Sunday, 7 October 2012

டெங்கு காய்ச்சலும் ஹோமியோபதியும் !




"ஏடிஸ்" என்ற வகை கொசுக்கள் கடிப்பதாலே "டெங்குக் காய்ச்சல்" உருவாகிறது.   ஏடிஸ் வகையில் பெண் கொசு மட்டுமே கடிக்கும். ஆண் கொசு கடிக்காது.  இந்தக் கொசுவின் கால்களில் வெண்மை நிறம் இருக்கும். இதை வைத்து இந்தக் கொசுவை அடையாளம் தெரிந்து கொள்ளலாம்.  எலும்புகளில் கடுமையான வலியை ஏற்படுத்தி அதன் செயல்பாட்டை முடக்கும் காய்ச்சல் என்பதால் இதற்கு "டெங்கு" காய்ச்சல் என்றும் , ஆங்கிலத்தில் “ Break Bone Fever ” அதாவது எலும்பு முறிவுக்  காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது.


இந்த வகை கொசுக்கள் கழிவு நீரும், நல்ல நீரும் இடத்தில் குறிப்பாக "செப்டிக்" டேங்கில் அதிக அளவு உற்பத்தியாகும்.    அதேபோல் பாலிதீன் பைகள், டயர் , சிரட்டை போன்றவற்றில் தேங்கி நிற்கும் தண்ணீர், குளிர் சாதன பெட்டியின் பின் புறத்தில் சேரும் தண்ணீர்சலனமின்றி ஓரிடத்தில் கிடக்கும் நீர் நிலைகள்  போன்றவற்றிலும் பெண் வகை( ஏடிஸ்)  கொசுக்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. ஏடிஸ் கொசுக்கள் இரவில் கடிக்காது. பகலில்தான் மனிதர்களை கடிக்கின்றன. குறிப்பாக காலை ஏழு மணி முதல் பத்து மணி வரையிலும் , மாலை மூன்று மணியில் முதல் ஐந்து மணி வரையிலும் கடிக்கின்றன.  

டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் :

ஏடிஸ் கொசுக்கள் கடித்தவுடன் ஆர்போ வைரஸ் (Arbovirus) என்ற நுண்கிருமி மனித உடலில் செலுத்தப்பட்டு சுரப்பிகளை அடைந்து விடும். பின்பு அந்த நுண்கிருமி உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கும் பரவி அங்கே பல நூறாகப் பெருகி  அங்கிருந்து  இரத்த நாளங்களில் சேர்ந்து விடும். குறிப்பாக தோல் பகுதிகளுக்கு செல்லும் இரத்த நாளங்களிலும், மண்ணீரல் மற்றும் நிணநீர் கோளங்களிலும் சேர்ந்து அப்பகுதிகளை வீங்க செய்வதுடன் இரத்தத்தை தேக்கிவிடும். அதனால் உடலிலிருந்து இரத்தப் பேருக்கு ஏற்பட்டுவிடும் ஆபத்து உள்ளது. இவைகள் தவிர கீழ்காணும் குறிகளும் டெங்கு காய்ச்சலை உறுதி செய்யும்.

·          கடுமையான காய்ச்சல்.
·          குளிர் சுரம்
·          கண்களில் கடுமையான வலி, கண்கள் சிவந்து காணப்படும்
·          நிணநீர் கோளங்கள் வீங்குதல்
·          தோல் சிவந்து போகுதல், முகத்தில் இரத்த சிவப்புக் கறை.
·          எலும்பு மூடுகளிலும், கால்களிலும் கடுமையான வலி.
·          இடுப்பு வலி,  குறிப்பாக கீழ் பகுதி.
·          ஆங்காங்கே இரத்தப் புள்ளிகள் உடலில் தோன்றுதல்
·          இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்து விடும்
·          இரத்தப் போக்கு ஏற்படுதல் , மூக்கிலிருந்து இரத்தம் வடிதல்.
·          இத்துடன் உணவு ஒவ்வாமையும் குமட்டலும் இருக்கும்.


மேற்கண்ட குறிகள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு இருக்கும். பின்பு  ஏராளமான் வியர்வை வெளியேறி  காய்ச்சல் குறைந்து துயரர் நலமடைந்தது போல் காணப்படுவார். ஓரிரு நாட்கள் கழித்து மறுபடியும் முன்பிருந்தது போல் காய்ச்சல் ஏற்பட்டு மார்பு, அடிவயிறு மற்றும் முதுகுப் பகுதிகளில் இரத்தப்புள்ளிகள் உருவாகும். இந்நிலை நீடித்தால் உடலின் இரத்த நாளங்கள் வெடித்து ( DENGUE HEMORRHAGIC FEVER)  சில சமயம் துயரர் இறக்க நேரிடலாம்.


டெங்குவை தடுப்பது எப்படி?

டெங்கு காய்ச்சலுக்கு என்று தனிப்பட்ட சிகிச்சை முறையோ அல்லது மருந்துகளோ ஆங்கில மருத்துவத்தில் இன்னும் கண்டறியப்படவில்லை. இருந்தாலும் இந்நோயை குணப்படுத்த முடியும். தற்பொழுது தாய்லாந்து நாட்டில் டெங்கு நோய்க்கு  தடுப்பு மருந்து  கண்டு பிடிப்பதற்கான ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. ஆராய்ச்சி முடிய இன்னும் 5 முதல் 10 ஆண்டுகள் ஆகலாம். அதுவரை  டெங்கு வராமல் தடுக்க கீழ்காணும் வழிமுறைகளை கையாள வேண்டும்.

·          ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதை தடுப்பதன் மூலமே டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முடியும். எனவே  வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும்.
·          குப்பைகளை சாலை ஓரத்தில் வீசாமல் பாதுகாப்பான முறையில் அப்புறப் படுத்தவேண்டும்.
·          வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
·          கொசுக்கடியில் இருந்து பாதுகாக்க கொசுவலை பயன்படுத்த வேண்டும்.
·          குழந்தைகளுக்கு கொசு கடிக்காமல் இருக்க பருமனான, தடித்த ஆடைகளை அணிவிக்க வேண்டும்.
·          காலை,மாலை வேளைகளில் வீடுகளில் கொசுவத்தி,ஊதுபத்தி மற்றும் சாம்பிராணி புகை போன்றவற்றை போட்டு கொசுவை விரட்ட வேண்டும்.


டெங்குவை நலமாக்கும் ஹோமியோபதி மருந்துகள்.***

ஹோமியோபதி மருத்துவத்தைப் பொறுத்தவரை  நோய்க்கு மருந்து என்று பார்க்காமல், நோய்த்தாக்குதலுக்கு உள்ளான துயரரிடம் காணப்படும் நோய்க் குறிகளுக்கு தகுந்தவாறு மருந்து தேர்வு செய்து கொடுப்பதால் எல்லாவிதமான துயரங்களும் நீங்கி துயரர்கள் பூரண நலமடைய வாய்ப்புண்டு . அது போல் டெங்குக் காய்ச்சலையும் நிச்சயமாக குணப்படுத்த முடியும் . அதற்கான ஆதாரங்கள் ஹோமியோபதி ரெபர்டரியில் நீண்ட காலத்திற்கு முன்பே பதிவு செய்யப் பட்டுள்ளது. மரு. வில்லியம் போயரிக் , டெங்கு காய்ச்சலுக்கு 12 மருந்துகளையும் , மரு. ராபின் மர்பி 16 மருந்துகளையும் , மரு. ரோஜெர் சண்ட்வூர்ட் தமது கம்பிளிட் ரெபர்டரியில் 24  மருந்துகளையும் குறிப்பிட்டுள்ளார். அந்த 24 மருந்துகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1.         ACONITUM NAPELLUS
2.         APIS MELLIFICA
3.         ARANEA DIADEMA
4.         ARSENICUM ALBUM
5.         ARUM TRIPHYLLUM
6.         BAPTISIA TINCTORIA
7.         BELLADONNA
8.         BRYONIA ALBA
9.         CANTHARIS VESICATORIA
10.      CHINA OFFICINALIS
11.      COLOCYNTHIS
12.      EUPATORIUM PERFOLIATUM
13.      FERRUM METALLICUM
14.      GELSEMIUM SEMPERVIRENS
15.      HAMAMELIS VIRGINIANA
16.      IPECACUANHA
17.      MERCURIUS SOLUBILIS
18.      NUX VOMICA
19.      PODOPHYLLINUM
20.      RHUS TOXICODENDRON
21.      RHUS VENENATA
22.      SANICULA AQUA
23.      SECALE CORNUTUM
24.      SULPHURICUM ACIDUM

மிகச் சிறந்த ஹோமியோபதி மருத்துவர்களில் ஒருவரான    மரு.சாமுவேல் லிலிஎந்தால் தமது "HOMOEOPATHIC THERAPEUTICS " என்ற நூலில் டெங்கு காய்ச்சலை நுணுக்கமாக ஆராய்ந்து நோய் தாக்குதலுக்கு உள்ளான துயரரின் குறிகளையும் அதற்குரிய மருந்துகளையும் வகைப் படுத்தி கீழ்வருமாறு எழுதியுள்ளார்.   

டெங்கு காய்ச்சலின் ஆரம்பத்தில்: ACONITUM NAPELLUS, BRYONIA ALBA
வாந்தியும் சேர்ந்திருந்தால்          : IPECACUANHA
வயிற்றுப்போக்கு                          : ARSENICUM ALBUM
தோல் பகுதியில் வெளிப்பாடுகள : BRYONIA ALBA , RHUS TOXICODENDRON
வாயுத் தொல்லைகளுடன்            : COLOCYNTHIS , NUX VOMICA
மஞ்சள் காமாலை குறிகளுடன்      : CHINA OFFICINALIS, EUPATORIUM PERFOLIATUM , MERCURIUS SOLUBILIS
                                                                    NUX VOMICA, PODOPHYLLINUM
இரத்தப்போக்கு இருக்கும்பொழுது:    ARSENICUM ALBUM , CHINA OFFICINALIS, FERRUM METALLICUM
                                                    HAMAMELIS VIRGINIANA,SECALE CORNUTUM,SULPHURICUM ACIDUM
சிறுநீரகத்தில்  இரத்தப்போக்கு இருக்கும்பொழுது: ARSENICUM ALBUM, BELLADONNA, CANTHARIS VESICATORIA

அடுத்து காய்ச்சலின் போது  ஒவ்வொரு மருந்தின் தனிச் சிறப்புக் குறிகளை  இப்பொழுது பார்க்கலாம்.

ACONITUM NAPELLUS: காய்ச்சலில் , முதலில் நல்ல குளிரும் அதைத் தொடர்ந்து சருமத்தில் வறட்சியும் சூடும் வருதல். குளிர் உடலினுள்ளே அலை அலையாகப் பாய்ந்து செல்லும் உணர்ச்சி இருக்கும்.  குளிரும் சூடும் மாறி மாறி தோன்றும். காய்ச்சலின் போது கண் இமைகள் ,மூக்கு,வாய்,தொண்டை,நுரையீரல் மற்றும் பாதங்களில்  வறட்சியுடன்  எரிச்சலும் இருக்கும் அதனால் போர்த்திக் கொள்ளமாட்டார்கள். சூடு தலையிலும் முகத்திலும் அதிகமாக இருக்கும். முகத்தின் ஒரு பகுதி சிவந்தும் அடுத்த பகுதி வெளுத்தும் காணப்படும். குளிர்ந்த தண்ணீரை ஏராளமாகக் குடிக்கத் தாகம் இருக்கும் . மூடிய பகுதியில் ஏராளமான வியர்வை இருக்கும்.  அத்துடன் பதட்டம் ,நிலைகொள்ளாமை மற்றும் சாவு பயமும் சேர்ந்து இருக்கும்.   

APIS MELLIFICA: காய்ச்சல் காந்தள் தன்மை வாய்ந்ததாகவும் நகர்ந்தால் குளிராகவும் இருக்கும்.  மூச்சுத் திணறலுடன் குளிர்சுரம் , குறிப்பாக மாலை மூன்று மணியிலிருந்து நான்கு மணிவரை. காய்ச்சல் இருக்கும் போது தாகம்  இருக்காது ஆனால் குளிர்சுரத்தின்  போது தாகம் இருக்கும். காய்ச்சலின்   போது கடிமையான தலைவலியும் அத்துடன் நீடித்த தூக்கமும் இருக்கும். எலும்பு மூட்டுகளில் வீக்கமும் மற்றும் புண் போன்ற வலி. அபிஸ் தேவைப்படும் துயரருக்கு கொட்டும் வலியும் , மூத்திரம் குறைவாக வெளியேறுவதும் முக்கியக் குறிகளாக இருக்கும்

ARANEA DIADEMA : குளிர்சுரம் நீண்ட எலும்புகளில் வலியுடன் இருக்கும் அத்துடன் அடிவயிற்றில் கல் இருப்பது போன்ற உணர்வு . குளிர்சுரத்தில் தலை, வயிறு   மற்றும் முட்டிகளில் வலிகள். தாகம் ,காய்ச்சல் மற்றும் வியர்வை இருக்காது. காய்ச்சலின்  போது சோர்வுடன் தலைவலியும் இருக்கும். முறை காய்ச்சல் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்திற்கு சரியாக வரும்.

ARSENICUM ALBUM : அதிக காய்ச்சல். முறை காய்ச்சல் . மஞ்சள்சுரம்.   உடலின் உள்ளே காந்தள் தன்மையுடன் சூடும், வெளிப்புறத்தில் குளிரும் இருக்கும். குளிர் ஒத்துக்கொள்ளது ஆனாலும் வெளிகாற்றில் தொல்லைகள் குறையும். குளிர்சுரம் மாறி மாறி வரும் ; நடுக்கம்; சூடான தண்ணீர் குடிக்க விருப்பம். இரத்த நாளங்களில் சூடான தண்ணீர் பாய்வது போன்ற உணர்வு அல்லது தீ கம்பிகள் பாய்வது போன்ற எரிச்சல். நள்ளிரவுக்குப் பிறகு தொல்லைகள் அதிகமாகும்( ஒரு மணி முதல் இரண்டு மணி வரை). தோல் பகுதியில் திட்டுத் திட்டாக கறுப்பாகவும் நீலமாகவும் நிறம் மாறுதல். இவைகளுடன் மனதில் கவலை, நிலைகொள்ளாமை, உடல்சோர்வு,எரிச்சல்,அழுகிய பிணத்தின் நாற்றமும் இருந்தால் ஆர்சனிகம் ஆல்பம் அவர்களை நலப்படுத்தும்.

ARUM TRIPHYLLUM: தோல் வறட்சியுடன் சூடாக இருக்கும். சூடு ஏறி இறங்கும் தன்மையுள்ள சுரம் , டைபாயிடு  சருமக் கோளாறுகளுடன் கூடிய சுரம். புண்ணும் இரத்தக் கசிவுமுள்ள வெடிப்புகள். இரத்தப் பெருக்கு உண்டாகும் வரை இடைவிடாமல் மூக்கினுள் குடைந்துகொண்டே இருத்தல். இரத்தம் வரும் வரை உதடுகளை பிய்துக்கொண்டே இருத்தல் போன்றவைகள் ஆரம் ட்ரிபில்லம் மருந்தின் முக்கிய குறிகளாகும்.  

BAPTISIA TINCTORIA: அதிக பலவீனம்.  டைபாயிடு , இன்ப்ளுன்சா மற்றும் விஷத்தன்மை வாய்ந்த  மலேரியா போன்ற வியாதிகளுக்கு இம்மருந்து மிகவும் சிறந்தது. உடல் முழுவதும் புண்ணாக இருக்கும் உணர்ச்சி.முகம் கருஞ்சிவப்பு நிறமடைந்து கலையிழந்த தோற்ற்றம் தரும். உடம்பு முழுவதும் கை கால்களிலும் திட்டு திட்டாக கறுப்பு கலந்த நீல நிறம் தென்படும்.  எல்லாக் கழிவுகளும் அதாவது மலம், மூத்திரம், வியர்வை , மூச்சுக்காற்று மற்று சளி முதலியவைகள் அழுகிய நாற்றம் அடிக்கும்.வாய்ப்புண், தொண்டை , மூக்கு, குடல்கள்  முதலிய இடங்களிலிருந்து வரும் இரத்தம் கறுப்பாகவும் நாற்றமுள்ளதாகவும் இருக்கும். இவர்களுக்கு தாகம் சிறிதளவு இருக்கும் அல்லது கொஞ்சங்கூட இருக்காது.

BELLADONNA: அதிகமான காய்ச்சல் ,சூடான தலை,சிவந்த முகம் முதலியவை பெல்லடோனாவின் முக்கிய குறிகள்.    உடலின் உள்பகுதியில் குளிராகவும்    வெளிப்புறத்தில் எரிச்சலாகவும் வெப்பமாகவும் இருக்கும். அதே போல் தலையில் சூடாகவும், கை கால்களில் குளிர்ச்சி. காய்ச்சலின்  போது தோல் வறண்டு எரிச்சலாக இருக்கும்.வேக்காடு உள்ள இடங்கள் சிவந்து இருக்கும்; சில சமயங்களில் மிகவும் சிவந்திருக்கும்.காய்ச்சலின் போது தாகம் இருக்காது. குளிர் காற்று கொஞ்சம் கூட ஒத்துக்கொள்ளாது, மாலை மூன்று மணிக்குப் பிறகும் , இரவில் நள்ளிரவிற்கு பிறகும் தொல்லைகள் அதிகரிக்கும். கண்கள், தொண்டை , காதுகள், கல்லீரல் மற்றும் மூளை ஆகிய இடங்களில் வேக்காடு இருக்கும். வேக்காடு உள்ள இடங்கள் மிக வேகமாக வீங்கும். இரத்தப் பெருக்கில் இரத்தம் வெளியாகும் போது அவ்விடத்தில் சூடான உணர்ச்சி இருக்கும். கீழே படுத்தால் வலி அதிகமாகும் , இக்குறியை வைத்தே பெல்லடோன்னா மருந்தை தேர்வு செய்யலாம். 

BRYONIA ALBA : பொதுவாக எல்லாவகையான காய்ச்சலுக்கும் இது சிறந்த மருந்து.    குளிர்சுரம் தலையில் சூடாகவும் ,சிவந்த முகத்துடன் காணப்படும்; வெப்பமான அறையில் இவை அதிகமாகும். இரத்தம் சூடாக இருப்பது போல் தோன்றும்.வலியுடன் தொடர்ந்து காய்ச்சல் இருக்கும், வியர்வை புளிப்பாகவோ அல்லது எண்ணெய் பிசுக்காகவோ இருக்கும். இவர்களுக்கு நாடி மிக வேகமாக துடிக்கும். காய்ச்சலின் போது கசப்பு சுவையும் சில சமயம்  தாகமின்மையும் இருக்கும்.ஆனால்  குளிர் காய்ச்சல் இருக்கும் போது தாகம் இருக்கும். அதேபோல் சூடு கண்டவுடன் தாகம் இன்னும் அதிகரிக்கும்.    பொதுவாக பிரையோனியா துயரருக்கு நலமாக இருக்கும் போது அதிக தாகம் இருக்கும் என்பதை மறந்து விட வேண்டாம். அசைவினால் தொல்லைகள் அதிகரிக்கும், அமுக்கினால் தொல்லைகள் குறையும், இவர்களுக்கு குத்தும் வலியும் தலைசுற்றலும் இருக்கும். பெரும்பாலான குறிகள் இரவு ஒன்பது மணிக்கும் , காலையில் எழுந்தவுடனும் அதிகரிக்கும் .  


CANTHARIS VESICATORIA:  குளிர்சுரம் . குளிர் காய்ச்சல் இருக்கும் போது குளிரிந்த தண்ணீரை உடலின் மீது ஊற்றியது போல் இருக்கும். கைகளும் பாதங்களும் குளிர்ச்சியாக இருக்கும். நாடி மிக பலமாகவும்,வேகமாகவும் அடிக்கும். வியர்வை , குறிப்பாக கைகள், பாதங்கள் மற்றும் பாலின உறுப்புகளில் ஏற்படும். வியர்வை மூத்திர நாற்றத்துடன் வீசும். காந்தாரிஸ் தேவைப்படும் துயரர்களுக்கு கட்டாயம் மூத்திரம் கழிப்பதில் சிரமம் இருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.  

CHINA OFFICINALIS : பொதுவாக இம்மருந்து மலேரியா சுரத்திற்கு மிகவும் சிறந்தது. குளிரும் காய்ச்சலும் மாறி மாறி தோன்றுவதும் அதே போல் தாகமும் இருப்பது இம்மருந்தின் விசேச குறியாகும் . குளிர்சுரம்  மாrர்பு பகுதியில் இருந்து துவங்கும். குளிர் தோன்றுவதற்கு முன்பு தாகம் , குளிர் ஆரம்பித்தவுடன் தாகம் மறைந்து விடும்.  முகம் சிவந்து சூடாகவும் , கைகள் குளிர்ச்சியாகவும்  இருக்கும். சூடு உள்ளபோது தாகம் இல்லாமை. சுரம் தணியும் போதெல்லாம் தாகம் தோன்றும். சுரம் இல்லாத நிலைமைகளில் ஏராளமான வியர்வையும் அதிக பலவீனமும் இருக்கும். டெங்கு காய்ச்சலின் போது மேற்கண்ட குறிகள் இருந்தால் கட்டாயம் இம்மருந்தைக் கொடுக்கலாம்.

COLOCYNTHIS: காய்ச்சலின் போது கைகளும் பாதங்களும் குளிர்ச்சியாகவும் , உடலின் மற்ற பகுதிகள் சூடாகவும் இருப்பது இம்மருந்தின் சிறப்புக் குறியாகும். குளிரும் நடுக்கமும் வலியுடன் இருக்கும். குளிர்ந்த வியர்வை இரவில் ஏற்படும், மூத்திரம் போல் நாற்றம் இருக்கும். வியர்வை குறிப்பாக தலையிலும் கை கால்களிலும்  மட்டும் தோன்றும். கடுமையான இறுக்கிப் பிடிக்கும் , வெட்டும் வலிகள் , உடலை முன்பக்கமாக வளைத்தாலும் இறுக அமுக்கினாலும் வலிகள் குறைதல் என்பது இம்மருந்திற்குரிய மற்றுமொரு சிறப்புக்குரியாகும்.வயிற்றுவலி மற்றும் வயிற்றுக்கடுப்பு போன்றவற்றை நலப்படுத்தும் சிறந்த மருந்து.

EUPATORIUM PERFOLIATUM :  யூபடோரியம்  மருந்து மலேரியா , இன்ப்ளுன்சா மற்றும் டெங்கு சுரங்களுக்கு மிக மிகச் சிறந்தது. இவ்வியாதிகளில் எலும்புகள் முறிந்து போய் விடும்  என்று தோன்றும் அளவிற்கு வலிகள் எலும்புகளில் காணப்படும். எலும்புகளை தவிர கால்கள், முட்டிகள் மற்றும் பாதங்களில் வீக்கமும் வலியும் , அத்துடன் கடுமையான தலிவலி  இருக்கும். இந்த வலிகளை யூபடோரியம் நலபடுத்துகிறது. குறிப்பாக சிக்கன்குன்யா மற்றும் டெங்கு சுரத்தை தணிக்கும் ஆற்றல் இம்மருந்திற்கு உள்ளது. அதேபோல் முறை காய்ச்சல் இருக்கும் போது குளிர் நிலைமை முடிந்த பிறகு கசப்பான தண்ணீரும் , பித்தமும் வாந்தி எடுக்கப்பட்டால்  யூபடோரியம் ஏற்றது. முறை காய்ச்சலில் வியர்வை கொஞ்சமாக இருக்கும் அல்லது இருக்காது. வியர்வை உண்டானால் எல்லாக் குறிகளும் சரியாகும் ஆனால் தலைவலி மட்டும் அதிகமாகும். முறை காய்ச்சலில்  , குளிர் கலை ஏழு மணிக்கோ அல்லது ஏழு முதல் ஒன்பது மணிக்குள்ளாகவோ தோன்றும்.  

FERRUM METALLICUM: அடிக்கடி நடுங்கும் குளிர்சுரம் ; மாலையில்; எல்லா இரவுகளிலும் . நடுங்கும் குளிர்சுரத்துடன் , தலைவலியும், கடுமையான தாகமும் இருக்கும்,   குளிர், நல்லகாற்று,கற்று வீசுதல் ஆகியவை இவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது. தூக்கத்தில் ஏராளமான வியர்வை வெளியேறும். அத்துடன் கடுமையான நாற்றமும் இருக்கும். நாடி வேகமாகவும் துடிப்பாகவும் அடிக்கும் . கை கால்கள் குளிர்ச்சியாகவும், தலையும் முகமும் சூடாகவும் இருக்கும். மூக்கு , சுவாசகோசங்கள், மூத்திரகாய்கள், கருப்பை ஆகிய இடங்களில் இருந்து இரத்தப்பெருக்கு, துப்பும் போது கோழையில் இரத்தம் கலந்திருக்கும்.   

GELSEMIUM SEMPERVIRENS : காய்ச்சலில், உடல் சூடாக  இருக்கும் போது மந்தமாகவும், களைப்புடனும் இருப்பார். யாருடனும் பேசாமல் தனியாக இருக்கவும், படுத்திருக்கவும் விரும்புவார். யாரும் பக்கத்தில் உட்கார்ந்திருப்பது கூடப் பிடிக்காது. உடலில் புண்ணாக அடிபட்டது போன்ற வலி. தாகம் இருக்காது. சூரிய வெப்பமும் கோடைகாலமும் இவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது. கை கால்களின் தசைகளிலும் , மூட்டுக்களிலும் உள்ளூர மந்தமான வலி, உடம்பில் தானாக முடியாத வலி. தலையில் அதிக இரத்தம் சேருவதால் உண்டாகும் தலைவலி. தலையில் அதிக இரத்தம் சேரும் போது கால்கள் சில்லென்று மாறும். இவர்கள் சாவை நினைத்துப் பயப்படுவார்; தைரியம் கொஞ்சம் கூட இருக்காது. சபை, பொதுக்கூட்டங்களில் பேச நடுக்கம் இருக்கும். மலேரியா, டைப்பாய்டு மற்றும் தண்டுவட காய்ச்சலும்  ஜெல்ஜிமியம் மிகச் சிறந்த மருந்து.    

HAMAMELIS VIRGINIANA: இந்த மருந்து தேவைப்படும் துயரருக்கு படுக்கப் போகும் போது குளிராக இருக்கும். காய்ச்சல் தாக்கும் என்ற பயம் உண்டாகும். முதுகு மற்றும் இடுப்பு பகுதிகள் மிகவும் குளிராக இருக்கும் , அக்குளிர் கால் பகுதி வரை நீடிக்கும். இரவில் காய்ச்சல் ; கைகள் சூடாகவும், கண்ணிமைகள் எரிச்சலுடன் இருக்கும். இரவில் படுத்த பிறகு ஏராளமான வியர்வை வெளிப்படும். பொதுவாக இம்மருந்தில் எல்லா துயரங்களிலும் இரத்தப்பெருக்கு இருக்கும்.இவர்களுக்கு குளிர் ஒத்துக்கொள்வதில்லை.


IPECACUANHA: குளிரும் சூடும் மாறி மாறி தோன்றும்.காய்ச்சலின் போது தாகம் இருக்காது. விட்டு விட்டு தோன்றும் காய்ச்சல் அல்லது உள்ளமுக்கப்பட்டுள்ள காய்ச்சல் போன்றவற்றில் குமட்டல் இருக்கும். சளி தொல்லையினால் அல்லது வாயுதொல்லையினால் காய்ச்சல் உருவாகும். வெப்பமும், ஈரப்பதமும் உள்ள பருவகாலத்தில் குழந்தைகளுக்கு தோன்றும் மார்பு சளிக்கு இது சிறந்த மருந்து. உடலில் உள்ள எல்லாப் துவாரங்களிலும் இரத்தப் பெருக்கு ஏற்படுதல்.எலும்புகள் தூள் தூளாக நொறுக்கப்பட்டிருக்கும் உணர்ச்சியுடன் வலிகள்.  


MERCURIUS SOLUBILIS: இவர்களது உடல் குளிரையும் , வெப்பத்தையும் சுலபமாக ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கும். முதலில் குளிர் பின்னர் சூடு பிறகு குளிர் என்று மாறி மாறி ஏற்படும்.   சளி, வாயு,பித்த காய்ச்சல் ஏற்படும், தட்டம்மை . சுலபமாக , ஏராளமாக வியர்வை உண்டாகும் குறிப்பாக இரவு தூக்கத்தில்; எண்ணைப் பிசுக்கோடும், புளித்த நாற்றத்துடனும் இனிப்பு வாசனையோடும் வியர்வை தலை மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் ஏற்படும் இருந்தாலும் நோய்க்குறிகள் குறையாது. வியர்வை துணிகளில் மஞ்சள் கோடுகளை ஏற்படுத்தும். கடுமையான தாகம். வாயில் அதிக உமிழ்நீர் உற்பத்தியாகிக் கொண்டிருந்தாலும் தாகம் இருக்கும். எலும்பு வலிகளும், எலும்புகளில் அசாதாரண வளர்ச்சியும், இரண அழற்சியும் இரவிகளிலும், படுக்கைச் சூட்டினாலும் அதிக தொல்லைகள் உண்டு பண்ணுவதாக இருக்கும்.

NUX VOMICA : குளிராக இருக்கும் போது தாகமும், காய்ச்சலின் போது தாகமின்மையும் இருக்கும். காய்ச்சல் இருக்கும் போது போர்த்திக்கொள்ள விரும்புவார்கள் , போர்வையை விலக்க அனுமதிக்கமாட்டார்கள்.அதிகக் காய்ச்சல்  உடல்  முழுவதும் எரிச்சலான சூடு இருக்கும் குறிப்பாக முகத்தில் ஆனால் இவர்களால் நகரவோ அல்லது போர்வையை விலக்கவோ அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில் அவ்வாறு செய்தால் அவர்களுக்கு குளிர் ஏற்படும். புளித்த வியர்வை உடலின் ஒரு பக்கத்தில் மட்டும் இருக்கும். காலையில் எழுந்தவுடன் எல்லா தொல்லைகளும் அதிகரிக்கும். மலச்சிக்கல் இருக்கும். அடிக்கடி மலம் கழிக்கத் தூண்டுதல் இருக்கும். சிறிது சிறிதாக மலம் வெளியேறும்; சில சமயம் போகாமலும் இருக்கும். இவர்களது எல்லாத் தொல்லைகளும் காலையிலும் , இரவிலும் அதிகரிக்கும். 

PODOPHYLLINUM: காலை ஏழு மணிக்கு குளிர்சுரம் ஏற்படும், காய்ச்சல் இருக்கும் போது  முக்கியமாக மஞ்சள்காமாலை இருக்கும் போது அதிகம் பேசுவார்கள். தூக்கத்தில் ஏராளமான வியர்வை வெளியாகும், அத்துடன் மூக்கைத் துளைக்கும் நாற்றத்தையும் ஏற்படுத்தும்.

RHUS TOXICODENDRON: குளிர் காய்ச்சல்,  போர்வையை சிறிது விலக்கினாலும் அதிகமாகும். அத்துடன் கை கால்களில் வலியும் இருக்கும். குளிச்சியான தண்ணீர்  உடலில் பாய்வது போன்ற  அல்லது குளிர்ந்த நீர் இரத்த நாளங்களில் ஓடுவது போல் குளிர்சுரம் இருக்கும் . காய்ச்சலின் போது அதிகம் பிதற்றுவார்கள். இந்த மருந்து  டைபாயிடு காய்ச்சலுக்கு சிறந்தது .   காய்ச்சலின் போது உடலில் ஒவ்வாமை ஏற்படும் .  குளிர்சுரம் இருக்கும் போது கொட்டாவி விடவும் உடலை நீட்டி தளர்த்தவும் விரும்புவார்கள், குளிரும் ஈரமும் உள்ள மழைக்காலங்கள் அல்லது மழையில் நனைந்தாலோ  இவர்களுக்கு ஒத்துகொள்ளாது. அதேபோல் ஓய்வில் இருந்தாலும் தொல்லைகள் அதிகரிக்கும். இடைவிடாமல்  நடந்து கொண்டிருத்தல்  , சூடு, உடலைத் தேய்த்தல் போன்றவைகளால் தொல்லைகள் குறையும். துயரங்கள் அதிகம் இருக்கும் போது நிலைகொள்ளாமை மிக அதிகமாக இருக்கும். டைபாயிடு சுரத்திலும், இன்ப்ளுன்சா சுரத்திலும் புண்ணுள்ள காயம் பட்ட உணர்ச்சி இருந்தால் (அதேபோல் டெங்கு சுரத்திலும்) அவர்களுக்கு ரஸ்டாக்ஸ் கட்டாயம் தேவைப்படும்.    

RHUS VENENATA: குளிர்சுரம் உடல் முழுவதும் பரவும்; சூடு  உண்டான பிறகும்  , சூடான அறைக்குள் இருந்தாலும் உடலின் பின்புறத்தில் இருக்கும். நடக்கும் போது குளிர்ச்சியாக தெரியும். இரவில் , தோல் பகுதி சூடாகவும், வறண்டும் எரிச்சலுடன் இருக்கும்.அத்துடன் நிலைகொல்லாமையும் சேர்ந்திருக்கும். சூடான வெப்ப அலையோ அல்லது காற்றோ உடல் முழுவதும் பாய்ந்து  ஓடுவது போல் துயரர் உணருவார். அத்துடன் நெற்றிப்பொட்டிலும், பின் தலையிலும், இரண்டு தோள்களிலும் தெறிக்கும் அல்லது கிழிக்கும் வலி இருக்கும். கைகள் எப்போதும் வறண்டும் சூடாகவும் இருக்கும். 

SANICULA AQUA: குளிர்காய்ச்சல்  நாள் முழுவதும் இருக்கும். கால் பகுதியிலிருந்து ஆரம்பிக்கும் .   குளிர்சுரத்தில் தாகமும் , சூடாகவோ அல்லது வியர்வையின் போதோ தாகம் இருக்காது. இரவில் உடல் முழுவதும் சூடாக இருக்கும். ஒவ்வொரு இரவிலும் காய்ச்சல் அதிகரித்து தூக்கமில்லாமல் கஷ்டப்படுவார். போர்த்திகொண்டவுடன் மற்றும் தூங்க ஆரம்பித்தவுடனும்  வியர்க்க ஆரம்பிக்கும்படுத்திருக்கும் பக்கத்தில் வியர்வை இருக்கும், அப்போது வயிற்றில் பசி ஏற்படும்.  

SECALE CORNUTUM: கடுமையான நடுங்கும் காய்ச்சல், கடுமையான எரிச்சல் அத்துடன் அதிகமான தாகமும் இருக்கும்.   உடலின் உள்ளே எரிச்சலும், வெளியே பனிக்கட்டி போன்ற குளிர்ச்சியும் இருக்கும், இருந்தாலும் துயரர்கள்  போர்த்திக்கொள்ள விரும்ப மாட்டார்கள். நாடி வேகமாக அடித்துக் கொள்ளும். குளிரான , நாற்றமுள்ள வியர்வை கால் செருப்புகளைக் கூடக் கெடுத்துவிடும்

SULPHURICUM ACIDUM: இம்மருந்து தேவைப்படும் துயரர்களுக்கு  பகலில் குளிர்ச்சியாக இருக்கும் ; அறைக்குள்ளே இருக்கும் போது தொல்லை அதிகமாகும்;திறந்த வெளிக் காற்றில் உடற் பயிற்சி செய்யும் போது நலமாக இருக்கும். மாலையிலும், இரவில் படுக்கும் போதும் காய்ச்சல் ஏற்படும்.  உடற் பயிற்சி செய்யும் போதும், வியர்க்கும் போது சூடு அதிகமாக தோன்றும். காலையிலும், இரவிலும் ஏராளமான வியர்வை வெளியாகும், சூடான உணவு சாப்பிட்டவுடன் குளிர்ந்த வியர்வை தோன்றும். 

***மேற்கண்ட 24 மருந்துகளுக்கும் டெங்கு காய்ச்சலை நலப்படுத்தும் ஆற்றல் இருந்தாலும் , ACONITUM NAPELLUS, ARSENICUM ALBUM ,  BELLADONNA, EUPATORIUM PERFOLIATUM,  GELSEMIUM SEMPERVIRENS  போன்ற  மருந்துகள் சிறப்பாக வேலை செய்கின்றன. குறிப்பாக EUPATORIUM PERFOLIATUM  மருந்து மிக அற்புதமாக வேலை செய்து டெங்குவை நலப்படுத்துகிறது. இருந்த போதிலும் இம்மருந்துகளை ஒரு நல்ல ஹோமியோபதி மருத்துவரின் ஆலோசனைக்குப் பின்னரே எடுத்துக் கொள்ளவேண்டும்.


இக்கட்டுரை ஆக்கத்திற்கு உதவிய நூல்கள்;

1.    Materia Medica of Homoeopathic Medicines   - Dr.S.R.Phatak
2.    A Dictionary of Practical Materia Medica        - Dr. J.K.Clarke
3.    Master key to Homoeopathic Materia Medica – Dr.K.C.Bhanja
4.    Homeopathic Therapeutics                         - Dr. Samuel Lilienthal
5.    Leaders in Homeopathic Therapeutics          - Dr.E.B.Nash
6.    Synthesis                                                - Dr. Frederik Schroyens
7.    Complete Repertory                                  - Dr. Roger Zandvoor
8.    மற்றும் டெங்கு பற்றிய வலைத்தளப் பதிவுகள்

(இக்கட்டுரை "உங்கள் ஹோமியோ தோழன் " அக்டோபர்-2012 இதழில் வெளிவந்துள்ளது)