Monday, 20 March 2017

ஹோமியோபதி மருத்துவத்தில் துயரர் ஆய்வும் ஒத்த மருந்துத் தேர்வும்-பாகம்-2

ஹோமியோபதி  மருத்துவத்தில் துயரர் ஆய்வும் ஒத்த மருந்துத் தேர்வும்
(Case taking & Selection of Similimum)

பாகம்-2

II.        துயரர்களிடமிருந்து பெற்ற குறிகளை சரிபார்த்து அதனுள்ளே மறைந்துள்ள கருத்தினை புரிந்து கொள்ளுதல். மற்றும் அவற்றை சரி பார்த்து மருந்தியல் களஞ்சியம் மற்றும் அரும்பொருட் களஞ்சியத்திற்குத் தகுந்தவாறு குறிமொழியாக மாற்றுதல். (Eliciting, Verification,Interpretation of symptoms & Translating into Language of Materia Medica and Rubric in Repertory).

துயரர் ஆய்வின்  போது , துயரர்களிடமிருந்து பெறப்படும் அனைத்துக்குறிகளும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆனால், அந்தக் குறிகள் துயரர் தன்விருப்பமாக ( புறத்தூண்டுதலின்றி ) , அவரது சொந்த மொழியில் அவராகவே கொடுத்ததாக இருக்க வேண்டும். மாறாக, அக்குறிகள் மருத்துவரின் இயல்பிற்கு மீறிய முன்னணிக் கேள்விகள் மூலமாகவோ அல்லது அவரது வசதிக்குத் தகுந்தவாறு ( DENATURALISATION-போலிவாதப்படுத்தி)  பெறப்பட்டதாக இருக்கக்கூடாது. அவ்வாறு துயரரின் வாய்மொழி மூலமாக இயற்கையாகப் பெறப்படும் விபரங்கள் தான் மிகச் சரியான மருத்துத் தேர்விற்கு நம்மை வழி நடத்துகிறது. அக்குறிகளை மிகவும் கவனமாகவும் , எச்சரிக்கையாகவும் பற்றிக் கொண்டு மருத்துவர் செயல் பட வேண்டும். எப்படியென்றால் , ஒரு சுரங்கத் தொழிலாளி எவ்வாறு இயற்கையான மூலத் தாதுவை வெட்டியெடுத்து அதனுடைய இயற்கைப்பண்புகள் மாறாமல் அதிலுள்ள பலதரப்பட்ட அசுத்தங்களை சலித்து எடுத்து " தங்கத்தைப் பிரித்து எடுக்கிறானோ" , அவ்வாறே நாமும் சரியான மருந்தினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு கீழ்வரும் வழிமுறைகளை நாம் செயல்படுத்த வேண்டும். அவையாவன;

1.   துயரரின்  மறைக்கருத்தினை வெளிப்படுத்தும் குறிகளை அறிதல். 
2.   துயரரின் குறிகளை சரிபார்த்தல்.
3.   துயரரின் குறிகளில் தென்படும் பொருள் விளக்கத்தின் படி அவைகளை   மருந்தியல் களஞ்சியதோடும்(MATERIA MEDICA) , அரும்பொருட்களஞ்சியத்தில் (மருந்து காண் ஏடு- REPERTORY )  உள்ள குறிமொழிகளுக்குத் தகுந்தவாறும் மாற்றுவது.

1. துயரரின்  மறைக்கருத்தினை வெளிப்படுத்தும் குறிகளை அறிதல்:

              ஹோமியோபதி மருத்துவர்,  துயரரிடம் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் உரையாடி அவரிடம் காணப்படும் அனைத்துக்குறிகளையும் பெறவேண்டும். பொதுவாக, எல்லாத் துயரர்களும் அவர்களுக்கு அதிக அளவில் தொல்லை தரும் குறிகளை மட்டுமே மிகவும் மிகைப்படுத்தி கூறுவார்கள். அதே சமயத்தில் அவர்களுக்கு முக்கியமில்லை என்று தோன்றும் குறிகளையும் அல்லது அவர்களுக்கு சங்கடத்தைத்தரும் என்று கருதும் குறிகளையும் தவிர்த்து விடுவார்கள். குறிப்பாக , நாட்பட்ட வகை நோயிற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வரும் பெண்களிடம், கருவுற்றிருத்தல், மலட்டுத்தன்மை, சிற்றின்ப ஆசை, பிள்ளைபேறு, கருச்சிதைவு, குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்தல், மாதவிடாய் போக்கின் தன்மை, ஆகிய விவரங்களை முக்கியமாகத் தெரிந்து கொள்ளவேண்டும் கடைசியாகக் கூறப்பட்ட விவரத்தைப் பற்றி இன்னும் விரிவாய்த் தெரிந்துகொள்ளத் தவறக் கூடாது. மாதவிடாய் போக்கு உரிய காலத்துக்கு முன்னதாக அடிக்கடி ஏற்படுகிறதா? அல்லது தாமதமாய் ஏற்படுகிறதா? அதன் பொதுவான அளவு என்ன? எவ்வளவு கறுப்பு நிறமாய் இருக்கிறது. மாதவிடாய் போக்கு தோன்றுவதற்கு முன்போ அல்லது நின்ற பிறகோ வெள்ளை நீர்க்கழிவு வெளியாகிறதா? மாதவிடாய் போக்கு உள்ள போதோ, முன்னோ,பிறகோ ஏற்படக்கூடிய உடல் மனக் கோளாறுகள், உணர்ச்சிகள், வலி ஆகியவைகளின் விவரம்,  வெள்ளை நீர்க்கழிவு இருந்தால் அதன் தன்மை, அது வெளியாகும் போது காணப்படும் உணர்ச்சிகள், கழிவு நீரின் அளவு, எவ்வித நிலைமைகளில், சமயங்களில் அது தோன்றுகிறது ஆகியவைகளையும் கேட்டறிய வேண்டும் என்று மாமேதை ஹானிமன் தமது ஆர்கனானின் மணிமொழி 94 இன் கீழுள்ள அடிக்குறிப்பில் தெளிவாக குறிப்பிடுகிறார்.

மேலும், அவர் மணிமொழி 95 இல் நாட்பட்ட வகை நோய்களில் மேலே குறிப்பிட்ட நோய்க் குறிகளையும் மற்ற விவரங்கள் அனைத்தையும் மிகுந்த கவனமாய்க் கேட்டறியவேண்டும். அத்துடன் மிக அற்பமானவை என்று கருதக் கூடிய சில்லறைக் குறிகளைக்கூட விட்டுவிடக்கூடாது. ஏனென்றால் நாட்பட்ட வகை நோய்களில் சில்லறைக்குறிகள் மிகுந்த விசேஷத்தன்மை பெற்றவைகைளாய் இருக்கின்றன. திடீர் வகை நோய்களில் அவ்விதம் இல்லை. ஆதலால் நாட்பட்ட  வகை நோய்களைக் குணம் செய்ய வேண்டுமானால் விசேஷத் தன்மை பொருந்திய சில்லரைக்குறிகளைக் கவனிக்காமல் இருக்க முடியாது என்று ஹானிமன் வலியுறுத்துகிறார். மேலும் , துயரர்கள் நோயினால் ஏற்படும் வேதனைகளை நீண்ட காலமாய் அனுபவித்துப்பழக்கப்பட்டு விட்டதால் சில்லறைக்குறிகளை நோயாளிகள் அவ்வளவாக கூறாமல் அலட்சியமும் செய்யலாம். தம் உடம்புடனேயே பிறந்தது என்றும் நினைக்கலாம். பதினைந்து அல்லது இருபது ஆண்டுகாலமாய் நோயின் வேதனைகளுக்குப் பழக்கப்பட்டுவிட்ட அவர்கள் அச்சில்லறைக்குறிகள் நோயினால் ஏற்பட்டவை, ஆரோக்கிய நிலைமைக்கு மாறுபட்டவை என்று நாம் கூறினால் எளிதில் நம்பமாட்டார்கள். ஆனால், அந்த சில்லறைக்குறிகள் தான் விசேஷத்தன்மை வாய்ந்தவை என்றும் , ஒத்த மருந்தைத் தேர்ந்தெடுப்பதில் பல சமயங்களில் உதவியாய் இருப்பவை என்பதையும் மருத்துவர் மறக்கக் கூடாது என்று அதே மணிமொழி 95 இல் ஹானிமன் கூறுகிறார்.


இவற்றைத் தவிர , துயரர்களைப் பாதிக்கும் பருவ நிலை மாற்றங்கள் (HEAT & COLD) , வெளிச்சம், சத்தம், வண்ணங்கள்  , நறுமணங்கள் (அல்லது கெட்டவாசனை) , அவர்களின் சுத்தம்/அசுத்தம் , வியர்வையின் தன்மை மற்றும் கடந்தகால நோய்கள் போன்றவற்றை விளக்கத் தவறி விடுவார்கள் .அவற்றையும் நாம் தான் கவனமாக கேட்டுக் குறித்துக் கொள்ளவேண்டும். ஏனென்றால் , துயரர்கள் அவ்வாறு தவிர்க்க நினைக்கும் குறிகளே நமக்கு சரியான மருந்தினை தேர்வு செய்வதற்கு வழி காட்டுகிறது. மற்றும் இத்தகைய குறிகளை துயர்களிடமிருந்து பெறாதவரை அவருக்குத் தேவையான ஒத்த மருந்தை நம்மால் தேர்ந்தெடுக்கவும்  இயலாது.

2. துயரரின் குறிகளை சரிபார்த்தல்: 

          பொதுவாக ,  எந்தவொரு மனிதனும் அவர்கள் சம்மந்தப்பட்ட நிகழ்வுகளை பற்றிச்  சொல்லும் பொழுது , அந்தசூழலில் அவர்களிடமிருந்த உணர்வுநிலை (SENSATION) அல்லது மனஉணர்ச்சி (FEELING) போன்றவற்றைப் பற்றி சரியாக விளக்குவது மிகக் கடினமாக செயலாகும். இந்த உண்மையை நாம் ஒவ்வொருவரும்,  அவரவரின் தனிப்பட்ட பண்புகளைப் பற்றிய புரிதலை வைத்தே  சரிபார்த்து கொள்ள இயலும். அதனால் புதியவர்களாக நம்மிடம் வரும் அத்துயரர்களை சரியாக புரிந்து கொள்ள தனியான அறிவுத்திறமை வாய்ந்த முயற்சி மருத்துவர்களுக்குத் தேவைப் படுகிறது. மற்றும் அவர்கள் பேசும் விதத்தை வைத்தே நாம் அவர்களை புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக எல்லாத்துயரர்களும் இந்த விசயத்தில் குறைபாடு உள்ளவர்களாகவே இருப்பார்கள். அதனால் , ஹோமியோபதி மருத்துவர்கள் தான் துயரர்கள் வெளிப்படுத்திய குறிகளை கவனமாகத் தொகுத்து , படிப்படியாக சரிபார்த்து அவர்களின் உணர்வுநிலை மற்றும் மனஉணர்ச்சிகள் முழுவதும் அவர்கள் ஏற்கனவே குறிப்பிட்ட நிகழ்வுகளுக்குப் பொருந்துகிறதா என்பதை சரி பார்க்க வேண்டும். இதற்கு ஒவ்வொரு மருத்துவருக்கும் அளவிற்கு அதிகமான பொறுமையும் , திறமையும் (TACTFULNESS) மற்றும் எச்சரிக்கை உணர்வும் (CIRCUMSPECTION) தேவைப்படும் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்பது அவைவருக்கும் தெரியும். ஆகையால் இந்த விசயத்தில் மருத்துவர்கள் அவசரமாகவோ(RASHNESS) அல்லது கவனக்குறைவாகவோ (INADVERTANCE) நடந்து கொண்டால்  அச்செயல் துயரரை சரியாக புரிந்து கொள்ள முடியாத நிலையை உருவாக்கி துயரர் ஆய்வை பாழ்ப்படுத்திவிடும்.

3. துயரரின் குறிகளில் தென்படும் பொருள் விளக்கத்தின் படி அவைகளை   மருந்தியல் களஞ்சியதோடும்(MATERIA MEDICA) , அரும்பொருட்களஞ்சியத்தில் (மருந்து காண் ஏடு- REPERTORY )  உள்ள குறிமொழிகளுக்குத் தகுந்தவாறு மாற்றுவது.

            ஹோமியோபதி மருத்துவர்கள்,  துயரர்களிடம் கலந்துரையாடும் பொழுது , அவர்களின்  கடந்தகால நிகழ்வுகளையோ அல்லது மன உணர்வுகளை பற்றியோ விவரிக்கும் தன்மையில்  ஒரு துயரரின் உரையாடல் மற்றொரு துயரர் போல் இருப்பதில்லை . ஒவ்வொருவரும் அவர்களின் தனித்தன்மைக்கு ஏற்றவாறான மொழியில் தான் விவரிப்பார்கள். மற்றும், எந்தவொரு துயரரின் பேசும் மொழியும் அப்படியே மருந்தியல் களஞ்சியத்திடனோ அல்லது மருந்து காண் ஏட்டுடனோ ஓத்திருப்பதில்லை. துயரர்கள் வெளிப்படுத்திய ஒவ்வொரு செய்திகளின் உண்மைத் தன்மையையும் , அதன் தனிச் சிறப்பையும் ஆராய்ந்து , எந்தவிதமான சிதைவும் அல்லது இயல்புத்தன்மை மாறாமலும்  தொகுத்து , அதன் சாராம்சத்தை அப்படியே  மருந்தியல் களஞ்சியதோடும் (MATERIA MEDICA) , அரும்பொருட் களஞ்சியதோடும்  (மருந்து காண் ஏடு- REPERTORY ) பொருத்திப் பார்த்து சரியான மருந்தினைத் தேர்வு செய்வதே ஹோமியோபதி மருத்துவரின் தலையாய பணியாகும். துயரரின் குறிகளை சரியான "குறிமொழிகளாக " மாற்றுவதில் தவறு நேரிட்டால் ,  அது மருத்துத் தேர்விலும் பிரதிபலிக்கும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஒரு சிறந்த ஹோமியோபதி மருத்துவரின் வெற்றியே இதில் தான் அடங்கியுள்ளது. 


(தொடர்ச்சி -பாகம் 3 இல்)

No comments:

Post a Comment