.
மேலும் , முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின்
இரத்தம் இரப்பர் மரப்பாலின் உறைதல் பண்புகளைக்
கொண்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. ஹுரா
பிரேசிலியென்சிஸ் மருந்தின் பிறர் மீதான அன்பு
நெகிழ்வுத்தன்மையுள்ள பொருள் போன்றது- தான் நேசிப்பவர்
எவ்வளவு தூரம் விலகிச் செல்ல முயற்சிக்கிறார்களோ, அவ்வளவு தூரம் வலிமையாக அந்த நபரை ஹுரா பிரேசிலியென்சிஸ் பின்னுக்கு இழுக்கிறது. அந்த நெகிழ்வுத்தன்மை உடையும்
போது அவர்களுக்கு நெருக்கடியின் நெருக்கடியான தருணம்
ஏற்படுகிறது . தங்கள் குழந்தையின் மரணத்தை அனுபவித்த இந்த மக்கள், அவர்களது அன்பின்
பந்தத்தில் திடீரென ஏற்பட்ட முறிவின் விளைவாக , அவர்களது உடலில் பாதிப்பு ஏற்பட்டு , நெகிழ்வுத்தன்மையுள்ள இழைகளின் வழியே (அதாவது மூட்டுகளில்)
தங்கள் வலியை வெளிப்படுத்துகிறார்கள்.
மேலும் ஹுரா பிரேசிலியென்சிஸ்
தொழுநோயிற்கான ( LEPROSY) முக்கிய மருந்தாகவும் இருக்கிறது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள்
மக்களால் புறக்கணிக்கப்பட்ட மனிதர்களாக வாழ்கிறார்கள்
. முந்தைய காலங்களில் இந்த நோய், ஒரு நபர், அவரது சிக்கல் நிறைந்த உறவிலிருந்து அல்லது பிணைப்பிலிருந்து தப்பிக்க நினைத்தவர்களிடம்
தோன்றியது . ஏனென்றால் , அவர்கள்
சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள்.
அவர்களது பெற்றோர்கள் / உறவினர்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகிறார்கள் . இறுதியாக , அதிக பளுவிற்கு உள்ளான தங்கள் பெற்றோரிடமிருந்து அவர்கள் விலகிச் செல்கிறார்கள்
மற்றும் அவர்களின் வாழ்க்கையை வேறு இடங்களில் அமைத்துக் கொண்டு வாழ்கின்றனர்.
ஒரு குழந்தையின் மரணத்திற்குப்
பிறகு ஒருவருக்கு தோல் நிறமி இழப்பு அல்லது
வெண்புள்ளி தோன்றினாலும் இந்தக் ஹுராவை மருந்தாகக் கருதலாம் , அதேபோல்
ஒரு குடும்ப உறுப்பினர் தனது மற்ற உறவினர்களை தனது சொந்த உடமையாகக் கருதி மிகவும்
அதிகமாகக் நேசிக்கும் போது, தனது அன்பால் கிட்டத்தட்ட அவர்களது கழுத்தை நெரிப்பார் . அவருக்கும் ஹுராவே மருந்து.
தங்களால் மிகவும்
நேசிக்கப்பட்ட குழந்தையின் மரணத்திற்குப் பிறகு, அந்த துன்பத்திலிருந்து வெளிவர முடியாமல்
தவிக்கும் பெற்றோர்கள் தங்களுக்கு பிறக்கும் அடுத்த குழந்தைக்கு, இறந்துபோன குழந்தையின்
அதே பெயரைச் சூட்டும் வழக்கம் சமூகத்தில் நிலவுகிறது - அதன் மூலம் இறந்து போன குழந்தையினால்
ஏற்பட்ட உணர்ச்சியின் பாரத்தை, அன்பின் மூலம்
புதிய குழந்தையின் மீது மாற்றிக் கொள்கிறார்கள்.
என்னிடம் சிகிச்சைக்கு
வந்த ஒரு நோயாளி தன்னுடைய மகனுக்கு அவருடைய
தாத்தாவின் பெயரை வைத்திருக்கிருக்கிறார், அவர் தான் , இவரை சிறிய வயதிலிருந்து
வளர்த்து வந்திருக்கிறார். சொந்த வியாபாரத்தில் ஈடுபட்ட வந்த அவரது பெற்றோர்கள் , எப்போதும்
தொழிலில் கவனம் செலுத்தி வந்ததால் இவரை கவனிக்க முடியாத நிலையில் தன்னுடைய தாத்தாவின்
அரவணைப்பில் தான் அவர் வாழ்ந்து வந்திருக்கிறார். அந்த தாத்தா திடீரென்று ஒரு நாள்
இறந்து போனபோது , அவரால் அந்த துன்பத்திலிருந்து வெளியே வரமுடியாமல் இன்னும் தவித்து
வருகிறார். அவருக்கு கல்கேரியா சிலிகா
(CALC-SIL) மருந்தாக இருந்தது. இந்த மருந்திற்குரியவர்கள்,
இறந்தவர்களுடனான தங்கள் உறவை முறித்துக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள் , தினமும்
அவர்களிடம் பேசுவதற்கும், அவர்களின் பிரச்சனைகள் மற்றும் ரகசியங்களைச் சொல்லுவதற்கும்
கூட அவர்களிடம் செல்கிறார்கள்; மனதில் அவர்களது
வழிகாட்டுதலை பெறுகிறார்கள் .
ஒரு பத்துவயது பெண்
குழந்தையை என்னிடம் அழைத்து வந்தார்கள் , ஏனென்றால் அவள் இன்னும் தன்னுடைய தாயின் படுக்கையிலேயே , தாயின் அருகிலேயே தூங்க
விரும்புகிறாள். அவள் பிறந்ததிலிருந்து இதுவரை தாயும்-மகளும் தனித்தனியாக தூங்கியதே
இல்லை. அவளுக்கு எல்லாவிதமான மனோதத்துவ சிகிச்சைகளும் கொடுத்துத்திருக்கிறார்கள் ;
ஆனால் பயனில்லை.
உளப்பகுப்பாய்வின்
அடிப்படையில் தூக்கத்தை ஒரு "சிறிய மரணம்"
என்றும், தூக்கத்தில் ஏற்படும் பிரச்சனைகள் தீர்க்கப்படாத மரணத்தைக் காரணமாக கொண்டுள்ளது
என்பதை அறிந்த நான், அந்த அம்மாவிடம் உங்களது
சொந்த குடும்பத்தில், குறிப்பாக, அதிர்ச்சிகரமான மரணங்கள் ஏதேனும் நடந்து உள்ளதா
என்று கேட்டேன் , அதற்கு அவர் தன்னுடைய பதினைந்து வயதில் தனது தந்தையை ஒரு விபத்தில்
இழந்ததாக என்னிடம் கூறினார். அவருடைய தந்தை
இப்போது எங்கே ? என்று அந்த அம்மாவிடம் நான் கேட்ட போது, அவர் தனது வலதுபுறம் காலியாக இருந்த இடத்தைக் காட்டி, "என் தந்தை இங்கே இருக்கிறார் . அவர் என் பக்கத்திலிருந்து
விலகிப் போகவே இல்லை" என்று கூறினார்..
மற்றோரு ஐந்து வயதுப்
பையனை என்னிடம் அழைத்து வந்தார்கள். இரவில் அவனால் படுக்கையில் தூங்க முடியவில்லை,
எனக்கு பயமாக இருக்கிறது, ஏனென்றால் ஒவ்வொரு இரவும் ஒரு மனிதன் என் படுக்கைக்கு வருகிறார்
என்று கூறினான். அவனின் தாய் என் பக்கம் திரும்பி , " இவன் ஆறு மாதக் கர்ப்பத்தில்
இருக்கும் போது என் தந்தை இறந்து போனார் " என்று தெரிவித்தார். தாய் மற்றும் மகன்
இருவருக்கும் கல்கேரியா சிலிகா 30 C மருந்தைக் ( CALC-SIL 30 C ) கொடுத்த பிறகு எல்லாமும் சரியானது.
அந்தத் தாய் என்னிடம் ," நீங்கள் மருந்து கொடுத்த அன்று இரவு, அந்த மனிதன் போய்விட்டான்.
அந்த மனிதன் என் தந்தை தான் என்று நீங்கள் நினைத்தீர்கள், இல்லையா? என்று கூறி புன்னகை
செய்தார்.
மூலம் : Homeopathic Remedies for the Stages of Life, மரு. தீதியர் கிராண்ட் ஜார்ஜ் MD
தமிழில்: சு. கருப்பையா .