ஒவ்வொரு ஹோமியோபதி மருத்துவரும் தன்னிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ளவரும்
துயரரை நுணுக்கமாக ஆராய்ந்து அவரிடம் காணப்படும் ஒட்டு மொத்தக் குறிகளின்
அடிப்படையில் ஒத்த மருந்தினை ஹோமியோபதி மருந்து காண் ஏட்டின் மூலமாகவும் ( MATERIA MEDICA ) , மருந்துகளின்
கைவசத்தொகுதியின் ( REPERTORY) மூலமாகவும்
தேர்வு செய்கிறார்கள். பிறகு , அந்த மருந்தினை எந்த வீரியத்தில் அந்தத் துயரருக்கு
கொடுக்க வேண்டும் என்பதனை உறுதி செய்ய வேண்டும். இதையே ஹோமியோபதியில் “வீரியத் தேர்வு” என்று அழைக்கிறோம்.
பொதுவாக, துயரரிடம் காணப்படும்
நோய்தாக்குதல் மற்றும் உடலின்
ஏற்புத்தன்மை ஆகியவற்றிக்குப் பொருத்தமான வீரியத்தில் அம்மருந்து தேர்வு
செய்யப்பட்டால் அத்துயரர் விரைந்து நலமடையத் துவங்குவார். மாறாக, தவறான வீரியத்தில் மருந்தளிக்கப்பட்டால் அம்மருந்து
துயரரின் உடலில் ஆழ்ந்து
வேலைசெய்யாமல் அவரது நோய் நிலையில் எந்த
மாற்றமோ அல்லது நலமடைவதில் தாமதமோ
ஏற்படும். ஏனென்றால்,
ஹோமியோபதி
மருத்துவத்தில் எந்தத் துயரருக்கு, எந்த நோய்க்குறிக்கு, எந்த மருந்தினை என்ன
வீரியத்தில் கொடுக்க வேண்டும் என்பதற்கான குறிப்பிட்ட எந்த விதியும் இல்லை. அதனால்
பல ஹோமியோபதி மருத்துவர்களுக்கு மருந்து தேர்வில் சரியான
வீரியத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது சிரமமாகவும் அதே சமயத்தில் குழப்பத்தையும்
ஏற்படுத்துகிறது. ஆனால் , மாமேதை ஹானிமன் இதற்கான விடையை தமது " ஆர்கனான்"
நூலில் மிகத் தெளிவாக எழுதி வைத்துள்ளார். அவர், ஹோமியோபதியில் மருந்து
தயாரிக்கும் வழிமுறைகள் பற்றி மணிமொழி
264 முதல் 271 வரையிலும், அம்மருந்துகளை
எப்போது,
எந்த அளவில் , எத்தனைமுறை கொடுக்கவேண்டும்
என்பதை பற்றி மணிமொழி 272 முதல் 285
வரையிலும் மிகத் தெளிவாகக் கொடுத்துள்ளார்.
குறிப்பாக அவர் மணிமொழி 275 இல் , “ தேர்ந்தெடுக்கப்படும் ஒரு
மருந்து ஹோமியோபதி வழிமுறைகளுக்கு முற்றிலும் உட்பட்டது என்பதனால் மட்டும்
நோய்க்குத் தகுந்தது என்று அதைக் கருத முடியாது. அம்மருந்தைக் கொடுக்க வேண்டிய அளவும் (
Proper size ) தகுந்ததாக இருப்பது அவசியம். அதாவது குறைந்த அளவில் இருக்க வேண்டும் . அதிக அளவில் இருந்தால் ( Too
strong a dose) நோய்க்கு உண்மையில்
ஏற்றதாக இருக்கும் மருந்து கூட உயிர்ப்புச் சக்தியை தேவைக்கு அதிகமாகத்
தாக்கி அதன் மூலம் இயற்கை நோயினால் வேதனைப்படும் உடலுறுப்புக்களை மேலும் வேதனைக்கு
உள்ளாக்குகிறது”. என்று குறிப்பிடுகிறார்.
அதேபோல் மணிமொழி 278 இல், “ நிச்சயமாகவும் , மிருதுவாகவும் நோயை நீக்கி
நலத்தை ஏற்படுத்தக்கூடிய மருந்தின் குறைந்த அளவு எது என்ற கேள்வி இப்பொழுது
பிறக்கிறது. அதாவது , ஹோமியோபதி வழிமுறைகளுக்கு இணங்கத் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு மருந்தும் எந்தக்
குறைந்த அளவில் உபயோகிக்கப்பட வேண்டுமென்று தெரிய வேண்டும். வெறும் கற்பனை , யூகம் ( Theoretical speculation ) ஆகியவைகளாலோ, சாதூரியமான வாதங்களாலோ (
Fine-spun reasoning) , பகட்டான பேச்சுக்களாலோ (Specious
sophistry) இக்கேள்விக்கு விடைகாண முடியாது. உண்மையான பரிசோதனை , கூர்ந்து கவனித்தல் , ஒவ்வொரு துயரரின் உணர்ச்சித்தன்மை மற்றும் சரியான
அனுபவம் ஆகியவைகளைக் கொண்டே ஒவ்வொரு தனிப்பட்ட
துயரருக்கும் தேவையான மருந்தின் அளவை தீர்மானிக்க முடியும் ” என்றும் தெளிவு படுத்துகிறார். அவ்வாறே , அவரும் ஹோமியோபதி மருந்துகளை
சரியான அளவிலே கையாண்டு வந்துள்ளார் என்பதை அவரின்
அனுபவங்களின் மூலம் நாம் அறிந்துகொள்ள இயலும்.
மாமேதை ஹானிமன் பயன்படுத்திய வீரியங்கள்:
மரு. ஹானிமன் கி.பி.1798 ஆம் ஆண்டிற்குப் பிறகு தான்
வீரியப்படுத்தப்பட்ட ஹோமியோபதி மருந்துகளை பயன்படுத்தினார் என்று மரு. பீட்டர் மோரல் தமது ஆய்வுக்குறிப்பில் தெரியப்படுத்துகிறார். ஹானிமன் எந்தெந்த
ஆண்டுகளில் எந்தெந்த வீரியங்களை பயன்படுத்தினார் என்பதை இப்போது பார்க்கலாம்.
ஹானிமன் பயன்படுத்திய வீரியங்கள்
ஆண்டு
|
வீரியங்கள்
|
கி.பி. 1798
|
2X,
4X மற்றும் 2C
|
கி.பி. 1799
|
5X,
6X,8X மற்றும் 3C
|
கி.பி. 1803
|
10X
மற்றும் 12C
|
கி.பி. 1805
|
18C
|
கி.பி. 1816
|
30C
|
கி.பி. 1824
|
60
C
|
கி.பி. 1830
|
மருந்தினை முகர்வது. (Olfaction)
|
கி.பி. 1838
|
LM வீரியங்கள்
|
மரு. ஹானிமன் அவர்கள் கி.பி.1816 இல் வெளிக்கொணர்ந்த 30C வீரியமே அப்போது உயர்ந்த
வீரியம் என்று கருதப்பட்டது. அதன் பிறகு அவர் கி.பி. 1843 ஆண்டு அதாவது தான்
இறக்கும் வரை 18
C வீரியத்தையும் , 30 C வீரியத்தையுமே அதிகம் உபயோகப்படுத்தியுள்ளார்.
தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே 200 வீரியத்தையும் , ஒருமுறை மட்டும் 1M வீரியத்தையும்
பயன்படுத்தியுள்ளார் என்று மேடம் மெலானி தமது
குறிப்பேடுகளில் பதிவு செய்துள்ளதாக மரு.பாரிங்டன் தெரிவிக்கிறார்.
மருத்துவர்களும் வீரியங்களும்:
ஹானிமன் உயிருடன் இருந்த காலத்திலே குறைந்த மற்றும் நடுத்தர வீரியத்தைப்
பயன்படுத்தும் மருத்துவர்கள் , உயர்ந்த வீரியத்தை பயன்படுத்தும் மருத்துவர்கள் என்று
இரண்டு பிரிவுகள் இருந்ததை நாம் மறந்துவிடக் கூடாது. குறிப்பாக , மருத்துவர்கள் கூப்பர் (R.T.Cooper) ,
கிளார்க் ( J.H.Clarke) , வில்லியம் போயரிக் (William Boericke ) குருன்சே ( Guernsey) , ப்ளாக்வூட் ( Blackwood) , ரிச்சர்ட் ஹூசஸ் ( Richard Hughes) ,
அல்லன் (T.F.Allan) ஜார்ஜ் ராயல் ( George Rayal) டச்சுயான் ( Dudgeon) போன்றவர்கள் குறைந்த வீரியத்தையும் , தாய்த் திரவத்தையுமே அதிகம் பயன்படுத்தியுள்ளார்கள். அதிலும் ரிச்சர்ட் ஹூசஸ் உயர்ந்த வீரியத்தை
எற்றுகொள்வதில்லை என்பதையும் அதற்கு எதிராகவே இருந்துவந்துள்ளார் என்பதும்
ஆச்சரியமாக உள்ளது.
இதற்கு மாறாக ,
மிகவும் புகழ்
வாய்ந்த கெண்ட் (J.T.KENT) , நாஷ் (E.B.NASH) , சிப்சன் மில்லர் ( GIBSON MILLER) , போயினிங்ஹாசன், ஹப்பர்ட் ( HUBBARD) ஸ்கின்னர் (SKINNER) , ஜான் வெயர் (
JOHN WEIR) மற்றும் பாயிட் (BOYD) போன்றவர்கள் உயர்ந்த வீரியங்களையே
பெரிதும் பயன்படுத்தி வந்துள்ளார்கள். அதிலும் மரு. கெண்ட் உயர்ந்த வீரியங்களுக்கு
மிகவும் முக்கியத்துவம் கொடுத்தவர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
அதேபோல் ஹெரிங் (C.HERING) , ஜார் (JAHR) ,
பாரிங்க்டன் (E.A.FARRINTON) ) , பெர்னட் (BURNETT) ,
அல்லன் (H.C.ALLEN) ,
டன்ஹாம் (DUNHAM) ,
போகர் (BOGER) மற்றும் லிப்பே போன்றவர்கள் நடுத்தர
வீரியங்களையே பெரிதும் பயன்படுத்தி வந்துள்ளார்கள். சில சமயங்களில்
உயர்ந்த வீரியங்களையும் பயன்படுத்தி
உள்ளார்கள் என்றும் தெரிகிறது.
தற்கால மருத்துவர்களில் ஜார்ஜ் வித்தொல்கஸ் ( GEORGE
VITHOLKAS) ,
ராஜன் சங்கரன் (RAJAN SANKARAN) ,
பிரபுல் விஜயகர் ( PRAFUL VIJAYAKAR) ,
ராபின் மர்பி (RABIN MURPHY) ஜெயஸ் ஜா (JAYASH SHAH) , ஜெர்மி ஜெர் (JERMEY SHERR) மற்றும் லுக் டி செப்பேர் ( LUC DE
SCHEPPER) போன்றவர்கள் உயர்ந்த வீரியங்களை அதிகம்
பயன்படுத்துகிறார்கள். ஆனால் பூனாவைச் சேர்ந்த மரு. அமர் டி நிகாம் நடுத்தர வீரியமான 30C வீரியத்தையே பெரிதும்
பயன்படுத்துகிறார். சில சமயங்களில் மட்டுமே அவர் 200C வீரியத்தை
உபயோகப்படுத்துகிறார் என்று தெரிகிறது.
ஹானிமன் தமது ஆர்கனான் ஆறாம் பதிப்பில் வெளிகொணர்ந்த 50 மில்லிசிமல் வீரியத்தை மருத்துவர்கள் சங்கரன் ( P.SANKARAN) ,
குஞ்சில் (KUNZIL) , சிமித் ( SCHMIDT) மற்றும் சௌத்ராய் போன்றவர்களை தவிர அதிக மருத்துவர்கள் பயன்படுத்தவில்லை.
தற்போது ராஜன் சங்கரனும் அவரது ஆதரவாளர்களும்
அதிக அளவில் இவ்வீரியத்தை பயன்படுத்தி வருகிறார்கள். சரி, இப்போது ஹோமியோபதி வீரியங்களைப் பற்றிப்
பார்க்கலாம்.
ஹோமியோபதி மருந்துகளின் வீரியங்கள்
ஹோமியோபதி மருந்துகள் தசம வீரியத்திலும் ( DECIMAL 1: 9) அதாவது 1X, 2X,3X.....6X மற்றும் 30X என்றும் , நூறில் ஒருபங்காக
கணக்கிடுகிற வகையில் ( CENTESTIMAL 1:
99 ) அதாவது 1C, 3C,6C,15C,18C , 30 C மற்றும் 1M, 10M, 50 M வீரியங்களிலும், மூன்றாவது வீரிய வரிசையான 50 ஆயிரம் வரிசை என்ற 50 மில்லிசிமல் ( 50 MILLESIMAL ) அல்லது LM அல்லது
Q ( QUINQUAGINTAMILLESIMAL) வீரியத்திலும் நிரூபணம்
செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு நிரூபணம் செய்யப்பட
ஹோமியோபதி மருந்துகள் குறைந்த வீரியம், நடுத்தர வீரியம் மற்றும் உயர்ந்த வீரியங்கள் என்று
மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன;
குறைந்த வீரியம் : தாய்திரவம் என்று
அழைக்கப்படும் Q முதல் 12
C வரை.
நடுத்தர வீரியம் : 12 C முதல் 200 C வரை.
உயர்ந்த வீரியங்கள் : 200 C முதல் 1M , 10M, 50M, CM ( 100 THOUSAND)
, DM (5CM), MM
(MILLION) , DMM ( 10MM) , MMM (BILLION)
50
ஆயிரம் வரிசை :
LM 1 (0/1), LM2 (0/2) , LM3(0/3) அதாவது LM30 (0/30) வரை.
உயர்ந்த வீரியங்களின் தோற்றம்:
மரு. ஹானிமன் குறைந்த மற்றும் நடுத்தர வீரியங்களை பயன்படுத்தி சிகிச்சை செய்த
போது, கி.பி. 1830 இல் ரஷிய மருத்துவர்
கொர்சகொப் ( DR.KORSAKOFF) என்பவர் தான் மருந்துகளை மேலும்
வீரியபடுத்தி உயர்ந்த வீரியங்களை அறிமுகம் செய்தார். அதனால் அவர் உருவாக்கிய
வீரியங்கள் அவரது பெயரிலேயே 30K , 200K என்று அழைக்கப்பட்டது. ஆனாலும்
மரு. கொர்சகொப் உருவாக்கிய வீரியத்தின் நம்பகத்தன்மை குறைந்ததால் அது நிலைத்து நிற்கவில்லை. அதன் பிறகு கி.பி. 1844 இல் மரு. ஜெனிசென் ( JENICHEN) தான் 2500C முதல் 8000C வரை மருந்துகளை
வீரியப்படுத்தி ஹோமியோபதிக்கு அறிமுகம் செய்துள்ளார். அதன் பிறகே உயந்த வீரியங்கள்
புகழடையத் துவங்கியது. கி.பி. 1850 முதல்
கி.பி.1900 வரை மருத்துவர்கள் Samuel Swan, H.C.Allen, Fincke, E.B.Nash,William Boericke போன்றவர்கள் மிக உயர்ந்த
வீரியங்கள் தயாரிக்கும் இயந்திரங்களைக் கொண்டுவந்தார்கள்.
சரியான வீரியத்தை தேர்வு செய்ய உதவும் காரணிகள்:
பொதுவாக கூர்ந்துணரும் பண்பு அதிகமாக உள்ள துயரர்கள்
குறிப்பாக குழந்தைகள் (Children) , இளமையான நல்லுறுதிமிக்க
வாலிபர்கள் (Young robust persons) , உணர்ச்சிமிக்க ( Sensitive) , எரிச்சல்குணம் கொண்ட ( Irritable) , எளிதில் சினம் கொள்கிற (Nervous) மற்றும் புத்திசாலியான ( Intelligent) நபர்களுக்கு உயர்ந்த வீரியம் தேவைப்படும்.
அதே சமயத்தில் வயது முதிர்ந்த (Old aged) , கபம் உண்டு பண்ணுகிற ( Phlegmatic) , ஊக்கமற்ற (Dull) , மந்தமான ( Sluggish) நபர்கள், கடும் உழைப்பாளிகள் ( Laborers) , காது மற்றும் வாய் ( Deaf and Dump) பேசமுடியாத துயரர்களின் கூர்ந்துணரும்
பண்பு குறைவாக இருக்கும் என்பதால் அவர்களுக்கு குறைந்த வீரியங்கள் தேவைப்படும்.
மனக்குறிகள் மேலோங்கிய
நிலையில் உள்ள துயரர்கள் மற்றும் உறுப்பியக்கத்தை பாதிக்கிற தொல்லைகளும் ( Functional Disturbances) உள்ள துயரர்களுக்கு
உயர்ந்தவீரியம் தேவைப்படும்.
நோய் வகையில் உக்கிரமான ( Malignant) , விரைவாக மரணத்தை ஏற்ப்படுத்துகிற (Fatal) நோய்களில் குறைந்த வீரியங்களை உபயோகப்படுத்த
வேண்டும்.
நோய்க்குறிகள் அதிகரித்த
நிலையில் ,
உடல் உறுப்புகளிலும்
, உடலின் ஆக்க
மூலப்பொருள்களிலும் (Tissues) கட்டமைப்புமாற்றத்தை ( Structural Changes ) ஏற்படுத்தக்கூடிய நிலையில்
குறைந்த மற்றும் நடுத்தர வீரியங்களை கொடுக்க வேண்டும்.
துயரரின் உயிர்ப்புசக்தி தளர்ந்த
நிலையில் இருக்கும் போது குறைந்த வீரியமும் , அதேசமயத்தில் உயிர்ப்புசக்தி அல்லது நோய் எதிர்ப்பு
ஆற்றல் அதிகமாக உள்ள நிலையில் உயர்ந்த வீரியமும் தேவைப்படும்.
உயிர் ஆற்றல் மிகவும்
குறைந்து இறக்கும் தருவாயில் உள்ள துயரர்களுக்கு நேர் எதிர்ப்பண்புடைய மருந்துகளையும் ( Antipathic Remedies) , உள ஆற்றல் வசியமும் ( Mesmerism) செய்ய வேண்டும் என்று மரு. ஹானிமன் தெரிவிக்கிறார்.
ஏற்கனவே குறிப்பிட்ட
வீரியத்தில்( ஹோமியோபதி) மருந்து
எடுத்துக்கொண்டு நல்ல பலனைத் தராமல் ( சரியான மருந்தாக இருந்தாலும்) வரும்
துயரர்களுக்கு உயர்ந்த அல்ல குறைந்த வீரியத்தில் தரலாம். அதே போல் அதிக அளவில்
மூலக்கூறுகள் அதிகம் உள்ள மருந்துகளை எடுத்துக் கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்புத்
தன்மை குறைந்திருக்கும் என்பதால் அவர்களுக்கு குறைந்த வீரியம் தேவைப்படும். பின்பு
மருந்தின் பாதிப்பு குறைந்தபின் நடுத்தர மற்றும் உயர்ந்த வீரியங்கள் பயனைத் தரும்.
அதிகப்படியான
கூருணர்ச்சியுள்ள துயரர்களிடம் (Hypersensitive) கொடுக்கப்படும் மருந்தின் குறிகள் வெளிப்பட துவங்கும்
என்பதால் குறைந்த அல்லது நடுத்தர வீரியங்களை கொடுக்கவேண்டும். அதே போல் தொடர்ந்து
மருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ள துயரர்களுக்கு குறைந்த வீரியத்தில்
தான் மருந்து கொடுக்க வேண்டும்.
குறைந்த மற்றும் உயர்ந்த
வீரியங்கள் செயல்படும் முறை:
குறைந்த வீரியங்கள்
|
உயர்ந்த வீரியங்கள்
|
குறைந்த நாட்கள் (அதாவது 1 முதல் 7 நாட்கள் வரை).
|
நீண்ட நாட்களுக்கு வேலை செய்யும்.
|
மேலெழுந்த வாரியாக வேலைசெய்யும்.
|
ஆழமாக வேலைசெய்யும்.
|
உணர்ச்சி வசப்பட்ட அல்லது அதிக
உணர்ச்சிக்கு உட்படும் தன்மையுள்ள துயரர்கள் தாங்கிக் கொள்ள இயலும்.
|
அதிக உணர்ச்சிக்கு உட்படும் தன்மையுள்ள அல்லது கூர் உணர்ச்சி
துயரர்களால் தாங்கிக் கொள்ள. இயலாது அத்தோடு எடுத்துக்கொண்ட மருந்தின் குறிகள் வெளிப்படும்.
|
உடனடி அல்லது குறுகியகால நோய்களுக்கு உகந்தது.
|
நாட்பட்ட நோய்களில் கூர் உணர்ச்சியுள்ள துயரர்களுக்கு மருந்தளிப்பது மிகவும்
கடினம். நோய்த்தன்மை மிகவும் ஆழமாக வேரூண்றி இருப்பதால் அத்துயரரின்
மியாசத்திற்குத் தகுந்த உயர்ந்த வீரியம் கொடுத்தால் மட்டுமே துயரரை
நலப்படுத்தமுடியும்.
|
நோய்க்குறிகள் மேலோங்கிய நிலையிலும்
,
துயரரின்
உயிர்ப்புச் சக்தி குறைந்துள்ள நிலையிலும் குறைந்த வீரியத்தில்
மருந்தளிக்கவேண்டும்.
|
நோய்க்குறிகள் மேலோங்கிய நிலையிலும்
,
துயரரின்
உயிர்ப்புச் சக்தி குறைந்துள்ள நிலையிலும் உயர்ந்த வீரியத்தில் மருந்தளிக்கக் கூடாது .
|
குறிப்பிட்ட சில பகுதிகளில் ஏற்ப்பட்ட பாதிப்புக்கு மருந்து கொடுக்கும் போது
குறைந்த வீரியம் பயன்படுத்த வேண்டும்.
|
துயரரின் ஏற்புத்தன்மை நன்றாக
இருக்கும்போது தகுந்த ஒத்தமருந்தை உயர்ந்த வீரியத்தில் கொடுக்கலாம்.
|
துயரர்கள்: வயது முதிர்ந்த , தளர்ந்த , மந்தமான மற்றும் இளமையில்
முதுமை தோற்றம் கொண்டவர்கள், உயிர் ஆற்றல் குறைந்த
ஒல்லியான மற்றும் குழிவிழுந்த கண்களை உடைய
துயரர்களுக்கு குறைந்த வீரியமே கொடுக்கவேண்டும்.
|
துயரர்கள்: இளமையான, புத்திசாலியான , சுறுசுறுப்பான மற்றும்
உயிர் ஆற்றல் அதிகமுள்ள துயரர்களுக்கு உயர்ந்த வீரியத்தில் கொடுக்கலாம்.
|
ஹோமியோபதி மருந்துகளின் வீரியங்களைப் பற்றி புகழ்பெற்ற மருத்துவர்களின் அனுபவங்களும்
கருத்துக்களும்:
மரு . ஸ்டுவர்ட் கிளோஸ் ( STUART CLOSE ) : ஹோமியோபதியில் நலப்படுத்தக்
கூடிய நோய்களில் ,
அது சரியான மருந்தாக
இருக்கும்பட்சத்தில் எந்த வீரியத்திலும் நலப்படுத்தலாம். ஆனால் அந்த துயரருக்கு
நலத்தைத் தருவது அந்த குறிப்பிட்ட
துயரரின் நோய் தன்மைக்கு ஏற்ற சரியான வீரியத்தில் மருந்தளிப்பதைப் பொறுத்தே
அமைகிறது. சில சமயம் நாம் சரியான மருந்தினை கொடுத்தும் ,
சரியான வீரியத்தில் கொடுக்கப்படவில்லையென்றால் அம்மருந்து வேலை செய்யாதது மட்டுமல்ல அந்த
துயரருக்கு தீமையைக் கொடுக்கும்
என்று மரு. ஸ்டுவர்ட் கிளோஸ் ( STUART CLOSE ) குறிப்பிடுகிறார். அத்தோடு மருந்தின் சரியான வீரியத்தை தேர்வு
செய்வதற்கு கீழ்காணும் காரணிகளை கவனத்தில் எடுத்துக் கொள்ளச் சொல்கிறார்.
1. துயரரின் எளிதில்
பாதிக்கப்படும் தன்மை அல்லது கூர்ந்துணரும் பண்பு (susceptibility
of the patient).
2. நோய் நிலைகொண்டிருக்கும்
பகுதி (seat
of the disease).
3. நோயின் இயல்புத்தன்மை
மற்றும் தீவிரநிலை ( nature and intensity
of the disease).
4. நோய்நிலை மற்றும் காலநீட்சி (stage
and duration)
5. ஏற்கனவே எடுத்துக்கொண்ட
மருத்துவ சிகிச்சை.
( previous treatment of the disease).
6. வயது: குழந்தைகளுக்கு
நடுத்தர மற்றும் உயர்ந்த வீரியங்கள்.
7. புத்திசாலியான ( Intelligent) நபர்களுக்கு உயர்ந்த வீரியம் தேவைப்படும்.
8. வாழ்வின் இறுதிகட்டத்தில்
இருக்கும் துயரருக்கு இயற்கையான மருந்துகள் ( Crude Drugs) கொடுக்க வேண்டும்.
மரு.போயினிங்ஹாசன் (BOENNINGHAUSEN) : ஹானிமன் உயிரோடு இருந்த காலத்திலே உயர்ந்த
வீரியங்களுக்கு உயிர்கொடுத்தவர் மரு.போயினிங்ஹாசன் என்றால் அது மிகையாகாது. அவர் 200 C வீரியத்தையே பயன்படுத்தி பல ஆயிரம் துயரர்களை மட்டுமல்லாது , விலங்கினங்களையும் நலப்படுத்தி உள்ளார்
என்பதை அவரது “சிறிய குறிப்புகள்” ( THE LESSER WRITTINGS ) என்ற நூல் மூலம்
தெரிந்து கொள்ளலாம். உயர்ந்த வீரியங்களை
பயன்படுத்தும் போது கீழ்காணும் நன்மைகள் விளைவதாக மரு.போயினிங்ஹாசன் குறிப்பிடுகிறார்.
1. நாட்பட்ட நோய்களில் ( CHRONIC DISEASE) உயர்ந்த வீரியத்தில் மருந்து கொடுக்கும் போது
அதன் சக்தி உடல் உறுப்புகள் முழுவதும் பரவி நலமாக்கலை துரிதப்படுத்துகிறது.
2. குறுகியகால அல்லது உடனடி
நோய்களில் ( ACUTE DISEASES) உயர்ந்த வீரியம் விரைவாக
வேலை செய்ய ஆரம்பிக்கிறது.
3. துயரர் உணவுக் கட்டுப்பாட்டை
கடைப்பிடிக்கவில்லை என்றாலும் கூட உயர்ந்த வீரியம் நன்றாக வேலை செய்கிறது.
ஜார்ஜ் விதொல்காஸ் ( GEORGE VITHOULKAS) : பலவீனமான உடலமைப்பு
உள்ளவர்களுக்கும் ,
முதியவர்களுக்கும் , கூர் உணர்ச்சி
உள்ளவர்களுக்கும் ஆரம்பத்தில் 12 X வீரியம் முதல் 200 C
வரை தான் கொடுக்கவேண்டும். அந்த பாதுகாப்பற்ற பலவீனமான நிலையில் அவர்களுக்கு
உயர்ந்த வீரியத்தில் மருந்து கொடுத்தால் தேவையில்லாமல் நோய்க்குறிகள்
அதிகரிக்கும். அதேபோல் கடுமையான நோய் தாக்குதலுக்கு உள்ளான குழந்தைகளுக்கு குறைந்த
வீரியத்தில் தான் மருந்தளிக்க வேண்டும்.
அதிலும் உக்கிரமான நோய் நிலையில் 200 C வீரியத்திற்கு
மேல் கொடுக்கக் கூடாது என்று தமது “ The Science of Homeopathy” என்ற நூலில்
குறிப்பிடுகிறார்.
J.T. கெண்ட் (J.T.KENT) : மரு. J.T. கெண்ட் அவர்கள் தான் நடுத்தர மற்றும் உயர்ந்த வீரியங்களில் மிகவும் சரளமாக
ஹோமியோபதியைக் கையாண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமல்லாமல் அவருடைய
சீடர்களும் இன்றளவும் உயர்ந்த வீரியங்களில் தனி மரியாதை வைத்துள்ளார்கள் என்பதும்
உண்மை. முப்பது ஆண்டுகள் பல்வேறு
மருந்துகளை வெவ்வேறு வீரியங்களில் கொடுத்து , அதன் நலமாக்கும் ஆற்றலை நன்றாக புரிந்து கொண்ட பின்னர் , தமது பட்டறிவை கீழ்காணும் வகையில் கொடுத்துள்ளார்
மரு.கெண்ட்;
1. எளிதில் உணர்ச்சி வசப்படும்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு: 30C முதல் 10 M வரை.
2. சாதாரண நாட்பட்ட நோய்களுக்கு
( அதி உணர்ச்சிக்கு உட்படாத துயரர்கள்) : 10M முதல் MM வரை.
3. திடீர் அல்லது குறுகியகால
நோய்களில் : 1M & 10M. மிகவும் பயனளிக்கும்.
4. தேர்ந்தெடுத்த மருந்து ஒத்த
மருந்தாக (Similimum) இருக்கும் பட்சத்தில் எல்லா வீரியங்களிலும் வரிசையாக
தொடர்ந்து சிறப்பாக வேலை செய்யும். ஆனால்
பண்பொத்த மருந்தாக இருந்து விட்டால் ( Similar) ஓரிரு வீரியங்களில்
வேலை செய்துவிட்டு நின்றுவிடும். பின்பு வேறு குறிகள் தோன்றி புதிய மருந்தை
தேர்ந்தெடுக்கவேண்டிவரும்.
மேலும், CM வீரியத்தின் மீது மிகவும்
மரியாதையும் ,
பிரியமும்
வைத்திருக்கும் கெண்ட் அவர்கள் , வீரியத் தேர்வு என்பது அந்தந்த மருத்துவரின் தனிப்பட்ட
அனுபவத்தைப் பொருத்தது என்றும், இதற்கென்று ஒரு சட்டம் இல்லை என்று கூறுகிறார். ஆனாலும் , முப்பதாவது வீரியமே ஹோமியோபதி மருத்துவத்தைத் துவக்குவதற்கு சரியான
வீரியம் என்று தமது நீண்டகால அனுபவத்தில்
மூலம் தெரிந்து கொண்டேன் என்கிறார்
கெண்ட்.
C. ஹெரிங் ( Constantine Hering) :
சரியான வீரியத்தேர்விற்கு, , ஹானிமன் ஆர்கனான் மணிமொழி 63 முதல் 65 வரை சுட்டிக்காட்டிய PRIMARY/SECONDARY ACTION என்ற
கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் மரு.ஹெர்ரிங். அதாவது, " உயிர்ப்புச்
சக்தியைத் தாக்கியபின் உடலின் நலனை உருக்குலைத்து நோய்க்குறிகளைத் தோற்றுவிக்கும்
மருந்தின் வேலை முதலாம் வேலை, (Primary Action) அம்முதல் வேலையை அழித்துவிட
உயிர்ப்புச்சக்தி குதித்தெழுந்து தோற்றுவிக்கும் மாற்றுக்குறிகள் இரண்டாம் வேலை ( Secondary Action) எனப்படும்”. துயரர் முதல் நிலையில் இருந்தால் குறைந்த வீரியமும் , இரண்டாம் நிலையில் இருந்தால்
உயர்ந்த வீரியமும் கொடுக்க வேண்டும் என்று மரு.ஹெர்ரிங் தெரிவிக்கிறார்.
எடுத்துக்காட்டாக கூற வேண்டுமென்றால், கடுமையான உழைப்பினால் உடலில்
முதலில் சூடு உண்டாகிறது (Primary Action). பிறகு சில்லிப்பும்
நடுக்கமும் தோன்றுகின்றன. முதல்நாள் சாராயம்
குடித்து உடம்பில் சூடு உண்டானவர்களுக்கு (Primary Action) மறுநாள் மூச்சுக்காற்று கூட சில்லென்று( Secondary
Action) ஆகும். அபினை உட்கொண்டால்
முதலில் மயக்கமும் (Primary Action) பிறகு அதிகத்
தூக்கமின்மையும் ஏற்படுகின்றன ( Secondary Action). அதேபோல் சிலருக்கு முதலில் மலச்சிக்கலும் (Primary Action) பிறகு வயிற்றுப்போக்கும் ( Secondary Action) உண்டாகும். இவ்வாறான செயல்பாடுகளை நாம் கவனிக்க வேண்டும்.
ஆனாலும் ,
துயரர் எந்த
நிலையில் இருக்கிறார் என்பதை தீர்மானிப்பதில் தவறு நேரிட்டால் , மருந்தின் வீரியத்தேர்விலும்
தவறு நேரிடலாம். ஆகவே கவனம் தேவை.
C.M.போகர் (C.M.BOGER) : மரு. போகர் எல்லா
வீரியங்களையும் உபயோகித்து இருந்தாலும் உயர்ந்த வீரியங்களை பெரிதும் நம்பினார்.
அவருக்கு பிடித்தமான வீரியம் என்பது DMM (10MM) தான். ஆனால் அந்த வீரியத்தில் மருந்தை
ஒருமுறை மட்டுமே கொடுப்பார்.
போர்லண்ட் ( BORLAND): எளிதில் உணர்ச்சிவசப்படும் துயரர்களுக்கு உடலின் புற உறுப்புகளிலும் , திசுக்களிலும் ஏற்படும்
பாதிப்பிற்கும் ,
நோய்த்தன்மை முற்றிய
நிலையில் இருந்தால் குறைந்த வீரியம் பயன்படுத்தவேண்டும்.அத்தோடு துயரரின்
முதன்மைக் குறிகள் ,
மருந்தின் குறிகளோடு
ஒத்திருந்தால் நடுத்தர மற்றும் உயர்ந்த வீரியங்கள் கொடுக்கலாம். மேலும் , அதிதீவிர நோய்களில் உயர்ந்த
வீரியங்கள் உடனடி பலனளிக்கும் என்கிறார் போர்லண்ட்.
ராபர்ட்ஸ் (H.A.ROBERTS): துயரரின் நோய்க்குறிகள், மருந்தின் குறிகளோடு மிகவும்
ஒத்திருந்தால் நாம் விரும்பிய வகையில் உயர்ந்த வீரியங்களைக் கொடுக்கலாம். ஆனால் , ஒத்ததன்மை உறுதிப்படாத
நிலையில் குறைந்த வீரியமே கொடுக்கவேண்டும். ஆனால் நோய்த்தன்மை மேலோங்கிய நிலையில்
நடுத்தர மற்றும் உயர்ந்த வீரியங்கள் தீங்கு விளைவிக்கும் என்பது உறுதியான விதி
என்கிறார் ராபர்ட்ஸ்.
சர் ஜான் வெயர் ( SIR JOHN WEIR): தமது 35 வருட அனுபவத்தில் , உடல்சார்ந்த நோய்
நிலையிலும் , புற உடல் சார்ந்த
பகுதிகளிலும்,
மற்றும் தோல்
பகுதியிலும் பாதிப்பிற்கு உள்ளாகியிருந்த துயரர்களுக்கு குறைந்த வீரியமே
உபயோகித்துள்ளேன். அதே சமயத்தில் மனக்குறிகள் அதிகரித்துள்ள நிலையில் உள்ள
துயரர்களுக்கு உயர்ந்தவீரியம் தான் தேவைப்பட்டது என்கிறார் சர் ஜான் வெயர் .
ஹப்பர்ட் (HUBBARD) : துயரரின் மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டு அதன் மூலமாக ( Psychic Origin) தோன்றிய நோய்த்தன்மைக்கு
உயர்ந்தவீரியமே உறுதியாக கொடுக்கவேண்டும். அதேபோல் அகஉணர்வு சார்ந்த குறிகளுடன் ( Subjective Symptoms) உறுப்பியக்கத்தைப் பாதிக்கிற நோய் நிலையிலும் , கடுமையாக இருக்கும் தீவிர
நோயிலும் உயர்ந்த வீரியங்கள் நன்றாக வேலை செய்கிறது. நாட்பட்ட நோயினால் தோன்றும்
தீவிர நிலைக்கு எடுத்துக்காட்டாக , இருதயம் சார்ந்த காசநோயில் ( Cardiac Asthma) நடுத்தர மற்றும் குறைந்த வீரியத்தையே தேர்ந்தெடுக்கவேண்டும்
. மேலும் அவர், " நம்பிக்கையற்ற நோய்நிலையில் (Desperate Ill cases) , அதாவது திடீர் நோய் தாக்குதலில், துயரர் உயிருக்குப்
போராடிக்கொண்டிருக்கும் போது உயர்ந்த வீரியம் நன்றாக வேலை செய்யும். அதே சமயத்தில் நாட்பட்ட நோய்நிலையில், நம்பிக்கையற்று , துயரர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும்
போது உயர்ந்த வீரியத்தில் மருந்தளித்தால் வலியில்லா
மரணத்தைக் கொடுக்கும். (EUTHANASIA). நலப்படுத்த முடியாத நிலையில்
உள்ள துயரர்களுக்கும்,
நோய் எதிர்ப்புச்சக்தி
குறைவாக இருந்து, நோய்க்குறிகள் மேலோங்கி இருக்கும் போது குறைந்த மற்றும் நடுத்தர வீரியமே
பொருத்தமானது. நாட்பட்ட அல்லது நீண்டகால நோய்களுக்கு மருத்துவத்தை துவக்குவதற்கு 200 C வீரியமே சிறந்தது என்கிறார் ஹப்பர்ட்.
P. சங்கரன் ( P.SANKARAN) : மிகச்சிறந்த இந்திய மருத்துவரும், ஹோமியோபதியில் புதிய
வழிமுறையான " உணர்வுநிலை மருத்துவத்தை" உலகிற்கு அறிமுகப்படுத்திய
பிரபல மருத்துவர் ராஜன் சங்கரனின்
தந்தையுமான இவர்,
தமது ஆழ்ந்த
அனுபவங்களைத் திரட்டி ,
சரியான வீரியத்தைத்
தேர்ந்தெடுக்க கீழ்காணும் 12 தற்காலிக
விதிமுறைகளை ( Tentative Rules) கொடுத்துள்ளார். அவையாவன;
1.
ஒரு துயரரின் நோய்க்குறிகள் மருந்தின் குறிகளோடு மிகச்சரியாக பொருந்தும் போது
குறிப்பாக மனக்குறிகள் மிகத் தெளிவாக இருந்தால் உயர்ந்த வீரியம் கொடுக்கலாம்.
2.
அ) துயரரின் நோய்க்குறிகள் மருந்தின் குறிகளோடு சரியாக பொருந்தாமல்
உறுதித்தன்மை குறைந்திருக்கும் போதும் ஆ) துயரரின் குறிகள் மேலெழுந்தவாரியாகவும் அல்லது புற உறுப்புகளில் அல்லது தோல் பகுதியில் (
மருக்கள் போன்ற ) பாதிப்பையும் இ)
புற்று நோய் மற்றும் மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கடுமையான
நோயநிலையிலும் ஈ) உயிர்ப்புசக்தி குறைந்து , நலப்படுத்த முடியாத நிலையில்
இருக்கும் துயரருக்கு நோய்க் குறிகளை அப்போதைக்குத் தணிக்கிறவகையில் (Palliation) மருந்து கொடுக்கும் போதும் குறைந்த வீரியத்தைக்
கொடுப்பது சிறந்தது.
3. சில மருந்துகள் குறிப்பிட்ட
வீரியத்தில் சிறப்பாக வேலை செய்யும் . குறிப்பாக, Apocynum, Sabal serrulata,
Orinithogallum, Hydrocotyle, Passiflora, Crataegus, Adonis,
Strophanthus,Carduus marianus, Blatta Orientalis போன்ற மருந்துகள்
தாய்த்திரவத்தில் நன்றாக வேலை செய்யும்.
4. நோசோடுகள் ( Nosodes) உயர்ந்த வீரியத்தில் அதாவது 200C வீரியத்திற்கு மேல் தான் கொடுக்க வேண்டும்.
5. நோய்த்தன்மை அதிகரித்துள்ள நிலையில் குறைந்த வீரியத்தில் ( 6 C கீழ்) தினமும்
கொடுக்கலாம்.உடனடி அல்லது தீவிர நோயில் உயர்ந்த வீரியத்தை ஒரு முறை
கொடுக்கவும். நாட்பட்ட நோய்பாதிப்பின்
போது, தீவிர திடீர் நோய்க்குறிகள்
வெளிப்பட்டால் உயர்ந்த வீரியத்தை இடைவெளிவிட்டு திரும்பக் கொடுக்கலாம்.
6. ஒரு துயரருக்கு , அவரது உடல் தகுதிக்குப்
பொருத்தமான ஆழ்ந்து வேலைசெய்யும் மருந்து
கொடுத்து' அம்மருந்து வினைபுரிந்து துயரர் நலமாகிக் கொண்டிருக்கும் போது, அவற்றைப் பாதிக்கும் விதமாக
தோன்றும் பிற குறிகளுக்கு துயரர் எடுத்துக்கொண்ட மருந்தின் நட்பு மருந்தை குறைந்த
வீரியத்தில் கொடுத்தால் அவர் நலமடைவார்.
7. குழந்தைகளின் உயிர்ப்புசக்தி
நன்றாக இருப்பதால் அவர்களிடம் உயர்ந்த வீரியம் நன்றாக வேலை செய்யும். மாறாக , வயதானவர்களுக்கு
உயிர்ப்புசக்தி குறைந்து இருப்பதால்
அவர்களால் உயர்ந்த வீரியத்தை தாங்க இயலாது.
8. துயரர் , மருந்திற்கு உட்படும் கூர் உணர்ச்சிமிக்கவராக இருந்தால்
குறைந்த வீரியத்தில் மருந்து கொடுப்பது தான் சிறந்தது.
9. மருந்தின் எதிர்விளைவு (REACTION) தாமதமாக இருக்கும் போது, எதிர்விளைவை அதகப்படுத்த கொடுக்கப்படும் எதிர்விளைவு
மருந்து ( உதாரணம்: carb-v) உயர்ந்த வீரியத்தில் இருக்க வேண்டும்.
10. மனம் சம்பந்தப்பட்ட
வேலைகளில் ஈடுபடும் புத்திசாலித்தனமான
மற்றும் உணர்ச்சிமிக்க துயரர்களுக்கு
உயர்ந்தவீரியம் தேவைப்படும். அதே சமயத்தில் ஊக்கமற்ற , பின்தங்கிய நிலையிலுள்ள
உடல்சார்ந்த வேலைகளில் ஈடுப்பட்டுள்ளவர்களுக்கு குறைந்த வீரியம் தான் கொடுக்க
வேண்டும்.
11. சில வீரியங்கள் குறிப்பிட்ட
சில விளைவுகளை ஏற்படுத்தும். உதாரணமாக , சிலிகா மருந்தை குறைந்த வீரியத்தில் கொடுக்கும்
போது கட்டிகளை பழுக்க வைக்கும். அதையே உயர்ந்த வீரியத்தில் கொடுத்தால்
சீழ்க்கட்டிகளை உடைத்து குணப்படுத்தும்.
12. சிலிகா மற்றும் பாஸ்பரஸ்
போன்ற ஆழமாக வேலை செய்யும் மருந்துகளை, நோய்க்குறிகள் வளர்ச்சியடைந்த நிலையில்
இருக்கும் போது உயர்ந்த வீரியத்தில் கொடுத்தால் எதிர்வினையில் வேலை செய்யும்.
மரு. சங்கரனின் வழிகாட்டுதல்
அனைவருக்கும் பெரிதும் பயனளிக்கும்
என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அடுத்து ராஜன் சங்கரன் என்ன
கூறுகிறார் என்று பார்க்கலாம்.
ராஜன் சங்கரன் (RAJAN SANKARAN) : துயரர் எதார்த்தமாக
வெளிப்படுத்திய ,
அவரின்
தனித்துவத்தைக் காட்டும் முனைப்பான
அல்லது தீவிரமான ,
தெளிவான , குறிப்பாக வினோதமான குறிகளே
சரியான வீரியத்தைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது.
உதர்ரணமாக , நான் ஏழையாக இருக்கிறேன்
என்று அடிக்கடி ஏன் நினைக்கிறன் என்று தெரியவில்லை; மேலும் பிச்சைக்காரர்களைப்
போல் அழுக்கான ,
கிழிந்த ஆடைகளை அணிந்துள்ளது போல் தெரிகிறது என்று ஒரு துயரர்
கூறினால் அவருக்கு நான் 10 M வீரியத்தைத் தான் கொடுப்பேன் என்கிறார் ராஜன்
சங்கரன். அதே சமயத்தில், கூர்உணர்ச்சிமிக்க துயரர்களுக்கு , LM வீரியத்தில் தான் அதிகம்
மருந்தளிக்கிறார் என்பதை அவரது கட்டுரைகளின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
அவர் கி.பி.1991 இல் வெளியிட்ட தமது” The Spirit of
Homeopathy” நூலில் அத்தியாயம்
17 இல் “The Selection of Potency”
என்ற ஆழமான கட்டுரை எழுதியுள்ளார். அதில் , " துயரரின் மனமும்,உடலும் சேர்ந்து அதிக அளவில்
பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தாலும் ( Central Disturbances) , மனக்குறிகளும், பொதுவான குறிகளும் ( Mentals and Generals) தெளிவாகத் தெரியும் போதும், துயரருக்குப் பொருத்தமான மிகச்சரியான
மருந்து என்று உறுதிப்படும் போதும் உயர்ந்த
வீரியத்தில் மருந்தளிக்கலாம். மாறாக, உடலின் பிற பகுதிகளைப் பாதிக்கும் (CANCER,
HYPERTENSION) நோய்த் தாக்குதலில் ( Peripheral Disturbances) அதாவது மனக்குறிகள் மேலோங்காத நிலையில் குறைந்த
வீரியத்தைக் கொடுக்கலாம் என்கிறார் ராஜன் சங்கரன். அதன் பிறகு 2005-06 ஆண்டில், உணர்வு நிலை
மருத்துவத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்த பின்னர் , துயரரின் நிலையையும்
மருந்துகளின் வீரியத்தையும் நிர்ணயம் செய்து அதற்கேற்றவாறு வீரியத்தேர்வை வரையறைப்
படுத்துகிறார். அவையாவன ;
Levels
Potency
Centesimal 50 Millesimal
I Name 6 LM 1 and 2
II Fact 30 LM 3 and 4
III Emotion 200 LM 5 and 6
IV Delusion 1M LM 7 and 8
V Sensation 10M LM 9 and 10
VI Energy 50M LM 11 and 12
VII Blankness CM
Centesimal 50 Millesimal
I Name 6 LM 1 and 2
II Fact 30 LM 3 and 4
III Emotion 200 LM 5 and 6
IV Delusion 1M LM 7 and 8
V Sensation 10M LM 9 and 10
VI Energy 50M LM 11 and 12
VII Blankness CM
தற்கால ஹோமியோபதி மருத்துவர்களில் , ராஜன் சங்கரன் சிறந்து விளங்குகிறார் என்றால்
அதற்கு அவரது அனுபவமும் ,
கடும் உழைப்பும்
தான் காரணம் என்று நான் கருதுகிறேன். எனக்குத் தெரிந்தவரை அவர் Q முதல் CM
வீரியம் வரையும், LM 0/1 முதல் LM 0/30 வரையும் பயன்படுத்தி உள்ளார். மிகவும் சிக்கலான LM வீரியத்தை சரளமாக
பயன்படுத்துவதில் ராஜன் சங்கரனுக்கு இணை அவரே. மேலும் அவர் 6,30,200 வீரியங்களை தினமும் மூன்று
வேளையும்,
வார மற்றும் மாதக்கணக்காகவும்
, துயரரின் நிலைமைக்குத்
தகுந்தவாறு கொடுத்து வந்துள்ளதாகவும் அதனால் எந்தத் துயரருக்கும் தீங்கு
ஏற்படவில்லை என்றும் குறிப்பிடுகிறார். ஆகவே, ராஜன் சங்கரனின் அனுபவங்கள் கவனத்தில்
கொள்ள வேண்டியதாக உள்ளது.
அடுத்து , உயர்ந்த வீரியங்களை அடிக்கடி கொடுக்கலாமா? என்ற கேள்வி நம் ஒவ்வொருவர் மனதிலும் எழுந்த வண்ணமே
உள்ளது.. ஆனால் இது பற்றி பல்வேறு மருத்துவர்கள் வித்தியாசமான மாறுபட்ட
கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. மரு. ராஜன்
சங்கரனின் ஆசிரியர்கள் மரு. கான்ஜிலால் உயர்ந்த வீரியத்தில் ஒரு முறை
மருந்து கொடுத்துவிட்டு மாதக்கணக்காக காத்திருப்பார், மாறாக மரு. சாராபாய்
கபாடியா 10M வீரியத்தை தினமும் நான்கு
வேலை இரண்டு ஆண்டுகளுக்கு கொடுத்து வந்துள்ளார். அந்தத் துயரருக்கு எந்த தீங்கும்
அல்லது நோய்மிகுதல் ஏற்படவில்லை என்பதை மரு. ராஜன் சங்கரன்
சுட்டிக் காட்டுகிறார்.
அப்படியே தீங்கு
ஏற்பட்டாலும் அது இரண்டு சதவீதமான துயரர்களாகவே இருப்பார்கள் என்று கூறுகிறார்
ராஜன். அதே சமயத்தில், உயர்ந்த வீரியத்தில் ஒரு முறை மருந்து கொடுத்துவிட்டு 2 -1/2
ஆண்டுகள் கூட நான் காத்திருந்துள்ளேன் என்றும் , முற்றிய நோய் நிலையில்
உள்ள சில துயரர்களுக்கு 6C வீரியத்தில் தினமும் மூன்று
வேலை வீதம் ஆறு மாதங்கள் கூட கொடுத்திருக்கிறேன் என்கிறார். சில
மருத்துவர்கள் மருந்தை 30 வது வீரியத்தில்
மட்டும் கொடுத்துவிட்டு பல மாதங்கள் வரை பொறுமை காத்து நலப்படுத்துவதாக கூறுகிறார்கள்.
அது அம்மருத்துவர்களின் தனிப்பட்ட அனுபவம்
, அவர்களுடன் எனக்கு எந்த
சண்டையும் இல்லை,
அவர்களை மதிக்கிறேன்
என்கிறார் மரு.ராஜன் சங்கரன்.
மருந்துகளும் நன்றாக வேலை செய்யும் வீரியங்களும்:
மரு. சயீத் அஹமது தமது அனுபவங்களை கீழ்க்கண்டவாறு கொடுத்துள்ளார்;
Ø
தீவிரமான தலைவலியில் பெல்லடோன்னா 30C மற்றும் 200C வீரியங்கள்
பலனளிக்கவில்லை. ஆனால் 10M வீரியத்தில் ஒரு தடவை கொடுத்த உடன் மந்திரம் போட்டது போல்
உடனடியாக நலம் ஏற்பட்டது.
Ø இரண்டு வாரம் நீடித்திருந்த
வயிற்று வலியில் , குறிகள் ஒத்திருந்தும் கோலோசிந்திசிஸ் 6C முதல் 30C வீரியம் வரை வேலை
செய்யவில்லை. ஆனால் COLOC 50M வீரியம் கொடுத்த உடன் அரை மணிநேரத்தில் நலம் கொடுத்தது.
Ø கக்குவான் இருமலில் (Whooping cough) DROS 30C வீரியத்தில் நலம் கிடைக்கவில்லை. ஆனால் DROS 10M வீரியம் மூன்று நாள்
கொடுத்தவுடன் அந்த துயரர் நலமடைந்தார்.
Ø ஒருபக்கவாதம் ( Hemiplegia) நோயில் CAUST
30C வேலை செய்யவில்லை.
ஆனால் CAUST
1M மற்றும் 10M கொடுத்த உடன் நலம் ஏற்பட்டது.
Ø நாட்பட்ட மூல நோயில் NIT-AC மற்றும் THUJA மருந்துகள் 200C வீரியம் முதல் 1M வீரியம் வரை நலத்தைக்கொடுக்க
வில்லை.ஆனால் 50
மில்லிசிமல்
வீரியத்தில் நலமடைந்தார்.
Ø ஈரலரிப்பு ( கல்லீரல்)
ஏற்பட்டு மகோதரம் நோய் உருவான துயரருக்கு CHINA 50
மில்லிசிமல் வீரியம் நன்றாக வேலை செய்தது. ஆனால் C வீரியங்கள் வேலை
செய்யவில்லை.
Ø நரம்புத் தலைவலியில் CHEL 30 முதல் 200 C வீரியம் வரை வேலை
செய்யவில்லை. ஆனால் CHEL
CM வீரியத்தில் இரண்டு
மூன்று முறை கொடுத்தவுடன் நான்கு மணிநேரத்திற்குள் துயரர் நலமடைந்தார்.
மரு.கோப்பிக்கர்,
தமது அனுபவங்களை இவ்வாறு கூறுகிறார்;
Ø ஒரு பெண் துயரர், மூன்று ஆண்டுகள் தொடர்ந்து AUR-M-N 6X வீரியத்தில் மருந்து சாப்பிட்டு தமது 42 வது வயதில் குழந்தை
பெற்றுக்கொண்டார்.
Ø ஒரு 72 வயது துயரருக்கு , அவருடைய மூட்டுவாத நோயிற்கு சல்பர்
6 ஓரிரு தடவை எடுத்துக் கொள்ளச்
சொல்லியிருந்தேன். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அவரைப் பார்த்தபொழுது இளமையாக ஆரோக்கியத்துடன்
இருந்தார். எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. அவரிடம் கேட்ட பின்னர் தான் தெரிகிறது அவர்
கடந்த 10
ஆண்டுகளாக சல்பர் 6
தினமும் சாப்பிட்டு
வந்துள்ளார். மருந்து டானிக் போல் வேலை செய்துள்ளது.
Ø காலில் ஆழமான புண் ஏற்பட்ட ஒரு துயரருக்கு CARB-V 30 C வீரியத்தில் தினமும்
சாப்பிடச் சொல்லி மருந்து கொடுத்திருந்தேன். அவர் நன்றாக குணமடைந்து
விட்டார். அதன் பிறகு தான் தெரிந்தது , அவர் CARB-V 30C மருந்தை தொடர்ந்து
ஏழு ஆண்டுகள் சாப்பிட்டு வந்துள்ளார்.
முடிவுரை :
வீரியதேர்வில் பல மருத்துவர்கள் தங்களது அனுபவங்களை பல்வேறு கோணத்தில் சுவாரசியமாக
பதிவு செய்துள்ளதைப் பார்த்தோம் . இருந்தாலும், சரியான வீரியத்தைத் தேர்ந்தெடுக்க
கீழ்காணும் காரணிகளை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று
பெருவாரியான மருத்துவர்கள் உறுதி செய்துள்ளார்கள், அவையாவன;
Ø
மருந்துத் தேர்வில் உறுதித்தன்மை ( Certainty about the
remedy selection)
Ø
மருந்தின் இனப்பிரிவு. ( Kingdom of the medicine)
Ø
துயரரின் வயது. ( Age of the patient )
Ø
பாலினம் ( Gender)
Ø
தொழில் ( Occupation)
Ø
துயரர் உணாச்சி வசப்படும் நிலை (Sensitivity).
Ø
உயிர் வாழ்வுத்திறம் (Vitality)
Ø துயரரின் சுபாவம் ( Nature)
Ø துயரர்களிடம் காணப்படும்
நோய்த்தன்மை. செயல்பாட்டு நிலை? அல்லது நோய்க்குறிகள்
மிகுந்த நிலை. (Type of disorder-Functional or Pathological)
Ø
துயரரின் கடுமையான நோய் பாதித்த நிலை (Severity of Pathology).
Ø நாட்ப்பட்ட அல்லது தீவிர
நோய் (Acute or Chronic).
Ø தெளிவான மற்றும் நிறைவான
மனக்குறிகள் (Clarity and abundance of mental symptoms).
Ø
மருந்தின் சுபாவம் (Nature of Drug)
Ø துயரரின் மியாசம் ( Miasm)
ஆகவே,
சரியான வீரியத்தைத்
தேர்வு செய்வதற்கு மேற்கண்ட காரணிகளையும் , மருத்துவர்கள் ஹப்பர்ட், சங்கரன், வித்தொல்காஸ் மற்றும் ஸ்டுவர்ட்
கிளோஸ் போன்றவர்களின் கருத்துகளையும்
கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில் பல மருத்துவர்கள் சில குறிப்பிட்ட வீரியங்களை
மட்டும் பயன்படுத்தி வருகிறார்கள். சிலர் 30C வீரியம் வரை மட்டுமே பயன்படுத்துகிறார்கள் , ஒரு சிலர் CM, MM,DMM வரை உயர்ந்த வீரியங்களை பயன்படுத்துகிறார்கள். மேலும், நாம் சரியான மருந்தினை கொடுத்திருந்தாலும் துயரர்
நலமடைவதில் தாமதமாகும் போது வீரியத்தை
மாற்றுவதற்குப் பதிலாக அடிக்கடி மருந்தினை மாற்றி விடுகிறோம். துயரருக்கு
நலத்தைக்கொடுக்கும் மருந்தைத் தேர்வு செய்வதில் நெகிழ்வுதன்மை இருக்ககூடாது , ஆனால் மருந்தின் வீரியத்தை
உயர்த்தவோ அல்லது குறைக்கவோ
நெகிழ்வுதன்மை காட்டலாம். ஒரு துயரருக்கு நாம் கொடுத்த
மருந்து நன்றாக வேலைசெய்துவிட்டு தனது
செயலை நிறுத்தியபிறகு திரும்பவும் பழைய குறிகள் தோன்றினால் , அத்துயரர் முழுமையாக நலமடைவதற்கு அம்மருந்தின் உயர்ந்த
வீரியம் வரை அவருக்கு கொடுக்கவேண்டும் என்று மருத்துவர் J.T. கெண்ட் குறிப்பிட்டுள்ளதை நாம் மறந்து விடக்கூடாது. அதேபோல் மருந்தின் சரியான வீரியத்தைத் தேர்வு செய்யும் பட்சத்தில், துயரரின் முழுமையான
அல்லது நிறைவான நலம் என்பது விரைவாக (Quick) , அமைதியாக (Gentle) மற்றும் நிரந்தரமாக ( Permanent) இருக்கும் என்று மாமேதை ஹானிமன்
கூறியுள்ளதை நினைத்துப் பாருங்கள் . அதன் பிறகு நலமாக்கும் கலை என்பது உங்களுக்கு
எளிதாக இருக்கும்.
என்னைப் பொறுத்தவரை, நோய்பாதிப்பு ( PATHOLOGY) மேலோங்கிய நிலையில் வரும்
துயரர்களுக்கு 30C
வீரியமும் ( சில
சமயங்களில் 3x,6x), குழந்தைகளுக்கும் மற்றும்
நீண்டகால நோய் பாதிப்பினால் ( CHRONIC DISEASES) வரும் துயரருக்கு 200C வீரியமும் , மனக்குறிகள் உறுதியாகத்
தெரியும் துயரர்களுக்கு 10M வீரியத்திலும்
மருந்து கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.
அதனால், தோல்விகளை விட வெற்றி பெற்ற
சந்தர்ப்பங்கள் அதிகம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இறுதியாக,
“ஹோமியோபதியில் நம்
முன்னோர்கள் கொடுத்துள்ள மேற்கோள்களுக்கு
மிகவும் மரியாதை கொடுங்கள். ஆனால் உங்களது அனுபவங்கள் அவர்கள்
கூறியவற்றிற்கு மாறுபட்டிருந்தால், அவர்களது கருத்துகளை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் .
உங்களைப் பொறுத்தவரை,
உங்களது அனுபவங்களே
மிகச் சிறந்த வழிகாட்டி” என்பதை மனதில் கொள்ளுங்கள் என்று மரு.
S.R.பதக் கூறியதை ஞாபகபடுத்த விரும்புகிறேன்.