Sunday, 22 January 2017

பெண் மலடு (STERILITY) மற்றும் பாலுணர்வு விருப்பமின்மையும் (FRIGIDITY) அதை நலமாக்கும் ஹோமியோபதி மருந்துகளும்


(TREATMENT FOR STERILITY AND FRIGIDITY IN HOMEOPATHY)


ஆண்களுக்கு உடலுறவில் ஏற்படும் குறைகளை போலவே பெண்களுக்கும் சில குறைபாடுகள்  ஏற்படுகின்றன. புணர்ச்சியில் உச்சகட்டத்தை ( ORGASM) எய்தாமலிருக்கும் நிலை. புணர்ச்சியில் ஈடுபட நினைக்கும் போது திடீரென பெண்குறியின் தசைகள் இறுக்கமடைதல், புணர்ச்சியின் போது வலி மற்றும்  புணர்ச்சியில் விருப்பமின்மை ஆகியவைகள் பெண்பாலுணர்வின்மையைத் ( FRIGIDITY) தோற்றுவிக்கின்றன. ஆண்களுக்கு ஏற்படும் ஆண்மை குறைபாட்டை விட பெண்களிடம்   இத்தகைய குறைபாடுகள் அதிகம் இருக்கிறது. தற்போதைய அறிவியல் ஆய்வுக்குக் குறிப்புகள் 32 சதவீதமான பெண்களுக்கு புணர்ச்சியின் மீது விருப்பமின்மையும் , 35 சதவீதமான பெண்களுக்கு மாதத்தில் சில நாட்களும் , 33 சதவீதமான பெண்களுக்கு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை உடலுறவின் மீது விருப்பம் தோன்றுவதாகவும் தெரிவிக்கின்றன.


பொதுவாக பெண்ணிற்கு முதல் சேர்க்கை அவ்வளவு இன்பமானது அல்ல. காரணம், அச்சமயத்தில் அவளிடம் எதிர்பார்த்ததிற்கு மாறான வலியும், பயமும், பதட்டமும் ஏற்படுகின்றன. இதனால் புணர்ச்சியின் போது இன்பத்திற்குப் பதிலாக ஏமாற்றம் ஏற்படவே வாய்ப்புள்ளது. நாளடைவில் கணவனோடு பழகி, புரிந்து கொண்ட பின்னரே இன்பம் என்னவென்று அறியும் வாய்ப்பு அவளுக்கு கிடைக்கிறது. மாறாக, முதல்  சேர்க்கையில் கணவன் முரட்டுத் தனமாக நடந்து கொள்ளும் பொழுது ஏற்பட்ட வெறுப்பையும் , ஏமாற்றத்தையும் நினைவில் கொள்ளும் பெண்களுக்கு பின்னாட்களில் உடலுறவு கொள்ளும் பொழுது அவளால் இன்பம் பெற முடியாது. அடுத்து. புணர்ச்சிக்கு முன்பு காதல் விளையாட்டுகளில் கணவன் ஈடுபடாமலும், பெண் முழு இன்பம் எய்துவதற்கு முன்பே அவனுக்கு விந்து வெளிப்பட்டாலும் நிச்சயமாக பெண்ணுக்கு அது துன்பமாகவே அமையும். அதனால் அவளுக்கு உடலுறவில் வெறுப்பும், மன வேதனையும் தான் கிடைக்கும். இந்நிலை தொடர்ந்தால் பெண்களுக்கு உடலுறவின் மீது ஆர்வம் குறைந்து புணர்ச்சியில் விருப்பம் இல்லாத நிலைக்கு தள்ளி விடும். இந்நிலை ஏற்படுவதற்கு கீழ்காணுபவைகளும் காரணங்களாக உள்ளன;

Ø  நாளமில்லாச் சுரப்பிகளின் குறைந்த இயக்கம் மற்றும் நரம்பு சம்பந்தமான கோளாறுகள்.
Ø  பெண்ணுறுப்பில் தோன்றும் வேக்காடு , வீக்கம் போன்ற நோய்களும் அதனால் உருவாகும் வலியும்.
Ø  மனத்தளர்ச்சி மற்றும் மனச்சிதைவு நோய்கள்.
Ø  பயம், பதட்டம் மற்றும் அமைதியற்ற சூழ்நிலை. குறிப்பாக யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயம்.
Ø  குற்ற உணர்வு மற்றும் கருத்தரிக்கும் அச்சம் இருப்பின் பெண்கள் இன்ப உணர்வை இழக்க நேரிடும்.
Ø  பலவிதமான குடும்பக் கஷ்டங்கள் , துன்பகரமான செய்திகள் மற்றும் அதிர்ச்சி தரும் சம்பவங்கள் .
Ø  உடலுறவு கொள்வது பாவகரமானது என்ற எண்ணம்.
Ø  குடிப்பழக்கம் மற்றும்  அதிகப்படியான களைப்பு முதலியவை.
Ø  பாலுணர்வு அறிவின்மை மற்றும் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளதால்.

இவற்றைத் தவிர வாழ்க்கை முறையில் பெண்ணைப்போல் வாழ விரும்பாமல் ஒரு ஆண்மகனைப் போன்று வாழ வேண்டும் என்ற எண்ணமும் பெண்ணுறுப்பின் இறுக்கத்திற்கு காரணமாக அமைந்து விடுகிறது. இத்தகைய பெண்களுக்கு புணர்ச்சியின் மீது விருப்பம் இல்லாததோடு மலட்டுத்தன்மையும் சேர்ந்து கொண்டு வாழ்க்கையில் வெறுப்பினையும் துன்பத்தையும் அளிக்கிறது. பெண்களுக்கு புணர்ச்சியின் மீது விருப்பமின்மைக்குக் தகுந்த காரணங்கள் இருப்பது போல் மலட்டுத் தன்மைக்கும் சில பிரத்தியோகக் காரணங்கள் இருக்கின்றன. அவையாவன;

Ø  கருப்பையின் வளர்ச்சிக்குறைவு அல்லது கருப்பை இல்லாதிருத்தல்.
Ø  கருப்பையில் உருவாகும் தசைக்கட்டிகள் மற்றும் பெண்ணறுப்பில் தோன்றும் நோய்கள்.
Ø  கருமுடடை உருவாவதில் சிக்கல்.
Ø  சினைப்பை சரிவர இயங்காத நிலை
Ø  உடல் ஊதி பருத்திருப்பது, வழக்கமாக மதுபானங்கள் அருந்துவது , உடல் ஆரோக்கியமில்லாமல் இருப்பது , மனம் அல்லது உடல் அயர்வு இவைகளெல்லாம் கூட மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கலாம்.
Ø  திருமணமான ஆரம்பத்தில் கர்ப்பம் தரிக்காமல் இருக்க உபயோகப்படுத்தும் செயற்க்கைக்கருவிகளும் பெண்ணுறுப்பிற்கு சிலசமயம் சேதம் விளைவிப்பதால் மலட்டுத்தன்மை ஏற்படலாம். 
Ø  மனரீதியான பாதிப்புகள் மற்றும் அதீத உணர்ச்சிகளின் வெளிப்பாடு போன்றவைகள்.

இத்தகைய  பாதிப்பிற்குள்ளான பெண்களிடம்  அந்தரங்கமாகப் பேசி அவர்களுக்கு  உடலுறவில் ஏற்பட்டுள்ள கஷ்டங்களையும் , அவர்கள் கடைபிடிக்கும் உடலுறவு வழிமுறைகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து தகுந்த ஆலோசனை வழங்கி அவற்றைக் களைய உதவ வேண்டும். அத்தோடு அவர்களிடம் காணப்படும் குறிகளுக்குத் தகுந்தவாறு ஹோமியோபதி மருந்தினைக் கொடுக்கும் பொழுது அவர்களுக்கு மனதில் தெளிவு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகிறார்கள். அவர்களது மலட்டுத்தன்மையும் நீங்கி குழந்தைப்பேறு கிடைக்க வாய்ப்பும் உள்ளது. அத்தகைய சில ஹோமியோபதி மருந்துகளின் தன்மைகளை இப்போது பார்க்கலாம். 

இக்னேசியா ( IGNATIA)

இம்மருந்து தேவைப்படும் துயரர்கள் அதிக உணர்ச்சிவசப்பட்டவர்களாகவும் , கூருணர்ச்சி மிக்கவர்களாகவும் இருப்பார்கள். மனதிற்குள்ளேயே புழுங்கிக் கொள்பவர்கள். சோகத்தைத் தன்னுள்ளே அடக்கி சுமந்து  கொண்டு யாருடனும் பேசாமல் அமைதியாக இருப்பார்கள்.  இவர்களுக்கு அழுகையும் சிரிப்பும் மாறி மாறித் தோன்றும். மாறுகின்ற முரண்பட்ட மனநிலை , சந்தோஷமில்லாத காதல்( UNHAPPY LOVE) , தனியாக இருக்க விருப்பம் போன்ற மனக்குறிகள் இருக்கும். தன மேலேயே அவர்களுக்கு கோபம் இருக்கும். இவர்களுக்கு மாதவிடாய் காலந்தவறி வெளிப்படும். மாதவிடாய் கருப்பாகவும் , ஏராளாமாகவும் வெளிப்படும்  அல்லது குறைவாக வெளிப்படும் (குறிப்பாக கவலையின் போது) . புணர்ச்சியின் மேல் விருப்பம் இல்லாதவராக அல்லது இயலாத நிலையில் இருப்பார்கள் ( SEXUAL FRIGIDITY).

ஆரம் மெட்டாலிக்கம் (AURUM METTALICUM)

கடமை தவறாதவர்கள். மனதில் ஏக்கம் , வாழ்க்கையில் வெறுப்பு , தற்கொலை செய்து கொள்ள விரும்புவார்கள். குறிப்பாக, உயரமான இடத்திலிருந்து குதித்தோ அல்லது தண்ணீரில் மூழ்கி இறக்கவோ விருப்பம். இவர்களுக்கு கருப்பை கீழே நழுவியும் , கல் போன்று கடினமாகவும் இருக்கும். அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்டதால் உண்டாகும் கருப்பைப்புண். மாதவிடாய் தாமதமாகவும் குறைவாகவும் வெளிப்படும். தமது கடமையிலிருந்து தவறிவிட்டோம் என்ற குற்றவுணர்வு இவர்களிடம் மேலோங்கி இருக்கும்.


போராக்ஸ் (BORAX)

உடலுறவின் மீது வேண்டாவெறுப்பு அல்லது அக்கறையின்மை ( INDIFFERENCE TO COITION) . இவர்களுக்கு மாதவிடாய் மிக விரைவாகவும் , ஏராளாமாகவும் , வலியுடனும் வெளிப்படும். கூடவே குமட்டலும் இருக்கும். வெண்மையான அல்புமின் கலந்த மாவு போன்ற வெள்ளைப்பாடு ஏராளாமாகவும் , சூடான தண்ணீர் கால் பகுதியை நோக்கிப் பாய்வது போன்ற உணச்சியும் இருக்கும். மலட்டுத் தன்மையுடன் இருப்பார்கள். சிற்றின்பத்தோய்வான கனவுகள் தோன்றும் ( VOLUPTUOUS DREAMS). அதேபோல் உடலுறவில் ஈடுபடுவது போன்ற கனவும் வரும்.

கோனியம் ( CONIUM)

சிற்றின்ப ஆசையை அடக்கியதால் அல்லது அளவிற்கு மீறி ஈடுபட்டதினால் ஏற்படும் கோளாறுகள். மாதவிடாய் தடைப்பட்டதால் கோளாறுகள் ஏற்படும். சுரப்பிகளில் வீக்கம் அல்லது கல் போன்ற தன்மை. மார்பகப்புற்று நோய் உண்டாதல். மாதவிடாயின் போது மார்பகங்களில் தோன்றியுள்ள சீழ்கட்டிகளைச் சுற்றி பல முண்டுகள் தோன்றுதல். கருப்பையிலும், சினைப்பைகளிலும் வெட்டுவது போன்ற வலி இருக்கும். சினைப்பையழற்சி. மாதவிடாய் வழக்கத்திற்கு மாறாக சில நாட்கள் கழித்து வெளிப்படும். அளவில் குறைந்திருக்கும். குளிந்த தண்ணீரில் கைகளை நனைத்தால் இவர்களுக்கு மாதவிடாய் நின்றுவிடும். திருமணம்  செய்து கொள்ளாமல் வாழும் பிரம்மச்சாரிகளுக்கும் , கன்னிகைகளுக்கும் மற்றும் விதவைகளுக்கும் (அமுக்கப்படட காமஉணர்வு) ஒம்மருந்து ஒரு வரப்பிரசாதம்.

கிராபைடிஸ் ( GRAPHITES)

உடலுறவின் மீது மிகுந்த வெறுப்பு . சினைப்பைகளிலும், மார்பகங்களிலும் வீக்கம் ஏற்பட்டு கடினமடைதல். இடது சினைப்பையில் வீக்கம். மாதவிடாய் தாமதமாகவும் , அளவில் குறைந்தும், வலியுடனும் வெளிப்படும். மாதவிடாயிற்குப் பதிலாக வெள்ளைப்பாடு தோன்றும். மார்பகங்களில் புற்று நோய் ஏற்படுதல். யோனி காய்ந்துபோய் சூடாக இருக்கும் அல்லது குளிர்ச்சியாக இருக்கும். உடலில் குளிர்ந்த  உணர்ச்சி. இவர்களது புண் மற்றும் சீழ்க்கொப்பளங்கள் வெடிப்புகளுடன் பிசின் போன்ற நீரை வெளிப்படுத்தும். உடலில் கரப்பான் படைகளுடன் , கொழுத்து  தொள தொளவென்று  தசைகள் உள்ளவர்களுக்கு இது சிறந்த மருந்து.


நேட்ரம் கார்பானிக்கம் ( NATRUM CARBONICUM )

பெண்ணின் பிறப்புறுப்புகளிலும் , தொடை இடுக்குகளிலும் தோல் உரிந்திருத்தல் . ஆண்களைத் தழுவியவுடன் யோனியிலிருந்து சளிப்பொருள் வெளியாகும். இதனால் மலட்டுத் தன்மை உண்டாகும். மாதவிடாய் தாமதமாகவும் , குறைவாகவும் , மாமிசத்தைக் கழுவியது போன்றும் வெளிப்படும். கருப்பையில் கரு வளர்வது போன்ற அசைவு தென்படும். இவர்களுக்கு சமுதாயத்தின் மீதும் , குடும்பத்தினர் மற்றும் கணவர் மீதும் வெறுப்பு இருக்கும். சோகமான நினைவுகளிலே மூழ்கியிருப்பார்கள். இசை கேட்டபிறகு சோகவும் , தற்கொலை எண்ணமும் தோன்றும்.


நேட்ரம் மூரியாட்டிகம் (NATRUM MURIATICUM)

மிகவும் அமைதியான குணமுடையவர்கள். இவர்களது யோனி வறட்சியுடன் இருப்பதால் உடலுறவின் போது வலி ஏற்படும். அதனால் உடலுறவின் மீது வெறுப்பு. மாதவிடாய் மிக விரைவாகவும் , ஏராளமாகவும் வெளிப்படும். அத்துடன் மலட்டுத்தன்மையும் இருக்கும். தகாதவர்களுடன்  காதல் கொண்டு அது தவறானது என்று நன்றாகத் தெரிந்தும் காதலைக் கைவிட முடியாமல் தவிக்கும் பெண்களுக்கு இது தகுந்த மருந்து. பெண்கள் பருவமடைந்த தருணத்தில் தொல்லைகள் அதிகரிக்கும். மார்பகங்கள் இளைத்து சிறுத்துவிடுதல். எதற்கெடுத்தாலும்   அழுகும் குணம்; ஆறுதல் கூறினால் தொல்லைகள் அதிகரிக்கும். காரணமே இல்லாமல் அழுவார் அல்லது அழமுடியாமை. ஒதுங்கியே இருப்பார்கள். ஆண்களிடம் அளவுகடந்த வெறுப்பு இருக்கும்.  


மெர்குரியஸ்  (MERCURIOUS)

இவர்களது சினைப்பைகளில் எரிச்சலும் கொட்டும் வலிகளும் இருக்கும். வெள்ளைப்பாடு காரமாகவும் எரிச்சலுடன் இருக்கும். கர்ப்பமாக இல்லாத பெண்களுக்கு மாதவிடாய் போக்கு வெளியாகாமல் மார்பகங்களில் பால் சுரத்தல். சிறு பெண்களுக்கும், பையன்களுக்கும் மார்பில் பால் உற்பத்தியாகுதல். ஏராளமான மாதவிடாயுடன் மலட்டுத்தன்மையும் இருக்கும். கருப்பை இறக்கம் ஏற்படுவது உடலுறவு கொள்வதால் குறையும். மாதவிடாயின் போது தற்கொலை எண்ணம் தோன்றும்.

பாஸ்பரஸ் ( PHOSPORUS)

உயரமான மெல்லிய கூனல் விழுந்த பெண்கள். மாதவிடாய் விரைவாகவும் , குறைவாகவும் , நீண்ட நாட்களுக்கு நீடித்தும் இருக்கும் . மாதவிடாய்க்குப் பதிலாக மூக்கு , மலவாய், நீர்ப்பை முதலிவற்றிலிருந்து இரத்தம் வெளியாகுதல். அதிக சிற்றின்ப வெறி; அதனால் மலட்டுத்தன்மை உருவாகும். மார்பகங்களிலும் , கருப்பையிலும் புற்று நோய் ஏற்படும். உடலுறவின் போது கிளர்ச்சி ஏற்படுவதற்குப் பதிலாக யோனி மரத்துப்போய் விடும். பொதுவாக இம்மருந்து ஆண் , பெண் இருபாலர்களிடமும் அதிக காம உணர்ச்சியை ஏற்படுத்தும். இதை அடக்கவே முடியாமல் பைத்தியம் போலவே ஆகி பிறப்புறுப்புகளை திறந்து காட்டும் நிலைக்கு போய்விடுவார்கள். ஆரம்பத்தில் அதிக காமவுணர்வு இருந்து பின்னர் இயங்கமுடியாத நேர் எதிரிடையான நிலைமை ஏற்படும்போது பாஸ்பரஸ் அவர்களை மீட்டெடுக்கும். 


பிளாட்டினம் ( PLATINUM )

சிற்றின்பத்தைக் கொடுக்கும் உறுப்புகளில் தோன்றும் அதிகப்படியான கூருணர்ச்சியின் காரணமாகவும், யோனியில் ஏற்படும் வலியினாலும் ( விட்டு விட்டுத் தாக்கும் ) உடலுறவு செய்ய முடியாத நிலை ஏற்படுதல். அதீத காமக்கிளர்ச்சியினால் மலட்டுத்தன்மை ஏற்படும். சினைப்பை கோளாறுகளுடன் அதிக காமஇச்சை; உறுப்புகள் வெளித்தள்ளலுடன் ஏராளமான மாதவிடாய்ப்போக்கு. பொதுவாக இம்மருந்து தேவைப்படும் பெண்கள் கர்வமும் , தன்னைப்பற்றிய உயர்வான எண்ணமும் , அதிகமான காமஇச்சை  கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.


செபியா (SEPIA)

கருப்பையும் , யோனியும் வெளியே நழுவி வருதல் . அதனால் கனமான உணர்ச்சி; கிழே இழுப்பது போல் இருத்தல் . அடிவயிற்றின் உட்ப்புறத்திலுள்ள எல்லா உறுப்புகளும் வெளியே பிதுங்கி வந்துவிடும் போல் தோன்றுதல். அவ்வாறு உறுப்புக்கள் பிதுங்கிவதைத் தடுக்க கால் மேல் கால் போட்டுக் கொண்டு உட்க்காருவர். அடிவயிறு, கருப்பை , யோனித்துவாரத்திற்கும் ஆசனவாயிற்கும் இடையிலுள்ள இடம், மலைப்பை, கீழ்முதுகு , கீழ்குடல்கள் ஆகிய இடங்களில் கனத்த உணர்ச்சி. வெள்ளை ஒழுக்கில் யோனியில் அரிப்புடன் மஞ்சள் நிறமுள்ள கழிவு வெளியாகும். மாதவிடாய் அளவில் குறைவாகவும் தலைவலியுடனும் வெளிப்படும். யோனி வறட்சியுடன் இருப்பதால் உடலுறவின் போது வலி ஏற்படும். பின்னர் இரத்தம் வெளிப்படும் . அதனால் உடலுறவின் மீது வெறுப்பு. சிலருக்கு மலட்டுத் தன்மையும் இருக்கும். மொத்தத்தில் செபியா மகளிருக்கேற்ற சிறந்த மருந்துகளில் ஒன்று.


இம்மருந்துகளைத் தவிர , அலுமினா (ALUM) , ஆபிஸ் மெல் (APIS), காஸ்டிகம்(CAUST), லிலியம் டிக்(LIL-T) , ஓரிகானம்(ORIG), பல்சட்டில்லா (PULS) , பைடோலக்கா(PHYT) , ரூட்டா (RUTA) , சாபல் செருலட்டம் (SABAL) , சபீனா (SABINA) மற்றும் சிலிகா (SIL) போன்ற மருந்துகளும் இக்குறைகளை நீக்குவதில் வினையாற்றுகின்றன. இருந்தாலும் கருப்பப்பையோ , சினைப்பையோ இல்லாமல் இருக்கும் மலட்டுத்தன்மைக்கு சிகிச்சை செய்து நலப்படுத்த முயல்வது கடினம் தான். ஆகவே புணர்ச்சியில் விருப்பமில்லாத பெண்களும் , மலட்டுத்தன்மையால் குழந்தைப்பேறு இல்லாதவர்களும் ஹோமியோபதி மருத்துவர்களை அணுகி  சிகிச்சை எடுத்துக் கொள்ளவும். இக்குறைகளை நீக்கி இன்பமான இல்லற வாழ்க்கைக்கு வழிகாட்டுவதில் ஹோமியோபதி மருத்துவமே சிறந்து விளங்கிகிறது என்பது நிருபிக்கப்பட்ட உண்மை.


குறிப்பு: ஹோமியோபதி மருந்துகளின் செயலாற்றலும் , வீரியமும்  பிற மருத்துவமுறைகளிலிருந்து மாறுபடுவதால் , இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகளை தகுந்த ஹோமியோபதி மருத்துவர்களின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளவும்.

(இக்கட்டுரை " ஹோமியோ தோழன் " பிப்ரவரி-2011 இதழில் "செல்வா" என்ற பெயரில் நான் எழுதியது.)



1 comment: