இரண்டாவது மருந்து தேர்வு
(
SECOND PRESCRIPTION)
“ரோஜா
மலரானது தனது இதழை
விரித்து சிறுக சிறுக
மலர ஆரம்பிக்கும் தருணம்
பார்ப்பதற்கு மிகவும் அழகாக
இருக்கும். இத்தகைய மலர்ச்சி
தான் துயரருக்கு முதல்
மருந்தை கொடுத்துவிட்டு பொறுமையுடன்
காத்திருக்கும் தருணத்தில் , துயரரிடமிருந்து வெளிப்படும் குறிகளை
பார்க்கும் பொழுது எனது
மனதில் தோன்றும் “ என்று
மரு. J.T. கெண்ட் கூறியிருக்கிறார்.
அவர் எழுதிய “இரண்டாவது மருந்து தேர்வு” பற்றிய கட்டுரையைப் இப்போது பார்க்கலாம்.
நீண்ட கால நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் பொழுது, துயரர் வெளிப்படுத்திய குறிகளையெல்லாம் தொகுத்து , நன்றாக ஆராய்ந்து , பரிசீலனை செய்து ஒத்த மருந்தினைத் ( SIMILIMUM) தேர்ந்தெடுத்துக் கொடுப்போம். அதன்பிறகு, அம்மருந்து துயரரின் உடலில் செயல்படத் துவங்கியவுடன் அவரிடமிருந்த சில குறிகள் நீங்கும் அல்லது சில புதிய குறிகள் தோன்றலாம். அவற்றை அம்மருத்துவர் மிக நுட்பமாக கவனிக்க வேண்டும்.
பொதுவாக , ஒரு துயரருக்கு முதலில் மருந்தளித்த பிறகு, அம்மருந்து அத்துயரரின் குறிப்பிட்ட நோய்க்குரிய (SPECIFIC) மருந்தா? அல்லது அப்போதைக்கு துயரைக் குறைக்கிற (PALLIATIVE) தன்மையுடையதா ? அல்லது ஆழ்ந்து வேலை செய்து துயரருக்கு நலத்தைத் திரும்பத்தரக்கூடிய தன்மையுடையதா அல்லது மேலெழுந்தவாரியாகவோ , தற்காலிகமாகவோ மாற்றத்தைத் தந்துள்ளதா? என்பதை உற்று நோக்கி நமது பட்டறிவின் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறான விளைவுகளைத் தெரிந்து கொண்ட பின் தான் அத்துயரருக்கு இரண்டாவது முறையும் மருந்தளிக்க வேண்டுமா என்பதை நிர்ணயம் செய்ய வேண்டும்.
ஆனால் ஒட்டுமொத்தக்குறிகளையொத்த ( TOTALITY OF
SYMPTOMS) மருந்தினை தேர்ந்தெடுத்து கொடுத்த பின்பு , துயரரிடம் அப்போதுள்ள குறிகளில் மாற்றம் தோன்ற ஆரம்பித்தால், அம்மருத்துவர் மருந்தின் முழுமையான செயல்பாடு முடியும் வரை காத்திருக்க வேண்டும் , அவசரம் கூடாது. மாமேதை ஹானிமன் அவர்கள் நம்மிடம் விட்டுச் சென்றிருக்கிற தத்துவங்களும் , பல்வேறு அறிஞர்களின் அனுபவங்களும் , பட்டறிவும் மருந்துத்தேர்வில் அவசரத்தைக் கடைபிடிப்பதை எதிர்க்கிறது. முக்கியமாக பேரிடர் ( GRAVE DISEASES) ஏற்படுத்தும் நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் போது அவசரத்தில் மருந்தினை அடிக்கடி கொடுத்து விடக்கூடாது. பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என்கிறார் மருத்துவர் J.T. கெண்ட். அதற்குச் சான்றாக கீழ்வரும் துயரரின் கதையை உதாரணமாக சொல்கிறார்;
ஒரு சிறிய பெண்ணிற்கு ஏற்பட்டிருந்த தொண்டை வேக்காடு நோயை (DIPHTHERIA) குணப்படுத்த என்னிடம் அழைத்து வரப்பட்டாள். அப்பெண்ணிற்கு நான்கு நாட்கள் மெர்க்குரியஸ் 3X , காலி-பைக் 3X அடுத்தடுத்த நாட்களில்
கொடுக்கப்பட்டது. ஆனால் எந்த விதமான முன்னேற்றமுமில்லை. அவள் ஏழை என்பதால் என்னிடம்
சிகிச்சை எடுத்துக் கொள்வதைத் தவிர அவளுக்கு வேறு வழியுமில்லை. நானும் அவளுக்கு சிகிச்சையளிக்க
மறுக்கவுமில்லை. ஆனால், அவள் உடல்நிலை மோசமாகி மூக்கு, வாய் மற்றும் குரல்வளைப் பகுதிகள்
அனைத்தும் வீங்கி புண்ணாகிவிட்டன. நீண்ட பரிசீலனைக்குப் பிறகு லைகோபோடியம் CM வீரியத்தில்
கொடுக்கப்பட்ட பின்பு மூக்கும், தொண்டையின் ஆரம்பப்பகுதியும் காய்ந்து சிறிது நலமடையத்
தொடங்கினாள். ஆனால் , குரல்வளை முழுவதும் சரியாகவில்லை.
நானும் எவ்வளவு நாட்களுக்குத் தான் பொறுமையுடன் காத்திருப்பது?. ஆனாலும் பலநாட்கள் காத்திருந்தேன்.
அதாவது அப்பெண் என்னுடைய மருத்துவத்தை முறித்துக் கொள்ள முடிவெடுக்கும் வரை காத்திருந்தேன்.
அப்பொழுது , அப்பெண்ணின் வாயில் தோன்றிய கெட்டியான மஞ்சள் நிற சளியை (TOUGH YELLOW
MUCUS) பார்த்து காலி-பைக் CM வீரியத்தில் கொடுத்தேன். அதன் பிறகு அப்பெண் பூரண
நலத்திற்குத் திரும்ப ஆரம்பித்த்தாள். பின்னர் வேறு மருந்து எதுவும் தேவைப்படவில்லை
என்று முடிக்கிறார் J.T.கெண்ட்.
பொதுவாக , துயரர் முதல்மருந்து ( FIRST
PRESCRIPTION) எடுத்துக் கொண்டபின்பு அவருக்கு உடனடியாக பின்வரும் விளைவுகள் ஏற்படும்;
1. நோய்க்குறிகள் மிகைப்படும்
(AGGRAVATION)
அல்லது
2. நோய்க்குறிகள் தணியும் (AMELIORATION).
துயரரின் நோய்க்குறிகள் மிகுந்து காணப்பட்டு , அவரின் பொதுவான நலத்தில் முன்னேற்றம் காணப்பட்டால் நல்லது. அவர் நலத்திற்குத் திரும்புகிறார் என்று பொருள். ஆனால், துயரரின் அப்போதைய குறிகளில் மிகை ஏற்பட்டு அவரின் பொதுவான நலம் பாதிக்கப்பட்டால் துயரர் நலத்திற்கு திரும்புவது சந்தேகமே. அதேபோன்று நோய்க்குறிகளின் கடுமை தணிந்தும், அத்துயரர் வாழ்க்கையின் இயல்பான நெகிழ் திறத்திற்குத் ( ELASTICITY) திரும்பாவிடில் என்னதான் அவருடைய நோய்குறிகளில் முன்னேற்றமிருந்தாலும் நலமடைவது சந்தேகமே!. இன்னும் சரியாக கூறவேண்டுமென்றால் ஒரு மருத்துவர் முதல் தடவையாக மருந்துத்தேர்வு செய்த பொழுது தவறிழைத்து ஒத்தமருந்தினைத் தேர்வு செய்யாமலிருந்தால், அம்மருந்து அத்துயரரின் உடலில் எந்தவிதமான மாறுதல்களையும் ஏற்படுத்தாமல் இருக்கும். அல்லது, அவரிடமிருந்த சில குறிகளை சரி செய்து விட்டு , சில புதிய குறிகளை உருவாக்கும். இது போன்ற சந்தர்ப்பங்களில் “இரண்டாவது மருந்துத் தேர்வு” அவசியமாகிறது. இரண்டாவது மருந்துத் தேர்வு என்பது கீழ்கண்டவாறு அமைகிறது
;
1. ஏற்கனவே கொடுக்கப்பட்ட மருந்தைத் திரும்பவும் தருவது (REPETITION).
2. அம்மருந்திற்கான முறிவு மருந்தை தருவது (ANTIDOTING).
3. முழுமையாக்குகிற அல்லது நட்பு மருந்தைத் தருவது (COMPLEMENTARY).\
ஒத்தமருந்தினை கொடுத்த பின்பு , துயரரின் நோய்க்குறிகள் திரும்பவும் தோன்ற ஆரம்பித்து , மருந்தின் செயல்பாடுகள் முடியும் தருவாயில் இருக்கும் பொழுது அம்மருந்தினை திரும்பவும் அதே வீரியத்தில் கொடுக்கலாம். பின்னர் , உயர்ந்த வீரியங்களில் அதன் ஏறு வரிசை அடிப்படையில் அதாவது 200, 1M, 10M, CM என்ற வீரியங்களில் உரிய கால அவகாசங்களுக்கிடையில்
கொடுக்கப்படவேண்டும். ஒரு மருந்தின் அனைத்து வீரியங்களையும் கொடுத்த பின்னரும் அத்துயரருக்கு
பூரண நலம் ஏற்படாவிடின் அடுத்த மருந்தினைக் கொடுப்பது பற்றி சிந்திக்க வேண்டும். ஆனால்
, துயரரின் குறிகள் மாறி மாறித் தோன்றினாலும் , தான் நன்றாக இருப்பதாக அவர் உணரும்
பட்சத்தில் மருந்தினை மாற்றக்கூடாது. அதேபோன்று , துயரர் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு
நலம் பெற்ற பின்னர் அந்நிலை தொடர்ந்து நீடிக்காமல் இயக்கம் தடைசெய்யப்பட்ட தருணத்தில்
முதல் மருந்தினை திரும்பவும் தரலாம்.
அடுத்து , முதலில் கொடுத்த மருந்து துயரரின் நோய்குறிகளில் ஆழ்ந்து வினையாற்றாமல்
, புதிய குறிகளைத் தோற்றுவிக்கும் பட்சத்தில் கொடுக்கப்பட்ட மருந்து தவறானது , அவருக்கு நலம் தராது என்பதை உணர்ந்து முதலில் கொடுத்த மருந்தினை அதனுடைய முறிவு மருந்தைக் கொடுத்து முறிக்க வேண்டும். பின்னர், அத்துயரரின் குறிப்புகளை மறுபடியும் ஆராய்ந்து , அப்போதைக்கு உள்ள குறிகளையும் கவனத்திற்கொண்டு சரியான மருந்தை தேர்வு செய்ய வேண்டும்.
மூன்றாவதாக , முழுமையாக்குகிற அல்லது நட்பு மருந்து என்பது , முதலில் கொடுக்கப்பட்ட மருந்து ஆழமாக வேலை செய்யாமல் இருக்கும் பொழுதோ அல்லது அவரிடம் இன்னும்ச ரி செய்ய வேண்டிய சில எஞ்சிய குறிகள் இருக்கும் நிலையிலோ மருந்தின் நட்பு மருந்தினைக் கொடுக்க வேண்டும். உதாரணமாக , பெல்லடோன்னா கொடுக்கப்பட்டிருந்த துயரருக்கு கல்கேரியா-கார்ப் மருந்தோ அல்லது பல்சாட்டில்லா கொடுக்கப்பட்டிருந்த துயரருக்கு சிலிகா மருந்தோ தேவைப்படலாம். அதே போன்று மருந்து எடுத்துக் கொண்ட பின் மாறிவரும் புதிய மியாசத்தையும் கவனத்தில் கொண்டு அதற்குரிய மருந்தினைக் கொடுக்க வேண்டும்.
ஒரு துயரருக்கு இரண்டாவது முறையாக மருந்தளிக்கும் பொழுது அவரிடம் முன்பிருந்த குறிகளையும் , மருந்து எடுத்துக்கொண்ட பின்பு தோன்றிய குறிகளையும் கவனமாக ஆராய்ந்து , சீர்தூக்கிப்பார்த்த பின்னரே அடுத்த மருந்து கொடுப்பத்தைப்பற்றி முடிவெடுக்க வேண்டும், இந்நிலை, மருத்துவரை அடிக்கடி மாற்றும் குணம் படைத்த துயரர்களால் பாதிக்கப்பட்டுவிடும். ஒரு ஹோமியோபதி மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுவரும் துயரர் அவரிடமே தொடர்ந்து மருந்து எடுத்துக் கொள்ளவேண்டும். அவரே, அத்துயரருக்கு இரண்டாவது முறையும் மருந்தளிப்பதற்குத் தகுதியானவர். இதைவிடுத்து, இன்னொருவர் சிறந்த வல்லுநர் , அவரிடம் மருத்துவ அறிவு நிறைந்திருக்கிறது என்று எண்ணி பிறிதொரு ஹோமியோபதி மருத்துவரை
அணுகுவது என்பது அத்துயரருக்கு கஷ்டத்தையே கொடுக்கும். ஒரு சிறந்த ஹோமியோபதி மருத்துவர்
இம்மாதிரியான துயரருக்கு மருந்தளிக்கும் தவறைச் செய்யமாட்டார். அப்படியே அத்துயரர்
மாற்று மருத்துவரை அணுகும்பட்சத்தில் , அவரிடம் உண்மையை விளக்கி முதலில் மருந்தளித்த
மருத்துவரிடமே திருப்பி அனுப்பி வைப்பது தான் சரி. அவ்வாறு ஒரு சில நல்ல மருத்துவர்களிடமிருந்து
என்னிடம் வந்த துயரர்களை , முதலில் பார்த்த மருத்துவரிடமே செல்லுமாறு பணித்துள்ளேன் என்று J.T கெண்ட் அவர்கள்
தமது “ஹோமியோபதி தத்துவங்களின் விரிவுரைகள்” (LECTURES ON HOMEOPATHIC PHILOSOPHY)
என்ற நூலில் பக்கம் 235 இல் குறிப்பிடுகிறார்.
ஆகவே , இரண்டாவது மருந்து தேர்வு என்பது துயரரை ஆரோக்கிய பாதைக்கு அழைத்துச் செல்வதாக இருக்கவேண்டும். இதில் தவறு நேர்ந்து விடக்கூடாது. சில சமயங்களில் துயரங்கள், " மருத்துவரே! எனக்கு இந்தந்தக் குறிகள் சரியாகிவிட்டன. சில நாட்கள் நன்றாக இருந்தேன், அதன் பிறகு எந்தவித முன்னேற்றமும் இல்லை " என்று கூறுவார்கள். அப்படியென்றால் தேர்ந்தெடுத்த மருந்து சரியானது என்பதே உண்மை. இத்தகைய சமயத்தில் பொறுமை காத்து , தொடர் மருந்து ( SAC LAC ) அளித்து வருவதே மனசாட்சியுள்ள மருத்துவர் செய்யும் கடமையாகும். இதைத் தவிர்த்து மருந்தின் செயல்பாடுகள் முடியுமுன்பே திரும்பவும் அதே மருந்தை கொடுப்பதோ அல்லது தொடர்ந்து கொடுத்து வந்தாலோ அத்துயரர் நலமடைவதில் தடையை ஏற்படுத்திவிடுவதோடு மட்டுமல்லாமல், அதுவே தவறான
மருந்து தேர்வாகிவிடும் . இத்தகைய தவறை நலமாக்கல் விதியை நன்றாக கற்றுணர்ந்த தூய ஹோமியோபதி
மருத்துவர்கள் செய்ய மாட்டார்கள்.
குறிப்பு: இக்கட்டுரை மருத்துவர்.J.T.கெண்ட், 1888 இல் நயாகரா நீர்வீழ்ச்சியில் நடைபெற்ற அகில உலக ஹானிமன் சங்கக்கூட்டத்தில் வாசித்த கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது. ஹோமியோ தோழன் , ஆகஸ்ட் 2007 இதழில் செல்வா என்ற பெயரில் நான் எழுதியது.
No comments:
Post a Comment