Wednesday, 25 January 2017

சுயஇன்பம்

(MASTURBATION AND TREATMENT OF HOMEOPATHY)


பருவம் எய்திய ஆண்,பெண் இருபாலரும் தம்மிடையே எழும் இயற்கையான காமஉணர்வுகளை தாமாகத் (இயற்கைக்கு எதிராக) தனித்துக் கொள்ள அவரவர் பாலுறுப்புக்களை செயற்க்கையாகத் தூண்டி இன்பநிலையை எய்துகிறார்கள். இப்பழக்கமே " சுயஇன்பம்"  அல்லது "முஷ்டிமைதுனம்"  என்று அழைக்கப்படுகிறது. இப்பழக்கத்தினால் நன்மைகள் ஏற்படுவதாக சிலரும் அதற்கு மாறாக  நரம்புத் தளர்ச்சி, கண்பார்வை இழப்பு , காதுகேளாமை மற்றும் மலட்டுத்தன்மை போன்ற குறைபாடுகள் உண்டாவதாக மற்றும் சிலரும் நம்புகிறார்கள்.

ஆய்வுகள்: அமெரிக்காவைச் சேர்ந்த ஆல்பிரட் கின்சே (ALFRED KINSEY)  என்பவர்  1950 ஆம் ஆண்டு சுயஇன்பம் பற்றி ஆய்வு செய்து.,  அமெரிக்க மக்கள் தொகையில் ஏறத்தாழ 92 சதவீதமான ஆண்களும், 62 சதவீதமான பெண்களும் சுயஇன்பப்பழக்கத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்கள். இதே போன்று 2007 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களிடம் ( 16 வயது முதல் 44 வயது வரை ) கேட்ட பொழுது , அவர்களில் 95 சதவீதமான ஆண்களும், 71 சதவீதமான பெண்களும் தங்களுக்கு சுயஇன்பப் பழக்கம் இருப்பதாக ஒத்துக் கொண்டுள்ளார்கள். குறிப்பாக , 53 சதவீதமான ஆண்களும், 18 சதவீதமான பெண்களும் கடந்த ஏழு நாட்களுக்குள் சுயஇன்பம் பெற்றதாக கூறியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் , இப்பழக்கம் பாவகரமான செய்கையன்று என்றும் மாறாக, தங்களின் கிளர்ச்சியைத் தணித்து மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள். ஆனாலும் , தொடர்ந்து சுயஇன்பப் பழக்கத்தில்  ஈடுபடுபவர்களுக்கு , பின்னாளில் வருத்தமும் (DISTRESS) , குற்றமனப்பான்மையும்(GUILT) , சுயநிந்தனை (SELF REPROACH) செய்து கொள்ளுதல் போன்ற உணர்வுகளுக்கு ஆளாகிறார்கள் என்று மற்றோரு ஆய்வு தெரிவிக்கிறது. 

சுய இன்ப பழக்கம் ஏற்பட உதவும் காரணங்கள்:

சுயஇன்பத்தில்  ஈடுபடுவது என்பது குழந்தைப்பருவத்திலேயே அதாவது பனிரெண்டு வயதிலேயே ஏற்படும் முதல் காமசுகமாக அல்லது அனுபவமாக இருந்துள்ளது. ஒரு சிலர் திருமணத்திற்குப் பிறகும் கூட சுயஇன்பத்தில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கிறார்கள். இப்பழக்கம் எதனால் , ஏன் ஏற்படுகிறது என்று ஆராயும் போது கீழ்வருபவைகள் முக்கிய காரணங்களாகத் தென்படுகிறது;

v  திருமணத்திற்கு முன்பே ஏற்படும் பாலுணர்வு உந்துதலை தனித்துக் கொள்ள சுய இன்பம் தேவைப்படுகிறது.
v  கணவன், மனைவியர் பிரிந்திருத்தல் அல்லது அவர்களுக்குள் உடலுறவில் ஈடுபட விருப்பமில்லாதிருத்தல்.
v  தனித்திருத்தல்.
v  பாலுணர்வை தூண்டும் கதைகள் , படங்கள் மற்றும் சினிமா காட்சிகள்.
v  தவறான நட்பு.
v  அசுத்தமான பாலுறுப்பு ; குறிப்பாக ஆண்குறி நுனித் தோல் மடிப்பில் தோன்றும் கசிவு (SMEGMA).
v  பாலுணர்வைத் தூண்டும் மாமிசம் , முட்டை, மற்றும் டீ போன்ற உணவு வகைகள்.
v  குதத்தில் இருக்கும் குடற்புழுக்கள், புழுபூச்சிகள் அரிப்பையும் , எரிச்சலையும் ஏற்படுத்துவதால் ஆணுறுப்பு தூண்டப்பட்டு அதைத் தடவும் பொழுது ஏற்படும் பழக்கமானது சுய இன்பத்திற்கு வழி காட்டுகிறது. 
v  குழந்தை பெற்றுக்கொள்வதை தவிர்க்க விரும்பும் தம்பதியர் சுயஇன்பத்தை நாடுகிறார்கள். அதே போன்று விலைமகளிரிடம் அணுகி இன்பம் நுகர்ந்தால் நோய் தாக்குதலுக்கு உள்ளாவோம் என்று பயப்படுபவர்களுக்கு சுயஇன்பமே வரப்பிரசாதம்.

சுயஇன்பப்பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகள்:

பாலுணர்ச்சி என்பது குழந்தைப் பருவத்திலேயே ஏற்படுவதாவும் , ஒவ்வொரு மனிதனும் முழுவளர்ச்சி அடைவதற்கு முன்பே சுயஇன்பப் பழக்கத்திற்கு உட்படுகிறார்கள் என்றும் தமது பாலுமை மறுமலர்ச்சிக்கு கோட்ப்பாட்டில் ( Evolution theory of Sexuality) குறிப்பிடுகிறார் உலகப்புகழ் பெற்ற நரம்பியல் நிபுணரும் , மனோதத்துவ மேதையான சிக்மண்ட் பிராய்டு ( 1856-1939). இக்கருத்திற்கு ஆதாரமாக மனித வாழ்வின் மூன்று நிலைகளை விளக்குகிறார். அவையாவன;

1.    வாய்ப்பருவம் ( Oral Stage or Period)
2.    குதப்பருவம்    ( Anal Period)
3.    லிங்கப்பருவம் ( Phallic Period)

குழந்தையின் முதல் அனுபவத்தை வாய்வழியில் தான் பெறுகிறது. அதன் உள இயக்கங்கள் முழுவதும் வாயை மையமாகக் கொண்டே நிகழ்கின்றன. இக்காலகட்டத்தில் வாய் வழியாக மட்டும் தமது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள எதுவாக இருப்பதால் பாலின்பத்தையும் வாய் வழியாகவே பெறுகிறது. நிறைவுத் துய்ப்பு , பாலின்பம், உள் இயக்கம் , புறநிலை உறவு போன்ற முக்கிய உளச் செயல்பாடுகளின் தொடக்க நிலையாக வாய்நிலை விளங்குகிறது. இதையடுத்து வருகின்ற குதப்பருவத்தில் மலத்தை அடக்குவதாலும் (Retention) , வெளிப்படுத்துவதாலும் (Expulsion)  குழந்தை இன்பம் பெறுகிறது. இதே காலகட்டத்தில் மலத்தை விளையாட்டுப் பொருளாகவும் கொண்டு இன்பநாட்டம் கொள்கிறது. இவற்றைக் கடந்த பிறகு தான் குழந்தையின் எண்ணம் பாற்குறியை அடைகிறது. இந்த லிங்கப்பருவத்தில் தான் பாற்குறி மீது குழந்தையின் கவனம் செல்கிறது. ஆண்குறி இருப்பதை அல்லது இல்லாததை உணர்வதன் வழியில் தன்னுடைய பாலியல் நிலை ஆணா அல்லது பெண்ணா என்கிற முடிவுக்கு குழந்தை வருகிறது. அதன்பிறகு, உடலியல் நிலைக்கேற்ற முறையான பாலுமை தொடர்கிறது என்று சிக்மண்ட் பிராய்டு விளக்குகிறார். பருவ வயதை அடைவதற்கு முன்பே சில குழந்தைகள் சுயஇன்பம் பெறுவதாக பல ஆய்வுக்கு குறிப்புகள் தெரிவிக்கின்றன.  
மருத்துவரீதியாக பார்க்கும் பொழுது சுயஇன்பம் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என்றும், அது இயல்பான பாலுறவின் வெளிப்பாடே என்றும் சில நிபுணர்கள் கருதுகிறார்கள். ஆனால் மதத்தையும், கலாச்சாரத்தையும் பெரிதாக நம்புகிறவர்கள் இதைப் பாவச்செயல் என்றே கருதுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இப்பழக்கத்தினால் கண்பார்வை பாதித்தல் (Blindness) , காதுகேளாமை (Deafness) , பித்துபிடித்தல் ( Insanity) மற்றும் மதிகேடு (Stupidity) ஏற்படுவதாக தவறாக நம்புகிறார்கள். ஆனால் சுயஇன்பப்பழக்கம் உடல்நலத்தைக் கெடுக்கும் என்பதில் எந்த எந்த உண்மையுமில்லை. மாறாக இப்பழக்கத்தில் ஈடுபடுபவர்களுக்கு காமஉணர்வுகள் அதிகரிப்பதாகவும் , அதிக அளவில் இன்பம் நுகருவதாகவும் தெரிவிக்கின்றனர். அது மட்டுமல்லாமல், சுயஇன்பமானது உடலுறவின் மூலம் பெரும் இன்பத்திற்கு மாற்றாக  இருப்பதால் மனைவியின் விருப்பத்தைப் பெற முடியாதவர்களுக்கும் , பிற தொடர்புகள் மூலம்  பாலியல் நோய்களை தவிர்க்க நினைப்பவர்களுக்கும் மற்றும் கர்ப்பம் தரிப்பதைத் தவிர்க்க விரும்பும் தம்பதியரும் சுயஇன்பத்தையே நாடுகிறார்கள். அதே சமயத்தில் , நீண்டகாலமாக சுய இன்பப்பழக்கத்திற்கு அடிமையாகிப் போனவர்களுக்கு அவரவர் மன மற்றும் உடல் நிலையின் தன்மையின் அடிப்படையில் பின் வரும் சில விளைவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு;
v  குற்றமனப்பான்மை (GUILT)
v  பாலினஉறுப்புக்கள் சேதமடைய வாய்ப்புண்டு ( முரட்டுத்தனமாகக் கையாளும் போது)
v  புண் மற்றும் கிருமி பாதிப்பிற்கு உள்ளாகலாம்.
v  எப்போதெல்லாம் தனிமை கிடைக்கிறதோ அப்போதெல்லாம் சுயஇன்பத்தில் ஈடுபட உந்துதல் இருக்கும்.
v  நரம்புத்தளர்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு.
v  கண்களை சுற்றி கருவளையம் ஏற்பட்டு கண்பார்வையும் பாதிக்கப்படலாம்.
v  ஞாபகமறதி மற்றும் படபடப்புடன் கூடிய இதயத்துடிப்பு ஏற்படலாம்.
v  கடுமையான மன, உடல் உழைப்பில் ஈடுபட ஆர்வமின்மை.
v  தம்மைப் பற்றிய குற்றவுணர்வுடன் தனித்திருக்க நேரிடும்.
v  ஆண்மைக்குறைவு ஏற்பட வாயுண்டு.
v  சுயஇன்பத்தில் பழகிப்போனவர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படுத்திக்கொள்ளும் இயற்கையான உறவை விட சுயஇன்பமே பிடித்துப்போவதால் திருமணஉறவில் பாதிப்பு ஏற்படலாம்.
சுயஇன்பத்தில் ஈடுபடுபவர்களுக்கு மேலே குறிப்பிடட சில பாதிப்புகள் / விளைவுகள் ஏற்பட வாய்ப்பிருந்தாலும் இக்கருத்துக்கள் சற்று மிகைப்படுத்தப்படுவதாக கருத இடமுண்டு. ஏனென்றால் , எவருக்கு இப்பழக்கத்தினால் பதட்டமும் , குற்றவுணர்வும் , தன்மீது அவநம்பிக்கையும் ஏற்படுகிறதோ அவர்களே பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். மற்றவர்களை இப்பழக்கம் பாதிப்பதில்லை என்பதே உண்மை.

ஹோமியோபதி மருத்துவம் :

ஹோமியோபதி மருத்துவத்தில் இந்த நோயிற்கு இந்த மருந்து என்று பார்க்காமல் , நோய் தாக்குதக்குதலுக்குள்ளான துயரரின் ஒட்டுமொத்தக்குறிகளின் அடிப்படையில் தான் ஒத்தமருந்தை தேர்வு செய்து கொடுப்பது வழக்கம். இருந்தாலும், மருந்து நிரூபணத்தின் மூலம் பெறப்பட்ட குறிகளின் தொகுப்பை ஆராயும் பொழுது , சுய இன்பப்பழக்கத்தால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு 88 மருந்துகளும் , சுயஇன்பத்தில் ஈடுபட விரும்பும் ஆண்களுக்கு 73 மருந்துகளும், பெண்களுக்கு 50 மருந்துகளும் , சிறுவர்களுக்கு 14 மருந்துகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான மருந்துகள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பின்விளைவுகளுக்கு :

1.    கல்கேரியா  கார்பானிக்கம் (calc)
2.    சைனா (chin)
3.    காகுலஸ் (cocc)
4.    கோனியம் (con)
5.    ஜெல்சிமியம் (gels)
6.    நேட்ரம் பாஸ்பாரிக்கம் (nat-p)
7.    ஓரிகானம் (orig)
8.    பாஸ்பாரிக் ஆசிட் (ph-ac)
9.    செலினியம் (sel)
10.  செபியா(sep)
11.  ஸ்டாபிசாக்கிரியா (staph)
12.  சல்பர்(sulph)

ஆண்களுக்கு :

1.    அனகார்டியம் (anan)
2.    பூபோ (bufo)
3.    கலாடியம் (calad)
4.    கார்போ வெஜிடபிள்ஸ் (carb-v)
5.    காஸ்ட்டிகம் (caust)
6.    சைனா (chin)
7.    கோனியம் (con)
8.    காலிப்ரோமோட்டம் (kali-br)
9.    லாக்கஸிஸ் (lach)
10.  மெடோரினம் (med)
11.  மெர்க்குரியஸ் (merc)
12.  ஓபியம் (op)
13.  ஓரிகானம் (orig)
14.  பிளாட்டினம் (plat
15.  செபியா (sep)
16.  ஸ்டாபிசாக்ரியா (staph)
17.  ஸ்ட்ராமோனியம் (stram)
18.  டெரண்டுலா ஹிஸ்(tarent)
பெண்களுக்கு:
1.    அக்னஸ் காஸ்டஸ் (agn)
2.    அபிஸ் (apis)
3.    பூபோ (bufo)
4.    கலாடியம் (calad)
5.    ஹயாஸ்சியமஸ் (hyos)
6.    காலிப்ரோமோட்டம் (kali-br)
7.    லாக்கஸிஸ் (lach)
8.    லில்லியம் டிக் (lil-t)
9.    ஓரிகானம் (orig)
10.  ஸ்டாபிசாக்ரியா (staph)
11.  டெரண்டுலா ஹிஸ்(tarent)
சிறுவர்களுக்கு:
1.    கலாடியம் (calad)
2.    கல்கேரியா பாஸ் (calc-p)
3.    ஹயாஸ்சியமஸ் (hyos)
4.    மெடோரினம் (med)
5.    ஓரிகானம் (orig)
6.    செபியா (sep)
7.    ஸ்டாபிசாக்ரியா (staph)

மேற்கூறிய மருந்துகளுக்கு அவற்றிற்குரிய நலப்படுத்தும் ஆற்றலும், குறிகளும் வெவ்வேறாக இருப்பதால் தகுந்த ஹோமியோபதி மருத்துவரின் ஆலோசனைப்படியே தான் இம்மருந்துகளை எடுத்துக் கொள்ளவேண்டும். எடுத்துக்காட்டிற்காக  , சில மருந்துகளின் சிறப்புகளை அவை நலப்படுத்தும் குறிகளோடு இப்போது பார்க்கலாம்.

1.    சுயஇன்பத்திற்கு பிறகு தம் செயல்கள் தீயன என்று எண்ணும் உணர்வினால் பதட்டம். - பாஸ்பாரிக்-ஆசிட். (ph-ac)
2.    சுய இன்பத்தினால் பதட்டம்- கன்னாபிஸ் இண்டிகா(cann-i),  ஸ்டாபிசாக்ரியா (staph).
3.    தனிமையில் சுயஇன்பம் பெறுவதற்காக நண்பர்களுடன் சேராமல் தனித்திருக்க விருப்பம்.-பூபோ (bufo) , உஸ்டிலோகா (ust).
4.    சுயஇன்பத்தினால் மனதை ஒருநிலைப்படுத்துவதில் சிரமம்- ஆவேனா சாடிவா (aven).
5.    குழப்பம்- ஜெல்ஜிமியம் (gels)
6.    காற்றைவிட உடலின் பாகங்கள் இலேசாக இருப்பது போன்ற பிரமை- ஜெல்ஜிமியம் (gels)
7.    சுயஇன்பத்தினால் மனம் கசப்புறுதல் (Despair) -ஓபியம்.(op).
8.    சுயஇன்பத்திற்குப் பிறகு சோர்வு- அக்னஸ் காஸ்டஸ் (agn), கல்கேரியா பாஸ் (calc-p)
காஸ்ட்டிகம் (caust), ஜெல்ஜிமியம் (gels),  பாஸ்பரஸ் (phos) , பாஸ்பாரிக் ஆசிட்  (ph-ac) ஸ்டாபிசாக்கிரியா (staph).
9.    சுயஇன்பத்திற்குப் பிறகு மறதி அல்லது கவனமற்ற தன்மை- காலிப்ரோமோட்டம் (kali-br),  ஸ்டாபிசாக்கிரியா (staph).
10.  சுயஇன்பத்திற்குப் பிறகு மனவாட்ட நோயிற்கு ஆளாகுதல்- டெரண்டுலா ஹிஸ்(tarent).
11.  சுயஇன்ப பழக்கத்துடன் பெண்களுக்கு இசிப்பு (Hysteria) ரபானஸ் (Raph).
12.  சுயஇன்ப பழக்கத்துடன் பேதைமை (Idiocy)- ஓபியம் (op), ஓரிகானம் (orig), மெடோரினம்(med).
13.  சுயஇன்ப பழக்கத்துடன்  மூளை தளர்ச்சியடைதல் (imbecility)- டெரண்டுலா ஹிஸ்(tarent).
14.  சுயஇன்ப பழக்கத்துடன் மெத்தனம் (indifference) ஸ்டாபிசாக்கிரியா (staph).
15.  சுயஇன்ப பழக்கத்துடன் சோம்பல்- டிஜிட்டாலிஸ் (digit).
16.  சுயஇன்பத்தினால் பைத்தியமாதல் (insanity)- அனகார்டியம் (anan), பூபோ (bufo), காக்குலஸ் (cocc), ஹயாசியாமஸ் (hyos), ஓபியம் (op), பிளம்பம் (plum).
17.  சுயஇன்பத்தினால் எரிச்சலடைதல்(irritability) - ஹயாசியாமஸ் (hyos).
18.  சுயஇன்பத்திற்குப் பிறகு மனமாறாட்டக்கோளாறு (mania) -  அனகார்டியம் (anan), பிளம்பம் (plum).
19.  சுயஇன்பத்திற்குப் பிறகு ஞாபக மறதி- டிஜிட்டாலிஸ் (digit). ஜெல்ஜிமியம் (gels),  பாஸ்பரஸ் (phos).
20.  சுயஇன்பத்திற்குப் பிறகு மூர்க்கத்தனம் அல்லது அடம்பிடிக்கும் ஆண் குழந்தைகள்- ஆரம் மெட்டாலிக்கம் (aur).
21.  சுய இன்பத்தினால் மனம் முற்றிலும் சோர்வடைதல் (prostration)- ஓரிகானம் (orig).
22.  சுயஇன்பப் பழக்கத்தினால் அமைதியாக இருத்தல் (Quiet disposition)- ஹயாசியாமஸ் (hyos).
23.  சுயஇன்பத்திற்குப் பிறகு கடுங்கழிவிரக்கம் அல்லது அகச்சான்றின் உறுத்தல் (remorse)- ஸ்டாபிசாக்கிரியா (staph).
24.  சுயஇன்பப் பழக்கத்தினால் சோகம்- அகாரிகஸ் (agar) , ஆரம்-மெட்(aur), கோனியம்(con), மெர்க்குரிஸ் (merc) , நக்ஸ்வாமிக்கா (nux-v) , பாஸ்பரஸ் (phos) ,பல்சட்டில்லா (puls),செபியா (sep), ஸ்டாபிசாக்கிரியா (staph), சல்பர்(sulph).
25.  சுய இன்பத்தினால் விந்து கசிதநோய் (spermatorrhoea) ஏற்பட்டு அதனால் தற்கொலை எண்ணம் ஏற்படுதல்- ஜெல்ஜிமியம் (gels).
26.  சுயஇன்பத்திற்குப் பிறகு மனவேலை செய்வதற்கு வெறுப்பு- டிஜிட்டாலிஸ் (digit).
27.  சுயஇன்பத்தின் மூலம் மிதப்பது போல் இருத்தல்- ஜெல்ஜிமியம் (gels).
28.  சுயஇன்பத்திற்குப் பிறகு தலைவலி - கல்கேரியா கார்ப் (calc), கார்போ-வெஜ் (carb-v), சைனா (chin), கோனியம் (con), லைகோபோடியம் (lyc), மெர்க்குரிஸ் (merc) , நக்ஸ்வாமிக்கா (nux-v) , பாஸ்பரஸ் (phos) ,பல்சட்டில்லா (puls), செபியா (sep), ஸ்டாபிசாக்கிரியா (staph), சல்பர்(sulph).
29.  சுயஇன்பத்திற்குப் பிறகு வயதானவர்களுக்கு தலைவலி- பிரயோனியா (bry), கல்கேரியா கார்ப் (calc), சல்பர்(sulph).
30.  சுயஇன்பத்திற்குப் பிறகு கண்களில் வலி மற்றும் கூச்சம் - சினா (cina).
31.  சுய இன்பத்தினால் மந்தமான பார்வை- ஜெல்ஜிமியம் (gels).
32.  சுய இன்பத்தினால் இரட்டைப் பார்வை.- சினா (cina), செபியா (sep).
33.  சுய இன்பத்தினால் பார்வை   இழத்தல்- ஜெல்ஜிமியம் (gels), பாஸ்பாரிக் அசிட்(ph-ac).
34.  சுயஇன்பத்திற்குப் பிறகு முகத்தில் பருக்கள்- பாஸ்பாரிக் அசிட்(ph-ac).
35.  சுய இன்பத்தினால் அஜீரணம்- பாரிடா கார்ப் (bar-c).
36.  சுயஇன்பத்துடன் குடற்புழுக்களின் தொல்லைகளும் சேர்ந்திருத்தல்- கலாடியம் (calad).
37.  சுயஇன்பப் பழக்கத்தினால்  சிறுநீர் தானாக வெளிப்படுதல்- செபியா (sep).
38.  சுயஇன்பத்தினால் ஆண்பால் உறுப்புக்கு உடனிணைவான சுரப்பித் திரள்களான பெருஞ்சுரப்பியில் (prostate)  ஒழுக்கு ஏற்படுதல்-   ஜெல்ஜிமியம் (gels), ஸ்டாபிசாக்கிரியா (staph), டெரண்டுலா (tarent) , உஸ்டிலாக்கா (ust).
39.  ஆண்களுக்கு: சுயஇன்பத்தினால் விரைகள் சுருங்கி , மெலிந்து விடுதல் (atrophy) மெபைடிஸ்( meph).
40.  ஆண்களுக்கு: சுயஇன்பத்திற்குப் பிறகு உடலுறவு கொள்ள விருப்பமின்மை: காலிப் புரமோட்டம் (kali-br).
41.  ஆண்களுக்கு: சுயஇன்பத்திற்குப் பிறகு ஆண்குறியில் விரைப்புத்தன்மை முழுமையாக ஏற்படாதநிலை- அர்ஜெண்டம் நைட்ரிகம் (arg-n).
42.  ஆண்களுக்கு: சுயஇன்பத்திற்குப் பிறகு ஆண்மைக்குறைவு ஏற்படுதல்- அர்ஜெண்டம் நைட்ரிகம் (arg-n), ஜெல்ஜிமியம் (gels), கிராபைடிஸ் (graph), காலி-கார்ப் (kali-c), காலி-பாஸ்(kali-p) , பாஸ்பரஸ் (phos), ஸ்ட்ராமோனியம்(stram).
43.  ஆண்களுக்கு: குழந்தைப்பருவத்தில் இருந்தே சுயஇன்பம் பெறும் மனநிலை- - பாரிடா கார்ப் (bar-c), பூபோ(bufo), கார்சினோசின் (carc), ஹயாசியாமஸ் (hyos).
இப்பழக்கத்தை தவிர்ப்பது எப்படி:
சுயஇன்பம் பெறுவதில் தவறில்லை என்றும் அது உடல் நலத்தைப் பாதிக்காது என்ற  கருத்து நிலவினாலும் ஒவ்வொரு செயலுக்குப் பின்னரும் அது தருவிக்கும் பின் விளைவுகள் இருக்கத்தான் செய்யும் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. அதனால் இப்பழக்கத்தை விட்டொழிக்க விரும்புவோர்கள் கீழ்காணும் வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் . இது சாத்தியமும் கூட.
v  குளிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் பாலுறுப்புக்களைத் தொடக்கூடாது.
v  முடிந்தவரை தனியாக இருப்பதைத் தவிர்க்கவும். பலவீனமான நேரங்களில் நண்பர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் அருகில் இருங்கள்.
v  சுயஇன்பப் பழக்கத்தில் ஈடுபடும் நண்பர்கள் இருந்தால் அவர்களை விட்டு விலகி இருங்கள் அல்லது அவர்களது நட்ப்பை முறித்துக் கொள்ளுங்கள்.
v  தூங்கும் போது பாலுறுப்புக்களை முழுவதும் மூடுவது போன்ற ஆடையை (பைஜாமா ) அணியவும்.
v  இரவில் தூங்கும் போது சுய இன்பம் பெற வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டால் உடனே எழுந்து வெளியே வந்து விடவும். பின்னர் , ஏதாவது வேலையில் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள்.
v  வலைத் தளங்களில் ஆபாசப்படங்கள் பார்ப்பதையும் , உங்கள் பிரச்னை சம்பந்தமான விபரங்களைத் தேடுவதையும் தவிர்க்கவும்.
v  பிரார்த்தனையில் ஈடுபடுங்கள். அப்பொழுது உங்கள் பிரச்சனையைப் பற்றி நினைக்காமல் மற்றவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் பிரச்னையைப் பற்றி நினைக்கும் பொழுது அந்நினைவுகள் அதிகரிக்கவே செய்யும்.
v  தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.
v  காலையில் படுக்கையை விட்டு விரைவில் எழுந்து விடவும். விழிப்பு நிலையில் படுக்கையில் நீண்ட நேரம் இருக்காதீர்கள்.
v  நல்ல நூல்களை படியுங்கள். மனா ஆரோக்கியம் மற்றும் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் காரியங்களில் ஈடுபடுங்கள்.
v  சிறுநீர்ப் பையை எப்போதும் காலியாகவே வைத்திருங்கள். சிறுநீர் நிரம்பியிருக்கும் பொழுது காமஉணர்வு அதிகரித்து, தூண்டுதல் உணர்வு ஏற்படலாம்.
v  இப்பழக்கத்தை விட்டொழிக்க உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். உங்களால் முடியும் என்ற நம்பிக்கையே இப்பழக்கத்திலிருந்து விடுபட உங்களுக்கு உதவும்.
அதனால் இப்பழக்கத்தை விட்டொழிக்க விரும்பும் இளம்பருவத்தினர் பணத்தைப் பிடுங்கும் போலி மருத்துவர்களை நாடாமல் தகுதி வாய்ந்த தூய ஹோமியோபதி மருத்துவர்களை அணுகி , அவர்கள் தரும் ஆலோசனைகளையும் , மருந்தினையும் பெற்று ஆரோக்கிய வாழ்வினைத் திரும்பவும் பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் இல்லறவாழ்வு சிறக்கட்டும்.

குறிப்பு: ஹோமியோபதி மருந்துகளின் செயலாற்றலும் , வீரியமும்  பிற மருத்துவமுறைகளிலிருந்து மாறுபடுவதால் , இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகளை தகுந்த ஹோமியோபதி மருத்துவர்களின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளவும்.


(இக்கட்டுரை " ஹோமியோ தோழன் " அக்டோபர்-2011 இதழில் "செல்வா" என்ற பெயரில் நான் எழுதியது.)