Friday, 28 July 2017

சோலிடாகா

சோலிடாகா
(SOLID)
SOLIDAGA VIRGA-AUREA




சிறுநீரகங்கள் செயலிழந்து துன்பப்படும் துயரர்களை மீட்டெடுத்து அவர்களை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வரும் மருந்து சோலிடாகா . இம்மருந்து  குறிப்பாக சிறுநீரகங்கள், ஜீரணவழிப்பாதை, கால்கள் மற்றும் இரத்தத்திலும் நன்றாக வேலை செய்கிறது. 


துயரர்கள்  மிகவும் பலவீனமாக இருப்பார்கள். குளிர்ச்சியும் , வெப்பமும் மாறிமாறி தாக்குவதாக உணருவார்கள். இவர்களுக்கு சுலபமாக சளி பிடிக்கும்.

நாட்பட்ட  சிறுநீரக வேக்காடு ( NEPHRITIS=BRIGHT’S DISEASE) .

இம்மருந்து சிறுநீரகங்களில் நேரிடையாக செயல்பட்டு இறுக்கத்தையும்  மற்றும் வீக்கத்தையும் ஏற்படுத்துவதால், சிறுநீர் கழிப்பதில் சிரமப்படுபவர்களையும் , சிறுநீரகத்தில் ஏற்படும் வலிகளையும் நலப்படுத்துகிறது.   (மரு. கவ்தர் வெய்த்).

சிறுநீரகங்கள்  இரத்தத்தில் இருக்கும் விஷப்பொருள்களை வடிகட்டி வெளியேற்றாததால் , அவ்விஷங்கள் உடலில் தங்கி அதனால் ஆஸ்த்மா ( UREMIC AATHMA) ஏற்படும் என்று மரு. எஸ்.ஆர்.பதக் குறிப்பிடுகிறார். 

ஆஸ்த்மாவும் , சிறுநீர்கழிப்பதில் சிரமமும் (இரவில்) சேர்ந்தே இருக்கும். ( மரு. எஸ்.எம். சர்க்கார்).

மஞ்சள்  சுரத்திற்கும் மற்றும் பூனைகளினால் ஏற்படும் ஒவ்வாமைக்கும் இது மிகச் சிறந்த மருந்து என்கிறார் மரு. வெர்முலன் பிரான்ஸ் . 

சுக்கிலசுரப்பியில் அழற்சி ஏற்படுவதாலும் அல்லது பெருத்துவிடுவதாலும் கண்கள் சிவந்து காணப்படும்.

வாயில் கசப்புச்சுவை இருந்து கொண்டேயிருக்கும். நாக்கில் அடர்த்தியான மாசு படிந்திருக்கும்; சிறுநீர் நன்றாக கழிந்துவிட்டால் இது சரியாகிவிடும்.

சிறுநீர் கருமையாகவும் மற்றும் சிறிதளவே  வெளியேறும் . அல்லது தெளிந்த, முடைநாற்றமுடைய (STINKING) , படிகாரத்தின் இயல்புடன் , பசை போன்று வெளியாகும் (BENZ-AC,NIT-AC).

சிறுநீரகங்கள் கூருணர்ச்சியுடன் , சிறு அழுத்தத்தையும் தாங்காத நிலையில் புண்ணாகி , வலியுடன் வீங்கிக் காணப்படும். அதனால் சிறுநீரகத்தில் இருக்கும் வலி அடிவயிறு , சிறுநீர்ப்பை மற்றும் தொடைப்பகுதி வரை நீடித்திருக்கும்  ( BERB).

பெண்களுக்கு கர்ப்பப்பை பெருத்து விடும்; அதனால் சிறுநீர்ப்பையை கிழே அழுத்தித் தள்ளும். நார்த்திசுக்கட்டிகள். பெண்களுக்கு இடுப்புவலி வந்தால் அது உடல்முழுவதையும் பாதித்து விடும்.

கால்களில் சிவப்பான இரத்தப்புள்ளிகள் . நீர்கோவையுடனும் மற்றும் அரிப்புடனும் காணப்படும். (PETECHIAE).

தோலில் கரப்பான் புண் இருக்கும்; சிறுநீர் உள்ளமுக்கப்பட்டதால் தொல்லைகள் அதிகரிக்கும்.

இவர்களது தொல்லைகள் யாவும் அமுக்குவதால் அல்லது அழுத்துவதால் அதிகரிக்கும் . சிறுநீர் தாராளமாக வெளியேறிவிட்டால் தொல்லைகள் குறைந்து விடும்.

ஆர்சனிக்கம் ஆல்பம்  இதனுடைய உறவு மருந்து ஆகும். 



ரூடா

ரூடா
(RUTA)
RUTA  GRAVEOLENS




எலும்புகளிலும் , எலும்புகளின் மேலுள்ள தோல்களிலும் அடிபட்டதால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு ரூடா சிறந்த மருந்து. அதேபோல் எலும்பு முறிவுகள் , எலும்பு மூட்டுகள் நழுவுதல் (முக்கியமாக) , வாதநோய் சார்ந்த  மற்றும் இணைப்புத் திசுக்களில் ஏற்படும் தொல்லைகளுக்கும் மிக சிறந்தது. கணுக்கால் மற்றும் மணிக்கட்டுகளில்  சுளுக்கு   வீக்கம் போன்ற உணர்ச்சி போன்ற  குறிகளில் ரூடா, ரஸ்டாக்ஸ்  மருந்தை ஒத்திருக்கிறது.


இவர்கள் பதட்டம், எரிச்சல் மற்றும் வளைந்து கொடுக்காத தன்மையுள்ளவர்களாக இருப்பார்கள். மனம் மந்தமாக இருக்கும் அதனால்  சிந்தித்து செயலாற்றுவதற்கு விரும்பாதவர்கள். சந்தேககுணம். சண்டையிடும் குணம் . நடந்துவிட்ட செயலுக்கு அகச்சான்றின் உறுத்தல் உள்ளவர்களாகவும் இருப்பார்கள் (REMORSEFUL). காய்ச்சலின்  போதும் அல்லது உடலின் வெப்பம் அதிகமாகும் போகும் ஏற்படும்  திகில் உணர்வினால் இறந்து விடுவோம்  என்று பயம் தோன்றும். 


தான் எப்போதும் ஏமாற்றப்படுவதாக கற்பனை செய்து கொள்வார் அதனால் தன் மேலும் மற்றவர்கள் மேலும் அதிருப்தி இருக்கும். ( மரு. வெர்முலன் பிரான்ஸ்)


உடல் முழுவதும் விறைப்பாக இருக்கும் . உடல் உழைப்பின் போது  விரைவில் களைத்து விடுவார்கள். முதுகைக் கீழே வைத்துப் படுக்கும் போது இவர்களது முதுகுவலி குறையும் . அதேசமயத்தில் கீழே படுக்கும் போது உடல் பாகத்தில் புண்போன்ற உணர்ச்சியும் இருக்கும். மனஅமைதியின்றி அல்லது நிலைகொள்ளாமல் படுக்கையில் அடிக்கடி புரண்டு படுப்பார்கள்; இடம் மாறுவார்கள். இது ரூடாவின் முக்கியக் குறிகளில் ஒன்று.

தூக்கத்தில் இருக்கும் பொழுது இலேசாக தொட்டாலும் திடுக்கிட்டு விடுவார்கள்.( மரு. வெர்முலன் பிரான்ஸ்)

தலைசுற்றல்; மாலையிலும் , நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்தாலும் தொல்லைகள் கூடும். இவர்களுக்கு கழுத்து விரைத்துக் கொள்ளும்.


கண்களை நுண்ணிய வேலைகளில் உபயோகப்படுத்துவதால் ஏற்படும் கண் கோளாறுகள்; உதாரணமாக கடிகாரம் பழுது பார்த்தல், அச்சுக்கோர்த்தல், கூர்ந்து வாசித்தல் , நுட்பமான தையல் வேலை, மரம் மற்றும் கல் போன்றவற்றைச் செதுக்கிச் சிற்பவேலை செய்தல் , நகைகளுக்கு கல் பதித்தல் முதலிய வேலைகளில் ஈடுபடுவோர்களுக்கு பார்வை பலவீனமடைந்து மங்களாதல். அதனால் தலைவலியும் ஏற்படும். கண்கள் சிவந்து எரிச்சலுடன் இருக்கும்.


முதுகுவலி , இடுப்புவலி மற்றும் தொடைநரம்பு வாதவலி ( SCIATICA) போன்ற வலிகள்; கீழே படுத்தால் குறையும்.


கால்களில்  ஏற்படும் வாதவலிகள் குளிர்ச்சியான , ஈரப்பதமான பருவ நிலையிலும் , உடலுழைப்பின் போதும் அல்லது சிரமம் எடுக்கும் போதும் அதிகமாகும். நாற்காலியிலிருந்து எழுந்திருக்கும் போது கால்கள் துவண்டு போகும். அதாவது தொடைகளும் , தசைகளும் அவ்வளவு பலவீனமாக இருக்கும்.

குளிந்த நீரைப் பருக கடுமையான , தனிக்கமுடியாத தாகம் இருக்கும்   (J.T. கெண்ட்)

மலசிக்கல் இருக்கும்; அடிக்கடி பயனில்லாத மலம் கழிக்கத் தூண்டுதல் ஏற்படும்.

மலப்பை நழுவுதல் ( RECTAL PROLAPSE OR PROLAPSE ANI ) என்பது இம்மருந்தின் முக்கிய குறியாகும். குறிப்பாக பிள்ளைபெற்ற பிறகும் , மலம் கழிக்க முயற்சிக்கும் போதும் மலப்பை நழுவினால் அதற்கு ரூடா தான் மருந்து என்பதில் சந்தேகத்திற்கு சிறிதும் இடமே இல்லை. 

மலம் கடினமாக இருந்தாலும்  சரி அல்லது  இளகி இருந்தாலும் சரி மலத்தைக் கழித்தவுடன் ஒவ்வொரு தடவையும் தவறாமல் மலப்பை நழுவும்.

மலக்குடல் பகுதியில் உண்டாகும் புற்று நோயிற்கு ரூடா மிகச் சிறந்த மருந்து என்கிறார் மரு. வில்லியம் போயரிக்.


காயங்களின் விளைவாக எலும்பின் மேல்தோல் தடித்து பல இடங்களில் கடினமாகி முண்டுகள் போல் வீக்கம் ( GANGLION)  இருக்கும். எலும்பின் மேல்தோல்,  மூட்டுகள் , தசைநார்கள் மற்றும் மணிக்கட்டுகள் ஆகிய இடங்களில் கழிவுப் பொருள்கள் தேங்கும்  குணமும் காணப்படும்.

எலும்புகளை மூடியுள்ள சவ்வுகள்  மற்றும் தசைநாண்கள் கிழிந்தும் , கணுக்கால் மற்றும் மணிக்கட்டுகளில் பெரிய அளவில் சுளுக்குவீக்கம் ஏற்பட்டிருக்கும் துயரர்களை ரூடா நலப்படுத்துகிறது. அதே சமயத்தில் நீண்ட நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட சுளுக்கினால் வலி உருவாகி அவதியுறும் துயரர்களுக்கு ஸ்ட்ராஞ்சியம் கார்பானிகம் (STRONT-C) பயன்படுகிறது என்றும் அடிக்கடி கணுக்காலில் சுளுக்கை ஏற்படுத்திக் கொள்ளும் தன்மையுள்ளவர்களாக  நேட்ரம் கார்பானிகம் (NAT-C) துயரர்களும் இருப்பார்கள் என்று மரு. தீதியர் கிராண்ட்ஜார்ஜ் குறிப்பிடுகிறார்.


ரூடா துயரர்களுக்கு குளிர்ச்சியான பருவகாலம் மற்றும்  குளிர்ச்சியும் ஈரக்கசிவும் உள்ள பருவ நிலைகளிலும் தொல்லைகள் அதிகமாகும். அத்துடன் நுட்பமான கண்வேலை அளவிற்கு மீறிச் செய்யும் போதும், மலம் கழிக்க மூக்கும் போதும் தொல்லைகள் உருவாகும். இவர்களது தொல்லைகள் யாவும் கீழே படுப்பதாலும், அசைவதாலும் குறையும்.


Saturday, 22 July 2017

சைக்லோமென்

சைக்லோமென்
(cycl)
CYCLAMEN




இவர்கள் பலவீனத்தாலும், இரத்தசோகையினாலும் மற்றும் பார்வைக் குறைபாடுகளாலும் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். மாதவிலக்கு  தொல்லைகள்  மற்றும் கொழுப்பு உணவு ஒத்துக் கொள்ளுவதில்லை என்ற குறிகளினால் இவரும்  பல்சட்டில்லா  துயரரும்  போலவே ஒன்று போலவே இருப்பார்கள்.  


அடி மனதில் ஆழ்ந்த வருத்தத்தை உள்ளே அமுக்கி கொண்டிருப்பார். தமது கடமையில் தவறிவிட்டோம் என்ற குற்ற உணர்வு இருக்கும். இவரும்  பல்சட்டில்லா போல் இரக்கச்சுபாவம் உள்ளவராகவும் அமைதியானவராகவும் , அழுகும் தன்மை படைத்தவராகவும் இருப்பார்.


சைக்லோமென் துயரர்கள்  முழுநிறைவான அல்லது குறையற்ற , மிக உன்னிப்பான அல்லது கடமை உணர்வுடைய வாழ்க்கையைப் பெற்றுயிருப்பார்கள். ஆனால் , துரதிருஷ்டவசமாக தமது கடமையைச் செய்யும் பொழுது மிக நுண்ணியஉணர்வினால் தூண்டப்பட்டு சிறிய தவறுகள் செய்ய நேரிடும்.இத்தகைய தவறுகளே இவர்களது வாழ்க்கையை பாழ்படுத்தும். இவர்களது குடும்பம் முழுவதும் இவர்களது பொறுப்பில் இருப்பதாகவும் , அவர்களை பாதுகாக்கும் கடமை தனக்கு இருப்பதாகவும் நினைப்பார்கள். அவர்களுக்காவே தமது வாழ்க்கையை அர்ப்பணித்து இருப்பார்கள். அவருடைய குடும்பத்தில் ஏதாவது தவறு நேர்ந்து விட்டால் (தெரிந்தோ அல்லது தெரியாமலோ) அச்செயலுக்குத் தானே பொறுப்பு என்ற குற்றவுணர்வு மேலோங்கும்.

இவர்கள் அடர்த்தியான இருண்ட கலரில் நன்றாக ஓவியம் வரைவார்கள், அது அவர்களுடைய ஆழ்மனதில் மறைந்திருக்கும் குற்றஉணர்வின் வெளிப்பாடாக இருக்கும் என்று குறிப்பிடுகிறார் மரு. பரூக் மாஸ்டர்.


ஆனால் சைக்லோமென் துயரரின்  தொல்லைகள் திறந்த வெளியில் அதிகரிக்கும் மற்றும் இவருக்கு தாகமும் இருக்கும் (மரு. ரோஜர் மாரிசன் ). இந்த இரு விஷயத்தில் பல்சட்டில்லா துயரரிடமிருந்து மாறுபடுவார். ஆனால் இவர்களுக்கு தாகம் இருக்காது என்று மரு.வெர்முலான் பிரான்ஸ் அவர்களும், பகலில் தாகமின்மையும் மாலையில் தாகமும் இருக்கும் என்று மரு.கவ்தர்வைத் அவர்களும் குறிப்பிடுகிறார்கள்.


வெண்ணெய், கொழுப்பு , ஆட்டுக்கறி, பன்றிக்கறி இவைகளை சாப்பிட வெறுப்பு. எலுமிச்சம் பழச்சாறு பானம் குடிக்க விருப்பமிருக்கும். உணவில் அதிக உப்புச்சுவை இருப்பதாகத் தோன்றும்; உமிழ்நீரும் உப்புச்சுவையில் இருக்கும்.


ஒருபக்க தலைவலி. தலைவலியின் போது குளிர்ந்த தண்ணீரில் நெற்றியைக் கழுவினால் சுகம்.

கண் முன்னாடி கருப்பாக பறக்கற மாதிரி, மின்னுவது போல, நட்சத்திரம் மாதிரி, ஈ பறக்கற மாதிரி தெரியும். பார்வை மங்கலாக இருக்கும். இரட்டைப்பார்வை . மாறுகண்.


பெண்களுக்கு பிரசவ வேதனை போன்ற கடுமையான வலியுடன் கூடிய மாதவிலக்கு ஏற்படும். மாதவிடாய் இலகுவாக தடைபடவும் செய்யும். மாதவிடாய் ஏற்படாமலும் போய்விடலாம். சில பெண்களுக்கு மாதவிடாய் சில  நாட்களுக்கு முந்தியும்  , மிகவும் ஏராளமாகவும் போக்கு இருக்கும். மாதவிடாய்  கருப்பாகவும் ,  கட்டியாகவும் வெளிப்படும். மாதவிடாய் ஏற்பட்ட பிறகு நலமாக இருப்பதாக உணருவார்கள். (LACH, ZINC).


கர்ப்பமில்லாத பெண்களுக்கு மாதவிடாயிற்குப் பிறகு மார்பில் பால் சுரக்கும் அல்லது மார்பகங்களில் வீக்கம் ஏற்படும்.


ஆண்களுக்கு சுக்கிலசுரப்பி அழற்சி ஏற்பட்டிருக்கும். மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் போதும் , உடகாரும் போதோ  அல்லது நடக்கும் போதோ தொல்லை கள்  அதிகரிக்கும்.



முன் கையிலிருந்து விரல்கள் வரை இழுத்துக் கொள்ளும் ( WRITER’S CRAMP) எழுத முடியாது. அதே போல் குதிங்காலில் புண்ணும் , வலியும் இருக்கும்; உட்கார்ந்தாலோ அல்லது நின்றாலோ மோசமாகும்.

Monday, 17 July 2017

நேட்ரம் ஆர்சனிக்கம்

நேட்ரம் ஆர்சனிக்கம்
(NAR-AR)
NATRUM ARSENICUM




ஆர்சனிக்கம் ஆல்பம் போன்று பதட்டத்தோடும் , நேட்ரம் குடும்பத்திற்குரிய கவலை மற்றும் வாயில் புண்களோடு வரும் துயரர்களுக்கு இம்மருந்து பயன்படும். அதேபோல் நிலக்கரி சுரங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அத்தூசியினால் உருவாகும் ஈழை நோயிற்கும் இது சிறந்த மருந்து (MINER’S ASTHMA).

மார்பிலும் , இருதயத்திலும் தாங்க முடியாத துன்பநிலை இருக்கும். இருதயத்தில் நாடித்துடிப்பு ஒழுங்காக இருக்காது; எண்ணிக்கையில் மாறுபடும்; வழக்கத்தை விட மெதுவாகத் துடிக்கும் ( DIGIT, CANN-I, OP). நுரையீரல் பகுதியில் புகையை நுகர்ந்து அடைந்திருப்பது போன்ற உணர்வு இருக்கும். புகை இவர்களுக்கு ஒவ்வாது. நுரையீரல் காச நோயிற்கு இது முக்கியமான மருந்து. 

உடல் முழுவதும் களைப்பு இருக்கும். தைராய்டு சுரப்பியை கட்டை விரலை வைத்தோ அல்லது விரல்களை வைத்தோ நெருக்கி அமுக்குவது போன்ற உணர்வு இருக்கும். உடல் நலத்தைப் பற்றிய பதட்டமிருக்கும். உடல் எடை குறைந்திருக்கும்.

கவலை. உணர்ச்சிகள் உள்ளமுக்கப்பட்டிருக்கும். பேராவல் உடையவராகவும் (AMBITIOUS) , மிகப் பெரிய சாதனை புரிபவர்களாகவும் , நேர்த்தியான குணம் படைத்தவர்களாகவும் (PERFECTIONISM) இருப்பார்கள். சுலபத்தில் திருப்தியடையாதவர்களாகவும்   , குற்றம் காணுபவர்களாகவும் இருப்பார்கள்.சிறிய விஷயத்திற்கும் கோபம் ஏற்படும். கருத்து வேறுபாடு அல்லது முரண்பாட்டினாலும் கடுங்கோபம் ஏற்படும்.

கோபத்திற்குப் பிறகு தொல்லைகள் அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் மனவேலை செய்ய வெறுப்பு ; அதேபோல் படிப்பதற்கும் வெறுப்பு. மனதை ஒருநிலைப் படுத்த முடியாது. ஞாபக மறதி (ANAC, APIS).

சந்தேககுணம். சலித்து அலுத்துக் கொள்கிற (LISTLESS) அல்லது அக்கறையற்ற குணம் (GELS, NUX-V, PH-AC).

குளிர்ச்சியான உடைவாகு. உடலைச் சுற்றி போர்த்திக் கொண்டிருப்பார்கள் அல்லது தீ அல்லது சூட்டின் அருகில் உட்க்கார்ந்திருப்பார்கள்.

தலை முழுவதும் சூட்டுடனும் , நிரம்பியது போன்றும் இருக்கும். ஒவ்வொரு அசைவிலும் தலையில் ஒலி அதிர்வை ஏற்படுத்தும்.

படிக்கும் போதும், எழுதும் போதும் கண்களில் சோர்வும் மற்றும் வலியும் ஏற்படும் (MYRICA, NAT-M, PHOS, RUTA, SEP).

மணம் அறியும்ஆற்றல் குறைந்திருக்கும் அல்லது இல்லாதிருக்கும். மூக்கு அடைத்துக் கொள்ளும் ; இரவிலும் , காலையிலும் தொல்லை அதிகரிக்கும் (NUX-V).
                               


இரவில் வாயின் மூலமாக சுவாசிக்க வேண்டியதிருக்கும் ; அதனால் வாய் திறந்திருக்கும் (AM-C).

இவர்களுக்கு உடல் உழைப்பினால் தொல்லைகள் ஏற்படும். அசைவினாலும் தொல்லைகள் அதிகரிக்கும். அதனால் படுத்துக் கொண்டிருப்பதையே விரும்புவார்கள்; யாரும் தொந்தரவு செய்வது பிடிக்காது. படுத்துக் கொண்டிருந்தாலும் தொல்லைகள் அதிகரிக்கவே செய்யும்.  அசைவதையே வெறுப்பார்கள்.

தொல்லைகள் வலது பக்கமே ஏற்படும்.

கடுமையான  இருமல் ; இருமிக் கொண்டேயிருப்பார்கள்; மூக்கிலிருந்து மஞ்சள் நிறத்தில் சளி ஒழுகிக் கொண்டேயிருக்கும் (KALI-BI, HYDRAS). மூக்கில் சளி காய்ந்து கட்டிதட்டியிருக்கும் ; அதை நீக்கினால் இரத்தம் வெளியாகும்.

தொண்டையடைப்பான் (DIPTHERIA) . தாகம் அதிகமிருக்கும்;  குறைந்த அளவு தண்ணீரை அடிக்கடி குடிப்பார்கள் (ARS, HYOS) . தண்ணீர் குடித்தவுடன் தொல்லைகளும் அதிகமாகும்.  

பால் ஒத்துக்  கொள்ளாது.

மலச்சிக்கலும் , வயிற்றுப்போக்கும் மாறி மாறித் தோன்றும் ( ANT-C,CIMIC,NUX-V, PODO).

காலையில் எழுந்தவுடன் மலங்கழிக்க ஓடுவார்கள்; மலம் மஞ்சள் நிறத்தில் , தண்ணீராக , ஏராளமாக  வலியில்லாமல் போகும்.

சில சமயம் மலங்கழிப்பதற்கு முன்பு வலி ஏற்படும்; மலங்கழித்த பிறகு அந்த வலி நீங்கி விடும் (COLOC).

யானைச்சொறி- சருமத்தில் செதில் செதிலாக உரியும் நீடித்த வகை சருமத் தடிப்பு நோய் (PSORIASIS).


இவர்களது தொல்லைகள் யாவும் காலையிலும் , சாப்பிட்டபிறகும் அதிகமாகும். திறந்த வெளிக்காற்றில் நடக்கும்  பொழுது தொல்லைகள் குறையும்.


ஆம்பிரா க்ரிஸா

ஆம்பிரா க்ரிஸா
(ambr)
AMBRA GRISEA





ஒட்டி  உலர்ந்த உடலும், பரபரப்பும் உள்ளவர்களுக்கும், மெலிந்து தோலும் எலும்புமாய் உள்ள பெண்களுக்கும் தளர்ச்சியடைந்த உறக்கமற்ற , நடுக்கமுள்ள ( NERVOUS) வயதானவர்களுக்கும் , குழந்தைகளுக்கும் உபயோகப்படக் கூடியது.

மனமும் , உணர்வும் சீர்குலைந்த நிலையிலிருக்கும் துயரர்களுக்கும் இது முக்கியமாகப் பயன்படுகிறது. துயரர்  முதலில் யாருடனும் பேச விரும்பாதவராகவும் , கூச்சத்தன்மையுடனும் இருப்பார்; இந்நிலை முற்றிய பிறகு அறிவுகுறைபாடுடன் சற்று அதிகம் பேசுபவராகவும் இருப்பார்.

பேசும் பொழுது ஒரு பொருளிலிருந்து மறறொரு பொருளுக்குத் தாவிக் கொண்டே இருப்பார்கள்; இவரது முதல் கேள்விக்கு நாம் பதில் சொல்வதற்குள் பேசிக் கொண்டே போவார்கள்.

மனநிலை பாதிக்கப்பட்டு மந்தநிலை ஏற்படுவதால் விஷயங்களை சீக்கிரத்தில் புரிந்து கொள்ள முடியாமை; ஒரு வாக்கியத்தை பலமுறை திரும்பத் திரும்பப் படிக்க வேண்டியிருத்தல்; அப்படிப் படித்தாலும் புரியாது; சிந்தனை செய்யும் சக்தி குறைவாக இருக்கும்.

தனக்கு வறுமைநிலை ஏற்பட்டுவிடும் என்று பயந்து இவர், யாருக்கும் எதுவும் கொடுக்கமாட்டார் (மரு.தீதியர்).

வியாபாரம் தோல்வியடைந்த பிறகும் (கவலை); குடும்பத்தில் அடுத்தடுத்து ஒவ்வொருவராக பலர் இறந்தாலும் ஏற்படும் அதிர்ச்சி (மரு.பதக்) .

மனத்துன்பத்துடன் பல நாட்களாக அலுத்து கொண்டிருப்பார்கள் ; சிரிப்பதற்கு விருப்பம் இருக்காது.

இவர்களுக்கு நேரம் மெதுவாக செல்லுவதாகத் தோன்றும்.

வயதானவர்களுக்கு தொன்று தலைச் சுற்றல்.

இசிவு. மனஅழுத்தம். பதட்டம். (மரு.ரோஜர் மாரிசன் )

நாக்கின் அடியில் நீர்க்கட்டியோ அல்லது தசை வளர்ச்சியோ இருக்கும்.

மிகவும் வெட்கப்படும் சுபாவம். இவர்கள்  யாருடனும் சேர்ந்திருக்க விரும்பமாட்டார்கள் ( குறிப்பாக அந்நியர்கள்).  வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ யாராவது உடனிருந்தால்  அதாவது , செவிலியரோ அல்லது அறையில் வேறு யாரோ கூட இருந்தால் இவர்களால் சிறுநீரோ அல்லது மலங்கழிக்கவோ முடியாது.

அதேபோல் குழந்தைகளும் மற்றவர்கள் முன்பு மலம் மற்றும் சிறுநீர் கழிக்க விரும்பாது; குழந்தையை மலங்களிக்க கழிவறைக் கோப்பையில் உட்க்காரவைத்தால்  எழுந்து சென்று வீட்டின் மூலையில் ஒளிந்து கொள்ளும்.


மலச்சிக்கல் ; அடிக்கடி மலங்களிக்க தோன்றும்.(NUX-V)

சப்தம் மற்றும் இசைக்கு மிகவும் கூருணர்ச்சி உள்ளவர்களாக இருப்பார்கள் (அழுகை வரும்). இசையினால் தொல்லைகளும் அதிகரிக்கும்.

இசையைக் கேட்டவுடன் இருமல் தூண்டப்படும் ; அடிக்கடி பேசினாலும் அல்லது சத்தமாக படித்தாலும் இருமல் கூடும். அடிக்கடி ஏப்பத்துடன்  வலிப்பு போன்ற கடுமையான இருமல் இருக்கும் ; பல மனிதர்கள் உள்ள இடத்திலும் , புதிய மனிதர்கள் இருக்கும் இடத்திலும் இருமல் அதிகமாகும்.

குழந்தைகளுக்கும் , வயதானவர்களுக்கும் ஏற்படும் காச நோய்.  மார்பில் அமுக்கும் உணர்ச்சியும் , காற்றுக் குழாயில் கரகரத்த சப்தமும் , இதயத்தின் ஆழத்திலிருந்து வலி வருவது போன்று இருக்கும். குறிப்பாக வயதானவர்களுக்கு உடலுறவிற்கு முயற்சி செய்யும் போது தோண்டும் காச நோய்.


கவலையினால் தூக்கம் வருவதில்லை, எழுந்து உட்கார நேருதல்.


பெண்களுக்கு மாதவிடாய்களின் இடைக்காலங்களிலும் , கஷ்டப்பட்டு மலங்களித்த பிறகும் அல்லது கடினமாக நடந்த பிறகும் இரத்தஒழுக்கு இருக்கும்.(மரு.இ.பி.நாஷ் ).


வெப்ப உடல்வாகு உள்ளவர்கள்.குளிச்சியான உணவையும் , குளிர்ந்த பானங்களையும் விரும்புவார்கள்.


இதனுடைய உறவு மருந்தாக பாரிடா கார்பானிக்கம் மற்றும் இக்னேசியாவும் இருக்கிறது.