Thursday, 13 June 2019

ஹோமியோபதி மருத்துவத்தில் வெற்றிகரமான மருத்துவராக விளங்குவது எப்படி?


ஹோமியோபதி மருத்துவத்தில் வெற்றிகரமான மருத்துவராக விளங்குவது எப்படி?
அத்தியாயம் - ஒன்று
ஒரு ஹோமியோபதி மருத்துவருக்கும் (PHYSICIAN) , ஹோமியோபதி மருந்துகளை பரிந்துரை  செய்பவருக்கும் ( PRESCRIBER)  மிகுந்த  வேறுபாடு  உண்டு. ஹோமியோபதி மருந்துகளை பரிந்துரை செய்வதாலேயே அவர் மருத்துவராகவும் ஆகி விடமுடியாது. ஹோமியோபதி மருத்துவருக்கு , மருந்துகளை பரிந்துரை செய்ப்பவரை விட கூடுதலாக பொறுப்பும் , அதிக செயல்பாடும் உண்டு. அதேபோல் நன்றாகவும் , புத்திசாலித்தனமாகவும் மருந்து தேர்வு செய்யத் தெரிந்தவர் மோசமான மருத்துவராகவும், நல்ல மருத்துவர் என்று பெயரெடுத்தவர் வெற்றிகரமாக மருந்து பரிந்துரையாளராகவும் இருப்பதில்லை என்பதும் உண்மை. ஆனாலும் , மிக சரியான (ஒத்த மருந்தினை) தேர்வு செய்து துயரரரை நலப்படுவது மட்டுமே ஒரு ஹோமியோபதி மருத்துவரின்(ஆங்கில மருத்துவரும் கூட ) தலையாய கடமையாகும்.

அவர் துயரரின் ஒட்டுமொத்தக் குறிகளையும் அறிந்து கொள்ளக்கூடிய திறமை படைத்தவராக இருக்க வேண்டும். அத்தோடு துயரர்களின் நோய்த்தன்மை , உடல், மனம் மற்றும் சிந்தனை ஆற்றலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கண்டறிந்து அவற்றை நலப்படுத்தும் ஆற்றல் படைத்தவராக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் , அந்தத் துயரரை நோயின் பிடியிலிருந்து விடுவிப்பதோடு அல்லாமல் , அவர் தமது ஆரோக்கியத்தை எவ்வாறு பாதுகாப்பது என்று வழிகாட்டுபவராகவும் (PRESCRIBER) இருக்க வேண்டும். இது தான் ஒரு நல்ல ஹோமியோபதி மருத்துவருக்கான அடையாளம் ஆகும்.

இவ்வாறு ஒரு ஹோமியோபதி மருத்துவர் " சிறந்த மருத்துவராக" பெயரெடுப்பதற்கு அவர் , பல நல்ல குணங்களை வளர்த்துக்  கொள்ளவேண்டும். இத்தகைய பண்புகள்  ஹோமியோபதி மருத்துவர்களுக்கு மட்டுமல்ல  அனைத்து துறைசார்ந்த மருத்துவர்களுக்கும் தேவையானதே. குறிப்பாக ஹோமியோபதி மருத்துவம் சிறந்த நலமாக்கல் விதிகளை உள்ளடக்கி இருப்பதால் மற்ற மருத்துவர்களை விட ஹோமியோபதி மருத்துவர்களுக்கு மிகுந்த பொறுப்பும் கடமையும் இருக்கிறது. ஒரு ஹோமியோபதி மருத்துவர் எத்தகைய  குணநலன்களை பெற்றிருக்க வேண்டும் என்று இப்போது பார்க்கலாம் . 

பொறுமை அல்லது நிதானம்: (PATIENCE)

துயரர் ஆய்வின் போது ஒவ்வொரு ஹோமியோபதி மருத்துவரும் அளவு கடந்த பொறுமைசாலியாக இருக்க வேண்டும். துயரர் கலந்துரையாடலின் போது , அவர்களிடமிருந்து வெளிப்படும் பேச்சும் , செயலும் மருத்துவருக்கு எரிச்சலையும் (IRRITABLE), சிடுசிடுப்பையும் (RILE) மற்றும் அதிர்ச்சியைத் தந்தாலும் மிகுந்த நிதானத்தையும், காத்திருத்தலையும் கடைபிடிக்க வேண்டும் . அதாவது கொக்கு மீனுக்காக காத்திருப்பதுபோல் , மருத்துவரும் சரியான குறிகள் கிடைக்கும் வரை நிதானத்துடன் காத்திருக்க வேண்டும். துயரர்களின் தேவையற்ற செய்கைகளையும், வார்த்தைகளையும் மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும். தேவையற்றது என்றும் நாம் கருதும் குறிகள், சில சமயம் நமக்கு சரியான மருந்து தேர்வுக்கு முக்கியமானதாக இருக்கும .
துயரர்கள் கவனமில்லாதவராக (CARELESS) , ஏமாற்றக்கூடியவராக (DISHONEST) , முட்டாள்தனமானவராக (FOOLISH), மடமைவாய்ந்தவராக (IDIOTIC) , பொறுமையற்றவராக (IMPATIENT), சீரற்றவராக (INCONSISTENT) , கஞ்சத்தனமிக்கவராக (MISERLY)  , முரட்டுத்தனமானவராக (RUDE) , கவனமற்றவராக (UNOBSERVANT) , உண்மையற்றவராக (UNTRUTHFUL) , காலம் தவறுபவராக (UNPUNCTUAL) , நேர்மையற்றவராக (UNREASONABLE) , நன்றியில்லாதவராக (UNGREATFUL)  மற்றும் சில தவறான குணநலன்கள் உடையவராக இருக்கலாம். ஆனால் , ஹோமியோபதி மருத்துவர் அந்த துயரரின் மேற்கண்ட எந்த குணநலன்களாலும் பாதிக்கப்படாதவராக மன அமைதியுடன் இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் மேற்கண்ட குணநலன்களை கொண்டுள்ள துயரர்களை  சரியான முறையில்   வழிநடத்தி,  மீட்டெடுத்து  அவர்களை நன்றாக உற்று கவனிப்பவராகவும் (KEENLY OBSERVER) , அன்புள்ளவராகவும் , சாதூரியமிக்கவர்களாகவும் , விவேகமுள்ளவர்களாகவும் மாற்றுவது அந்த ஹோமியோபதி மருத்துவரின் கடமையுமாகும்.

அதே போல் துயரருடன் கலந்துரையாடலின் போது  அத்துயரர் மிகவும் அதிகம் பேசுபவராகவும் , அவரது நோய்நிலைக்கு சம்பந்தமில்லாத பல செய்திகளை பற்றி பேசலாம். ஆனால் ஹோமியோபதி மருத்துவர் தான் மிகப் பொறுமையாக அவற்றையெல்லாம் கேட்டு , மெதுவாக அவரை திசைதிருப்பி அவரிடமிருந்து தேவையான குறிகளைப் பெறவேண்டும். துயரர் எதைப் பற்றி பேசினாலும் அதை கவனமாகக் கேட்டும் , கடைசி வரை பொறுமை காத்து சரியான குறிகளை சாதுரியமாக பெறுவதின் மூலமாகத்  தான் ஒரு மருத்துவன் வெற்றிகரமானவராக திகழ முடியும். 

விழிப்புடன் மற்றும்  ஊன்றிக் கவனித்தல் (ALERT & ATTENTIVE) .

ஹோமியோபதி மருத்துவர்கள் துயரர்களிடம் கலந்துரையாடும் பொழுது மிகவும் எச்சரிக்கையுடனும் , கவனத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், துயரர்கள்   தமது துன்பங்களை , வினோதமான குறிகளை எந்த நேரத்திலும் அல்லது எந்த வார்த்தைகளினாலும் அல்லது செயலாலும் மற்றும் தோரணையாலும் வெளிப்படுத்துவார் அல்லது காண்பிப்பார். மேலும் அவர் தமது முக்கியமான குறிகளை மிகச் சாதாரணமாகவோ அல்லது தற்செயலாகவோ வெளிப்படுத்துவார். அதனால் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து அம்மாதிரியான குறிகளை கவனத்துடன் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது, காட்டிற்குள் புலி வேட்டைக்கு செல்லும் வேட்டைக்காரன் , புலி எந்த நேரத்திலும், எந்த பகுதியில் இருந்தும் தாக்கலாம் என்ற உணர்வுடன்  மிகுந்த கவனத்துடன் இருப்பது போலவும், கொலைக்குற்றத்தை கண்டுபிடிக்கப் போகும்  துப்பறிவாளன் எவ்வாறு சிறிய கறைகளிலும், புழுதியிலும் கவனம் செலுத்தி ஆராய்ச்சி செய்கிறானோ அத்தகைய எச்சரிக்கை உணர்வுடனும், கவனத்துடனும் ஹோமியோபதி மருத்துவர்கள் இருக்க வேண்டும்.

கூர்ந்து கவனித்தல்  ( OBSERVATION):

ஹோமியோபதி மருத்துவர்கள் தமது கூர்ந்து கவனிக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்த ஆற்றலே அவர்களை முனைப்புடன் வைத்திருந்து நிமிடத்திற்கு நிமிடம் மாறும் துயரங்களின் குறிகளை தெளிவாக அறிந்து கொள்ள உதவும். மற்றவர்களின் பார்வைக்கு முக்கியமற்றதாகவும் , துயரரின் நிலைக்கு சம்பந்தமில்லாதாகவும் தோன்றும் குறிகள் , ஹோமியோபதியர்களின் கவனத்தை ஈர்ப்பதாகவும், முக்கியமான திறவுகோல் குறியாகவும் (KEY NOTE SYMPTOM)  இருக்கும் . இதற்கு எடுத்துக்காட்டாக கீழ்வரும் துயரர் நலமாக்கலைப் பார்க்கலாம்;
1.       ஒரு துயரரை நலமாக்க,  அவரது இல்லத்திற்கு என்னை அழைத்து செல்ல , அவரது கார் ஓட்டுநர் வந்தார். அவருடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது அவரது இடது கண்ணும் , இடது பக்க முகமும் அடிக்கடி வெட்டி இழுத்துக் கொண்டது (TWITCHING). அத்தோடு காரில் பயணம் செய்த அந்த நாற்பத்தி ஐந்து நிமிடங்களும் அவரே தொடர்ந்து பேசிக் கொண்டே வந்தார். என்னால் மூன்று அல்லது நான்கு வார்த்தைகள் தான் பேச முடிந்தது. எங்களது பயணம் முடிந்ததும்,  அவர் தனக்கும் மூச்சுத்திணறல் இருப்பதாகவும் , தூக்கத்தின் போது அந்தத் தொல்லை அதிகரிப்பதாகவும் கூறி என்னிடம் மருந்து கேட்டார்.  நான் அவரிடம் வெறெந்தக் கேள்வியும் கேட்க்காமல் அவருக்கு லாக்கஸிஸ் (LACHESIS) மருந்தைக் கொடுத்தேன். அவரும் விரைவில் நலமடைந்தார் (மரு.பி.சங்கரன்).

2.       ஒரு இளம் பெண்ணிற்கு சிறுநீர் கழிக்கமுடியவில்லை. சிறுநீர்ப்பை நிறைந்து , அந்த பகுதி வலிக்கவும் ஆரம்பித்துவிட்டது. அவரை பரிசித்து பார்த்த பொழுது அவரின் உடல் முழுவதும் சூடாகவும், சிறுநீர்ப்பை பகுதியில் குளிர்ச்சியாகவும் இருந்தது. இந்தக்குறிக்குரிய மருந்தான லைஸினை (LYSSIN) கொடுத்த சிறிது நேரத்தில் அவர் சிறுநீர் கழித்து நலத்திற்குத் திரும்பினார். (மரு.பி.சங்கரன்).

ஆகவே, ஹோமோயோபதி மருத்துவர்கள்  கூர்ந்து கவனிப்பவராக இருக்கவேண்டும்; அதுவே வெற்றியின் பாதையைத் திறக்கும்.  

இரக்ககுணமுள்ளவராக இருக்க வேண்டும். (SYMPATHETIC)

மருத்துவர்கள், துயரர்களிடம்  மிகவும் இரக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் , அவர்கள்  நோய்வாய்ப்படட நிலையில் நம்மிடம் உதவி கேட்டு வந்துள்ளார்கள். அந்த சமயத்தில் நம்மிடமிருந்து கிடைக்கும் அன்பும், கனிவும் மற்றும் ஆதரவும் அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும். மேலும் அவர்களிடம் இரக்கத்துடன் நடந்து கொள்ளும் போது, துயரர் நம்மிடம் நெருக்கமாகி தங்களுடைய நோய்குறிகளை எந்தவித தயக்கமில்லாமலும் கூறுவார். அதனால் இரக்கக்குணம் என்பது மருத்துவர்களுக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத குணம்.

துயரர்களிடம் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். (SINCERE)

மருத்துவர்கள் , துயரர்களிடத்தில் மிகவும் நேர்மையுடனும் , உண்மையுடனும் நடந்து கொள்ளவேண்டும். நம்மிடம் சிகிசிச்சை பெற வந்திருக்கும் அவர்களை தமது சொந்தக் குழந்தைகள் போல், உற்றார் மற்றும் உறவினர்கள் போல் கருத  வேண்டும். நலம் குன்றிய நிலையில் நாம் இருக்கும் போது மற்ற மருத்துவர்களிடமிருந்து எத்தகைய சிகிச்சையை எதிர்பார்ப்போமோ அத்தகைய சிகிச்சையை நாம் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். நமக்கு ஒருவிதம் , மற்றொருவருக்கு வேறுவிதம் என்று மருத்துவப்பணியில்  கிடையாது. அதனால் மருத்துவரின் ஒவ்வொரு செயலும் துயரரை தூண்டும் விதமாக இருக்க வேண்டும். அதேபோல் துயரர்களிடமிருந்து பணம் பெறுவதையே நோக்கமாக வைத்துக் கொள்ளக்கூடாது. அது , நமது தன்னலமற்ற சேவையினால்  துயரர்களிடமிருந்து தானாக வந்து சேரும். அப்படி பணம் பெறுவதிலேயே  நாம் கவனம் செலுத்தும் போது , அந்த செயலானது நம்மேல் தவறான எண்ணத்தை உருவாக்கி நமது எதிர்காலத்திற்கு கேடு செய்துவிடும்.  இது  போன்ற உன்னதமான , உண்மையான சேவையைத் தரும் போது , அது நமக்கு வெற்றியைக் கொடுக்கும்.

நேர்மையானவராக இருக்க வேண்டும். (HONEST)

மருத்துவர்கள் துயரர்களிடத்தில் மிகவும் நேர்மையுடன்  நடந்து கொள்ள வேண்டும். நமது மருத்துவசிகிச்சையின் மூலம்   துயரர்களை நலப்படுத்த முடியாத நிலை ஏற்படும் பொழுது , அவர்களை மற்ற மருத்துவர்களிடமோ அல்லது மாற்று மருத்துவத்திற்கோ  பரிந்துரை செய்வது தான் ஒரு நேர்மையான ஹோமியோபதி மருத்துவரின்  செயலாகும். தவறும் பட்சத்தில் , நமது நேர்மையின்மை துயரர்களுக்குத் தெரியவரும்போது , அது நம் புகழுக்கு பெரிய  களங்கத்தை ஏற்படுத்திவிடும். ஆகவே , துயரர்களிடம் நாம் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

தொடர்ந்து படிப்பதும் , காலத்திற்கு ஏற்றவாறு அறிவை வளர்த்து கொள்வதும் முக்கியம். (STUDY & KEEP UP-TO-DATE)
மருத்துவர்கள் தமது  துறை சம்பந்தப்பட்ட மருத்துவ வளர்ச்சிகள்  மட்டுமல்லாமல் , பொதுவான மருத்துவம்  மற்றும் நவீன அறிவியல் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளையும் , ஆய்வுகளையும்  படித்து தமது அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும். நாம் கல்லூரியில் படித்து முடித்து " மருத்துவர்" பட்டம் வாங்கியதால் மட்டுமே  திறமையான மருத்துவராக மாறிவிடமுடியாது. நாம் வாங்கிய பட்டம் என்பது மருத்துவம் செய்ய நமக்கு கிடைத்த சான்றிதழ் மட்டுமே. அது மருத்துவப்பணி செய்யும் சாளரத்தைத்  நமக்கு திறந்துள்ளது அவ்வளவே!. அதன் பிறகு  நாம் தொடர்ந்து  படிப்பதன் மூலமாகவே  நம் அறிவை பெருக்கிக் கொண்டு திறமையான மருத்துவராக  உருவாகமுடியும்.

தற்போது மக்கள் மருத்துவம் தொடர்பான  பல்வேறு மருத்துவ கட்டுரைகளைப் படித்து  மருந்துகளைப் பற்றியும்  , அதன் விளைவுகளை  பற்றியும் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். அதற்கேற்றவாறு நாமும் நோய்கள் பற்றிய புதிய கண்டுபிடிப்புகள், புதிய நோய்கள் மற்றும் அதற்கான சிகிச்சை மற்றும் உணவு கட்டுப்பாடு போன்றவற்றை கற்றுத் தேர்ந்து நமது அறிவை விரிவாக்கிக் கொள்ளவேண்டும். நவீன மருத்துவ வளர்ச்சி பற்றி நமக்கு தெரியாமல் , அது துயரரருக்கு தெரிந்திருந்தால் அது நம்மைப் பற்றிய எதிர்மறை எண்ணத்தை அவர்களுக்கு கொடுத்துவிடும். ஆகவே, மருத்துவர்கள் தினமும் படித்து தங்களது ஆற்றலை வளர்த்துக்  கொள்ளவேண்டும்.  குறிப்பாக , ஹோமியோபதி மருத்துவத்தில்  மருந்துகளின் பண்புகளும் அதன் குணமாக்கும் ஆற்றலும்  பரந்த விரிந்த பொருள் படைத்தது, அதனால் மருந்துகளை வாசிப்பதாலும் - திரும்பவும் வாசிப்பதாலும் மட்டுமே நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

அதனால் மருந்துகளை வாசிக்கும் போது முதலில் கூர்ந்து கவனிக்க வேண்டும் , பின்பு  சிந்தித்துப்பார்க்கவேண்டும் அடுத்து தொடர்ந்து வாசிக்கவேண்டும்  அதன் பிறகு , திரும்பவும் வாசிக்கவேண்டும் , கூர்ந்துகவனிக்க வேண்டும் அடுத்து  சிந்திக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்   மருத்துவர் ஜார்ஷ் ராயல் . ஏனென்றால் துயரர்கள் ஒவ்வொரு முறையும்  ஒரு மருந்திற்குரிய புதிய குறிகளுடன் அல்லது புதிய நோயுடன் நம்மிடம் வருவார்கள் , அதனால் நமது மருந்தியியல்  களஞ்சியத்தில் மீது நமக்கு இருக்கும் தெளிவான அறிவே  , அவருக்கு கொடுக்க வேண்டிய மருந்தை தேர்வு செய்வதற்கு நமக்கு வழிகாட்டும். துயரரை பார்த்தும், குறிகளைத் தெரிந்துகொண்டும் அதன் தொடர்புடைய மருந்துகளை திரும்பத் திரும்ப வாசிப்பதாலும் , நோய்த்தன்மையையும் மற்றும் மருந்துகளிலுள்ள நலமாக்கும் ஆற்றலையும் தெளிவாக நம் நினைவில் வைத்துக் கொள்ள முடியும். அதனால் ஒவ்வொரு மருத்துவரும் ஒரு நாளைக்கு ஒரு மருந்தையும் , இரண்டு மருந்துகளை ஞாயிற்றுக்கிழமையும் வாசிக்க வேண்டும் என்று வெற்றிகரமான மருத்துவர் பெயர்பெற்ற மரு. மார்க்கரெட் டெய்லர் குறிப்பிடுகிறார்.
அதேபோல் நேரத்தை மிகச் சரியாக பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் பணத்தைப்போன்று மிகவும் முக்கியம் வாய்ந்தது. அதனால் நேரத்தை மிக கவனத்துடன் செலவழித்தால் மட்டுமே நமக்கு, அறிவு (KNOWLEDGE) , புகழ்(FAME), செல்வம் (WEALTH), நிலை அல்லது பதவி(POSITION) , ஆற்றல்(POWER), மற்றும் திருப்தி(SATISFACTION)  போன்றவைகள் கிடைக்கும். ஆகவே ,  ஒரு கருமிபோல் இருந்து நேரத்தை மிகவும் சிக்கனமாக , எச்சரிக்கையாக  மற்றும் புத்திசாலித்தனமாக பயன்படுத்தி நமக்கு பயன்தரும் வகையில் செலவிடவேண்டும்.

நேரம் தவறாமை (PUNCTUALITY):

மருத்துவர்களிடத்தில் உள்ள  "நேரம் தவறாமை"  என்ற குணம்  மிக உயர்ந்ததாக கருதப்படுகிறது. ஒரு மருத்துவருக்கு,  குறித்த நேரத்திற்குள்  மருத்துவமனைக்கு வருவது, துயரர்களை சரியான நேரத்திற்குள் கலந்துரையாடி மருந்தளிப்பது மற்றும் துயரர்களின் இல்லத்திற்கு சென்று சிகிச்சையளிப்பதாக இருந்தால் , சரியான நேரத்திற்குச் செல்லுவது   போன்ற   நடைமுறைகள் இருந்தால், அச்செயல்கள் துயரர்களுக்கு மருத்துவர்களின் மீது நம்பிக்கையையும்,  பெருமதிப்பையும் ஏற்படுத்தும். .

மருத்துத் தேர்வில் அவசரம் கூடாது (NEVER BE HURRY)

ஒரு மருத்துவர் , நெருக்கடி நிலை ஏற்பட்டாலொழிய  நோயைத்தன்மையை கணக்கிற்கொண்டு அவசரமாக மருந்து கொடுத்துவிடக்கூடாது.  உதாரணமாக , ஒரு துயரருக்கு வலது பக்க அடிவயிற்றில் வலி உள்ளது என்று அறிந்த பின்பு , அவருக்கு " குடல்வால் அழற்சி " என்று கருதி மருந்து கொடுத்தபின்பு அத்துயரருக்கு ஏற்கனவே " குடல்வால் " நீக்கப்பட்டுள்ளது என்று தெரிய வந்தால் , நாம் தவறான மருந்து கொடுத்து இருக்கிறோம் என்பது தெரிய வரும். அதனால் , தீவிர நோயானாலும் சரி, துரித அல்லது உடனடி நோயானாலும் சரி அவசரப்படாமல் போதுமான நேரம் எடுத்துக்கொண்டு , மிகக் கவனமாக மருந்து தேர்வு செய்ய வேண்டும்.  மருந்து தேர்வு தவறாக இருக்கும் பட்சத்தில் , மருத்துவர் அடிக்கடி மருந்துகளை மாற்றி மாற்றி கொடுக்க நேரிடும். அதனால் துயரர்கள்  நோய்நிலையில் இருந்து ஆரோக்கிய நிலைக்கு வருவதற்குப் பதிலாக குழப்பமே மேலோங்கும். இப்படி அவசரப்பட்டு மருந்துகளை அடிக்கடி மாற்றிக் கொடுக்கும் போது , நாம் சரியான மருந்து கொடுத்திருந்த போதிலும் , அது முழுமையாக செயலாற்றுவதற்கு முன்பு , தவறாகக் கொடுக்கப்பட்ட  மருந்து   , சரியான மருந்தின் செயலாற்றலை தடைசெய்து விடும். சில நாட்கள் கழித்து இதே துயரர் வேறொரு ஹோமியோபதி மருத்துவரை அணுகும் போது அவர் , நாம் கொடுத்த அதே  மருந்தினைக் கொடுத்து , குறித்த காலக்கெடு வரை காத்திருக்க சொல்லி , அத்துயரர் முழுமையாக நலமடைந்துவிட்டால் அது நமது புகழுக்கு களங்கத்தைக் கொடுத்துவிடும். இதை உதாரணமாக   மருத்துவர் எஸ்.குமார் அவர்களின் கீழ்வரும் துயரர் வரலாற்றைப் பார்க்கலாம்;
ஒரு ஆண் துயரர் , வயது 34 . அவர் ஏறத்தாழ பத்து ஆண்டுகளாக  வயிற்று தொந்தரவினால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். கூடவே, கடுமையான மலச்சிக்கல் (CONSTIPATION) , கல்லீரல் கோளாறு (LIVER DERANGEMENT), அடிவயிற்று சவ்வழற்சி (PERITONITIS) , குடல்வாய் தொந்தரவு (PYLORUS AFFECTION)  , புளியேப்பம் (WATER BRASH) மற்றும் கீல்வாதம்( rheumatism )போன்ற தொந்தரவுகளும்  இருந்தன. அவரது குறிகளை தொகுத்துக் கொண்டு மருந்து கொடுக்க முயலும் போது அந்தத் துயரர் ,"ஐயா,எனக்கு  லைகோபோடியம் மருந்தை மட்டும் கொடுத்துவிடாதீர்கள்"  என்று கூறினார். எனக்கு ஆச்சரியமாகி விட்டது. ஏன்? என்று கேட்டபோது , ஏற்கனவே சிகிச்சை செய்த மருத்துவர் லைகோபோடியம் மருந்தை பலவேறு வீரியங்களில் தினமும் கொடுத்திருப்பது தெரியவந்தது. லைகோபோடியம் சரியான மருந்தே! ஆனால் மருந்து ஆழமாக  வேலை செய்து அத்துயரரை முழுமையாமையாக நலமாக்கும் வரை அம்மருத்துவர் காத்திருக்கவில்லை. அதனால் அவருக்கு நக்ஸ்வாமிக்கா மருந்து 30 வது வீரியத்தில் கொடுத்துவிட்டு மறுநாள் காலை வெறும்வயிற்றோடு வருமாறு கூறினேன்.

அந்தத் துயரர் அடுத்த  நாள் காலை ஐந்து மணிக்கு வந்தபொழுது  லைகோபோடியம் 1 M வீரியத்தில் ஒரு தடவை  கொடுத்துவிட்டு,  ஒரு மாதம் கழித்து வருமாறும் முழுமையாக நலமாக வேண்டுமென்றால் வேறெந்த மருந்துகளும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று ஆலோசனை கூறி அனுப்பினேன். ஒரு மாதம் கழித்து வந்த பொழுது அந்தத் துயரர் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்; தான் நலமாகி வருவதாக உணருகிறேன் என்றும் கூறினார். அவருக்கு லைகோபோடியம் 1 M வீரியத்தில் மீண்டும் கொடுத்துவிட்டு இரண்டு மாதங்கள் கழித்து வருமாறு கூறினேன். இந்தக் கால இடைவெளியில் , அதாவது இரண்டு மாதங்கள் கழித்து அந்தத்துயரர் வந்த போது அவருடைய எல்லாத் தொல்லைகளும் சரியாகி முழு நலத்தோடு வந்தார். மீண்டும் அவருக்கு லைகோபோடியம் 1 M வீரியத்தில்  மருந்து கொடுத்துவிட்டு, ஏதாவது தொந்தரவு மீண்டும் வந்தால் என்னிடம் வருமாறு கூறி அனுப்பினேன். இந்த துயரர் வரலாறு எனக்கு பெரிய பாடத்தைக்  கற்றுக் கொடுத்தது என்கிறார் மரு.குமார்.
ஆகவே  மருந்து தேர்விலோ அல்லது மருந்தை மீண்டும் தருவதிலோ மருத்துவர்களுக்கு  அவசரம் கூடாது.

ஹோமியோபதியருக்கு போலி கௌரவம் கூடாது.( FALSE SENSE OF PRESTIGE)

உலகத்தில் மிக சிறந்த ஹோமியோபதி மருத்துவர் என்று யாருமில்லை; அதுமட்டுமல்லாமல் தன்னிடம் வந்த எல்லாத் துயரர்களையும் நலப்படுத்திய மருத்துவருமில்லை. அதனால் நாம் தோல்வியுறும் போது வெட்கப்படத் தேவையில்லை. ஆனால் , நாம் கவனமில்லாமல் மருந்து தேர்வு செய்த போதோ  அல்லது நேர்மையில்லாமலும் மற்றும் அவசரத்திலும் மருந்து தேர்வு செய்து தோல்வியடையும் போது வெட்கப்படவேண்டும்.  அதேபோல் நமது திறமையை எல்லாம்  வெளிப்படுத்தி ,  முழுக்கவனத்துடன்  மருந்து கொடுத்தபிறகும் துயரர் நலமடையாவிட்டாலும் நாம் வெட்கப்படவேண்டிய அவசியமில்லை.

ஆனாலும், நாம்  மிக கவனத்துடன்  மருந்து கொடுத்த பிறகும்  துயரர் நலமடையாவிட்டால் நம்மைவிட நல்ல அனுபவமுள்ள மற்றொரு மருத்துவரை கலந்தாலோசிப்பது தான் நல்லது. அப்படி யாரும் இல்லாத நிலையில் அத்துயரரை,  நமது சக மருத்துவரிடம் சென்று சிகிச்சையெடுத்து கொள்ளுமாறு பரிந்துரை செய்வதே நல்லது. அவரும் வித்தியாசமான முறையில் அத்துயரரை அணுகி நலப்படுத்தக்கூடும். மருத்துவரின் இத்தகைய பரிந்துரைகளை துயரர்களும் விரும்புவார்கள்;அத்தோடு  நம்மைப் பாராட்டவும் செய்வார்கள். அந்த மருத்துவர் அவரை தமது திறமையான மருத்துவத்தின் மூலம் நலப்படுத்தியிருந்தாலும் , அத்துயரர் திரும்பவும் நம்மிடமே சிகிச்சை எடுத்துக் கொள்ள விரும்புவார்.  

துயரர் கூறுவதை நன்றாக கேட்கவேண்டும் ( VERY GOOD LISTENER)

மருத்துவர்கள், துயரர் கூறுவதை மிகப் பொறுமையுடன்  நன்றாக கேட்கவேண்டும் . ஏனென்றால் , அவர்  வெளிப்படுத்தும் எந்த வார்த்தைகளும் நமக்கு குறிகளாக மாற்றிக் கொள்ள உதவும். துயரர் நம்மிடம் பேசிக் கொண்டிருக்கும் போது நாம் பொறுமையில்லாமலோ அல்லது கவனக்குறைவாகவோ இருந்துவிட்டால் அவர் தெரிவிக்கும் முக்கியமான குறிகளை இழந்துவிட நேரிடும். அதனால் கவனமாக கேட்க வேண்டும். மருத்துவர் ஆஸ்லேர் , " துயரர் சொல்லுவதை மிக எச்சரிக்கையுடன் கேளுங்கள் ஏனென்றால் அவர் தமது நோய்குறிகளை சொல்லுகிறார்" என்று கூறுகிறார். இதையே மருத்துவர் பி.சங்கரன், " துயரர் சொல்லுவதை மிக எச்சரிக்கையுடன் கேளுங்கள் ஏனென்றால் அவர் தமக்கு கொடுக்கவேண்டிய மருந்தைச் சொல்லுகிறார்" என்று குறிப்பிடுகிறார்.
அதுமட்டுமல்லாமல் துயரர்களுடன் நெருக்கமாக இருந்து கவனிக்கும் போது அவருடைய எல்லாக் குறிகளையும் நம்மிடம் கூறுவார் , அத்தோடு அவருக்கு திருப்தியும் கிடைக்கும். துயரர் தமது துன்பங்களை விவரிக்கும் போது யாரவது பொறுமையுடனும் , இரக்கத்துடனும்   கேட்கும் போது  அவரது தொல்லைகள் குறைந்து மனது இலகுவாகி அவர்களுக்கு ஆறுதலும் , மகிழ்ச்சியும் கிடைக்கும். இதை உளவியலில் " காற்றோட்டம் (VENTILATION) " என்று குறிப்பிடுகிறார்கள்.

அறிவுத்திறன் வாய்ந்தவராக அல்லது விவேகமுள்ளவராக இருக்க வேண்டும். (INTELLIGENT):

மருத்துவர்  மிகுந்த அறிவுத்திறன் வாய்ந்தவராக அல்லது விவேகமுள்ளவராக அல்லது கூர்மதியுள்ளவராக இருக்க வேண்டும். அதாவது துயரருடன் கலந்துரையாடல் செய்யும் போதும், அவரது நோய்த்தன்மையை புரிந்து கொள்வதிலும் , சரியான குறிகளைத் தேர்ந்தெடுப்பதிலும், அவற்றையெல்லாம் பொருத்தி அவரது நோய்நிலையை படம்பிடித்துக்கொண்டு , அதற்குரிய ஒத்த மருந்தை தேர்வு செய்வதிலும் விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அறிவுத்திறன்மிகுந்த துயரர்களின் மூலம்,  அறிவுத்திறன்மிகுந்த   மருத்துவர்களால்  மட்டுமே ஹோமியோபதி மருத்துவத்தில் பயிற்சி செய்ய முடியும் என்கிறார் மருத்துவர். வில்லியம் குட்மன்.

தற்போதைய  மருத்துவர்கள் தன்னுடன் சிகிச்சைக்கு வரும்  துயரர்கள்  அவர்களது  குறிகளைத் தெளிவாக சொல்வதில்லை என்றும், சரியாக ஒத்துழைப்பதில்லையென்றும் குறைபட்டு கொள்கிறார்கள். உதாரணமாக , சில துயரர்கள் மருத்துவரை திட்டலாம் , சிறு சச்சரவுகளில் ஈடுபடலாம் அல்லது அடிக்ககூடச் செய்யலாம். ஆனால் ,  இவையெல்லாம் அந்தத் துயரரின் குறிகள் என்று  புத்திசாலியான மருத்துவர்களால் மட்டுமே புரிந்து கொள்ளப்பட்டு , அந்தத்துயரருக்கு பெல்லடோன்னா அல்லது ஸ்ட்ராமோனியம்  மருந்துகளில் ஒன்றைக் கொடுத்து நலப்படுத்த முடியும். அதனால் துயரர்களின் நடை, உடை , பாவனை , நிற்பது, உட்காருவது   மற்றும் பேசுவதிலிருந்து ( அழுதல் அல்லது புலம்புதல்) அவர்களை புரிந்து கொள்ள இயலும். துயரர்களை குறைகூறும் ஹோமியோபதி மருத்துவர்கள் எக்காலத்திற்கும்  பரிதாபகரமான மருத்துவராகவே இருப்பார்.

மருத்துவர் கடுமையாக உழைக்க வேண்டும் (INDUSTRIOUS):

ஹோமியோபதி மருத்துவர் கடுமையாக உழைப்பவராக வேண்டும். உழைப்பே உயர்வைத் தரும். ஒரு மருத்துவரின் வெற்றி என்பது அவரது உழைப்பின் அளவைப் பொறுத்தே அமைகிறது. ஒரு சதவீதமான பயனைப் பெற தொன்னூற்றி ஒன்பது சதவீதம் வியர்வை சிந்த வேண்டும். வெற்றிகரமான மருத்துவர்கள் என்று பெயரெடுத்த  அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. ஹோமியோபதியில் சோம்பேறிகளுக்கும்,  அறிவிலிகளுக்கும் இடமில்லை.

மருத்துவத்தில் முழுமை அல்லது பூரணநிலை படைத்தவராக இருக்க வேண்டும். (THOROUGHNESS)

துயரர் ஆய்வின் போது  மருத்துவர் ஏடாகூடமாக நடந்து கொள்ளக்கூடாது. துயரரை முழுமையாக பரிசோதித்து நாம் அறிந்துகொண்ட அனைத்தையும்  தவறாமல் குறித்து வைத்துக்கொள்ளவேண்டும்.  துயரர்களுக்கு காய்ச்சல் , புண்கள் மற்றும்  கட்டிகள்  இருந்தால் அவற்றை  நமது கைகளால் தடவி அதன் தன்மைகளை அறிந்து கொள்ள வேண்டும். அதேபோல் , மருத்துவர்கள் துயரர்களிடம் இனிமையாகவும் , நகைசுவையுடனும்  பேச வேண்டும். இச்செயல்  அவர்களின் துன்பங்களை மறந்து நம்முடன் சரளமாக உரையாட உதவும். அதனால் ஹோமியோபதி மருத்துவர் முழுமையானவராக இருக்க வேண்டும்.

ஹோமியோபதி மருத்துவர் பணிவுடன்  இருக்க வேண்டும் (POLITE):

ஹோமியோபதியர்கள் துயரர்களிடத்தில் மிகவும் பணிவுடனும்  அவருக்கு மனநிறைவு தரும் வகையிலும் நடந்து கொள்ள  வேண்டும். பேச்சிலும் , செயலிலும் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் ஒரு மருத்துவரால் துயரருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நிம்மதியை வரவழைத்துத் தரமுடியாது.


அத்தியாயம் - இரண்டு.
மருத்துவம் செய்யும் வழிமுறைகள்.

மருத்துவத்  தொழிலையும் ஒரு வகையில் “வியாபாரம் அல்லது வாணிபம் அல்லது வணிகம் “ போன்றே கருத  வேண்டும் என்று சில வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். வியாபாரம் வெற்றியடைய எவ்வாறு வாடிக்கையாளர்கள் முக்கியமானவர்களாக இருக்கிறார்களோ, அதேபோல் மருத்துவத்துறையில்  துயரர்கள் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள்.  துயரர்களை நலமாக்குதல் ஒன்றே மருத்துவரின் தலையாய கடமை என்று மாமேதை ஹானிமன் தமது முதலாவது மணிமொழியில் ( ORGANAN OF MEDICINE) கூறியவாறு  , துயரர்களை அவர்களின் பிணியிலிருந்து விடுவித்தும், அவர்களை திருப்திப் படுத்துவதும் நமது தொழிலுக்கு ( ஹோமோயோபதி ) இன்றியமையாததாக இருக்கிறது.   ஒரு ஹோமியோபதி மருத்துவர் எவ்வளவு தான் சிறந்தவராக  இருந்தாலும் தன்னுடன் சிகிச்சை எடுத்துக் கொள்ள வரும் துயரர்களிடம் மனமகிழ்ச்சியின்றியும்  , திருப்தி ஏற்படும் வகையிலும் நடந்து கொள்ளாவிட்டால் அவர்கள் வேறொரு மருத்துவரை நாடி சென்று விடுவார்கள்.  அதனால் மருத்துவர்கள் , துயரர்களை மகிழ்ச்சியுடனும்  , புன்னகையுடனும் வரவேற்க வேண்டும். மாறாக, கோபம் கொண்ட முகத்துடனும், அசட்டையுடனும் அல்லது துயரர்களுக்கு நம்பிக்கை ஏற்படாத வகையிலும் துயரர்களை வரவேற்றால், அவர்களுக்கு நம் மீது அவநம்பிக்கை ஏற்படும். அதனால் துயரர்களை இன்முகத்துடன் வரவேற்பதில் நமக்கு எந்த நஷ்டமும் ஏற்படப் போவதில்லை ; மாறாக நன்மைகளே விளையும். ஒரு ஹோமியோபதி மருத்துவர் தமது  மருத்துவத் தொழிலில் சிறந்து விளங்க கீழ்காணும் அணுகுமுறைகள் அவசியம் தேவை.

துயரருக்குரிய நேரத்தை நியமனம் செய்து கொடுத்தல் ( APPOINTMENT):


நம்மிடம் சிகிச்சை செய்து கொள்ள வரும் துயரர்களுக்கு அவர்களை சந்திப்பதற்கு உகந்த நேரத்தை நியமனம் செய்து கொடுத்து , அந்த நேரத்தில் சந்திக்க வேண்டும். இவ்வாறு நேரத்தை நியமனம் செய்து கொடுக்கும் போது அத்துயரருடன் கலந்துரையாடல் செய்வதற்கு போதுமான நேரம் எடுத்துக்கொள்ள முடியும். அத்துடன் நமக்கும் நேரம் மிச்சமாகும். பொதுவாக , உடனடி அல்லது தீவிர நோய்களை குணப்படுத்த மருந்து தேர்வு செய்வதற்கு நமக்கு குறைந்த நேரமே தேவைப்படும். ஏனென்றால் , அந்த சூழ்நிலையில் துயரர்களின் நோய்த்தன்மையை , அவர்கள் தெரிவிக்கும் குறிகளிலிருந்து மிகத் தெளிவாக புரிந்து கொண்டு , விரைவாக மருத்துத் தேர்வு செய்திட இயலும். இதற்கு அதிகபட்சமாக பதினைந்து நிமிடங்கள் தேவைப்படலாம். ஆனால், நீண்டகால நோய்த்தாக்குதலில் ( நாட்பட்ட) , துயரர்களின் தனிப்பட்ட மற்றும் கடந்தகால வரலாறு , குடும்ப வரலாறு மற்றும் மனக்குறிகள் போன்றவற்றைப்  விலாவாரியாகத் அறிந்துகொள்ள நமக்கு குறைந்தது ஒருமணி நேரமாவது தேவைப்படும்.  அப்போதுதான் ஒத்த மருந்தை தேர்வு செய்ய ஏதுவாக இருக்கும். நாளடைவில் இந்த ஒரு மணி நேரம் சுருங்கி முப்பது அல்லது நாற்பது நிமிடங்களுக்குள் மருத்துத்தேர்வு செய்திட இயலும். ஆனால் இந்த குறிப்பிட்ட நேரத்திற்குள்  துயரர்களின் முழுபிம்பத்தையும் நம்மால் அறிந்து கொள்ள முடியாவிட்டால் , அவருக்கு அவசரமாக மருந்து  கொடுப்பதை தவிப்பது நல்லது. அத்துயரர்களுக்கு நாம் மீண்டும் நேரம் ஒதுக்கி கொடுத்து சரியான மருந்தைத் தேர்வு செய்ய வேண்டும். அதுவே நமக்கு வெற்றியைக் கொடுக்கும்.

அதன் பிறகு , நாம் புகழ்பெற்ற மருத்துவராக பெயரெடுத்த  பின்னர் , ஒரே நாளில் பல துயரர்கள் வரக்கூடும். அத்தருணங்களில் நம்மால் சந்திக்க இயலும் துயரங்களுக்கு மட்டுமே நேர நியமனம் செய்து தர வேண்டும். மாறாக பல துயரர்களுக்கு நேரம் ஒதுக்கித் தந்து , அதை சரிக்கட்ட மற்ற துயரர்களின் நேரத்தைக் குறைத்து , அவசரகதியில் மருந்து கொடுத்து அனுப்பினால் , அது நமது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்திவிடும். குறிப்பாக துயரர்களின் நலமும், வாழ்க்கையும் மருத்துவர்களின் கையில்  இருப்பதால் அவர்களின் நலத்தில் மிக உயர்ந்த கவனத்தைச் செலுத்த வேண்டும். அப்படி செய்யும் பொழுது நமது புகழோடு , ஹோமியோபதியின் புகழும் சேர்ந்தே பரவும். அதே சமயத்தில் துயரர்கள்,  தங்களுக்கு குறைந்த நேரம் ஒதுக்கிப் பார்த்தல் கூட போதும் என்று வேண்டிக் கேட்டாலும் , நமக்கு நேரம் போதவில்லை என்று கருதும்பட்சத்தில் அத்துயரருக்கு நேரம் ஒதுக்காமல் மறுத்துவிடவேண்டும். மருந்துதேர்வில் தோல்வி ஏற்படாமல் இருக்க புத்திசாலியான மருத்துவர்கள் இதைக் கட்டாயம் கடைபிடிப்பார்கள்.


துயரர் தகவல்களை முழுமையாக ஆவணப்படுத்திக் கொள்ளவேண்டும்
(UPKEEP COMPLETE AND ACCURATE RECORDS).

துயரர் ஆய்வின் போது நாம் பெற்ற குறிகளையும், அவரைச் சந்தித்த நாள்   மற்றும்  அவருக்கு கொடுத்த  மருந்துகள் பற்றிய தகவல்கள் போன்றவற்றை   மிக கவனமாக பதிவு செய்து வைத்துக் கொள்ளவேண்டும்.  அதே போல் மருந்து கொடுப்பதற்கு முன்பு துயரர் இருந்த நிலையையும் , மருந்து எடுத்துக்கொண்ட பிறகு ஏற்பட்ட மாற்றங்களையும் தவறாமல் பதிவு செய்து கொள்ளவேண்டும். சில துயரர்கள் இருபது அல்லது முப்பது  ஆண்டுகள் கழித்து கூட நம்மிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ள திரும்பி வரலாம் . அச்சமயத்தில் இக்குறிப்புகள் நமக்கு மிகவும் பயன்படும். இதற்கு எடுத்துக்காட்டாக மருத்துவர் அமர்.டி.நிகாம் ஒரு துயரர் வரலாற்றை பதிவு செய்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் அவர் ஒரு துயரருக்கு   பல்சாட்டில்லா மருந்து கொடுத்து  நலப்படுத்தியிருக்கிறார். அத்துயரர் பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு ஒரு எய்ட்ஸ் நோயாளியாக  மீண்டும்  வருகிறார். அவரின் குறிப்பேட்டை எடுத்து பார்க்கும் போது  அப்போதும் அவர் அதே பல்சாட்டில்லா துயரராகவே இருந்திருக்கிறார் என்பதை தமது நூலில் பதிவு செய்திருக்கிறார். ஆகவே துயரர்கள் பற்றிய குறிப்புகளை சரியாக பராமரிக்க வேண்டும்.

மருந்துத்தேர்வில் அவசரம் கூடாது (NEVER HURRY).

மருத்துவர்கள் , துயரருக்குரிய மருந்தை தேர்வு செய்வதில்  அவசரம் கூடாது. மிகக் கவனத்துடன் ஒத்த  மருந்தினைக் கொடுக்க வேண்டும். மருந்து கொடுத்த பிறகு தமது மருந்துத் தேர்வில் அவருக்கு சந்தேகம் வரக்கூடாது. அதேபோல் மருந்து கொடுத்தபிறகு, அம்மருந்து செயலாற்றி முடிக்கும் வரை பொறுமையுடன் இருக்க வேண்டும். நியாயமான காரணமின்றி   வேறு மருந்தினை கொடுக்கக் கூடாது. நமக்கு சந்தேகம் எழும்  போது காத்திருப்பது தான் சரியானது என்று  மருத்துவர்.ராபர்ட்ஸ் குறிப்பிடுகிறார். மேலும்,  ஒரு நல்ல மருத்துவர் அவசியம் ஏற்பட்டால் தான் தமது துயரருக்கு  அறுவைசிகிச்சை தேவை  என்று முடிவெடுப்பார். அத்தகைய முக்கியத்துவத்தைத் தான் நாம் மருந்தினை கையாளுவதில்   கடைபிடிக்க வேண்டும் என்கிறார் ராபர்ட்ஸ்.

மருத்துவர்-துயரர் உறவு அல்லது தொடர்பு
( COMMUNICATION BETWEEN DOCTOR AND PATIENT)

ஒரு துயரர் , தான் முழுமையாக நலமடைவதற்கு மருத்துவருடன் முழுமனதுடன் ஒத்துழைக்கவேண்டும்.  மருத்துவரும் அவருடன் முழு அர்ப்பணிப்புடன் நடந்து கொள்ள  வேண்டும். துயரருக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டு  உள்ளது? , அதற்கான காரணம் என்ன? நமது மருந்துகள் எவ்வாறு செயலாற்றி நலப்படுத்தும் என்பனவற்றை அவர்களுக்கு விளக்கி புரிய வைக்க வேண்டும். அத்துடன் அவர்களுக்கு நம்பிக்கையூட்டி உற்சாகப்படுத்தவும்    வேண்டும்.

ஒவ்வொரு பொருளுக்கும் , ஒளிமயமானது  மற்றும் இருள்மயமானது என்ற இரண்டு பக்கங்கள் உண்டு. அதே போல் மருத்துவத்திலும் உண்டு. ஆனால், மருத்துவத்துறையில் , துயரர்களை   நலப்படுத்த முடியும் என்று  நம்பிக்கை தருபவர்களாகவே மருத்துவர்கள் இருக்க வேண்டும். ஏன்?, தீவிர நோய்தாக்குதலினால் நம்பிக்கையற்ற நிலையில் உள்ள துயரர்களைக் கூட அவர்களை  ஊக்கப்படுத்தி  நீண்ட நாட்கள் வாழ செய்ய முடியும். அதற்கு நம்பிக்கையும், வாழவேண்டும் என்ற மனநிலையும் துயரர்களுக்கு இருக்க வேண்டும். அத்தகைய மனநிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது மருத்துவர்களின் கடமையாகும். சிலசமயம் துயரர்கள்  மனத் தளர்ச்சியடையும் போது தங்களின் நிலை எவ்வாறு உள்ளது? என்று மருத்துவரிடம் கேட்பதுண்டு. அவ்வாறான தருணங்களில் அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் நமது பதில் இருக்க வேண்டும். மாறாக, துயரருக்கு அவநம்பிக்கை தரும் விதமாக எதையும் கூறக்கூடாது. அதே போல் துயரர்களின் நோய்நிலையை விளக்கி, அவர்களின் ஒத்துழைப்பை பெறவும் தயங்கக்கூடாது. அந்த சூழ்நிலையில் மிகவும் கவனத்துடன் வார்த்தைகளை பிரயோகப் படுத்த வேண்டும். நமது ஊக்கம் தரும் வார்த்தைகளே அவர்கள் விரைவில் நலமடைய உதவும்.

துயரர்களை விமர்சனம் செய்யக்கூடாது. ( NEVER TO CRITICISE PATIENT)

நமது சிகிச்சையில் இருக்கும் துயரர்கள் சில சமயம் தவறு செய்யலாம், நமக்கு ஒத்துழைப்புத் தராமல் இருக்கலாம், அல்லது நமது அறிவுரைகளை கடைபிடிக்காமல் போகலாம் . அத்தகைய சந்தர்ப்பங்களில் நாம் அவர்களை விமர்சனம் செய்யக்கூடாது. ஏனென்றால் நோயுற்ற நிலையில் அவர்கள் குழந்தைக்கு ஒப்பானவர்களாக இருப்பார்கள். ஒரு குழந்தையைப் பேணுவது போல் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். சில துயரர்கள் குறித்த நேரத்தில்  மருத்துவமனைக்கு வரமாட்டார்கள்; முறைப்படி மருந்து எடுத்துக் கொள்ளமாட்டார்கள். அந்த மாதிரியான தருணங்களில் அவர்களிடம் நாம் கோபம் கொள்ளாமல்  இன்முகத்துடனே நடந்து கொள்ள வேண்டும்.

சில சமயம்  துயரர்கள் நம்முடைய மருத்துவத்தை புறக்கணித்து விட்டு மற்ற மருத்துவர்களை நாடிச் செல்லலாம். அத்தகைய சந்தர்ப்பங்களில் நாம் கோபம் கொள்ளாமல் , அவர்கள் நம்மிடம் எடுத்துக்கொண்ட சிகிச்சை விபரங்களைக் குறித்து கொடுத்தனுப்பவேண்டும். அது தான் நமது சகமருத்துவருக்கும் , அத்துயரருக்கும்  பயனுள்ளதாக இருக்கும். அது தான் நல்ல மருத்துவருக்கான அடையாளம். சிலநாட்களுக்குப் பிறகு  அத்துயரர் மீண்டும் நம்மிடம் சிகிச்சைக்கு வரலாம்.
மருத்துவர் பி.சங்கரன் இத்தகைய சிறந்த பண்புகளை பெற்றவர். எந்தத் துயரராவது மற்ற மருத்துவரிடம் செல்லலாமா? என்று கருத்து கேட்டால் , அவர் தவறாமல் பரிந்துரைப்பது வழக்கம். இதை அவரது நூலில்( ELEMENTS OF HOMEOPATHY)  பதிவு செய்திருக்கிறார்.   அதே போல் , எந்த துயரராவது வேறொரு ஹோமியோபதி மருத்துவரிடமிருந்து அவரிடம் சிகிச்சைக்கு வந்தால், அவர் ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்பைப் பற்றி அவர்களுக்கு விளக்கி திரும்பவும் பழைய மருத்துவரிடம் அனுப்புவது தான் அவரது வழக்கம். சம்பந்தப்பட்ட மருத்துவரின் பரிந்துரையில்லாமல் வரும் துயரர்களுக்கு  அவர் சிகிச்சையளிப்பதில்லை. இத்தகைய  உயர்ந்த பண்புகளே அவரை மிகச் சிறந்த ஹோமியோபதியராக உருவாக்கியது.

வீட்டில் இருக்கும் போதும்  துயரர் குறிப்புகளில் கவனம் செலுத்துதல்.
(HOME WORK)

சில முக்கியமான அல்லது சிக்கலான துயரர்  சரிதையை  வீட்டிற்கு எடுத்து சென்று திரும்ப வாசித்து தெளிவாக புரிந்து கொள்வது நல்லது. இந்தப் பழக்கம்  மருத்துவமனையில் நமது நேரத்தை சேமிக்க உதவும். அதே சமயத்தில் விடுபட்டுப்போன சில பகுதிகளை புரிந்து கொள்ளவும் இது உதவும். குறிப்பாக, துயரர்களின் குடும்ப வரலாறு  , அவர்களுக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட நோய்த்தொற்று போன்றவற்றை அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மூலம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். அப்படி விசாரித்து அறிந்து கொள்ளும் போது துயரர்களுக்கு நம்மீது மதிப்பும் , நம்பிக்கையும் அதிகரிக்கும்.

மருத்துவத்திற்கான கட்டணம் (FEES)

மருத்துவர்கள் , மருத்துவத்திற்கான கட்டணம் வசூலிப்பதில் அதிக கவனம் செலுத்தக்கூடாது. அப்பொறுப்பை நமது உதவியாளர்களிடம் விட்டுவிட வேண்டும்.  ஆனாலும் , மருத்துவமனையில்  சிகிச்சை கொடுப்பது மற்றும் தனிப்பட்ட முறையில் வீட்டிற்கு சென்று மருந்தளிப்பது  போன்றவற்றிற்கு நிரந்தரமான கட்டணம் நிர்ணயம் செய்து கொள்வது மிகவும் நல்லது.  அதே சமயத்தில் மருத்துவக் கட்டணம் கொடுக்க இயலாத ஏழைத் துயரர்களிடம் கட்டணம் வாங்காமலே சிகிச்சை தர வேண்டும். இது நமக்கு புகழை பெற்று தரும். தவிர, அந்தத் துயரர்களுக்கென்று உறவினர்கள் , நண்பர்கள் இருப்பார்கள். அவர்கள் மத்தியில் நமது செல்வாக்கு பெருகும். அதன் மூலம் பல துயரர்கள் நம்மிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ள வரலாம்.  அதன்மூலம் நமது வருவாய் பெருகும். நாம் நலமாக்கும் ஒவ்வொரு துயரரும் நிலத்தில் தூவும் விதைக்கு சமமானது. ஒருநாள் அந்த விதை முளைத்து, வளர்ந்து, மரமாகி அதிக கணிகளைக் கொடுக்கும்.

அத்தியாயம் -மூன்று
வெற்றிக்கான படிக்கட்டுகள்

ஹோமியோபதி மருத்துவர்கள் வெற்றிகரமான மருத்துவராக திகழ கீழ்காணும் வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
1.        ஒத்தவை விதிகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் (LAW OF SIMILARS).

2.       ஹோமியோபதி  மருந்துகளை பற்றி  முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் (KNOWLEDGE OF MEDICINES).

3.       துயரர்களின் நலமாக்கல் வரலாற்றின் மூலம் மருந்துகளை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அதேபோல் உங்கள் அனுபவங்களையும் கட்டுரைகள் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

4.       மீண்டும்  மீண்டும் பரிசோதனை செய்யுங்கள் . அதில் எது உண்மையோ அதை பிடித்துக்கொள்ளுங்கள்,


5.       மருந்துகாண் ஏட்டில் உள்ள துயரர்கள் குறிமொழிகளை நன்றாக கற்றுக் கொள்ள வேண்டும். திரும்பத்  திரும்ப வாசித்து  குறிமொழியின் உள்ளார்ந்த அர்த்தத்தை (SUBTLE MEANING) புரிந்து கொள்ள  வேண்டும்.

6.       ஹோமியோபதி கருத்தரங்கம் மற்றும்  குழு கலந்துரையாடல்களில் தொடர்ந்து பங்கெடுத்துக்  கொள்ள வேண்டும். 

7.       சரியான முறையில் துயரர் கலந்துரையாடல் மற்றும் மருந்துத்தேர்வு செய்தல்.

8.       துயரர் ஆய்வின் மூலம் அறிந்துகொண்ட மருந்தை தேர்ந்தெடுத்த மருந்தை துயரருக்கு கொடுப்பதற்கு முன்பு , அதன் மூல மருந்தியல் களஞ்சியத்தோடு ஒப்பிட்டு சரிபார்த்துக் கொள்ளவேண்டும்.

9.       பொருத்தமான வீரியத்தில் மருந்தளித்தல் மற்றும் மருந்தை உரிய தருணத்தில் திரும்பவும்   கொடுத்தல் (CORRECT POTENCY and REPETITION).

10.    மருத்துவர் J.T. கெண்ட் அவர்களின் பனிரெண்டு வழிகாட்டுதலை கூர்ந்து கவனித்து   (12-OBSERVATION) அதன் வழியில் பணியாற்ற வேண்டும்.

அத்தியாயம் -நான்கு
மருத்துவர் செய்ய வேண்டியதும் , செய்யக்கூடாததும்  ( DOs & DON’Ts)

ஒரு சிறந்த மருத்துவர் எதை செய்ய  வேண்டும், எதை செய்யக்கூடாது என்பதை மருத்துவர் பி. சங்கரன் கீழ்வருமாறு தெளிவாக வரையறுத்துக் கூறியுள்ளார். 
1.       உங்களிடம் மருத்துவ உதவி கேட்காதவர்களுக்கு அறிவுரையோ அல்லது மருந்தோ கொடுக்காதீர்கள். அதே போல் இலவசமாக மருந்தோ அல்லது ஆலோசனையோ கொடுக்காதீர்கள். இலவசமாக கொடுக்கப்படும் எப்பொருளுக்கும் மதிப்பும் , அங்கிகாரமும் இருக்காது.

2.       உங்களிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ளும்  எந்தத் துயரரையும் நீங்களாகவே அழைத்து  நலம் விசாரிக்காதீர்கள். துயரரோ அல்லது அவர்களது உறவினர்களோ உங்களை அழைக்கட்டும். அதுதான் சரியான முறை. நாமே  அழைத்து கேட்கும் போது , துயரருக்கு நம்மீது  வீணாக சந்தேகம் ஏற்படலாம். அதனால் தவிர்ப்பது நல்லது.


3.       மருத்துவமனையில் இருக்கும்  போது,  உங்கள் துயரர்களிடமிருந்து எந்த பரிசையும் அல்லது உணவுப்பொருள்களையும் வாங்காதீர்கள். அதே போல் மருத்துவம் சம்பந்தமாக துயரர்களின் வீட்டிற்குச் செல்லும் போது, அங்கே அவர்கள் தரும் உணவு அல்லது குளிர்பானங்களை ஏற்றுக் கொள்ளாதீர்கள். 

4.       துயரர்களிடம் பொய் சொல்ல கூடாது. நீங்கள் கூறியது பொய் என்று தெரிய வரும் போது , அதன் பிறகு நீங்கள் கூறும் எந்த வார்த்தையையும் நம்ப மறுப்பார்கள்.

5.       எந்த மருத்துவரையும் நீங்கள் குறைகூறக்கூடாது . அதே போல் எந்த துயரராவது மற்ற மருத்துவர்கள் பற்றி குறை கூறினால் அதை மறுத்து,  அவர்களின் நியாயத்தை எடுத்துரையுங்கள். இன்று மற்ற மருத்துவரை குறைகூறும் அத்துயரர் , நாளை உங்களைப்பற்றி மற்றவர்களிடம் குறைகூறக் கூடும்.

6.       மற்ற மருத்துவர்கள் தவறிழைக்கும் போது அவர்களை பற்றி விமர்சனம் செய்யக்கூடாது. நாமும் , தெரியாமல் (நமக்கே) பல தவறுகள் செய்திருக்கக்கூடும்.

7.       எந்தத் துயரருடனும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது.

8.       எந்தத் துயரருக்கும் மருத்துவம் சம்பந்தமான உத்தரவாதம் தரக்கூடாது  ; ஏனென்றால் உங்கள் வாழ்க்கைக்கே நீங்கள் உத்தரவாதம் தர இயலாது.

9.       உங்களைப்பற்றி நீங்களே புகழ்ந்து அல்லது பெருமை பேசி கொள்ளாதீர்கள்; உங்கள் செயல் பேசட்டும்.

10.    மாற்றுமுறை  மருத்துவம் பற்றி கடுமையாக விமர்சனம் செய்யாதீர்கள்.

11.    நல்ல மருத்துவ பத்திரிக்கைகள் வாங்கி தொடர்ந்து படித்து வாருங்கள். அதன் மூலம் உங்கள் அறிவு வளரும். நல்ல நூல்கள் வாங்குவது சிறந்த மூலதனமாகும்.

12.    புதிய கண்டுபிடிப்புகளையும், ஆய்வுகளையும்  கற்றுக் கொள்வதற்கு எப்போதும் தயாராக இருங்கள். அதேபோல் சரியாக புரிந்துகொள்ளவும்,  கற்றுக்கொள்ளவும் மற்றும் நல்லவற்றை பாராட்டவும் தயாராக இருங்கள். 

13.    எந்த மருத்துவத்தையும் பழிக்காமல் அதில் உள்ள நல்ல விஷயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக , எனது நண்பருக்கு நீண்ட நாட்களாக  சிறுநீரக கல் உபாதை இருந்தது. அவருக்கு ஹோமியோபதி மருந்து கொடுத்த பிறகு வலி குறைந்தது. ஆனால் சிறுநீரக கல் வெளிவர வில்லை. ஆராய்ந்து  பார்த்தபோது (SCAN)  அந்தக் கல் வெளிவர முடியாத நிலையில் ஒட்டிக் கொண்டிருந்தது. இந்த தருணத்தில் ஹோமியோபதி மருந்துகள் பயனளிக்காது. அதனால் அவரை அலோபதி மருத்துவரை அணுகி அதிவலைச் சிகிச்சை ( LITHOTRIPSY) எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரை செய்தேன். அவரும் அந்த சிகிச்சை எடுத்துக்கொண்டு நலத்துடன் திரும்பி வந்தார். இது தான் நவீன மருத்துவ அறிவு. அதனால் நல்லவைகள் எங்கிருந்தாலும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தச் சமயத்தில்  மருத்துவரின் வீண்பிடிவாதம் துயரருக்கு சிரமத்தை ஏற்படுத்தி விடும்.

ஆகவே, ஹோமியோபதி மருத்துவ நண்பர்களே! மேலே குறிப்பிடப்பட்ட வழிகாட்டுதலை  மிக கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள். உங்களது வெற்றியின் பாதை தானாக திறந்து கொள்ளும்.

           Bibliography :

  1. The Elements of Homeopathy.  Dr.P.Sankaran.
  2. Article by Dr. Kumar.