ஹோமியோபதியில் உடல்
உறுப்புகள் சார்ந்த மருந்துகளின் பயன்பாடு ( Organ Remedies or
Organopathy).
ஹோமியோபதி மருத்துவத்தில்,
தன்னிடம் சிகிச்சைக்கு வரும் ஒரு நோயாளிக்கு , அவர்களை பாதித்திருக்கும் நோய்க்கு எந்த
மருத்துவரும் மருந்தளிப்பதில்லை. உதாரணமாக, தலைவலி, காய்ச்சல் , வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு,
நெஞ்சுவலி, சிறுநீரகக் கற்கள் மற்றும் மஞ்சள் காமாலை போன்ற
நோய்களுக்கு அவர்கள்
முக்கியத்துவம் தருவதில்லை. மாறாக, அந்த நோய்
நிலையில் அவர்களிடம் காணப்படும் அறிகுறிகளுக்கே
முக்கியத்துவம் கொடுக்கப்படும். அதாவது, நோயுற்ற
அந்த மனிதனைத் தனித்துவப்படுத்தி, நோய் நிலையில்
அவர் கூறும் அறிகுறிகள் மற்றும் மருத்துவர் கண்டறியும் அறிகுறிகள் ஆகிய ஒட்டுமொத்தக்
குறிகளின் தொகுப்பின் அடிப்படையில் ,
அந்த நோயாளிக்குரிய ஒத்ததொரு ஹோமியோபதி
மருந்தினைத் தான் பரிந்துரை செய்வார்கள்.
ஆனால், சில ஹோமியோபதி மருத்துவர் நோய்த் தாக்குதலுக்குள்ளான உறுப்புகளில் வேலை செய்யும் ஹோமியோபதி மருந்துகளைப் பயன்படுத்தி பல வெற்றிகளைக் கொடுத்துள்ளார்கள். இதற்கு உறுப்புசார்ந்த மருத்துவமுறை ( ORGANOPATHY) என்றும் பெயரிட்டுள்ளனர். இந்த உறுப்பு சார்ந்த மருத்துவமுறையை முதலில் அறிமுகப்படுத்தியவர், 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும், ஹானிமனின் சமகாலத்தைச் சேர்ந்தவருமான ரேட்மேக்கர் [ Johann Gottfried Rademacher ( 1772 – 1849)] ஆவார். ஜெர்மனியைச் சேர்ந்த இவரும், ஹானிமன் போன்றே பாரம்பரிய மருத்துவத்தில் எம்.டி. பட்டம் பெற்ற பின்பு ,ஹானிமனின் வழியில் ஹோமியோபதிக்கு மாறியவர். அவர் முழு நபருக்கும் சிகிச்சையளிக்கும் 'ஹோமியோபதி மருத்துவம் ' மற்றும் தனிப்பட்ட உறுப்புகளுக்கு சிகிச்சையளிக்கும் 'உறுப்பு மருத்துவம் ' ஆகிய இரண்டையும் வேறுபடுத்திக் காட்டினார் . உறுப்புசார்ந்த மருந்துகளைப் பயன்படுத்துவது என்பது உடலில் உள்ள சில உறுப்புகளுடன் தொடர்புடைய மருந்துகளை அடிப்படையாகக் கொண்டது. அம்மருந்துகள், பொதுவாக, பலவீனமான உறுப்புகளுக்கு ஆதரவளிப்பதற்கும், வலுப்படுத்துவதற்கும், சரியான செயல்பாட்டை மீட்டெடுப்பதற்கும் பரிந்துரைக்கப் படுகின்றன.
அதனால் மரு. ரேட்மேக்கர், " உறுப்பு சார்ந்த மருத்துவத்தின் தந்தை " என்றும் அழைக்கப்படுகிறார் . இவர் எழுதியுள்ள சிறிய புத்தகமான " ரேட்மேக்கரின் உலகளாவிய மற்றும் உறுப்புசார்ந்த மருந்துகள் ( Rademacher’s Universal and Organ Remedies ) " என்ற புத்தகம் , இன்றுள்ள ஹோமியோபதியர்களுக்கு துணைபுரியும் ஒரு நூலாக இருக்கிறது . மருத்துவர் இயன் வாட்சன் ( IAN WATSON) தனது " ஹோமியோபதியின் முறைகளுக்கான வழிகாட்டி ( A GUIDE TO THE METHODOLOGIES OF HOMEOPATHY) ” என்ற புத்தகத்தில் உறுப்புசார்ந்த மருந்துகளின் பயன்பாட்டை மிகத் தெளிவாக விவரித்துள்ளார்..
மருத்துவர் ஜேம்ஸ் காம்ப்டன் பர்னெட் [James Compton Burnett (1840-1901)] , மருத்துவர் ரேட்மேக்கர் அவர்களின் வழியை கடைப்பிடித்தவர்களில் முக்கியமானவரும் மற்றும் உறுப்புசார்ந்த மருத்துவமுறையின் சிறந்த ரசிகரும் ஆவார் . ஜேம்ஸ் காம்ப்டன் பர்னெட் வழியாக , ரேட்மேக்கரின் உறுப்புசார்ந்த மருந்துகளின் பயன்பாடுகள் ஹோமியோபதிக்கு பல வெற்றிகளைக் கொடுத்து அதன் பயன்பாடுகளை நிரூபித்துள்ளது என்பது மிகையாகாது.
இந்த முறையானது, இரண்டு விதமான நம்பிக்கையின் அடிப்படையில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒன்று, சில மருந்துகள் சில உறுப்புகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொடர்பைக் கொண்டிருக்கின்றன. இரண்டாவது , நோயாளிகள் முழுவதுமாக சரியாக நலமடைய , குறிப்பிட்ட உறுப்புகள் அல்லது மண்டலங்களுக்குச் சிகிச்சையளிப்பது விரும்பத்தக்கது அல்லது அவசியமானது என்ற ஊகத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமுறையை ஆதரித்த , மருத்துவர் போர்டியர் பெர்னோவில் (FORITIER BERNOVILLE -1896-1939) போன்ற பிரெஞ்சு ஹோமியோபதியர்கள் , இதை “வடிகால் முறை மருந்துகள் ( DRAINAGE REMEDIES) ” என்று அழைக்கிறார்கள் . அதாவது, நோயாளியின் உடல்வாகுவிற்குப் பொருத்தமான மருந்தைக் கொடுப்பதற்கு முன்பு, பலவீனமான உறுப்பின் நச்சுத்தன்மையை நீக்கும் ( DETOXIFY) வடிகால் மருந்துகளைப் பயன்படுத்துவதைப் பற்றி பேசுகின்றனர். இந்த வடிகால் மருந்துகள், பாதிக்கப்பட்டுள்ள உறுப்புகளின் நச்சுத்தன்மையை நீக்குவதற்காக அந்த உறுப்புகளைத் திறந்து கழிவுகளை வெளியேறச் செய்கிறது மற்றும் அதன் மூலம் சிகிச்சையின் போது நோயாளி மோசமடைவதைக் குறைக்க உதவுகிறது.
இப்போது பாதிக்கப்பட்ட உறுப்புகளையும் , அதற்குரிய மருந்துகளையும் பார்க்கலாம்;
1.
இரத்தம் (BLOOD) :
எக்கினேசியா (ECHI-A): இந்த மருந்து இரத்த இயல்புபிறழ்வை
( DYSCRASIA) சரி செய்கிறது; எனவே இது அனைத்து வகையான இரத்த நச்சுப்பாடுகளுக்கு அல்லது
விஷத்தன்மைக்கு ( BLOOD-POISIONING) பயனுள்ளதாக
இருக்கும். இரத்தத்தில் சிவப்பணுக்கள் (
ERYTHROCYST) குறைவாக இருக்கும். இரத்த நுண்ணுயிர் நச்சேற்றத்திற்கு (
SEPTICEMIA) இது மிகச் சிறந்த மருந்து. மனதில் எரிச்சல்த்தன்மை இருக்கும். இவரால் வேலைசெய்யவோ அல்லது
படிக்கவோ இயலாது. மனஅமைதியின்மை இருக்கும்.
கன் பௌடர் (GUNP): இது இரத்த நுண்ணுயிர் நச்சேற்றத்திற்கும் ( SEPTICEMIA) மற்றும் இரத்தத்தில் சீழ்படிவதற்கும் ( PYEMIA) மிகச் சிறந்த மருந்துகளில் ஒன்று. நோயாளி மிகவும் பலவீனமாக ( WEAKNESS) இருப்பார். மயக்கம், போதையில் இருப்பது போல் (STUPEFACTION) தோற்றமளிப்பார். பெரும்பாலும் எக்கினேசியா மருந்தை போன்றே இருக்கும்.
பைரோஜன் (PYROG): இரத்த நுண்ணுயிர் நச்சேற்றத்திற்கு ( SEPTICEMIA) இதுவும் சிறந்த மருந்துகளில் ஒன்று. இரத்தத்தில் வெள்ளையணுக்கள் ( LEUKOCYST) எண்ணிக்கையில் அதிகரித்திருக்கும். நோயாளி மிகவும் பலவீனமாக இருப்பார்.
முந்தைய நாள்பட்ட நோய்த் தன்மையால் இரத்தத்தில் அழுகச் செய்யும் நச்சுப் பொருள்கள் ; வெட்டுக் காயங்கள், கழிவுநீர்-வாயு விஷம், கெட்டுப்போன உணவை உண்டதால் ஏற்பட்ட விஷம்; பிரசவக் காய்ச்சல்; கருச்சிதைவிற்குப் பிறகு; நீண்ட நாள் நச்சுக் காய்ச்சலினால் ஏற்பட்ட விளைவுகள்; தொண்டை அழற்சி நோய் , நாள்பட்ட மலேரியா, போன்ற நோய் நிலைகளில் , சிறந்த முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்துகள் நலம் தராதபோது , இம்மருந்து நன்றாக வேலை செய்யும்.
மேலும், இரத்தம் ஒழுங்கற்றதாக மாறும் போதும் , இதயம் பலவீனமடையும் போதும் மற்றும் தசைகள் தொங்கும் போதும் மற்றும் அனைத்து வகையான இரத்தம் சீர்குலைந்த நிலைகளுக்கும் இது ஒரு சிறந்த மருந்தாகும் .
பாப்டிசியா (BAPT): இம்மருந்து இரத்தத்தை பெரிதும் பாதிக்கிறது, அழுகச் செய்யும் பொருள்கள் இரத்தத்தில் சேருவதற்கு காரணமாக இருக்கிறது , இலேசான காய்ச்சல் மற்றும் மலேரியா விஷம் இருக்கும்.
துர்நாற்றம்: சுவாசம், உடலின் மணம், கழிவுகள் , மலம், வியர்வை, சிறுநீர் போன்றவை முடைநாற்றத்துடன் இருக்கும். கழிவுகள் மற்றும் மலம் ஆகியவற்றுடன் இரத்தம் கலந்து கருப்பு நிறத்தில் வெளியாகும். உடலில் உள்ள துவாரங்களிலிருந்து இரத்தப் போக்கு இருக்கும்; குறிப்பாக காய்ச்சலின் போது இருக்கும். இம்மருந்து குறைந்த வீரியத்தில் , குடற்காய்ச்சலுக்கு (TYPHOID) எதிராக உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
2.
எலும்புகள் ( BONES) :
சிம்பைட்டம் (SYMPH) : எலும்புகளில் காயம் அல்லது விபத்து. எலும்பு நொறுங்குகிற, எலும்பு முறிவிற்கு மிகச் சிறந்த மருந்து இது. எலும்பு முறிவு விரைவில் சேராத நிலையில் , சிம்பைட்டம் விரைந்து நலமாக்கும்.
கல்கேரியா பாஸ்பாரிக்கம் (CALC-P): இம்மருந்து எலும்புகள் மற்றும் சுரப்பிகளின் ஊட்டச்சத்தை பாதிக்கிறது; எலும்புகள் மென்மையாகவும், மெல்லியதாகவும், உடையக்கூடியதாகவும் மாறும்; இது எலும்பு முறிவுகளை ஒன்றிணைக்காத நிலையில் எலும்புகளின் வளர்ச்சியை அதிகப்படுத்தி கெட்டித்தன்மை பெற ஊக்குவிக்கிறது.
ஹெக்லா லாவா (LAVA-H) : இது கீழ் தாடையில் குறிப்பிடத்தக்க வகையில் செயலாற்றும் தன்மை கொண்டது . மேலும் , பல வகையான எலும்பு நோய்கள், எலும்புகளில் புற்று நோய் ( OSTEO-SARCOMA) , எலும்பு அழற்சி (OSTEITIS) , எலும்பு உள்ளழிவு (CARIES) மற்றும் திசுப்பகுதி அழுகல் (NECROSIS) போன்றவற்றைத் தடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது; தாறுமாறான எலும்பு வளர்ச்சி (EXOSTOSIS) இருக்கும் மற்றும் அப்பகுதியைத் தொடும்போது வலி ஏற்படும்.
3.
மூளை ( BRAIN) மற்றும் நரம்பு மண்டலம் ( NERVOUS
SYSTEM) :
அவெனா சாடிவா (AVEN): அவெனா சாடிவா (பொதுவான ஓட்ஸ்) மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் ஊட்டச்சத்தை மேம்படுத்துகிறது. குறிப்பாக, சுயஇன்பம் காரணமாக இவரால் எந்த ஒரு விஷயத்திலும் மனதை நிலைநிறுத்த இயலாது. மூளையின் அடிப்பகுதியில் அளவிற்கு அதிகமான இரத்தம் இருப்பதால் ( HYPERAEMIA ) இறுக்கமான உணர்வு இருக்கும். தலைவலி மூளையின் அடிப்பகுதியில் ஏற்படும்.
காலி பாஸ்பாரிக்கம் (KALI-P): மூளையில் இரத்தக்குறைவு. களைப்பினாலும், மன அழுத்தத்தினாலும் மூளை களைத்துப் போகும் அல்லது மூளை நரம்பு இழைமங்களில் ஏற்படும் அழிவினால் பித்துப்பிடிக்கும். மூளை மிருதுவாகி விடும்; அதனால் ஆற்றல் இழந்த நிலைமை ஏற்படும். மனம் கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளில் மூழ்கியிருக்கும்; கடந்த காலத்தின் மகிழ்ச்சியான நிகழ்வுகளை நினைவுகூர்ந்து மகிழ்ச்சியடைவார்கள் மற்றும் மனமும் ஏங்கும்.
4.
மார்பகம் (BREASTS) :
பைட்டோலாக்கா (PYHT): நீண்ட நாட்களுக்கும் மற்றும் ஆழமாகவும் வேலைசெய்யும்
இந்த மருந்து , முக்கியமாக சுரப்பிகளை பாதிக்கிறது. குறிப்பாக , பெண்களின் மார்பகங்கள்
; அடிநா சதை நன்றாக செயல்படுகிறது ; கூடுதலாக,
இது தசைகள் மீது ஒரு சக்திவாய்ந்த விளைவைக் கொண்டுள்ளது; கழுத்து மற்றும் முதுகு ;
நார்ச்சத்து திசு; தசைநாண்கள் மற்றும் மூட்டுகள், எலும்பு திசுக்கள், எலும்புகளை மூடியுள்ள
சவ்வு , தொண்டை; செரிமான பாதை ஆகிய பகுதிகளில் நன்கு வேலை செய்கிறது. மார்பகங்களில்
உருவாகும் கட்டிகள் (TUMORS) , புற்றுக்கட்டிகள் (CANCER), கெட்டியான முடுச்சுக்கள்
(NODULLES) மற்றும் புண்கள் ( முலைக்காம்புகளில்) ஆகியவற்றை உடைத்து, சீழ்களை வெளியேற்றி
நலமாக்குவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. மிகுதியான தாய்ப்பால் சுரக்கும் (Galactorrhoea ) .
5.
மூச்சுக்குழாய் (BROCHIOLES) :
ஹிப்போசயனினம் (HIPPO): சுவாசக்குழாயில் நன்றாக வேலை செய்யும் மருந்து ஹிப்போசயனினம் ஆகும். மூச்சுக்குழாயில் அதிகப்படியான சளி சேருவதால் மூச்சுத்திணறல் உடனடியாக ஏற்படும், அதனால் வயதானவர்களுக்கு மூச்சுக்குழாய் அழற்சியும் ஏற்படும். பெண்களின் மார்பகங்களில் கேடு விளைவிக்கிற புண்கள் ஏற்பட்டு , அது திறந்து கொள்வதால் தொல்லைகள் உருவாகும்.
6.
செரிமான உறுப்புகள் ( DIGESTIVE ORGANS) :
அல்பால்ஃபா (ALF): இந்த மருந்து உடலுக்கு ஊட்டச்சத்தை
அதிகரிக்கிறது , மேலும் இது ஒரு பலவிருத்தி மருந்தாகக் ( TONIC) கருதப்படுகிறது. பசி மற்றும் செரிமானம்
மேம்படுகிறது, எடை அதிகரிப்புடன், மனம் மற்றும்
உடலின் பலம் அல்லது தைரியம் திரும்புகிறது
. இது கொழுப்பை அதிகரிக்கிறது, திசு கழிவுகளை சரிசெய்கிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கு பாலின் தரம் மற்றும்
அளவு அதிகரிக்கிறது.
ஹைட்ராஸ்டிஸ் (HYDR): இது, உறுதி குறைந்த , நலிவடைந்த மற்றும் சீரழிவு நிலைமைகளை உருவாக்குகிறது, எனவே வயதான, எளிதில் சோர்வடையும், பலவீனமான மற்றும் உடல் மெலிந்த நபர்களுக்கு ஏற்றது. பசியின்மை , உணவு செரிமானம் குறைவு , ஏப்பம் , வயிற்றில் கனமான உணர்வு போன்ற தொல்லைகளை இது நலமாக்குகிறது. தொண்டை, வயிறு மற்றும் கல்லீரலில் புற்று நோய் ஏற்படும் . புற்று நோயின் ஆரம்பநிலைகளில் நன்றாக வேலை செய்து நலமடையச் செய்கிறது.
7.
சுரப்பிகள் ( GLANDS) :
பெர்ரம் ஐயோடியம் (FERR-I): இம்மருந்து சுரப்பிகளில் நன்றாக வேலை செய்யும். கண்ணீர் சுரப்பிகளில் வீக்கம். உமிழ்நீர் சுரப்பி மற்றும் கீழ்த்தாடைக்கடியிலுள்ள சுரப்பிகளில் புற்றுநோய். கல்லீரல் மற்றும் மண்ணீரலில் வீக்கம் மற்றும் வேக்காடு. அடக்கப்பட்ட மாதவிடாய் பிறகு, குரல்வளைச் சுரப்பியில் ஏற்படும் வீக்கத்தினால் விழிகளில் பிதுக்கம் ஏற்படும்.
8.
இதயம் (HEART):
கிராடேகஸ் (CRAT): இந்த மருந்து இதயத்தின் தசைகளில் நன்றாக செயல்படுகிறது மற்றும் இதயத்தை வலுப்படுத்தும் பலவிருத்தி மருந்து ஆகும். இதயத்தில் இரத்தக்கசிவு அல்லது இரத்தக்கொழுப்பு மிகை இருக்கும். இதயம் பலவீனமானவும் , அழுத்தமும் , தைக்கும் வலி இருக்கும் மற்றும் தூக்கமின்மையும் இருக்கும் . மூச்சுத்திணறல் . - இதயத்தசைஅழற்சி அல்லது வீக்கம் (MYOCARDITIS) . ஆற்றல் போதாத ஊடுதழ்கள் ( INCOMPENTENT VALVES) , திடீர் இதய வலி (ANGINA PECTORIS) . இதயம் பெருத்துவிடும். இதயத்தில் நீர்க்கோவை . இதயத் துடிப்பு விரைவாகவும் , ஒழுங்கற்றும் மற்றும் மெதுவாகவும் , விட்டுவிட்டு இருக்கும். இடது தோள்பட்டையின் கீழ் வலி; மற்றும் இடது கழுத்துப்பட்டையின் கீழும் வலி இருக்கும் .
காக்டஸ் (CACT): காக்ட்ஸின் முக்கிய செயல்கள் அனைத்தும் இதயம் மற்றும் இரத்த ஓட்டத்தை மையமாக கொண்டுள்ளது . இதயத்தைச் சுற்றிலும் ஒரு இரும்புப் பட்டையால் இறுக்குவது போன்ற வலி; யாரோ ஒருவர் இதயத்தைப் பிடித்து நெருக்குவது போன்ற உணர்வு; இதயம் துடிப்பதற்குக் கூட இயலாத நிலை. புகையிலை அதிகரிப்பதால் உண்டாகும் இதயக்கோளாறுகள். இதய நோய், இடது கை வீக்கத்துடன் இருக்கும் . மூச்சை இழுத்துப் பிடித்தால் இதயம் துண்டு துண்டாகப் பறந்துவிடும் என்பது போல தோன்றும். சாவு வந்துவிடும் என்ற பயம் இருக்கும்.
9.
கல்லீரல் ( LIVER) மற்றும் பித்தப்பை (GALL BLADDER) :
செலிடோனியம் (CHEL): கல்லீரலில் ஏற்படும் வலி பின்பக்கம் தோன்றும்; அல்லது வலது தோள்பட்டை எலும்புப் பகுதியில் நிலையாக இருக்கும். கல்லீரல் பெருத்திருக்கும்; மென்மையாகவும் இருக்கும். பித்தப்பையில் கற்கள் உருவாகும். மஞ்சள் காமாலைக்கு இது முக்கியமான மருந்து.
கார்டியஸ் மரியானஸ் (CARD-M): நுரையீரல் பாதிப்புகளுடன் தொடர்புடைய கல்லீரல் பாதிப்புகள்; சுவாசக்குழாயில் இரத்தக்கசிவு ஏற்படும். கல்லீரல், பெரிதாகி, பக்கவாட்டில் வீங்கி, அழுத்தும் போது வலியைத் தரும் ; மஞ்சள் காமாலை. பித்தப்பை கற்கள்.
பெல் டவுரி ( FEL): இம்மருந்து வேலை செய்யும் முக்கிய உறுப்பாக பித்தப்பை மற்றும் குடல்பகுதிகள் இருக்கிறது. உணவிற்குப் பின் இவர்களுக்கு தூக்கக்கலக்கம் ஏற்படும். கல்லீரலில் வலி ; வேக்காடு ; பித்தப்பையில் கற்கள். பித்தப்பையில் வேக்காடு மற்றும் பித்தப்பையழற்சி ( CHOLECYSTITIS).
10. சினைப்பைகள்
(OVARIES) :
கோஸிஸிப்பியம் (GOSS): பெண்களின் சினைப்பைகளில் முக்கியமான தொந்தரவுகள் இருந்தால் , உங்கள் நினைவிற்கு வரவேண்டிய மருந்து இதுவாகும். சினைப்பைகளில் வீக்கம் . மாதவிடாயின் போதும் , நின்ற பிறகும் சினைப்பைகளில் வலி; கொட்டும், தைக்கும், இழுக்கும் மற்றும் எரிச்சலான வலி. இடது பக்க சினைப்பை குறிப்பாக பாதிக்கப்படும். சினைப்பைகளில் விட்டுவிட்டு வலிகள் ஏற்படும், கர்ப்பப்பையின் செயல்பாடுகள் மற்றும் கர்ப்பகாலத்தில் தொந்தரவுகள் ஏற்பட்டால் இந்த வலிகள் கீழ் நோக்கிப் பரவும்.
11. உள்ளங்கைகள்-
(PALMS-HANDS):
பெர்ரம் மேக்னெட்டிகம் (FERR-MA) : இரண்டு கைகளிலும் உள்ள உள்ளங்கையில் முக்கியமாக வேலை செய்யும் மருந்து இதுவாகும். இடுப்புச்சந்து வாதம் ( SCIATICA ) கடுமையான வலியைத் தரும் , அத்துடன் மரத்துப்போகும் தன்மையும் இருக்கும். கைகள் மற்றும் உள்ளங்கையில் மருக்கள், பாலுண்ணிகள்.
12. சுக்கிலச்சுரப்பி (PROSTATE) :
சபல் செருலாட்டா (SABAL): பிறப்புறுப்பு-சிறுநீர் உறுப்புகள், குறிப்பாக, சுக்கிலச்சுரப்பி , சினைப்பைகள் ; மார்பகங்கள்,
சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்க்குழாய் ஆகியவை உறுப்புகளில் இந்த மருந்து சிறப்பாக வேலை செய்கின்றன. சுக்கிலசுரப்பியில் வீக்கம், புண்கள், புற்றுநோய், கட்டிகள் மற்றும் வீக்கம்
போன்ற தொல்லைகள் இருக்கும். சுக்கிலசுரப்பி வீக்கத்தினால் அழற்சி ஏற்படும்; அடிக்கடி
சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு இருக்கும்; சிறுநீர் சொட்டுசொட்டாக வெளியேறும் . சிறுநீர்
கழித்த பிறகு எரிச்சலான வலி இருக்கும். சுக்கிலசுரப்பி வீங்கியிருக்கும் போது மலச்சிக்கலும்
ஏற்படும்.
தூஜா (THUJ): தூஜா, முக்கியமாக பிறப்புறுப்பு -சிறுநீர் பாதையின் சளி சவ்வுகளில் சிறப்பாக செயல்படுகிறது; அதேபோல் குடல்கள், தோல் மற்றும் மனதிலும் நன்றாக வேலை செய்கிறது. சுக்கிலசுரப்பி வீங்கி பெருத்திருக்கும்; புற்றுநோய், கட்டிகள் இருக்கும். சுயஇன்பம் பெறுவதால் சுக்கிலசுரப்பி வீங்கும். வயதானவர்களுக்கு சுக்கிலசுரப்பி வீங்கிப் பெருத்துவிடுவதால் சிறுநீர் தானாக வெளியாகும்; சிலருக்கு சிறுநீர் வெளியேறாமல் உள்ளேயே தங்கும் நிலையும் ஏற்படும். உடல் உறுப்புகளில் கட்டிகள், மருக்கள் இருந்தால் நாம் முதலில் நினைக்க வேண்டிய மருந்து மேகவெட்டை நோய்மூலக்கூறின் ( SYCOTIC) அரசனான " தூஜா" தான்.
கோனியம் (CON): வயதானவர்களுக்கு சுக்கிலசுரப்பி வீங்கிப் பெருத்துவிடுவதால் சிறுநீர் வெளியேறாமல்
உள்ளேயே தங்கும் நிலை ஏற்படும். சுக்கிலசுரப்பி
வீக்கத்தினால் சிறுநீர் கழிப்பதில் மிகுந்த
சிரமம் இருக்கும் , சிறுநீர் தொடங்கும் வரை காத்திருக்க வேண்டும்; சிறுநீரை வெளியேற்ற
கட்டாயமாக அழுத்தவும், சிரமப்படவும் வேண்டும்.
பல்சாட்டில்லா (PULS): கடுமையான சுக்கிலசுரப்பி அழற்சி இருக்கும். சுக்கிலசுரப்பி வீக்கத்தினால் சிறுநீர் கழிப்பதில் மிகுந்த சிரமம் இருக்கும்.
சுக்கிலசுரப்பியில் ஒடுங்கிப்போன அல்லது இறுக்கமான உணர்வு; வயதானவர்களுக்கு சுக்கிலச்சுரப்பி
பெருத்து வீங்கி விடும்; சீறுநீர் வெளியேறாது. சுக்கிலசுரப்பி பெருத்து விடுவதால் சிறுநீர் கழிப்பதில் தடை ஏற்படும், விட்டுவிட்டு
வெளியாகும், சொட்டுசொட்டாக வெளியாகும்; வெட்டும் வலி இருக்கும். இடது பக்க விரைநாணில்
எரிச்சல் வலி இருக்கும்.
13. சுவாச உறுப்புகள்
(RESPIRATORY ORGANS):
கிரிண்டெலியா ரோபஸ்டா (GRIN): இம்மருந்து சுவாசஉறுப்புகளில்
மிகச் சிறப்பாக வேலை செய்யும். படுத்திருக்கும் போது இவர்களால் சுவாசிக்க முடியாது
; கட்டாயமாக எழுந்து உட்க்கார வேண்டும். மிகக்
கெட்டியான சளி தாராளமாக வெளியேறினால் சுவாசத்
தொல்லைகள் குறையும். ஈளை நோயிற்கு மிகச் சிறந்த மருந்து ( ASTHMA) . ஈளை நோய், இதயக்கோளாறுடன்
சேர்ந்து இருக்கும். கபவாதம் ( PNEUMONIA-நுரையீரல் அழற்சி). மூச்சுவிடுவதில் சிரமம்;
உட்கார்ந்த நிலையில் நன்றாக இருக்கும்.
14. இடுப்பு நரம்பு சம்பந்தமான
நரம்பு ( SCIATIC NERVE) :
ஞாபாலியம்
(GNAPH): இந்த மருந்து சில பயனுள்ள வயிறு மற்றும் பெண்களின் கர்ப்பப்பை சம்பந்தமான அறிகுறிகளைக் கொண்டிருந்தாலும், முக்கியமாக இடுப்பு நரம்போடு இணைந்துள்ள நரம்புப்
பகுதியில் ஏற்படும் பாதிப்புகளுக்கு நன்றாக பயன்படுகிறது. இடுப்பு நரம்பில் கடுமையான
வலி; அதனைத் தொடர்ந்து உணர்வின்மை ஏற்படும் அல்லது மாறி மாறி தோன்றும். படுக்கும் போதும்
, அசையும் போதும் , படிகாட்டில் ஏறினாலும் தொல்லைகள் கூடும் ; அடிவயிற்றில் கைகால்களை
வளைத்து, நாற்காலியில் அமர்வதன் மூலம் தொல்லைகள் குறையும்.
15. தோல் (SKIN) :
பெர்பெரிஸ் அக்வி (BERB-A): இது தோலில் நன்றாக வேலை செய்யும் மருந்து ஆகும். நாள்பட்ட சளித்தொல்லையும், மேகப்புண் நோய்மூலத்தின் பின்விளைவுகளும் இருக்கும். தோலில் பரு, உலர்ந்த, கரடுமுரடான, செதிள்கள்போன்று இருக்கும் . கரப்பான் அல்லது வெடிப்புகள் உச்சந்தலையில் ஆரம்பித்து முகம் மற்றும் கழுத்து வரை நீளும் . மார்பகத்தில் கட்டி, வலியுடன் இருக்கும் . முகப்பரு. செதில் உரியும் தடிப்பு தோல் அழற்சி (PSORIASIS) . வறண்ட கரப்பான் புண் ( DRY ECZEMA) . மேல் தோல் கடுமையானதாக இருக்கும் (SCLERODERMA). நமைச்சல் அல்லது அரிப்பு. சுரப்பிகள் வீங்கியிருக்கும்.
16. சிறுகுடல்கள் மற்றும்
குதம் ( SMALL INTESTINES AND RECTUM):
ரூடா (RUTA): சிறுகுடல்களிலும் , குதத்திலும் ஏற்படும் பாதிப்புகளை நலமாக்குவதில் ரூடா மருந்து முக்கியமான மருந்தாக இருக்கிறது. ரஸ்டாக்ஸ் மருந்தின் அமைதியற்ற நிலையை தவிர்த்து மற்ற அறிகுறிகள் ரூடா மருந்திலும் உள்ளது. குறிப்பாக, மூளை, எலும்பு மற்றும் கண் போன்ற உறுப்புகளில் ஏற்படும் புற்று நோயிற்கு இது பயன்படுகிறது. மேலும், நரன்பு மற்றும் எலும்புகளில் ஏற்படும் கட்டிகளையும் நலப்படுத்துகிறது. உச்ச நிலையான மலச்சிக்கல் என்பது இம்மருந்தின் உடனியங்குகிற அல்லது இணைந்திருக்கிற அறிகுறியாக இருக்கிறது.
இடுப்புச்சந்து வாதம் முதுகில் துவங்கி , இடுப்பு மற்றும் தொடைப்பகுதிகளுக்கு
கீழ்நோக்கிப் பரவும். கிழிக்கும் வலி இருக்கும்; பகலில் ஓரளவு வலி குறைந்திருக்கும்
; ஆனால், இரவில் படுக்கையில் படுத்தவுடன் வலி கூடும். இடுப்புச்சந்து வாதத்தில் வலியானது , குளிர்ச்சியினால், அசைவினால், உட்கார்ந்தால் குறையும்;
படுத்தால் அதிகரிக்கும் . சிறுநீர் கழித்த பிறகு வலி ஏற்படும். இரவில், கண்களில் தீ
போன்று காந்தள் தன்மையான வலி ஏற்படும்.
17. மண்ணீரல் –
(SPLEEN)
சியானோதஸ் (CEAN): மண்ணீரல் பாதிக்கப்படும் போது, அதை நலமாக்கும் முக்கிய மருந்தாக சியானோதஸ்
இருக்கிறது. மண்ணீரலில் தீவிர மற்றும் நாட்பட்ட வேக்காடு; வீங்கிப் பெரியதாகிவிடுதல்.
புற்று நோய். மண்ணீரல் பகுதியில் பாரம் இருப்பது போன்ற கனமான உணர்வு. காய்ச்சலின் போது மண்ணீரலில் வேக்காடு இருக்கும்.
வயிற்றுப்போக்கின் போது மண்ணீரலில் வலி. மண்ணீரலோடு நிணநீர்ச்சுரப்பிகள் மற்றும் கல்லீரல் ஆகிய உறுப்புகளில் வீக்கமும், வழியும்
இருக்கும்.
18. வயிறு ( STOMACH)
:
கிரேடியோல ஆஃபீசினலிஸ் ( GRAT): இந்த மருந்து செயலாற்றும் முக்கியமான உறுப்பு வயிறு ஆகும்.
பசி உணர்வில் மாறி மாறித் தோன்றும் பல குறிகளை உள்ளடக்கியது இந்த மருந்து. பசி உணர்வு
குறைவு; சில சமயங்களில் அதிகம் இருக்கும்; சில சமயங்களில் பசி இருக்காது. வயிற்றில்
காலியான உணர்வு இருக்கும்; சாப்பிட்டவுடன் குறையும். வஜீரணம், உப்பிசம், வாந்தி , குமட்டல்,
வயிற்றுப்போக்கு போன்ற வயிறு சம்பந்தமான நிறைய
அறிகுறிகளைக் கொண்டது இம்மருந்து. மலச்சிக்கலும் உண்டு. பெண்களிடம் , நக்ஸ்வாமிக்கா
மருந்தின் அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு இந்த அடிக்கடி தேவைப்படும்.
19. தொண்டை (THROAT)
:
ஹெபாடிக்கா த்ரிலோபா (HEPAT): இம்மருந்து முக்கியமாக செயலாற்றும் உறுப்பு தொண்டை ஆகும். தொண்டையில் அரிப்பு மற்றும் கூச்சஉணர்வு இருக்கும். இவர்களுக்கு ஒட்டும் தன்மையுடன் கூடிய கெட்டியான சளி இருக்கும், அது தொண்டையை கணைத்துக் கொள்ளவும் அல்லது காறி இருமுவதற்கும் தூண்டும். மூக்கில் சளி ஒழுகும்; தொண்டை வலியும் இருக்கும்.
20. சிறுநீர் உறுப்புகள்
(URINARY ORGANS) :
பெர்பெரிஸ் வல்க் (சிறுநீரகங்கள்) (BERB):
Ø
சிறுநீர் கழிக்காத போது சிறுநீர் வெளியேறும் குழாயில் எரிச்சல் ஏற்படும்.
ஈக்விசெட்டம் (சிறுநீர்ப்பை) (EQUIS): இது முக்கியமாக பிறப்புறுப்பு -சிறுநீர் பாதையில் செயல்படுகிறது. சிறுநீர்ப்பை நிறைந்திருக்கும் போது வலி இருக்கும் ; சிறுநீர் கழித்த பிறகு கூட வலி குறையாது. சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற நிலையான ஆசை மற்றும் அதிக அளவு தெளிவான, வெளிர்நிற சிறுநீர் வெளியேறும் , இருந்தாலும் திருப்தி இருக்காது. சிறுநீர் கழிக்கும் போது சிறுநீர்க் குழாயில் ஊசி குத்துவது போன்ற வலி , எரிச்சல் , வெட்டும் வலி . சிறுநீர்ப்பையழற்சி ( CYSTITIS) . நீர்க்கடுப்பு (DYSURYA) . குழந்தைகள் இரவு நேரத்தில் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் ; இதற்கு பழக்கம் தவிர வேறு காரணங்கள் இல்லை . வயதான பெண்களுக்கு சிறுநீர் சிறு சிறு துளிகளாக வெளியாகும் ; கூடவே மலமும் தானாக வெளியாகும் . சிறுநீரில் அதிக சளி தென்படும் .
21. கருப்பை
(UTERUS):
போலிகுலினம் (FOLL): பெண்களின் கருப்பையில் மிக நன்றாக வேலை செய்யும் மருந்தாக இது இருக்கிறது. குறிப்பிட்ட மாதவிடாய் அறிகுறிகளைத் தவிர அனைத்து அறிகுறிகளும் மாதவிடாயின் போது குறையும் . சினைப்பைகளில் நீர்க்கட்டி தோன்றும். கருமுட்டை வெளியாகும் தருணத்தில் இடுப்புப் பகுதியில் வலி அதிகரிக்கும். மாதவிடாயிற்கு பத்து நாட்களுக்கு முன்பு வயிற்றுப்போக்கு ஏற்படும்.
சினைப்பைகளை மையமாகக் கொண்டு வலியுள்ள மாதவிடாய் ஏற்படும். பிரகாசமான சிவப்பு இரத்தம் மற்றும் கருப்பான கட்டிகளுடன், நீடித்த மற்றும் கடுமையான இரத்தப்போக்கு இருக்கும் . அனைத்து வகையான மாதவிடாய் சிக்கல்களும் இருக்கும் , மிகக் குறுகிய காலம் மட்டும் இருக்கும் , மிக நீண்ட நாள் இருக்கும் அல்லது இரத்தப்போக்கு இருக்காது . பருவம் எய்திய பெண்ணுக்கு, குழந்தைப் பருவத்திற்குரிய கருப்பை போன்று சிறியதாக இருக்கும். கருப்பையில் கட்டிகள், நார்த்திசுக்கட்டிகள் மற்றும் தசைக்கட்டிகள் இருக்கும். மாதவிடாய் தோன்றுவதற்கு முன்பு வலி ஏற்படும்; மாதவிடாயின் போது வலி குறையும்.
22. நரம்புகள் (
VEINS ) :
ஹமாமெலிஸ் (HAM): இடுப்புசந்து நரம்பு வாதத்திற்கு மிகச் சிறந்த மருந்து இது; குறிப்பாக இடது பக்க பாதிப்பு இருக்கும். இடுப்பு நரம்பு வலியானது , இடுப்புப் பகுதியில் ஆரம்பித்து , கீழ்நோக்கி கால் வரை பாயும். தைக்கும் வலி இருக்கும்; நிற்கும் போது வலி அதிகரிக்கும். நரம்புகள், தசைகள் மற்றும் தோல் ஆகிய உறுப்புகளில் குத்துவலி மற்றும் கொட்டும் வலி ஏற்படும்.
விபேரா ( VIP): நரம்புகளில் வேக்காடு; குறிப்பாக கைகளில் உள்ள நரம்புகளில்
வேக்காடு அதிகமாக இருக்கும். இடுப்பு சந்து நரம்பு வலியானது , இடுப்புப் பகுதியில்
ஆரம்பித்து , கீழ்நோக்கி கால் வரை பாயும். கீல்வாத தொல்லைகள் , இடுப்பு சந்து நரம்பு
வலியின் போதோ அல்லது அதற்குப் பின்னரோ அதிகமாகும். தொடைகளின் நரம்புகள் பெருத்திருக்கும்;
நடக்கும் போது கால்களில் வலி ஏற்படும்; கால்களை உயர்த்தினால் வலி குறையும்.
பல்சாட்டில்லா (PULS): கண்களின் பார்வை
நரம்புகளில் வேக்காடு. கண் நரம்புகளில் பக்கவாதம்,
பார்வை நரம்புக் கோளாறினால் குருட்டுத்தன்மை; சுய இன்பம் பெறுபவர்களுக்கு இந்த நிலை
ஏற்படும். காது கேட்பதில் சிரமம்; கேட்டல் தொடர்புடைய நரம்புகள் பலவீனமடைந்திருக்கும்.
கண்சார்ந்த மற்றும் முகத்தில் உள்ள மெல்லுத்தசை நரம்புகளில் சுண்டும் வலி இருக்கும்.
முன்கை அடியெலும்பு சார்ந்த நரம்புகளில் வலி. இடுப்பு சந்து நரம்பு வலியானது
(SCIATICA) , இடுப்புப் பகுதியில் ஆரம்பித்து , கீழ்நோக்கி கால் வரை பாயும்; இடது பக்கம்
பாதிக்கும்; திறந்த வெளிக்காற்றில் குறையும். இடுப்பு சந்து நரம்பு வலி கருப்பைக்கோளாறுகள்
இருக்கும் போது அதிகரிக்கும். உணர்ச்சி மணடலஞ்சார்ந்த நரம்புகளிலும் முடக்கு வாதம்
ஏற்படும். மொத்தத்தில் நரம்புகளுக்கு புத்துணர்ச்சியளிக்கும் மருந்து பல்சாட்டில்லா
ஆகும்.
கல்கேரியா பிளோரிக்கா (CALC-F): இடுப்பு சந்து நரம்பு வலியானது (SCIATICA) , இடுப்புப் பகுதியில் ஆரம்பித்து , கீழ்நோக்கி கால் வரை பாயும்; அசைவினால் , தொடர்ந்த அசைவினால் குறையும். கைகளின் முழு அளவு கொண்ட , அதாவது முழுமையான நரம்புகளில் (CUBITAL NERVE) கூருணர்ச்சியிருக்கும். நரம்புகளில் இழுக்கும் ( PULLING) வலிகள் இருப்பது இம்மருந்தின் முக்கிய குறிகளில் ஒன்றாகும்.
மேற்கண்ட உறுப்பு சார்ந்த மருந்துகளை மிகவும் விவேகத்துடன் பயன்படுத்தி, பல வெற்றிகளைப் பெற்றவர் மருத்துவர் ஜேம்ஸ் காம்ப்டன் பர்னெட் . அவரது பல வெற்றிகரமான துயரர் ஆய்வுகள், " பர்னெட்டின் மிகச் சிறந்த நலமாக்கல் (BEST OF BURNETT) " என்ற நூலில் , மருத்துவர் H.L. சிட்காரா அவர்களால் தொகுக்கப்பட்டுள்ளது. அதே போல் மருத்துவர் W.H. பர்ட் அவர்களின் , "உடலியங்கியல் சார்ந்த மருந்தியல் களஞ்சியம் ( PHYSIOLOGICAL MATERIA MEDICA) " என்ற நூலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பொதுவாக , உறுப்புசார்ந்த நோய்களுக்கு மருந்தளிக்கும் போது குறைந்த வீரியங்கள் ( 6C வரை ) அல்லது தாய்த்திரவங்கள் பயன்படுத்தப்படுகின்றன, பர்னெட்டின் வழிகாட்டுதலின் படி, ஒரு சிறிய அளவுத் தண்ணீரில் ஐந்து துளிகள் வீதம் தாய் திரவங்களை தினமும் மூன்று முறை எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக குழந்தைகளுக்கு ஒரு தடவைக்கு இரண்டு சொட்டுகள் போதுமானது. கூருணர்ச்சி உள்ளவர்களுக்கு அவர்களுடைய எதிர்வினைக்குத் தகுந்தவாறு மருந்தின் அளவை தேவைப்படும் அளவிற்கு குறைத்துக் கொள்ளலாம். பாதிக்கப்பட்ட ஒரு உறுப்பிற்கு பொருத்தமான மருந்துகள் ஒன்றுக்கு மேல் சுட்டிக்காட்டப்பட்டால், அறிகுறிகளுடன் மிகவும் ஒத்ததாக இருக்கும் மருந்தின் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு , மருந்தைத் தேர்வு செய்ய வேண்டும் .
இந்தக் கட்டுரை உறுப்புசார்ந்த மருந்துகளை
பற்றிய சில பகுதிகளை மட்டுமே கொண்டுள்ளது என்பது உண்மையே !. அனுபவம் வாய்ந்த மருத்துவ நண்பர்கள் , மேலும் பல
உறுப்புசார்ந்த மருந்துகளின் பயன்பாடுகள் பற்றிய குறிப்புகளை இத்துடன் இணைக்கலாம் ;
அது ஹோமியோபதியை மேலும் செழுமைப்படுத்த உதவும்
என்று நம்புகிறேன்.
மதுரை.
+919486102431
2.
New Manual of
Homeopathic MM- Dr. William Boericke.
3.
MM of
Homeopathic Medicine- Dr.S.R.Phatak.
4.
Synoptic MM
Volume I & II- Dr. Vermeulen Frans.
5.
Complete
Dynamics-Web repertory.