Thursday, 15 June 2017

ஹோமியோபதி மருத்துவத்தில் துயரர் ஆய்வும் ஒத்த மருந்துத் தேர்வும்- பாகம்-1

ஹோமியோபதி  மருத்துவத்தில் துயரர் ஆய்வும் ஒத்த மருந்துத் தேர்வும்- பாகம்-1

(Case taking & Selection of Similimum)

ஹோமியோபதி மருத்துவத்தில் சிகிச்சை பெற வரும் ஒரு துயரருக்கு , அவரது உடலின் உயிராற்றலில்  ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் தோன்றியுள்ள பண்பியல்பு குறிகள் ( Characteristic symptoms) , அப்பொழுது இருக்கும் மனக்குறிகள் ( Mind Symptoms),   மாறுமைகள் (Modalities) மற்றும் உடனுறையும்குறிகள் (Concomittant)  போன்ற குறிகளோடுமருத்துவர் தமது புலன்களால் உணர்ந்த குறிகள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர்கள் துயரரைப் பற்றித் தெரிவித்த  கருத்துகளையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்தக் குறிகளின்  அடிப்படையில் (Totality of symptoms) , ஹோமியோபதி ஒத்தவை விதிப்படி ( Law of similar) சரியான மருந்தினை தேர்வு செய்து கொடுப்பது ஒரு மருத்துவரின் கடமையாகிறது. அது மட்டுமல்லாமல் அந்த ஹோமியோபதி மருத்துவரின் வெற்றி என்பது, குறிப்பிட்ட அந்தத்  துயரரைத் தனித்துவப்படுத்தி அந்தத் துயரருக்கே உரிய ஒத்த மருந்தினைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து அவரை நலப்படுத்துவதில் தான் அடங்கியுள்ளது. அவ்வாறு ஒத்த மருந்தினை தேர்வு செய்வதற்கு கீழ்க்காணும் வழிமுறைகளை ஒவ்வொரு மருத்துவரும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அவையாவன;
I.     துயரருடன் கலந்துரையாடல் ( Case Taking).
II.   துயரரிடம் பெற்ற குறிகளை சரிபார்த்து அதனுள்ளே மறைந்துள்ள கருத்தினை புரிந்து கொள்ளுதல்.அவற்றை மருந்தியல் களஞ்சியம் மற்றும் அரும்பொருட்களஞ்சியத்தோடு  ஒப்பிடுதல் (Eliciting, Verification,Interpretation of symptoms & Translating into Language of Materia Medica and Rubric in Repertory)
III.  குறிகளை பகுப்பாய்வு செய்து மதிப்பிடுதல் ( Analysis and Evaluation of Symptoms).
IV.  பொருத்தமான குறிகளின் அடிப்படையில் ஒத்த மருந்துனை தேர்வு செய்தல் (Repertorization).

மேற்கண்ட வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு ஹோமியோபதி மருத்துவரும் செயலாற்றி துயரருக்கு  மருந்து தேர்வு செய்து கொடுக்கும் பொழுது அம்மருந்து துயரருக்கே உரிய ஒத்தமருந்தாக  அமைகிறது (Similimum).  துயரரும் நலம் குன்றிய நிலையிலிருந்து மாறி முழு நலத்திற்கு திரும்புகிறார். இப்போது , மேற்கண்ட நான்கு பகுதிகளைப் பற்றியும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

I. துயரருடன் கலந்துரையாடல் ( Case Taking):

ஹோமியோபதி மருந்துத் தேர்விற்கு துயரர் ஆய்வு அல்லது கலந்துரையாடல் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதன்  முக்கிய நோக்கமானது அவருடைய தொல்லைகளை தெளிவாகப் புரிந்து கொண்டு , நோயைப்பற்றிய எந்த விதமான முன் அபிப்பிராயமும் இல்லாமல்  திறந்த மனதோடு ( Blank mindness) அவரிடம் உள்ள அனைத்துக் குறிகளையும் ஒன்றுவிடாமல் பதிவு செய்து கொண்டு  பின்னர் அக்குறிகளுக்கு தகுந்த ஒத்த மருந்தினைக் கொடுத்து அவரை நலப்படுத்துவது தான். துயரர் ஆய்வின் போது மருத்துவர்   தவறு இழைக்க நேரிட்டால் அது மருந்துத் தேர்விலும் பிரதிபலித்து தவறான மருந்தினை தேர்வு செய்திட நேரிடும். அதனால் தான் ஹோமியோபதி மருந்துத் தேர்வில் துயரர் ஆய்வு என்பது முக்கியப் பங்காற்றுகிறது.

துயரரை புரிந்து கொள்வது எப்படி என்பது பற்றி மாமேதை.ஹானிமன் அவர்கள் தமது ஆர்கனான் ஆப் மெடிசின்என்ற நூலில்  மணிமொழி 83 இலிருந்து 104 வரை ஏறத்தாழ 22 மணிமொழிகளில் தெளிவாகவும் , விரிவாகவும் விளக்கியிருப்பார். குறிப்பாக மணிமொழி 84 இல் , நோயினால் தான்படும் துன்பங்களின் வரலாற்றை துயரர் விவரிக்கிறார். அவர்  அருகே இருப்பவர்கள் , துயரர் தனது துன்பங்களைப்பற்றிக் கூறியது, அவர் நடந்து கொண்ட விதம், அவரிடம் கண்ட விசயங்கள் போன்றவற்றை தெரிவிக்கின்றனர் மருத்துவர் துயரரை உன்னிப்பாக கவனிக்கிறார்;எல்லோரும் உரைத்த விபரங்களை கேட்கிறார்; துயரரிடம் என்னென்ன மாறுதல்களும் , வழக்கத்துக்கு மாறான விசயங்களும் காணப்படுகின்றன என்பதைத் தன் புலன்களால் மதிப்பிடுகிறார் . துயரரும் , அவருடைய நண்பர்களும் அவரிடம் கூறிய எல்லா விசயங்களையும் அவர்கள் கூறிய வண்ணமே ஓர் எழுத்தைக்கூட மாற்றாமல் சரியாக எழுதிக்  கொள்ளவேண்டும். மருத்துவர் தான் மௌனமாய் இருந்து கொண்டு அவர்கள் சொல்லக்கூடிய எல்லா விசயங்களையும் சொல்ல அனுமதிக்கிறார். சம்பந்தமில்லாத விசயங்களுக்குத் தாவினாலொழிய அவர்கள் பேச்சில் குறுக்கிடமாடார். அவர்கள் சொல்லும் விபரங்களில்  முக்கியப்பகுதிகளை குறித்துக் கொள்ள வசதியாய் இருக்கும் வண்ணம் பரிசோதனையின் துவக்கத்திலேயே மெதுவாய்ப் பேசும்படி அவர்களிடம் தெரிவிக்க வேண்டும். இடைமறித்துக் குறுக்குக் கேள்விகள் கேட்டால் அவர்கள் சொல்ல வந்த விசயங்களை மறந்துவிடுவார்கள். அவ்வாறு மறந்து போன விசயங்களைப் பிறகு எவ்வளவு முயற்சித்தாலும் ஞாபகத்திற்கு கொண்டு வர முடியாமல் போகலாம்என்று நமக்கு வழிகாட்டுகிறார்.

அடுத்து, மணிமொழி 86 இல் , “துயரர்களும் அவருடைய நண்பர்களும் கூறி முடித்தபின் மருத்துவர் அவர்கள் கூறியவற்றிலிருந்து வெளிப்பட்ட முக்கியமான குறிகள் ஒவ்வொன்றையும் எடுத்துக்கொண்டு அவைகளைப் பற்றிய திட்டமான விபரங்களைத் தெரிந்து கொள்ள பின்வரும் முறையை கையாளுகிறார். உதாரணமாகஎந்தச் சமயத்தில் இந்தக்குறி தோன்றியதுஇது வரை அவர் உட்கொண்டு வந்துள்ள மருந்தைச் சாப்பிட ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே தோன்றியதா? அல்லது மருந்தைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தான்  தோன்றியதா? அல்லது மருந்தைச் சாப்பிடுவதை நிறுத்திய சில நாட்களுக்குப் பிறகு தான் ஏற்ப்பட்டதா? இந்த இடத்தில் ஏற்பட்ட வலியின் தன்மை என்ன? எவ்விதமான உணர்ச்சி? வலி அல்லது வலி உணர்ச்சி திட்டமாய் எந்த இடத்தில் இருந்தது? வலி விட்டு விட்டும், தானாகவும், பல்வேறு சமயங்களிலும் தோன்றியதா? அல்லது இடைவிடாமல் தொடர்ச்சியாக நீடித்திருந்ததா? எவ்வளவு காலம் அது நீடித்திருந்தது? இரவிலோ,பகலிலோ,எந்த நேரத்தில், உடலை எவ்விதம் வைத்துக் கொண்டிருந்தால் வலி மிகக் கடுமையாக இருந்தது அல்லது முற்றிலும் மறைந்திருந்ததுஇவ்வாறு ஒவ்வொரு குறிகளையும் அதன் திட்டமான தன்மையைக் குறித்தும் மருத்துவர் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அதே சமயத்தில் , உண்டு அல்லது இல்லை என்று ஒரே வார்த்தையில் விடை தரக்கூடிய நேரிடையான கேள்விகளை எந்தச் சமயத்திலும் உபயோகிக்கக்கூடாது என்று மணிமொழி 87 இல் எச்சரிக்கை செய்கிறார். ஆனால் நோய் பற்றிய விவரங்கள் மேலும் தேவைப்பட்டால் குறிப்பாக , மலம், சளி, வாந்தி, ஏப்பம், நெஞ்சரிப்பு, சிறுநீர், குளிர்சுரம், காய்ச்சல்   மற்றும் வியர்வை போன்றவற்றின் தன்மைகளை பற்றித் தெரிந்து கொள்ள எவ்வாறெல்லாம் கேள்விகள் கேட்கலாம் என்று மணிமொழி 89 லும் , அதன் அடிக்குறிப்பிலும்  ஏராளமான கருத்துக்களை குறிப்பிடுகிறார் ஹானிமன் .


மருத்துவர். பிரபுல் விஜயகர் துயரருடனான உரையாடல் பற்றி குறிப்பிடும் போது,  ஒரு மரத்தை வெட்டுவதற்கு எனக்கு 24 மணிநேரம் கொடுத்தால் அதில் 23 மணிநேரத்தை எனது கோடாலியை கூர்தீட்டுவதற்க்காக செலவிடுவேன் என்று மிக அழகாகக் குறிப்பிடுகிறார். அதனால் துயரருடன் உரையாடும் போது ஒவ்வொரு மருத்துவரும் , துயரர்  தெரிவிக்கும் தொல்லைகள் சம்பந்தமான விசயங்களை தெளிவாக கேட்டும், அதன் உண்மைத்தன்மையை  உடன் வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம்  கேட்டும் , தானே பரிசோதித்தும் , தேவைப்படும் தருணங்களில் தலையிட்டு தகுந்த கேள்விகள் கேட்டும் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். அதாவது ஒவ்வொரு துயரையும் தனித்துவப்படுத்தி நலப்படுத்துவதற்கு,  துயரர் பற்றிய முழு விபரங்கள் ( பெயர், வயது, ஆண்/பெண் , தொழில், விலாசம், திருமணம்தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள், நாள், பதிவுஎண்),   அவரின் முக்கியமான தொல்லைகள் ( Chief complaints) , தற்போது உள்ள நோய்க்குறிகள் ( Present symptoms) , துயரரின் கடந்தகால நோய்தாக்குதல் (History of Previous Illness) , தனிப்பட்ட வரலாறு (Personal history) குடும்பவரலாறு (Family history) , புறப் பரிசோதனையின் போது கண்டுபிடித்த வித்தியாசமான குறிப்புகள் (Abnormal findings on physical verification) , மனக்குறிகள் ( Mental symptoms); அதாவது பயம் (Fear) , மனப்பிரமை (Delusions) , கவலை அல்லது துக்கம் (Grief) , நெருக்கடியான சூழ்நிலையில் தோன்றும் உணர்ச்சி நிலை (Emotioal state in stressful situation) , நோய் தோன்றியதற்கான காரணங்கள் (Causation), கனவுகள் (Dreams), குழந்தைப்பருவம் (Childhood), விருப்பு மற்றும் வெறுப்பு (Desires and Aversions) , தாகம் (Thirst) , தூக்கம் (Sleep) , மாறுமைகள் (Modalities) , பொழுதுபோக்கு மற்றும் பிறவிருப்பங்கள் (Hobbies and interests) , கடந்தகாலங்களில் எடுத்துக்கொண்ட மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அதன் முடிவுகள் (Previous treatment and results) போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைத்து விபரங்களையும் மிகத் தெளிவாக பதிவு செய்ய வேண்டும். இப்போது துயரர் ஆய்வு எப்படி நடைபெற வேண்டும் என்பதை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

1.    துயரர் பற்றிய முழு விபரங்கள் (Details of the Patient): துயரருடைய பெயர்,வயது,விலாசம், தொழில்,திருமணம், மற்றும் அவர் சார்ந்துள்ள மதம் ,  அது சம்பந்தமாக அவர் கடைபிடிக்கும் பழக்கவழக்கங்கள் போன்ற விபரங்களை கேட்கும் பொழுது அவர் எவ்வாறு பேசுகிறார்? , தெளிவான  மனநிலையில் இருக்கிறாரா அல்லது குழப்பத்தில் உள்ளாரா ? என்பனவற்றை நாம் தெரிந்து கொள்ள இயலும். அதேபோல் துயரரின் விலாசம்  மற்றும்  அவசரத்திற்கு  தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள் முதலியவற்றையும் தவறாமல் பதிவு செய்து கொள்ளவேண்டும். இவ்விபரங்கள் சிகிச்சையின் போது ஒருவேளை துயரர் மயக்கமடையநேரிட்டால் அவரது உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்க உதவும்.
2.    முக்கியமான தொல்லைகள்  அல்லது நோய்க்குறிகள் ( Chief complaints) :துயரர் எந்தத் தொல்லைக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள வந்துள்ளார் என்பதையும்  அந்நிலையில் அவரிடம் காணப்படும்  ஒவ்வொரு குறிகளையும்  தேவையான இடைவெளி விட்டு குறித்துக் கொள்ளவேண்டும். அதன் பிறகு அவரிடம் உள்ள நோய்க்குறிகளைப் பற்றிய விபரங்களை அதாவது அவருடைய தொல்லைகள் எத்தனை நாட்களாக இருக்கிறது?, திடீரென்று உருவானதா அல்லது படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு இந்தநிலை உருவானதா?,  முதலில் தோன்றிய குறிகள் எவை ?,  இந்த நோய்க்குறிகள் உருவாவதற்கு தூண்டும் சக்தியாக ஏதாவது இருந்ததா? போன்ற விபரங்களை  தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் பெல்லடோனா  ,அகோனைட் போன்ற மருந்துகளில் தொல்லைகள் திடீரென்று தோன்றி கடிமையான பாதிப்பினைக் ஏற்படுத்தும் . அதேசமயத்தில்  ஆர்சனிகம் ஆல்பம் , ஜெல்சிமியம் போன்ற மருந்துகள் தேவைப்படும் துயரர்களுக்கு தொல்லைகள் மெதுவாக ஆரம்பித்து படிப்படியாக அதிகரிக்கும்.

அடுத்து , துயரரின் எந்தப்பகுதி (Location) அல்லது எந்த உடலுறுப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். உதாரணமாக துயரருக்கு கைகளில் வலி என்றால் , முழுக்கைகளிலும் அந்த வலி இருக்கிறதா ? அல்லது மணிகட்டுபபகுதியில் மட்டும் .உள்ளதா? அல்லது விரல் நுனியில் இருக்கிறதா? என்பதையும் , அவ்வலி இருந்த இடத்திலிருந்து பரவுகிறது என்றால் எந்தப்பகுதி வரை நீட்டிக்கிறது என்பதையும் குறித்துக் கொள்ளவேண்டும். மற்றும் பாதிக்கப்பட்ட அந்தப் பகுதியில் துயரருக்கு எந்த மாதிரியான உணர்வு உள்ளது (Sensation) , அவரது  தொல்லை எப்பொழுது அதிகரிக்கிறது (Aggravation) அல்லது எந்தச் சூழ்நிலையில் குறைகிறது ( Amelioration) என்பதையும் சரியாக பதிவு செய்து கொள்ளவேண்டும். இந்த மாறுமைகள் (Modalities) சில சமயங்களில் சரியான மருந்தினை தேர்வு செய்வதற்கு பெரிதும் உதவுகிறது (இதுபற்றி தனியாக மாறுமைகள் பகுதியில் பார்க்கலாம்). அதே போல்  துயரரின் நோய்க்குறிகளோடு கூடவே இருக்கும் அல்லது தோன்றும் வித்தியாசமான குறிகளுக்கும் (Concomitants) நாம் முக்கியத்துவம்  கொடுக்கவேண்டும்.
      
3.    நோய் தோன்றியதற்கான காரணங்கள் (Causation) : துயரருக்கு தற்போதைய நோய்த் தாக்குதலுக்கு முன்பு ஏதாவது அதிர்ச்சி, துக்கம், குடும்ப உறுப்பினர்கள் அல்லது நேசித்தவர்களின் இறப்பு  மற்றும் பொருளாதார இழப்பு போன்ற மனதைப் பாதிக்கும் காரணங்கள் இருக்கிறதா என்பதையும்,  வேறு ஏதாவது டைப்பாய்டு, நிமோனியாமற்றும் பால்வினை நோய்கள் போன்ற நோய்களுக்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் உள்ளமுக்கப்பட்ட காரணத்தால் தற்போதைய நோய்தாக்குதல் ஏற்பட்டுள்ளதா என்பதை கேட்டறிந்து கொள்ளவேண்டும்.  அதேபோல்  பெரியவிருந்து , மது, புகையிலை, ஐஸ்கிரீம் அல்லது குளிர்ச்சியானபானங்கள் மற்றும் கெட்டுப்போன அல்லது ஒத்துக்கொள்ளாத உணவு எடுத்துக்கொண்டபிறகு  இந்த நோய் நிலை ஏற்பட்டுள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும். இது போன்ற காரணகாரியங்கள் சரியான மருந்தினை தேர்வு செய்வதற்கு பெரிதும் உதவுகின்றன.
  

4.     துயரரின் கடந்தகால நோய்தாக்குதல் (History of Previous Illness)கடந்த காலங்களில் அதாவது  துயரரின் குழந்தைப் பருவத்திலிருந்து தற்போதைய  நிலைவரை  என்னென்ன நோய்களால்  பாதிக்கப்பட்டுள்ளார் என்பதையும் அப்போது அவரிடம் இருந்த குறிகளையும், அந்த நோய் எவ்வளவு நாட்களுக்கு நீடித்திருந்தன என்பது பற்றியும் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். அதேபோல் அவர் இதயநோய், மூலம், குடல்பிதுக்கம் மற்றும் புற்றுக்கட்டிகள் போன்ற நோய்களுக்கு அறுவைசிகிச்சை செய்து இருக்கிறாரா? , ஏதாவது தோல்  சம்பந்தமான நோய்கள் ஏற்பட்டு இருக்கிறதா? அப்போது எடுத்துக்கொண்ட மருத்துவச் சிகிச்சைக்கும் இப்போதைய நோய் நிலைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பது போன்ற துயரரின் கடந்தகால வரலாறு மிகவும் அவசியம். இத்தகைய விபரங்கள்  துயரர் எந்த மியாசத்தில் (சோரா,சைகோசிஸ்,சிபிலிஸ் ) இருக்கிறார் என்பதை மருத்துவர் புரிந்து கொள்வதற்கு உதவும். அவரது மியாசத்திற்குத் தகுந்த மருந்தையும் மருத்துவர் தேர்ந்தெடுக்க முடியும்.


5.     குடும்பவரலாறு (Family history): துயரர்  பாரம்பரியமான குடும்ப வியாதியினால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை தெரிந்து கொள்ள அவரின் தந்தைவழி மற்றும் தாய்வழி மூதாதையர்களுக்கு இருந்த நோய்களைப்பற்றி தெரிந்து கொள்ளுவது மருத்துவருக்கு அவசியமானது. குறிப்பாக பரம்பரை பரம்பரையாக தொடர்ந்துவரும் நீரழிவு, மனநோய்கள்வலிப்பு, மேகவெட்டை,   உயர் இரத்தழுத்தம் , குறைந்த   இரத்தழுத்தம் மற்றும் தோல்படை போன்ற நோய் தாக்குதல் அவர்களுக்கு இருக்கிறதா ?, பிறவிக் குறைபாடுகள் தொடர்ந்து வருகிறதாஎன்பன போன்ற தகவல்களை கேட்டறிய வேண்டும். அதேபோல் துயரர் அவருடைய தாயின் கர்ப்பத்தில் இருந்த பொழுது தாயாருக்கு ஏற்பட்ட நோய்கள் , அவர் எடுத்துக்கொண்ட மருந்துகள் , சுகப்பிரசவமா அல்லது அறுவைச் சிகிச்சை மூலம் பிறந்தவரா? பிறந்தபொழுது மூச்சுத்திணறல் இருந்ததா? போன்ற தகவல்களையும் தவறாமல் பதிவு செய்துகொள்ளவேண்டும். இந்த விபரங்கள் துயரருடைய   நாட்பட்ட நோய்த்தன்மையின் ஆழத்தைப் புரிந்துகொள்ள உதவும். 

6.     தனிப்பட்ட வரலாறு (Personal history): துயரரின் தனிப்பட்ட வரலாறு நமக்குப் தெரிதும் தேவைப்படும். உதாரணமாக , அவருக்கு சரியான வயதில் பல்முளைத்ததா?, எந்த வயதில் நடக்க, பேசக் கற்றுக்கொண்டார்? , தாய்ப்பால் குடித்து வளர்ந்து வந்தவரா அல்லது அனாதைவிடுதியில் வளர்ந்து வந்தவரா? போன்ற தகவல்களையும்அவரது படிப்பு , செய்யும் தொழில் அல்லது வேலை, என்ன வேலை செய்கிறார் ( சுரங்கம்;மரஅறுவை;பஞ்சுமில்),  ஒரே வேலையை தொடர்ந்து செய்து செய்கிறவரா அல்லது மாறி மாறி பலவேலைகள் செய்பவரா? போன்ற விவரங்களையும் கேட்க வேண்டும். அதேபோல் துயரருக்கு குடிப்பழக்கம் , புகைப்பிடிக்கும் பழக்கம், டீ மற்றும் காபி போன்ற பானங்களுக்கு அடிமைப்பட்டிருத்தல் , திருமண உறவு எப்படி? அவருக்கு வேறு ஏதாவது தவறான உறவு அல்லது பழக்கவழக்கங்கள் இருக்கிறதா? போன்ற விபரங்கள் துயரரை நாம் சரியாக புரிந்து கொள்ள உதவும். துயரர் பெண்ணாக இருந்தால் எந்த வயதில் திருமணம் நடைபெற்றது? , எத்தனை குழந்தைகள் ?, சுகப்பிரசவமா அல்லது  அறுவைச்சிகிச்சையா?,  ஏற்கனவே கர்ப்பசிதைவு ஏற்ப்பட்டுள்ளதா? , தற்போது கர்ப்பமாக இருக்கிறாரா? போன்ற விபரங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும். ஏனென்றால்  பெண்கள் கர்ப்பமாக இருக்கும்பொழுது  அபிஸ், செபியா மற்றும் சபினா போன்ற மருந்துகளை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டியது அவசியம். 

7.     மனக்குறிகள் ( Mental symptoms): மாமேதை ஹானிமன் மணிமொழி 211 இல் , ஏற்ற ஹோமியோபதி மருந்தைத் தேர்ந்தெடுக்க , துயரரின் மனக்குறிகள் பல சமயங்களில் முக்கியமானவையாக அமைந்து விடுகின்றன என்று குறிப்பிடுகிறார். ஆகவே , ஒவ்வொரு   மருத்துவரும் துயரரிடம் காணப்படும் கீழ்க்காணும் மனக்குறிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

a)    மனத்திட்பம் (Will). துயரரின் அன்பு (Love) , வெறுப்பு (Hates), மனவெழுச்சி (Emotions) , பிடிவாதமானகுணங்கள் (Obstinacy) , முரண்பாடு (Contradiction) மற்றும் அதிகம் பேசுதல் (Loquacity).
b)    அறிவாற்றல் அல்லது புரிந்துகொள்ளும் ஆற்றல் ( Understanding). துயரரின் மருட்சி (Delusion), வெறிப்பிதற்றலான நிலை (Delirium) , மாயக்காட்சி (Hallucination) மற்றும் நேரத்தை பற்றிய கணிப்பு (Time sense).
c)     மனத்தின் அறிவுத்திறன் (Intellect).  நினைவாற்றல் (Memory), ஒருமித்தகவனம் (Concentration) மற்றும் பேசுவதில்,எழுதுவதில் படிப்பதில் தவறு செய்தல் (Mistakes-talking, writing and reading).

இவற்றைத்தவிர துயரின் மனக்குறிகளை கீழ்க்காணும் பிரிவுகளின் மூலமாகவும் நாம் அறிந்து கொள்ள இயலும். அவையாவன;

a)    துயரரின் மரணபயம் (Death) மற்றும் தற்கொலை எண்ணம் (Suicide).
b)    மனக்கவலை (Grief), விரக்தி அல்லது அலைக்கழிப்பு (Vexation) , உணர்ச்சி புண்படுதல் (Mortification), உள்ளக்கொதிப்பு (Indignation) , கோபம் (Anger), கெட்ட செய்தி (Bad News) மற்றும் காதல்தோல்வி (Disappointed Love) போன்ற காரணங்களால் நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகுதல்.
c)     பயம் (Fear) , பதட்டம் (Anxiety) மற்றும் கடுந்துயரம் (Anguish).
d)    எரிச்சலடைதல் (Irritability), கோபம் (Anger), வன்முறைச்செயல் (Violence) , பொறுமையின்மை (Impatience) மற்றும்  பரபரப்பு (Hastiness).
e)    கவலைப்படுதல் (Sadness), அழுதல் (Weeping), மனகசப்பு (Despair)  மற்றும் துயரருக்கு ஆறுதல் கூறுவதால் ஏற்படும் விளைவு (Effects of consolation).
f)     மேலும் பொறாமை (Jealousy), ஞாபகமறதி (Absent-mindedness) மற்றும் மூளைக்கோளாறு (Mania)  போன்றவைகள்.

மேலும் மேற்கண்ட மனக்குறிகளை அறிந்து கொள்வதற்கு துயரரிடம் நேரிடையான  முறையில் கேள்விகள் கேட்பதைத் தவிர்த்து நுட்பமான வகையில் கேள்விகள் கேட்க  வேண்டும். உதாரணமாக உங்களுக்கு கோபம் வருமா?, அல்லது பொறாமைப் படுவீர்களா ? என்று கேட்பதற்குப் பதிலாக, உங்களது  சுபாவம் எப்படி? எந்த மாதிரியான உணர்வு ஏற்பட்டது?  போன்ற தொனியில் மருத்துவரின் கேள்விகள் இருக்க வேண்டும். அதேபோல் நீங்கள் இருட்டு,பேய் போன்றவற்றிற்குப்  பயப்படுவீர்களா? விபத்தைப் பார்த்தவுடன் அதிர்ச்சி ஏற்படுமா ? என்று கேட்பதற்குப் பதிலாக , எந்தெந்த சூழ்நிலைகளில் நீங்கள் பயப்படுவீர்கள் அல்லது பதட்டமடைவீர்கள் ? என்று கேட்க வேண்டும். அடுத்து, மனதில் பாதிப்பு ஏற்படும்  நேரத்தில் உங்களது நெஞ்சில் படபடப்பு இருந்ததா? மயக்கம் ஏற்பட்டதாஎன்று கேட்பதற்குப் பதிலாக,  அந்தச்சமயத்தில் உங்கள் உடல்நிலையில் எந்தமாதியான மாற்றம் நடந்ததாக நீங்கள் உணர்ந்தீர்கள் ? என்று கேட்க வேண்டும். அதேபோன்று துயரரின் மருட்சி, வெறிப்பிதற்றலான நிலை , மாயக்காட்சி  போன்றவைகளைப்பற்றித் தெரிந்துகொள்ள நேரிடையான கேள்விகளை கேட்கக் கூடாது. அவரின் பேச்சிலிருந்தும் , செய்கைகளின் மூலமாகவும் மருத்துவர் உணர்ந்து கொள்ளவேண்டும்.

அதே  நேரத்தில், துயரரிடம் மனக்குறிகள் சம்பந்தமான கேள்விகளை துயரர் ஆய்வு முடியும் தருவாயில் அதாவது கடைசி நேரத்தில் கேட்கக்கூடாது . அந்த சமயத்தில் அவர் களைத்திருக்கக்கூடும் அதனால் அவரது மனதின் ஆழத்தில் உள்ளுறைந்திருக்கும் உணர்வுகள் தெளிவாக வெளிவராது என்று மருத்துவர்.பிரே இஷேமித் (Dr. Pierre Schmidt)  குறிப்பிடுகிறார். ஆனால், துயரரின் உடல்சார்ந்த குறிகளை நாம் தொட்டுத் பரிசோதிக்கும் பொழுது அவரது உடலும் மனநிலையும் மருத்துவருக்கு முழுமையாக ஒத்துழைக்கும், அந்த நேரத்தில் நாம் அவரது மனம் சம்பந்தமான விபரங்களைத் தெளிவாகக் கேட்கலாம் என்கிறார் மருத்துவர். போர்லண்ட் (Dr.Borland).  இருந்தாலும் மருத்துவரிடம் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டாலொழிய துயரர் தமது அந்தரங்க உணர்வுகளை பகிர்ந்து கொள்ளமாட்டார் என்பதும் உண்மை. குறிப்பாக பெண் துயரர்கள் ஆண் மருத்துவர்களிடமும் , மாறாக ஆண் துயரர்கள் பெண் மருத்துவர்களிடமும் இயல்பாக தமது தனிப்பட்ட  அந்தரங்க உணர்வுகளை பகிர்ந்து கொள்வார்கள் என்பதும், தமது பலவீனங்களை தனது  சக பாலினத்திடம் பகிர்ந்து கொள்வதை  அவர்களது  ஆழ்மனது விரும்புவதில்லை என்பதும் உளவியல் காரணமாக இருக்கிறது. ஆகவே, மருத்துவர் தனது முழுத்திறமையும் செலுத்தித்தான் துயரரை புரிந்து கொள்ள வேண்டும்.

8.     கடந்தகாலங்களில் எடுத்துக்கொண்ட மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அதன் முடிவுகள் (Previous treatment and results): துயரர் கடந்த காலங்களில் எந்தெந்த தொல்லைகளுக்கு உள்ளானவர் என்பதையும் , அதற்கு என்னென்ன மருந்துகள் எடுத்துக் கொண்டார் என்பதையும் , மருந்து எடுத்துக் கொண்டபிறகு அந்த நோய் முழுவதுமாக குணமாகி விட்டதாஅல்லது உள்ளமுக்கப்பட்டுள்ளதா? , தடுப்பு மருந்துகள் எடுத்து கொண்டுள்ளாரா? போன்ற விவரங்களை குறித்துக் கொள்ளவேண்டும். நாம் சரியான ஹோமியோ மருந்தினைக் கொடுக்கும் பொழுது அவரது பழைய குறிகள் திரும்பி வர நேரிடலாம். அப்பொழுது துயரர் நலத்திற்கு திரும்பி வருகிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.  . 

9.     விருப்பு மற்றும் வெறுப்பு (Desires and Aversions): அடுத்து துயரர்கள் எந்த  விதமான உணவு பொருள்களை விரும்பி எடுத்துக் கொள்கிறார் அல்லது வெறுக்கிறார்கள் என்பதையும் பதிவு செய்து கொள்ளவேண்டும். எனக்கு இனிப்பு பிடிக்கும் ; உப்பு பிடிக்கும் என்று துயரர் தெரிவித்தால் அது குறிகள் ஆகாது. ஆனால் ஒரு துயரர்  உணவின்   ருசியைப்  பார்க்கும்  முன்பே  உப்பை எடுத்து உணவில் சேர்த்துக் கொண்டால் அதுவே " உப்பை விரும்புகிறார்" என்ற குறியாக எடுத்துக் கொள்ளப்படும். அதே போல் மாமிசஉணவு விரும்பி சாப்பிடுவதால் மட்டும் அவருக்கு கொழுப்பின் மீது விருப்பம் என்று எடுத்துக் கொள்ளகூடாது. ஆனால் அவரது  மாமிசத்துடன் அடுத்தவர்கள் இலையில்  இருக்கும் மாமிசத்தையும் சேர்த்து எடுத்துக்கொண்டால் , அதுவே " கொழுப்பில் விருப்பம் என்று எடுத்துக் கொள்ளவேண்டும். இனிப்பும் அவ்வாறே!.   ஆகவே துயரர்களின் விருப்பு வெறுப்புகளை மிகவும் கவனத்துடன் கேட்டறிய வேண்டும்.

10.  தாகம் (Thirst): துயரரின் தாகத்தைப் பற்றி கேள்வி கேட்கும் போது , உங்களுக்கு தாகம் இருக்கிறதா? என்று கேட்கக்கூடாது. நீங்கள் எவ்வளவு தண்ணீர் எடுத்துக் கொள்வீர்கள் ? என்று கேட்க வேண்டும். துயரர் தனக்கு தினமும் தாகம் இருக்கிறது , ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்கிறேன்  என்று தெரிவித்தால் அது குறியாக எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. ஆனால் எனக்கு காய்ச்சல் இருக்கும்பொழுது நான் தண்ணீர் குடிப்பதில்லை என்று கூறினால் அது முக்கியமான குறியாகும். அதே போல் வெப்பமான பருவ நிலையில் நிறைய தண்ணீர் குடிப்பேன் என்று தெரிவித்தால் , அதற்குப் பெயர் நிறைய தாகம் என்று அர்த்தமில்லை . அது இயல்பான ஒன்று. அதற்குப் பதிலாக மிகவும் வெப்பமாக இருக்கும் பொழுது கூட நான் தண்ணீர் குடிப்பதில்லை என்று கூறினால்  அது முக்கியமானது.  அதே சமயத்தில்  துயரர் ஒரே தடவையில் இரண்டு மூன்று டம்ளர் தண்ணீர் குடித்தாலும் எனக்குத் தாகம் அடங்குவதில்லை என்று கூறினால் அதை முக்கியமான குறியாக எடுத்துக் கொள்ளவேண்டும். அதனால் துயரரின் தாகம் பற்றிக் கேள்விகள் கேட்கும்போது மிகவும் கவனம் தேவை. துயரர் சூடான தண்ணீரை விரும்புகிறாரா அல்லது குளிர்ச்சியான  தண்ணீரை விரும்புகிறாரா என்பதையும் , அவைகள் அவரது நோய்க்குறிகளை தனிக்கிறதா? அல்லது அதிகரிக்கிறதா போன்றவைகளையும் மருத்துவர் கேட்க வேண்டும்.

11.  தூக்கம் (Sleep) மற்றும் கனவுகள் (Dreams): தூக்கத்தின் போது துயரர் வெளிபடுத்தும் குறிகளும் சரியான மருந்தைத் தேர்ந்தெடுக்க நமக்கு உதவுகிறது. தூக்கத்தில் துயரர்கள் கீழ்காணும் செய்கைகளையும் , குறிகளையும் வெளிப்படுத்தலாம்;

a)    தூக்கத்தில் துயரரின்   உடல் , தலை மற்றும் கை,கால்கள் எந்தப்பக்கத்தில் ? எந்தமாதிரி இருக்கிறது?. துயரர் வயிற்றை கீழே வைத்து தூங்குவார்  அல்லது  கைகளை பரப்பித் தூங்குவார், தூக்கத்தில் தலையை இருபக்கமும் புரட்டுவார், அல்லது தலையணைக்குள் தலையை செருகுக்கொள்வார்.  
b)    தூக்கத்தின் போது துயரர் என்ன செய்கிறார்; உதாரணமாக, சிரிக்கிறார், திடுக்கிடுகிறார் , அழுதல்,பயப்படுகிறார், பற்களைக் கடிக்கிறார், கண்கள்/வாய் திறந்திருக்கிறது, குறட்டை விடுகிறார், தூக்கத்தில்   நடக்கிறார் மற்றும் வாயின் ஓரத்திலிருந்து எச்சில் வடிகிறது.
c)     தூக்கத்தின் தன்மை; தூக்கத்திலிருந்து எந்த நேரத்தில் , எதனால் விழித்துக் கொள்கிறார், எந்தநேரத்தில் தூக்கம் கெடுகிறது, தூங்கியபிறகு என்ன தொல்லைகள் ஏற்படுகிறது போன்றவற்றை தெரிந்து கொள்ளவேண்டும்.
d)    தூக்கத்தில் முழு உடலையும் போர்த்திக் கொள்கிறாரா? அல்லது சில குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் மூடிக் கொள்கிறாரா? என்று கேட்க வேண்டும்.
e)    எந்த மாதியான கனவுகள் ஏற்படுகிறது. கனவுகளுக்கும்  அவரது நோய்த் தன்மைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதையும் மருத்துவர் பொருத்திப்பார்க்க வேண்டும்.
f)     தூக்கத்திற்கு முன்பு  , தூங்கி எழுந்தபிறகு மற்றும் தூக்கத்தின் போது துயரருடைய பொதுவான தொல்லைகள் கூடுகிறது அல்லது குறைகிறது போன்ற விவரங்களை கேட்க வேண்டும்.

துயரரின் தூக்கம் பற்றியும் , தூக்கத்தின் பொது அவர்களைது நடவடிக்கைகள்  பற்றியும் அவருக்குத் தெரிந்திருக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கும் அதனால் அவருடைய பெற்றோர்கள் மற்றும் நண்பர்களிடம் கேட்டறிய வேண்டும் என்பது முக்கியம்.

12.  மாறுமைகள் (Modalities)  அதாவது தொல்லைகள் அதிகரித்தல் மற்றும் குறைதல்: துயரர்களுக்கு அவர்களுடைய தொல்லைகள் எந்த நேரத்தில்எதனால் அதிகரிக்கிறது  அல்லது குறைகிறது  என்ற மாறுமைகள்  துயரரை  நலப்படுத்துவதற்கு   பெரிதும்   உதவுகிறது. மாறுமைகளை கீழ்காணும் வகையில் அறிந்து கொள்ளலாம்.
a)    நேரம் (Time): இருபத்திநான்கு மணி நேர கணக்கில் , துயரருக்கு  அவருடைய தொல்லைகள் காலையில் அல்லது மாலையில்  அதாவது 3.A.M மற்றும் 3.P.M இல் தொல்லைகள் அதிகரிக்கிறது அல்லது குறைகிறது , மாலை 4 மணி முதல் 8 மணி வரை தொல்லைகள் கூடுகிறது (லைகோபோடியம்) போன்ற தகவல்களை குறித்துக் கொள்ளவேண்டும். அதே போல் பௌர்ணமி அல்லது அமாவாசையில் துயரம் அதிகரிக்கிறது என்பன போன்ற தகவல்கள் கல்கேரியா.கார்ப்., சிலிகா போன்ற மருந்துகளை தேர்ந்தெடுக்க உதவும். துயரர் இரவில் தொல்லைகள் அதிகரிக்கிறது என்று கூறினால் , அது இரவு நேரத்தினாலா?, படுத்த பிறகா?, அல்லது  படுக்கை சூட்டினாலாஎன்ற விபரங்களையும், மாலைநேரத்தில்    என்றால் , அலுவலகத்தில் உட்கார்ந்திருக்கும் நேரத்திலா அல்லது மதிய உணவிற்குப் பின்பாகவா என்றும் தெரிந்து கொள்ள வேண்டும். 
b)    வானிலை மாற்றங்கள் (Meteorological) : சூடு அல்லது வெப்பம் , குளிர்  ; கோடைகாலம் , மழைக்காலம் , குளிர்காலம் , பருவநிலை மாறுதல்கள், இடி மற்றும்  மின்னல், திறந்தவெளிக் காற்று , சுத்தமான காற்று போன்ற காரணிகள் துயரர்களுக்கு அவரது தொல்லைகளை அதிகரிக்கவோ அல்லது தணிக்கவோ செய்யும்.
c)    தொடுதல் அல்லது பரிசம்:  தொடுவதால் , அழுத்தி தேய்ப்பதால் இருக்கிக்கட்டுவதால் மற்றும் அமுக்குவதால் தொல்லைகள் கூடுதல் அல்லது குறைதல்.
d)    நிலை அல்லது உடல் அமர்வுநிலை (Position): துயரரின் தொல்லைகள் அவர் நிற்கும் பொழுது அல்லது உட்கார்ந்த நிலையில், தலையை கீழே அல்லது உயரமாக வைத்து படுக்கும் பொழுது அதிகரிக்கிறது அல்லது சமனப்படுகிறது .
e)    ஓய்வு மற்றும் அசைவு  ( Rest or Motion): அசைவினால், ஓய்வினால் , நடப்பதால், காரில் பயணம் செய்வதால் , படிக்கட்டுகளில் ஏறுவதால் அல்லது இறங்குவதால் தொல்லைகள் கூடும் அல்லது குறையும்.
f)     கழிவுகள் (Discharges): மலம், சிறுநீர் மற்றும் வியர்வை போன்ற கழிவுகளும் தொல்லைகளை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்யலாம்.
                                                 
மேற்கண்ட வழிகாட்டுதலின்படி துயரர் ஆய்வை மேற்கொள்ளும் பொழுது துயரரின் ஒட்டுமொத்த குறிகளையும் நம்மால் தெளிவாக புரிந்து கொள்ளமுடியும். அத்துடன் துயரரின் உடலை புறப்பரிசோதனை செய்வது அவசியமான ஒன்று. ஹோமியோபதி மருத்துவர்கள் செய்யத்தவறும் விசயமும் இதுவே!. நாம் துயரரின் உடலை புறப் பரிசோதனை செய்யும் போது அவருக்கு இருக்கும் நகங்களின் சிதைவு, கழலைகள், மருக்கள், சொத்தையான பற்கள்உயர்இரத்த அழுத்தம், வேகமான இதயத் துடிப்பு போன்றவற்றை  அறிந்து கொள்ளமுடியும். துயரருக்கும் மருத்துவரின் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படும் அதனால்  தமது  அனைத்துக்குறிகளையும் இயல்பாக பகிர்ந்து கொள்வார்.  இதைத்தான் சரியாக எடுக்கப்படும் துயரர் ஆய்வு பாதி நலப்படுத்தியதற்குச் சமம் என்று கூறுவார்கள். ஒரு 21 வயது இளம்பெண்ணிற்கு முதல் முறையாக மாதவிலக்கு  ஏற்படுவதற்கு பத்து நாட்கள் தாமதமாகிவிட்டது. அதற்கு முன்பு அவரது தந்தைக்கு  சிறிய விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார். இது அந்தப்பெண்ணை பாதித்து இருக்கவேண்டும் என்று கருத வாய்ப்பு இருந்தது. ஆனால் அச்சம்பவம் தன்னை பாதிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் தொலைபேசியில் பேசும்பொழுது தனது தந்தையைப்பற்றி அக்கறையுடன் விசாரித்துள்ளார். நான் அவரது தந்தைக்கு எந்தப் பெரிய பாதிப்பும் இல்லை என்றும் , ஓரிரு தினங்களில்  இயல்பு நிலைக்கு வந்து விடுவார் என்று  திட்டவட்டமாக விளக்கியபிறகு அவருக்கு ஆறுதல் ஏற்பட்டு முகத்தில் நிம்மதி தெரிந்தது. அவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு உணவு ஒவ்வாமைக்காக கல்கேரியா கார்ப் 200 கொடுத்திருந்தேன். அவருக்கு இப்பொழுது மருந்து கொடுக்கவேண்டுமா ? அப்படியென்றால் பாஸ்பரஸ் கொடுக்கலாமா? அல்லது பல்சாட்டில்லா தேவைப்படுமா? என்ற சந்தேகம் எழுந்தது. இருக்கட்டும் ! காலையில் மருந்து கொடுக்கலாம் என்று எண்ணி மருந்தில்லாமருந்து (Sac Lac) இரண்டு உருண்டைகள் மட்டும் கொடுத்து அனுப்பி விட்டேன். காலை ஏழுமணிக்கு அந்தப் பெண்ணிற்கு மாதவிலக்கு ஏற்பட்டுவிட்டதாக செய்தி வந்தது.  அவருடன் நான் நடத்திய உரையாடலில் திருப்தி ஏற்பட்டு அதன் காரணமாகவே அவர் நலமாகி இருக்கவேண்டும் என்று கருகிறேன்.


அதனால் ஒரு ஹோமியோபதி மருத்துவர் வெற்றிகரமான மருத்துவராகத் திகழ வேண்டுமென்றால் மரு.போர்லண்ட்  கூறியவாறு, கூர்ந்து கவனிப்பவராக (To Observe) , பொறுமையாக கேட்பவராக (To Listen), குறிகளை சரியாக பதிவு செய்பவராக (To Write) , நுட்பமாக கேள்வி கேட்பவராக (To Question) , நல்ல பரிசோதகராக (To Examine ) மற்றும் முழுமையாக ஒத்துழைப்பவராகவும் (To Coordinate)  இருக்க வேண்டும் என்பதை மனதில் இருத்திக் கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment