Friday, 11 April 2025

புதிய ஹோமியோபதி நூல்கள்

 

புதிய ஹோமியோபதி நூல்கள்

 நண்பர்களே !

எனது இரண்டு புதிய நூல்கள் வெளிவந்துவிட்டது.  விபரம் கீழே கொடுத்துள்ளேன்;

 1.       ஹோமியோபதி : தத்துவமும் நடைமுறையும் = ரூ.300/-

 





இந்த நூலில்  " ஹோமியோ தோழன்" இதழில்  வெளிவந்த எனது சில கட்டுரைகளும் மற்றும்  புதிய கட்டுரைகளுமாக  ஏறத்தாழ  21  கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. எனது நண்பரும் , எழுத்தாளரும், சமூக செயல்பாட்டாளருமான தோழர். மு.சங்கையா,  இந்த நூலுக்கு நல்லதொரு அணிந்துரை வழங்கியுள்ளார்.

  2.       ஹோமியோபதி : துயரர் ஆய்வும் மருந்துதேர்வும்  = ரூ. 280/-

 

இந்த நூலில் , தூய ஹோமியோபதி வழியில் "துயரர் ஆய்வும்- மருந்துத் தேர்வும்" பற்றி, எனது 30 வருட அனுபவங்களை பதிவு செய்துள்ளேன். கூடவே, ஸ்கால்ட்டன் , இராஜன் சங்கரன் , மகேஷ் காந்தி  ஆகியோர் வழிமுறைகள் பற்றியும்  மற்றும் சில புதிய வழிமுறைகள் பற்றிய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.  இந்த நூல்கள் நல்ல முறையில் சிறந்த கட்டமைப்புடன் வெளிவந்திருக்கின்றன. மரு. R . சரவணக்குமார் BHMS, அவர்கள் இந்த நூலுக்கு அணிந்துரை எழுதி சிறப்பித்துள்ளார்.

இந்த இரண்டு நூல்களும் நேரில் பெற்றுக் கொள்பவர்களுக்கு ரூ . 500 /-  க்கும் , தபாலில் பெற  ரூ. 580 [ தபால் கட்டணம் இல்லை] அனுப்பவும்.

மற்றும் , எனது அடுத்த நூலான , " ஹோமியோபதி மருத்துவத்தின் தத்துவார்த்த நெறிமுறைகள் " இருப்பில் உள்ளது , விலை ரூ. 600 /- , நேரில் ரூ.500  க்கும் , தபாலில் ரூ.560 க்கும் கிடைக்கும்.  

அடுத்து, ஹோமியோ தோழன் ஆசிரியர்  இராஜேந்திரன் எழுதிய " தீவிர நோய்க்களுக்கான  ஹோமியோபதி மருத்துவம் "   என்ற நூலும் இருப்பில் உள்ளது. விலை ரூ .80 /-  [ தபால் கட்டணம் இல்லை]

 மேற்கண்ட நூல்களை வாங்கி , பயனடைவதுடன் , எனக்கு உற்சாகத்தையும் தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 பணம் செலுத்த: Gpay  எண் +919486102431

 நன்றி

 சு.கருப்பையா.

 

குழந்தைகள்-1: கல்கேரியா கார்பானிக்கம் [CALC]

 

1.      கல்கேரியா கார்பானிக்கம் [CALC]

 

 

இந்த குழந்தைகள் பொதுவாக மென்மையானவர்கள், அதிக கொழுப்பு சத்து உள்ளவர்கள், அழகானவர்கள் , பலவீனமானவர்கள் மற்றும் மந்தமானவர்கள் [FAT, FLABBY, FAIR, WEAK, LETHARGIC]. குளிர்ச்சியான உடலமைப்பு கொண்டவர்கள். தோல் , பாம்பு போன்று மிகவும் குளிர்ச்சியாகவும் , கைகள் மற்றும் முழங்கால் மூட்டுகள் மிகுந்த ஈரம் உள்ளதாகவும் இருக்கும். அவர்கள் பெரும்பாலும் வியக்கத்தக்க வகையில் ஆரோக்கியமாக இருப்பார்கள், இருப்பினும், உடல் ரீதியாகவோ மனதளவிலோ அதிக ஆற்றலைக் கொண்டிருக்க மாட்டார்கள்.  அவர்கள் ஆரம்பகால வாழ்க்கையில், பெரும்பாலும் அதிக எடையுடன் இருப்பார்கள், மேலும் அவர்கள் மிகவும் ஆரோக்கியமாகத் தோன்றினாலும், வலுவான தசையின் ஆற்றலை விட மென்மையான கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களாகவே அறியலாம் .

 

இந்த குழந்தைகளின் நீளமான எலும்பு பெருத்திருக்கும், பெரிய தலை மற்றும் வயிறு இருக்கும்.  தலையின் உச்சிக்குழி மெதுவாகவே மூடும் மற்றும் அதிகமாக வியர்க்கும் தன்மை  ஆகியவற்றுடன்,  இயற்கைக்குப் புறம்பான மெதுவாக எலும்பு வளர்ச்சி [Exostosis] , மெதுவாக பற்கள் வளர்ச்சி , தாமதமாக நடத்தல் , எலும்பு நலிவு நோய் அல்லது மெலிவு நோய் [RICKETS] ஏற்படும் போக்கு உள்ளது. குழந்தைகள் மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறார்கள், ஆனால் சிறிய வேலை செய்தாலும்  அவர்கள் மிகவும் சூடாகி விடுவார்கள் . அவர்களுக்கு  இரவில் அதிகம் வியர்க்கும்  மற்றும் பெரும்பாலும் இவர்கள்  படுக்கை விரிப்புக்கு  வெளியே கால்களை நீட்டிக்கொள்வார்கள். இந்த பண்பு சல்பர் மருந்திலும் காணப்படுகிறது என்பதை நாம் அறிவோம்.

 

அவர்கள் வயதான தோற்றத்தில் காணப்படுவார்கள். நன்கு ஊட்டமளிக்கும் உணவு எடுத்துக் கொண்டு, மிகவும் ஆரோக்கியமான தோற்றத்தில் இருந்தாலும், மனரீதியாகவும் மற்றும் உடல் ரீதியாகவும் மந்தமானவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் பள்ளியில் பாடங்களை மெதுவாக கற்பார்கள்; விளையாட்டுகளில் மெதுவாக இருப்பார்கள், அதனால் அவர்களின் கணுக்காலில் சுளுக்கு, பலவீனமான தசைகள், வேலைசெய்யும்  போது அதிக வியர்வை ஏற்படும் , மற்றும் தொடர்ந்து அடிக்கடி  "சளி" தொல்லைகளுக்கு உள்ளாகும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள் .

 

அவர்களுக்கு அடிநாசதை [TONSILS]  பெருத்து வீங்கியிருக்கும் , கழுத்துப்பகுதியில் உள்ள  சுரப்பிகள் [CERVICAL GLANDS]  வீங்கிக் காணப்படும்   மற்றும் பெரிய வயிறு ஆகியவற்றைக் கொண்டிருப்பார்கள் . அவர்கள் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள், எளிதில் பயப்படுவார்கள், முன்முயற்சி இல்லாதவர்கள்.  அவர்கள் ஒரு வேலையும் செய்யாமல் வீட்டிற்குள் உட்கார்ந்து இருப்பார்கள் அல்லது ஒன்றும் செய்யாமல் இருப்பதில் திருப்தி அடைகிறார்கள். பெரும்பாலும் , அவர்கள் விசித்திரமான கூருணர்ச்சி உள்ளவர்களாக இருப்பார்கள்  மற்றும் அடுத்தவர்கள் அவர்களைப் பார்த்து சிரிப்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது.

 

அவர்கள் தங்கள் செயல்களில் சாமர்த்தியம் அல்லது வேகம் இல்லாதவர்களாக இருப்பார்கள் மற்றும் விளையாட்டுகளில் மிகவும் மோசமானவர்களாக இருப்பார்கள் ; இது அவர்களை மீண்டும் தங்களுக்குள் முடங்கச் செய்கிறது , அதனால் அவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு  திறமையானவர்களாக மாறுவதற்குப் பதிலாக, விளையாட்டின் போது அவர்கள் கேலி செய்யப்படுவதை அல்லது சிரிப்பதை வெறுக்கும்போது , விளையாட்டை முழுவதுமாக கைவிடுகிறார்கள். அவர்கள் மற்றவர்களுடன் இணைந்து வேலை செய்வதிலும், பள்ளியில் ஒன்று சேர்ந்து பாடம் படிப்பதிலும் அடிக்கடி சிரமப்படுகிறார்கள். அவர்கள் இந்த விஷயத்தில் முயற்சி எதுவும் செய்ய மாட்டார்கள், ஆனால் எளிதாக விட்டுக்கொடுப்பார்கள், மேலும் அவர்கள் வகுப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு, பதில் உறுதியாக தெரியாவிட்டால், எந்தக்  கேள்விகளுக்கும்  பதிலளிக்கமாட்டார்கள் , பதில் தவறாக இருந்தால் தன்னைப் பார்த்து சிரிப்பார்கள் என்று நினைப்பார்கள்.

 

ஆரம்பகால குழந்தை பருவத்தில், இந்த கல்கேரியா கார்பானிக்கம் குழந்தைகளுக்கு கிட்டத்தட்ட எப்போதும் வயிற்றுப்போக்கு எற்பட்டுக் கொண்டே   இருக்கும், பொதுவாக மலம் வெளிர் நிறமாக இருக்கும், மற்றும் மலத்தில் வெளிப்படையாக பித்த நிறமி இருக்காது .

 

கல்கேரியா கார்பானிக்கம் மருந்தின் நோயறிதலை உறுதிப்படுத்தும் இரண்டு அல்லது மூன்று தனித்துவமான, வித்தியாசமான பண்புகள் உள்ளன.  இவர்களுக்கு மந்தமான மனநிலை மற்றும் மந்தமான உடலமைப்பு  இருப்பதை  சமாளிக்க எளிதானது என்னவென்றால், இந்த குழந்தைகள் மலச்சிக்கல் மற்றும் அவர்களின் குடல் செயலற்ற நிலையில் இருக்கும்போது அவர்கள் மிகவும் நன்றாக இருப்பதாக கருதுவார்கள் .

 

இவர்களுக்கு மலமிளக்கி மருந்து  கொடுக்கப்பட்டால் , அது அவர்களுக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும், அதனால் அவர்கள் வருத்தமடைவார்கள் ; மற்றும் அவர்கள் நோய்வாய்ப்பட்டதாக நிலைப்பார்கள் , ஆனால் அவர்களின் குடல்கள் ஒப்பீட்டளவில் மந்தமாக இருக்கும்போது அவர்கள் நன்றாக  இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள் .  அடுத்த விஷயம், இவர்களின் மந்தமான உடலமைப்பின் காரணமாக  எந்தவொரு உடல் அல்லது மனம் சம்பந்தமான  உழைப்பிலிருந்தும் அல்லது எந்த வகையான வேகமான அல்லது விரைவான இயக்கத்திலிருந்தும் மோசமடைவார்கள் ; இந்த குழந்தைகள் பேருந்து  மற்றும் ரயில் ஆகியவற்றில் பயணம்  செய்யும் பயண நோயால் [ CAR-SICKENSS & TRAIN-SICKNESS] பாதிக்கப்படுகின்றனர்.

 

மற்றொரு சிறப்பியல்பு அறிகுறியாக இருப்பது , இவர்கள்  மிகவும் சூடான உணவை விரும்பமாட்டார்கள் . இவர்களுக்கு ஐஸ்கிரீம் மிகவும் பிடிக்கும்; இனிப்பு மற்றும் பால் பொருள்கள் மீது விருப்பம் இருக்கும். இறைச்சியின்  மீது வெறுப்பு இருக்கும் மற்றும், எப்போதாவது முட்டைகள் மீது  ஒரு திட்டவட்டமான ஏக்கம் உள்ளது - முட்டையை எந்த வடிவத்திலும் எடுத்துக் கொள்வார்கள்.

 

கல்கேரியா கார்பானிக்கம் குழந்தைகளுக்கு  மற்றொரு முக்கியமான  அறிகுறியும் உள்ளது. குழந்தைகள் மற்றவர்களுடன் சமமாக இல்லாமல், கீழ்மட்டத்தில் இருக்கும்போது அவர்கள் பதற்றமுள்ளவர்களாகவும், பயமுள்ளவர்களாகவும்  மாறுகிறார்கள். அவர்களுடன் யாராவது உடன் இருக்கும் வரை அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவர்கள் அமைதியாக உட்கார்ந்து அல்லது விளையாடுகிறார்கள்; ஆனால் இருட்டின் மீது அதிகப்பயம் இருக்கும்; இருட்டு அறைக்குள்  வெளிச்சம் இல்லாமல் படுக்கைக்கு  செல்ல பயப்படுவார்கள் . இரவில் அதிகமாகப் பயப்படுவார்கள்; தூக்கத்திலிருந்து அதிகாலை 2 அல்லது 3 மணிக்கு எழுந்து கூக்குரலிடுவார்கள், ஆனால் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்ததும் இரவில் நடந்தது மறந்து விடும்.

 

அச்சம், திகில் ஏற்படும் போதும் , பல் முளைக்கும் காலத்திலும் வலிப்பு ஏற்படும். குண்டான, கொழுப்புசத்து நிறைந்த குழந்தைகளுக்கு மூக்கிலிருந்து இரத்தம்                   [Epistaxis] வெளியாகும். இவர்களுக்கு பெருத்த வயிறு இருப்பதால் , தொப்பூளுக்கு கீழ்ப்பகுதியில் குடலிறக்கம் [ Umbilical Hernia] ஏற்படும்.

 

அவர்களுக்கு தூக்கத்தில் கடுமையான கனவுகள் ஏற்படுகிறது  மற்றும் இரவில் தூக்கத்திலிருந்து அலறியபடி எழுந்திருப்பார்கள் . கல்கேரியா கார்பானிக்கத்தின் மிகவும் பொதுவான குணம் என்பது, அவர்களின் கடுமையான கனவு மற்றும் இருட்டில் பயங்கரமான முகங்களைப் பார்ப்பது ஆகியவை ஆகும்.

 

மனக்குறிகள்:

 

கல்கேரியா கார்பானிக்கம் குழந்தைகள் வயதிற்கு மிஞ்சிய புத்திசாலிகளாக [Precocious] , அறிவுக்கூர்மையான மற்றும் கடுமையாக உழைக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மிகவும் பிடிவாதக்குணம் உள்ளவர்கள் [Obstinate]; தொடர்ந்து அழுதுகொண்டேயிருப்பார்கள். நடக்க , எழுந்து நிற்க மிகவும்  தாமதமாகும்; நடப்பதற்கு முயற்சி செய்யமாட்டார்கள்.

 

இந்தக் குழந்தைகள் பொதுவாக வலுவான மனோபலம் கொண்டவர்களாக இருப்பார்கள் , ஆனால் பெரும்பாலும் தங்களது பாதுகாப்பைப் பற்றி மிகவும் கவனமாக இருப்பார்கள். அவர்களுக்கு  கவலை மற்றும் பயம் போன்ற பிரச்சினைகள் உள்ளன. குழந்தை மிகவும் ஆர்வமுள்ளவர்களாக இருப்பதால் , வாழ்க்கை மற்றும் இறப்பு பற்றிய இந்த அச்சங்களைப் போக்க மத அல்லது மனோதத்துவ விஷயங்களைப் பற்றி அடிக்கடி கேள்விகளைக் கேட்கலாம் [ Roger Morrison] .

 

இவர்கள் எந்த விதமான வன்முறையையும் சகித்துக் கொள்ள முடியாத குழந்தைகள்; மற்ற குழந்தைகள் சண்டையிட்டால் கூட இவர்கள்  ஒளிந்து கொள்வார்கள்; பந்தைக் கையில் தூக்கிச்செல்லும் விளையாட்டு [ Rugby] , கால்பந்தாட்டம் [Soccer]  , ஹாக்கி [ Hockey] போன்ற கடினமான விளையாட்டுகளை விளையாடுவதை இவர்கள் தவிர்ப்பார்கள் ; அதற்கு பதிலாக, அவர்கள் சீட்டாட்டம் [ Cards]  , சதுரங்கம் [ Chess], பொம்மைகளை உள்ளடக்கிய விளையாட்டு [ Legos] , குறுக்குவழி புதிர் விளையாட்டு [ Scrabble] , நண்பர்களுடன் சேர்ந்து விளையாடும்  கலர் விளையாட்டு [ Uno]   போன்ற உட்புற விளையாட்டுகளை விளையாடுவதற்கு விருப்பம் இருக்கும் [ Farokh Master].

 

திகில் நிறைந்த  அல்லது போர் திரைப்படங்களைப் பார்ப்பதற்கு மிகவும் பயம் இருக்கும். சிறிய விஷயங்களுக்கும், விலங்குகளுக்கும் பயம் இருக்கும் [ குறிப்பாக, நாய்கள், எலிகள் மற்றும் பூச்சிகள்] . கேலி செய்யப்படுதல், இருட்டு , தீங்கு செய்தல் , பேய்கள், பல் மருத்துவர் அல்லது மருத்துவரிடம் செல்வது, உயரம் , இரவு, மழை, நிழல்கள் மற்றும் அந்திப்பொழுது  ஆகியவற்றிலும் பயம் இருக்கும் [ Farokh Master] .

 

இலேசான சத்தத்தையாவது கேட்டாலக்கூட எளிதாக திடுக்கிடுவார்கள் . எதிர்பார்ப்பு, கெட்ட செய்தி, அன்புக்குரியவர்களின் மரணம், தேர்வில் தோல்வி, பயம் மற்றும் முரட்டுத்தனம் ஆகியவற்றால் நோய்கள் ஏற்படும். அன்புக்குரியவர்களின் உடல்நலம் பற்றி கவலை இருக்கும் (பாதுகாப்பு இழப்பு காரணமாக பாதுகாப்பின்மை).

 

மிகவும் கடமையுணர்வு உள்ள குழந்தைகளாக  அல்லது முற்றிலும் சோம்பேறியாகவும் மற்றும் பொறுப்பில்லாத குழந்தையாக இருப்பார்கள். சோம்பலின் காரணமாக தங்களுடைய வேலையை அடுத்த நாளுக்குத் தள்ளிப்போடுவார்கள். 

 

தனியாக இருக்கப் பயம்; மற்றவர்களுடன் சேர்ந்திருக்க விருப்பம் இருக்கும். இவர்களுக்கு  நகம் கடிக்கும் குணம்.  நல்ல பகுத்தறியும் ஆற்றல் இருக்கும் [ Reasoning ]. திருடுவதில் பேரார்வம் இருக்கும் [ Kleptomania ] .

 

இந்தக்குழந்தைகள் படிக்கும்போது, ​​எழுதும்போது அல்லது பேசும்போது நிறைய தவறுகளைச் செய்வார்கள்; தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துதல் அல்லது தலைகீழாக எழுதுதல் அல்லது எழுத்துப்பிழை [புரிந்து படிக்க இயலாத குழந்தைகள்=Dyslexic children] போன்றவற்றைச் செய்வார்கள். தொட்டிலை ஆட்டினால் இவர்கள் நன்றாக உணருவார்கள். இவர்கள்  விமர்சனம் அல்லது அநீதிக்கு மிகவும் கூருணர்ச்சி கொண்டவர்களாக இருப்பார்கள்.